கல்வாழை அல்லது மணிவாழை எனத் தமிழில் அழைக்கப்படுகிறது (canna lily) கன்னா லில்லி. தாவரவியல் பெயர்: Canna Indica. ஆங்கிலத்தில் Indian shot, African arrowroot, edible canna, purple arrowroot, Sierra Leone arrowroot ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றன. கன்னாசியே (Cannaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த வாழை இனத்தில் சுமார் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.
#2
இந்த வகைச் செடிகள் கண்களைக் கவரும் அழகிய இலைகளைக் கொண்டவை ஆகையால் தோட்டக் கலைஞர்கள் இவற்றை அலங்காரத் தாவரங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.
#3
இவற்றின் அனைத்து வகை இனங்களுக்கும் பூர்வீகம்
அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகள். 1860_களில் ஐரோப்பா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இயற்கையாகப் பரவின.வெப்பமண்டலப் பகுதிகளில் இயற்கையாக வளரக் கூடியவை ஆயினும், பெரும்பாலான சாகுபடி வகைகள் மிதவெப்பமான காலநிலையில் பயிரிடப் படுகின்றன. இச்செடியின் அனைத்துப் பாகங்களும் வணிக மதிப்பு கொண்டவை. குறிப்பாக வேர்களிலிருந்து கிடைக்கும் மாவுச் சத்துக்காக உலகின் முக்கியமான வேளாண்மைப் பயிரில் ஒன்றாக உள்ளது.
இலைகள் தண்டிலிருந்து நீண்ட, குறுகிய சுருளாக வெளியேறி பின்னர் விரிகின்றன. இலைகள் பொதுவாகத் திட பச்சை நிறத்தில் இருக்கும். சில சாகுபடி வகைகளில் மெழுகு பூச்சு, மஞ்சள், பழுப்பு, மரூன் அல்லது கலப்பு நிறம் கலந்த இலைகளும் இருக்கும்.
#4
#5
#6மலர்கள் சமச்சீராக இருப்பதில்லை. பொதுவாக சிகப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும், அல்லது இந்த நிறங்களின் கலவையாக இருக்கும். இவை மலர்க்கொத்து போலப் பூக்கும்.
மலர்கள் பூத்து முடியும் வேளையில் செடியில் காய்கள் தோன்றி இதுபோலப் பழுக்கின்றன.
#7
துப்பாக்கிக் குண்டு!? :
இதன் பழத்தின் உள்ளே கிடைக்கும் விதைகள் உருண்டையாக கல் போன்று திடமாக இருக்கும். ஒரு காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கியின் ஈயக் குண்டுகள் தீர்ந்து போகும்போது இந்த கல்வாழை விதைகளை மாற்றாகப் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் இணையத்தில் தேடிய போதே அறிய வந்தேன். அடுத்த முறை பழத்தின் உள்ளே இருக்கும் விதைகளைச் சோதித்துப் பார்க்கிறேன் :).
#8
பிரகாசமான இதன் வண்ணம் தேனீக்கள், தேன்சிட்டுகளை மட்டுமின்றி சற்றே பெரிய புல்புல் பறவைகளையும் கூட ஈர்ப்பதைப் பார்க்க முடிந்தது. வெளவால்களையும் கூட இப்பூக்கள் கவருகின்றனவாம்.
#9
மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதன் மூலம் இயற்கையின் சுழற்சிக்கு சேவையாற்றும் இம்மலர்களின் வேறு சில பயன்களையும் அறிந்து கொள்வோம்:
#10
சர்வதேச அளவில், கல்வாழை மிகவும் பிரபலமான தோட்ட செடிகளில் ஒன்றாக இருப்பதால், தோட்டக்கலை தொழில் இந்த செடியை சார்ந்துள்ளது.
இதன் வேர்த்தண்டுகளில் உள்ள மாவுச்சத்து மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உணவுகள் தயாரிப்பிற்குப் பயன்படுகிறது.
வியட்நாமில், இதன் மாவுச்சத்து நூடுல்ஸ் தயாரிக்க பயன்படுகிறது.
தண்டுகள் மற்றும் இலைகள் நேரடியாகக் கால்நடை தீவனமாகின்றன, இளம் தளிர்கள் காய்கறியாகப் பயனாகின்றன.
இளம் விதைகள் மெக்ஸிகன் உணவாகிய டார்ட்டிலா எனும் ரொட்டியில் சேர்க்கப்படுகின்றன.
காய்ந்த விதைகள் நகைகளில் மணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவின் சில பகுதிகளில், கல்வாழை நொதிக்கப்பட்டு மதுபானம் தயாரிக்கப்படுகிறது.
விதைகளிலிருந்து ஊதா நிற சாயம் பெறப்படுகிறது.
எரியும் இலைகளிலிருந்து வரும் புகை, பூச்சிக்கொல்லியாகப் பயனாகிறது.
தாய்லாந்தில் கன்னாக்கள் தந்தையர் தினத்திற்கான பாரம்பரிய பரிசாக உள்ளன.
இதன் தண்டிலிருந்து கிடைக்கும் நார் சணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இலைகளிலிருந்து கிடைக்கும் நார் காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
*
மஞ்சள், ஆரஞ்சு என கல்வாழையின் இரண்டு வகைகள் தோட்டத்தில் உள்ளன. பூக்கள் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பூக்கின்றன. பூத்த பூக்கள் ஒரு சிலநாட்களுக்கு வாடாமல் அப்படியே இருக்கும். முன்னர் பகிர்ந்த மஞ்சள் மணிவாழை மலர்களையும் கொலாஜ் ஆக இப்பதிவில் சேமிக்கிறேன். இதன் இலைகளில் வடிவங்கள் இல்லாமல் முழுவதும் பச்சை நிறமாக இருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு வகைத் தாவரங்களிலும் பூக்களின் வண்ணங்களில் மட்டுமின்றி இலைகளிலும் வித்தியாசங்கள் உள்ளன.
*
[இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.]
**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 214
***











தகவல்களும் படங்களும் வெகு சிறப்பு. தில்லியில் சில இடங்களில் இந்த வகை பூக்கள் சாலையின் ஓரங்களில் இருக்கின்றன.
பதிலளிநீக்குபெங்களூரிலும் சாலை ஓரங்களில் மற்றும் மால்களின் முகப்புத் தோட்டங்களில் அழகுக்காக வைத்திருப்பதைப் பார்க்கலாம். நன்றி வெங்கட்.
நீக்குஎங்கள் மாமியார் வீட்டில், மஞ்சள், ஆரஞ்சு இரண்டும் இருந்தது. கல்வாழையின் வகைகள், அதன் விவரங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குஇரண்டுமே கண்களைக் கவரும் வண்ணங்கள். நன்றி கோமதிம்மா.
நீக்குகல்வாழை அழகாக இருக்கிறது. அழகான அருமையான படங்கள். படங்களுடன் அது சம்பந்தமான விவரங்களை கொடுத்திருப்பது சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குகல்வாழை - செடிகளும் பூக்கள் படங்களும் அழகு எல்லாப் படங்களும் கண்களைக் கவர்கின்றன என்றால் அந்த இலைகள் வாவ்!
பதிலளிநீக்குதேன்சிட்டு அந்தப் படமும் சூப்பர்.
இங்கு சில பூங்காக்களில் இவற்றைப் பார்க்க முடிகிறது. ஆரஞ்சும் மஞ்சளும்.
தகவல்கள் சிறப்பு.
கீதா
நன்றி கீதா.
நீக்கு