ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

செம்பருந்து ( Brahminy Kite ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்:  Brahminy Kite
உயிரியல் பெயர்: Haliastur indus
வேறு பெயர்கள்: பிராமணி கழுகு; கருடன்

செம்பருந்து ஒரு நடுத்தர அளவிலான வேட்டைப் பறவை. இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ‘சிவப்பு முதுகுடைய கடல் கழுகு’ என்றும் அழைக்கப்படுகிறது. சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும். 

#2

இப் பறவையின் உடல் செம்மண் நிறத்திலும் தலையும் மார்புப் பகுதியும் வெண் நிறத்திலும் இருக்கும்.  சிறகுகளின் நுனி கருப்பு நிறத்தில் இருக்கும். மற்ற கழுகுகளைப் போல் முட்கரண்டி வடிவில் அன்றி இதன் வால் பகுதி வட்டமாக இருக்கும்.

#3

நிறம் தவிர்த்து, தோற்றம் மற்றும் குணாதிசயங்களில் கரும்பருந்துக்கு நெருங்கிய உறவுப் பறவை எனலாம்.

பொதுவாக இவ்வகைப் பருந்துகள் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், வங்காளம் ஆகிய நாடுகளில் அதிகம் காணக் கிடைக்கின்றன.  இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் அதிகம் தென்படும் ஆயினும், 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் வசிக்கின்றன. 

#4


னப் பெருக்கக் காலம் வசிக்கும் தேசங்களைப் பொருத்து மாறுபடுகிறது. தென்னாசியாவில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை ஆகும். கிழக்கு ஆஸ்திரேலியாவில், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆகும்.

கூடுகள் சிறிய கிளைகள் மற்றும் குச்சிகளால் கட்டப்பட்டு, உள்ளே ஒரு கிண்ணம் மற்றும் இலைகளால் வரிசையிடப்பட்டு, பல்வேறு மரங்களில், பெரும்பாலும் சதுப்பு நிலங்களில் அமைக்கப்படுகின்றன. அவை ஆண்டுக்கு ஆண்டு அதே பகுதியில் கூடு கட்டி தமது இடவிசுவாசத்தைக் காட்டும். சில அரிய நிகழ்வுகளில், அவை மரங்களின் கீழே தரையில் கூடு கட்டுவதும் உண்டு. 52 x 41 மிமீ அளவுள்ள இரண்டு மங்கலான வெள்ளை அல்லது நீலம் கலந்த வெள்ளையில் நீள்வட்ட வடிவிலான முட்டைகளை இடும். இரு பெற்றோரும் கூடு கட்டுதல் மற்றும் உணவூட்டுதலில் பங்கேற்கும். ஆனால் பெண் மட்டுமே அடைகாக்கும் பணியைச் செய்யும். அடைகாக்கும் காலம் சுமார் 26 முதல் 27 நாட்கள் வரையில் ஆகும்.

#5


னுண்ணிப் பறவையான இது, இறந்த மீன்கள் மற்றும் நண்டுகளை உண்கின்றது. குறிப்பாக ஈரநிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் இரை தேடும். அவ்வப்போது முயல்கள் மற்றும் வௌவால்கள் போன்ற உயிருள்ள உயிரினங்களையும் வேட்டையாடும். கிளெப்டோபாராசிடிசம் (Kleptoparasitism) எனும்  ஒட்டுண்ணித் தன்மை கொண்டவை. மற்ற உயிரனங்கள் தேடிப்பிடித்த இரையைப் பறிக்கவோ அல்லது திருடவோ செய்யும். மீகாங் ஆற்றில் டால்பின்கள், மீன்களை மேற்பரப்பிற்கு மேய்த்துக் கொண்டு வருவதை இவை பயன்படுத்திக் கொள்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனீக்களின் கூட்டில் தேன் உண்ணும் அரிய நிகழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரசாதமாக வைக்கப்படும் சாதம் அல்லது சமைத்த உணவையும் உண்கின்றது.

#6

இளம் பறவைகள் இலைகளை கீழே போட்டு காற்றில் பிடிக்க முயற்சிப்பது போன்ற விளையாட்டு நடத்தையில் ஈடுபடுவதைக் காணலாம். நீரின் மேல் மீன் பிடிக்கும் போது, சில நேரங்களில் நீரில் இறங்கி, நீந்தி பெரிய சிரமம் இல்லாமல் புறப்பட்டு விடக் கூடியவை.

பெரிய மற்றும் தனிமையான மரங்களில் கூட்டமாக தங்குகின்றன.  ஒரே இடத்தில் 600 பறவைகள் வரையிலும் கூட வசிப்பது உண்டு. தம்மை விடப் பெரிய வேட்டைப் பறவைகளை கூட்டமாக தாக்குவதுண்டு. அது போன்ற சம்பவங்களில் பெரிய பறவைகளால் தாக்கப்பட்டு காயப்படவோ உயிரிழக்கவோ நேர்கின்றன.

#7


ந்து மத புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் கருடனாக, புனிதப் பறவையாக செம்பருந்து வணங்கப்படுகிறது. 

இந்தோனேசியாவில் "elang bondol" என அழைக்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தைத் தரும் பறவை என நம்பப்படுவதுடன் தலைநகரான ஜகார்த்தாவின் அதிகாரப்பூர்வச் சின்னமாகவும் திகழ்கிறது.

மலேசியாவின்  “லங்காவி தீவு” இப்பறவையின் பெயரால் அழைக்கப்படுகிறது.

#8

பாதுகாப்பு நிலையைப் பொருத்த வரையில், தற்போது "குறைந்த அச்சுறுத்தல்" பட்டியலிலேயே உள்ளது. ஆயினும் ஜாவா போன்ற சில பகுதிகளில் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

**

[படங்கள் அடுத்தடுத்த 3 நாட்களில் குறிப்பிட்ட ஒரே நேரத்தில், தென்னை மரத்தின் அதே  கிளையில் இப்பறவை வந்து அமர்ந்த போது எடுத்தவை..]

**

பறவை பார்ப்போம் - பாகம்: 130
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 214

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin