பூனைப் பேரினத்தைச் சேர்ந்த, புலி குடும்ப வகைகளில் சிறிய வகை விலங்காக உள்ளது சிறுத்தை. புலி, வேங்கை (சீட்டா), தென் அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இவற்றின் உடல் மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். ஆகையாலேயே இவற்றால் வேகமாக மணிக்கு சுமார் 58 கி.மீ வேகத்தில் ஓட முடியும். ஒரு சிறுத்தை ஒரே தாவலில் 6 மீட்டர் தொலைவை அடைய முடியும்.
#2
அடர்ந்த மஞ்சள் அல்லது பழுப்பு நிற தோலுடனான உடலின் மேல் கருப்புப் புள்ளிகளைக் கொண்டவை. சிறுத்தைகளின் உடல் நீளம் வால் தவிர்த்து 3 - 6 1/4 அடி நீளம் வரையில் இருக்கும். 30-90 கிலோ வரையிலான எடை கொண்டவவை. 12-17 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை.
ஜாகுவார் Vs சிறுத்தை:
ஜாகுவார் சிறுத்தைகள் தென் அமெரிக்கப் பகுதிகளில் மட்டுமே காணப்பட, சிறுத்தைகள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. வெவ்வேறு கண்டங்களில், வெகு தொலைவில் வாழ்ந்தாலும் இரண்டுக்குமான உருவ ஒற்றுமை ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. பன்னெடுங்காலத்திற்கு முன்னர் இவற்றின் மூதாதையர் ஒரே இனமாக இருந்திருக்கக் கூடுமென்கிறார்கள் ஆய்வாளர்கள்.
முக அமைப்பில் இரண்டிற்கும் உடனடியாக வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் உடல் மீதான புள்ளி அமைப்பில் கூர்ந்து நோக்கினால் வித்தியாசங்கள் உண்டு. ஜாகுவார் மேலிருக்கும் வடிவங்கள் சற்று பெரியதாக இருப்பதோடு அதன் நடுவே சிறு புள்ளிகள் இருப்பது முக்கிய வேறுபாடு.
சிறுத்தைகளின் சில முக்கிய குணாதிசயங்கள்:
#3
சூழலுக்குத் தக்க வேட்டையாடும் தன்மை, நீந்தும் திறன், வாழ்விடத்திற்குத் தக்கப் பொருந்திப் போகும் தன்மை, பாரமான இரையை தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல், மறைந்து வாழும் தன்மை, மறைந்திருந்து திடீரெனப் பாய்ந்து தாக்கும் உத்தி மற்றும் வேட்டையாடும் எந்தவொரு விலங்கையும் இரையாக்கிக் கொள்வது போன்றவை. இரைகளைத் துரத்திச் சென்று வேட்டையாடுவதை விட மறைந்திருந்து தாக்குவதையே பெரும்பாலும் கடைபிடிக்கின்றன. தமது எடையைப் போல் 10 மடங்கு அதிகமான எடையுள்ள விலங்குகளை வேட்டையாடும் திறன் கொண்டவை.
#4
கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுபவை.குறிப்பாக இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோசீனா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இதன் வாழ்விடங்கள் மழைக்காடுகளில் இருந்து பாலைவனப் பகுதிகள் வரை வேறுபடுகின்றது.
#5
சட்டவிரோத வேட்டையாடுதல், வனங்கள் அழிப்பு, வாழ்விட இழப்பு, மனித-விலங்கு மோதல்கள், தோல்களுக்கான வர்த்தகம் போன்ற பல காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது. வனங்கள் அழிக்கப்படுவது அதிகமாவதால் அங்கிருந்து தப்பி வாழ்விடம் தேடி ஊர்களுக்குள் வருகின்றன. வன ஓரக் கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் என்கிற செய்திகள் மற்றும் சிசிடிவி பதிவுகளை இப்போது அடிக்கடி இணையத்தில் பார்க்கிறோம்.
#6
வாழ்விட அழிப்பினால் இவற்றின் இனப்பெருக்கமும் குறைந்து வருகிற நிலையில், IUCN Red List _யின் "அபாயநிலை" (Vulnerable) பட்டியலில் உள்ளது. இப்படி அழிவின் விளிம்பிற்குச் சென்று விட்ட சிறுத்தைகளின் பாதுகாப்பிற்காகப் பல நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
*
இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.
*
[இணையத்திலிருந்து பகிர்ந்தது ஜாகுவார் vs சிறுத்தை படங்கள். படம் எண் 5, ஜம்ஷெட்பூர் ஜூப்லி பூங்காவில் எடுத்தது. மற்ற யாவும் மைசூர் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டவை.]
*
பயமுறுத்தும் அழகு. தூரத்திலிருந்தே ரசிக்க வேண்டிய கவர்ச்சி. விவரங்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் எல்லாம் ரொம்ப அழகு! சிறுத்தை, புலிகள் எல்லாமே அழகுதான் ஆனா என்ன நாம தள்ளி இருந்து ரசிக்கலாம்.
பதிலளிநீக்குவிவரங்கள் அருமை
கீதா
கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்குசிறுத்தையின் படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குஅதைப்பற்றிய விவரங்கள் அருமை.
நன்றி கோமதிம்மா.
பதிலளிநீக்கு