புதன், 22 டிசம்பர், 2021

கருங்கரிச்சானும் சாம்பல் கரிச்சானும்

 ருப்பு அல்லது ஆழ்ந்த சாம்பல் நிறத்தில் பிளவு பட்ட வாலுடன் காணப்படுபவை கரிச்சான் அல்லது இரட்டைவால் குருவிகள். இவற்றைப் பற்றி முன்னரே இந்தப் பதிவில் https://tamilamudam.blogspot.com/2017/04/black-drango.html விரிவாகப் பகிர்ந்துள்ளேன்.  கடந்த சில வருடங்களாக அவற்றைத் தொடர்ந்து கவனித்து வந்ததில் மேலும் பல சுவாரஸ்யமான விவரங்களைத் தேடித் தெரிந்து கொண்டேன். 

உலகெங்கிலும் சுமார் 27 வகைக் கரிச்சான்கள் உள்ளன. அதில் ஒன்பது வகைகள் இந்தியாவில் தென்படுகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் 6 வகை கரிச்சான்களைப் பார்க்க முடிகிறது. என் வீட்டுத் தோட்டத்திற்கோ மாறி மாறி வருகை புரிகின்றன 2 வகைகள்: கருங்கரிச்சானும் சாம்பல் கரிச்சானும்.. 

#A

சாம்பல் கரிச்சான் - Ashy Drongo


#B

கருங்கரிச்சான்- Black Drongo

அத்தனை கரிச்சான்களுமே டிக்ருரிடே - Dicruridae எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிரேக்க மொழியில் ‘பிளவு பட்ட’ எனும் அர்த்தம் கொண்ட ‘டிக்ராஸ் - dikros’ மற்றும் ‘வால்’ எனும் அர்த்தம் கொண்ட ‘ஓரா-oura’  ஆகிய வார்த்தைகளைத் தழுவி ஏற்பட்டதே இதன் குடும்பப் பெயர்.

தன் கூட்டினில் உள்ள முட்டைகளையோ, குஞ்சுகளையோ பிற பறவைகள் நெருங்க விடாமல் மிகக் கோபமாக அவற்றை விரட்டியபடி இருக்கும். எதிரி தன்னை விடப் பலமடங்கு பெரிதான பருந்து போன்ற பறவைகளானாலும் சரி, மைனா மற்றும் அணில்களானாலும் சரி. இதனாலேயே ராஜ காகம் என்ற பெயரும் வந்து சேர்ந்தது என்பதைச் சென்ற பதிவிலும் பார்த்தோம்.

இவை பிற பறவைகளைப் போலவே குரலெழுப்பும் (மிமிக்ரி) வல்லமையும் கொண்டவை. மற்ற விலங்கு பறவைகளின் இரைகளை அபகரிக்க, புத்திசாலித்தனமாகத் திட்டமிடும். ஏதோ பெரும் ஆபத்து வருவதைப் போல எச்சரிக்கைக் குரல் எழுப்பும். அந்தப் பெருங்குரலைக் கேட்டு பிற விலங்கு, பறவைகள் பதறி விலகி ஓட இவை அந்த இரைகளை உட் கொள்ளும். 

பூச்சிப் புழுக்களை உண்டு வாழ்பவை. பறந்தபடியோ அல்லது நிலத்திலோ இரைகளைத் தேடிக் கொள்ளும். அமர்ந்திருக்கும் கிளையிலிருந்து ஒரு கிளைடர் விமானத்தைப் போல வேகமாகக் கிளம்பிப் போய் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு, மீண்டும் அதே வேகத்தில் அதே இடத்தில் வந்தமர்ந்து உண்ணும்.

கீழ்வருவன கர்நாடகத்தில் காணப்படும் ஆறு வகைகள்:
1. கருங்கரிச்சான்- Black Drongo - (விலங்கியல் பெயர்: Dicrurus macrocerus)  
2. சாம்பல் கரிச்சான் - Ashy Drongo - (Dicrurus leucophaeus) 
3. வெண் வயிற்றுக் கரிச்சான் - White-bellied Drongo - (Dicrurus caerulescens) 
4. கரும்பச்சைக் கரிச்சான் - Bronzed Drongo - (Dicrurus aeneus) 
5. துடுப்புவால் கரிச்சான் - Greater Racket-tailed Drongo - (Dicrurus paradiseus) 
6. கொண்டைக் கரிச்சான் - Hair-crested Drongo - (Dicrurus hottentottus) 

இவற்றில் முதலிரண்டு வகைகள்தாம் நான் அடிக்கடி இங்கே பார்ப்பவை. கருங்கரிச்சானைப் பற்றி பதிந்த போது, சாம்பல் கரிச்சானைப் பற்றி அறிந்திருக்கவில்லை:).

கருங்கரிச்சான்கள்

#1

கருங்கரிச்சான்கள் இந்தியாவில் பரவலாக வாழ்கின்றன. விவசாய நிலங்களிலும் அடர்த்தி அதிகமில்லாத காட்டுப் பகுதிகளிலும் பார்க்கலாம். இலைகளற்ற மொட்டைக் கிளைகளில் மற்றும் மின்சாரக் கம்பிகளில் அமர்ந்திருப்பதைக் காண முடியும். தம் எல்லைக்குள் மற்றவரை அனுமதிக்காது வலியத் தாக்கும் குணமுடையவை. 

விடியும் முன் எழுந்து குரல் கொடுக்கும் வழக்கம் உடையவை. “கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!" திருப்பாவை வரிகளில் வரும் ஆனைச்சாத்தன்  கருங்கரிச்சான்களே.

#2

இவற்றின் கருவிழிகள் முழுக் கருப்பு வண்ணத்தில் இருக்கும். ஆடு மாடு, எருமைகள் மேல் அமர்ந்து சாவகாசமாக அவற்றின் உடலில் இருக்கும் பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும். மாடுகளோடு திரிவதால் இவற்றுக்கு ‘மாடு மேய்ச்சான்’ என்றொரு பெயரும் உண்டு.

சாம்பல் கரிச்சான்கள்

#3


சாம்பல் கரிச்சான்கள் இமயமலைப் பகுதிகளையும் வட கிழக்கு மலைப் பகுதிகளையும் பூர்வீகமாகக் கொண்டவை. தற்போது மத்திய இந்தியா வரையில் பரவலாக வாழ்கின்றன. குளிர் காலங்களில் கர்நாடகப் பகுதிகளுக்கு வலசை வருகின்றன. அப்போது இவற்றைக் காடுகள் மற்றும் மரங்கள் சூழ்ந்த தோட்டப் பகுதிகளில் பார்க்கலாம். 

#4

ஒரு சில கோணங்களில் அப்படியே கருங்கரிச்சான்களைப் போல் தோற்றமளித்தாலும் இவற்றின் ஆழ் சிகப்புக் கருவிழிகள் கருங்கரிச்சான்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டு விடும். மேலும் சாம்பல் கரிச்சான்களின் உடல்கள் சற்றே ஒல்லியாகவும் நீளமாகவும் இருக்கும். மற்ற பறவைகளைப் போலக் குரல் எழுப்புவதில் இவை தேர்ந்தவை. குறிப்பாக மாம்பழச்சிட்டுகளின் சீழ்க்கை ஒலியை அப்படியே ஒலித்துக் காட்டிடும்.

மீதமுள்ள நான்கு வகைகள் எப்போதேனும் கண்ணில் படுமா எனக் காத்திருக்கிறேன். கண்டால் சொல்கிறேன்:)! 

**

Collage - A & B முன்னர் பகிர்ந்த படங்களின் தொகுப்பு. மற்றன சமீபத்தில் புதிதாக எடுத்தவை.

**

  என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 120

பறவை பார்ப்போம் - பாகம்: (77)

**

7 கருத்துகள்:

  1. படங்கள் மற்றும் தகவல்கள் வெகு சிறப்பு. மிகவும் ரசித்தேன். சூழல் காரணமாக பல நாட்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பல நேரங்களில் என்னாலும் வலைப்பக்கம் வர முடியாமல் போகிறது. இது எல்லோருக்கும் பொருந்தும்.

      கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. விவரங்கள் சுவாரஸ்யம்.  கரிச்சானின் மிமிக்ரி திறன் வியக்க வைத்தது, அதை வைத்து அது செய்யும் செயல் புன்னகைக்க வைத்தது.  அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  3. கரிச்சான் பற்றிய விவரங்கள் வெகு சுவாரசியம் குறிப்பாக மிமிக்ரி!!! மிகவும் ரசித்தேன் தகவல்களையும் படங்களையும்.

    ஆனைச்சாத்தன் இதுதான் என்பது தெரியும். இங்கு வருபவவை கருங்கரிச்சான் தான். இரட்டைவால் குருவி என்றும் சொல்வதுண்டு

    இங்கும் நிறைய வருகின்றன பக்கத்தில் இருக்கும் ஏரிக் கரையில். அருகில். சமீபத்தில் தென்ங்கத்திற்குச் சென்றிருந்த போதும் திருநெல்வேலிப் பகுதி மற்றும் நாகர்கோவில் பகுதிகளிலும் நிறைய பார்த்துப் படமெடுத்தேன் அவற்றில் ஒன்று மட்டும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கிறது. மற்றவை எல்லாம் உயரத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தன..கம்பி அல்லது மரக் கிளையில். என் கேமரா ஜூம் செய்தால் அத்தனை க்ளியராக வராது. லைட்டிங்கும் சரியாக இல்லை. புகைப்படம் எடுப்பதில் நானும் கற்க வேண்டியவை நிறைய இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளைக் கவனிப்பதிலும் படம் எடுப்பதிலும் தங்களுக்கு இருக்கும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ,! வாழ்க வளமுடன் கரிச்சான் விவரங்கள் அருமை,
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin