வியாழன், 30 மே, 2019

இந்திய சாம்பல் இருவாச்சி ( Indian Grey Hornbill ) - பறவை பார்ப்போம்: பாகம் (39)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 50
#1
இந்திய சாம்பல் இருவாச்சி
(இளம் பறவை)

ங்கள் குடியிருப்பில் இருக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கு பலவிதமான பறவைகள் வந்தபடி இருப்பதையும், அவற்றைப் படமாக்கி நான் பகிர்ந்து வருவதையும் அறிவீர்கள். சமீபத்திய வரவு ’இந்திய சாம்பல் இருவாச்சி'.  குடியிருப்பின் கடைசி வீட்டையொட்டிய மரத்தில் கூடமைத்திருந்த ஒரு ஜோடி, மற்றும் அதன் இளம் பறவைகள் அவ்வப்போது ஒவ்வொருவர் தோட்டத்திற்கு வந்தமர்ந்து தரிசனம் தந்து போகலாயின. ‘இன்று நான் பார்த்தேன்.. இதோ இன்று எங்கள் தோட்டத்தில்..’ என அவரவர் படங்களை வாட்ஸ் அப் குழுமத்தில் பகிர்ந்து வந்தனர். 

#2
தாய்ப் பறவை

வளர்ந்த பறவைகள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வு கொண்டவை.  பலமுறை அதிகாலை வேளையில் முருங்கை மரத்தில் அமர்ந்து பருந்தினைப் போலப் பெரும் குரலெழுப்பிப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அறைக்குள் நின்று படம் எடுக்க முயன்றிடும் என்னை எப்படியோ கவனித்து உடனே பறந்து போய் விடும். ஆனால் இளம் பறவை கண்டு கொள்ளாமல் நேற்று படம் எடுக்க விட்டது.  அதன் தாய், தந்தையைப் படமாக்கும் வேளைக்காகக் காத்திருந்தேன். இன்று அதிகாலை, தோட்டத்துச் சுற்றுச் சுவருக்கு அந்தப் பக்கம் சற்று தொலைவில் இருக்கும் உயர்ந்த மரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்த அதன் பெற்றோரையும் இன்று படமாக்கி விட்டேன்:). வாட்ஸ் அப் குழுமத்திலும் பகிர்ந்து கொண்டாயிற்று:).

#3
ஜோடியாக பெண் பறவையும் ஆண் பறவையும்..


இப்போது உங்களுடன்.. இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த சுவாரஸ்யமான தகவல்களுடன்..

#4

ஆங்கிலப் பெயர்: Indian Grey Hornbill

ந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill), சுமார் இரண்டடிக்கு நடுத்தர உயரத்தில், இந்திய துணைக் கண்டத்தில் பரவலாகக் காணப்படும் இருவாச்சி இனப்பறவை. உடலின் மேற்பாகத்திலிருக்கும் சிறகுகள் சாம்பல் வண்ணத்திலும், நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி வெளிர் சாம்பல் வண்ணத்திலும் இருக்கும். காதுகளைச் சுற்றியிருக்கும் மெல்லிறகுகள் சற்று ஆழ்ந்த வண்ணத்தில் இருக்கும்.  

#5
உயிரியல் பெயர்: Ocyceros birostris 


கண்ணைச் சுற்றியிருக்கும் வரிகள் (iris) சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இளம் பறவைகளுக்கு நல்ல சிகப்பாகவும், வளர்ந்த பறவைகளில் பெண் பறவைக்கு சற்று வெளிர் சிகப்பிலும் ஆண் பறவைக்கு கண்ணைச் சுற்றிய பாகம் ஆழ்ந்த சாம்பல் நிறத்திலுமாக இருக்கும். இதை நேரில் பார்க்கையில் தெரிந்து கொள்ள முடிந்தது. 

#6

மேலும் ஆண்பறவைகளுக்கு அலகின் மேல் அலகைப் போலவே கெட்டியான சற்றே நீண்ட (போர்வீரர்கள் அணிவது போன்ற) தலைக்கவசம் (casque) காணப்படும். பெண்பறவைகளுக்கு நீளம் குறைவான சற்றே கூர்மையான தலைக்கவசம் இருக்கும். இளம் பறவைகளின் அலகிற்கு மேல் இது காணப்படாது. கீழ்வரும் படத்திலும், படம் மூன்றில் இருக்கும் பெரிய பறவைகளைக் கூர்ந்து கவனித்தால் இது உங்களுக்குப் புலப்படும்.

#7


இவற்றின் வாலின் விளிம்புகள் ஒரு கோடாக வெள்ளை நிறத்தில் இருப்பதைப் பார்க்கலாம். 

#8


ருவாச்சிகள் சமவெளியிலிருந்து சுமார் 2000 அடி உயரமுள்ள மலைகள் வரையிலும் காணப்படுகின்றன. தெற்கே நோக்கி இமாலய மலையடிவாரத்திலும், மேற்கில் இன்டஸ் பள்ளத்தாக்கு வரையிலும் கிழக்கே கங்கை சதுப்பு நிலம் வரையிலுமாகப் பரவி வாழ்கின்றன. பெரும்பாலும் ஜோடிகளாகவோ அல்லது கூட்டமாகவோ காணப்படும். சிறகுகளைப் படபடத்தும் வானில் வழுக்கிய படியும் பறக்கும். 


இவற்றின் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும். ஒன்றிலிருந்து ஐந்து வரையிலும் ஒரே மாதிரியான வெண்ணிற முட்டைகளை இடும். உயர்ந்த மரங்களில் காணப்படும் பொந்துகளில் கூடுகளை அமைக்கும். வசதியாகக் கிடைக்கவில்லை என்றால், சற்றே குழிந்த சிறிய பொந்துகளைக் தம் வலுவான அலகுகளால் கொத்திக் கொத்திக் கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். 

வை முட்டைகளை அடைகாத்துக் குஞ்சுகளைப் பொரிக்கும் முறை ஆச்சரியமும் சுவாரஸ்யமும் நிறைந்தது.  

#9
பெண்பறவை

பெண் பறவை மரப்பொந்தின் உள்ளே சென்று கொண்டு பொந்தின் வாயிலை தனது எச்சக் கழிவினாலும், ஆண் பறவை கொண்டு வந்து தரும் சிறு கழிமண் உருண்டைகளைக் கொண்டும் மூடி விடும். நீள வாக்கில் ஒரு சிறு பிளவை மட்டும் விட்டு வைக்கும். ஆண் பறவை இதன் வழியாகவே அதற்கு உணவைக் கொண்டு கொடுக்கும். இப்படியாகக் கூட்டுக்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் பெண்பறவை அதுகாலமும் பறக்க உதவிய தனது சிறகுகளை முட்டைகளின் மேல் உதிர்த்து அடை காத்து குஞ்சுகளைப் பொரிக்கும். குஞ்சுகள் ஓரளவுக்கு இளம்பறவையாக வளரும் அதே நேரத்தில் பெண்பறவையின் சிறகுகளும் மீண்டும் வளர்ந்து விடும். அந்த நேரத்தில் மரப் பொந்தின் வாயிலை உடைத்துக் கொண்டு அவை வெளியே வரும்.

#10


இவை முற்றிலும் மரம் வாழ் (arboreal) பறவைகள். எப்போதேனும் கனிகளைக் கொத்தவும், கூடு அடைக்கும் காலத்தில் களிமண் உருண்டைகளைச் சேகரிக்கவுமே நிலத்தில் அமரும். பல விதக் கனிகளோடு, சிறு பூச்சிகள், ஓணான்கள், தேள்கள், சிறு பறவைகள் (குறிப்பாக கிளிக் குஞ்சுகள்) ஆகியவற்றையும் இரையாக்கிக் கொள்ளும். பிற முதுகெலும்பிகளுக்கு விஷமாகக் கூடிய அரளிக் கனிகள் இவை விரும்பி உண்ணும் தீனியாக இருக்கிறது.

#11



**

தகவல்கள்: விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து தமிழாக்கம் செய்தவை.

***

12 கருத்துகள்:

  1. சாம்பல் இருவாச்சியைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன். புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான விவரங்களுடன் அழகிய படங்கள்.

    க்ளோசப்பில் அழகாக எடுத்திருக்கிறீர்கள்.என் மகனின் கேமிராவை நான் கையாளுவதில்லை. ஒரு அழகிய பறவை ஒன்று சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. வழக்கமான பெரிய சாம்பல் குருவி போல இருக்கிறியாது. அதன் வாலில் பிரௌன் கலர்போன்ற நீண்ட வால். படமெடுக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். படமெடுக்கும் போது அவசியம் பகிர்ந்திடுங்கள். குருவி வகைகளில் பெயர் தெரியாத பல பறவைகள் தினம் வந்து செல்கின்றன. சிலவற்றைப் படமாக்குவதே சிரமம். நொடிப் பொழுது கூட ஓரிடத்தில் இருப்பதில்லை. சமீபத்தில் சாம்பல் மற்றும் ஆரஞ்சு கலந்த நடுத்தர அளவிலான (மைனா அளவில்) பறவை வகை கூட்டமாக வந்து சென்றன.

      நீக்கு
  3. சாம்பல் இருவாச்சி கூடு அமைத்து தவம் போல் உள்ளே இருந்து தன் குஞ்சுகளை தன் இறகுகளை உதிர்த்து காப்பது வியப்பை தருது. மீண்டும் அதன் இறகுகள் வளர்வது மிகவும் அற்புதம்.
    படங்கள் எல்லாம் துல்லியம்.
    உங்கள் செய்தி சேகரிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், குஞ்சுகளைக் காக்கும் முறை எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.

      கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. அருமையான படங்களும் தகவல்களும். வனங்களில் கூட இருவாச்சியைக் காண்பது அரிதெனும் சூழலில் அவை உங்கள் குடியிருப்பில் காணக்கிடைக்கின்றன என்பது ஆச்சர்யம். கூடமைத்து குஞ்சு பொரிக்கும் முறையும் ஆச்சர்யமளிக்கிறது.

    பலவிதமான பறவைகளை உங்கள் தோட்டத்தில் பார்த்து ரசிக்கும் நீங்கள் கொடுத்துவைத்தவர் என நினைத்தேன். ஆனால் உங்கள் கேமராவில் சிக்கி காலத்தால் அழியாத காட்சியாக பறவைகள்தான் கொடுத்துவைத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். வனங்களிலும் காண்பது அரிதென்றே சொல்கிறார்கள். அதனாலேயே எங்கள் குடியிருப்பில் உள்ளோர் அதைக் கண்டு ஆனந்தித்தனர்:).

      யார் கொடுத்து வைத்திருந்தாலும், நாம் வாழும் காலத்தில் காணும் காட்சிகளை ஆவணப்படுத்தும் திருப்தி கிடைக்கிறது இந்தக் கலையில். மிக்க நன்றி கீதா :).

      நீக்கு
  5. படங்களுடன் அருமையான தகவல்கள் . ரசித்தோம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin