திங்கள், 15 ஏப்ரல், 2019

மனிதர்களற்ற வெளியில்.. - ‘தி இந்து’ காமதேனு வார இதழில்..

மனிதர்களற்ற வெளியில்..

‘தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் காமதேனு வார இதழில்..

 ‘நிழற்சாலை’ பக்கத்தில்..

மனிதர்களற்ற வெளியில்.. 
னத்த பெரும்பாதங்களின்
நடையொலியில்
அதிருகிறது நிலம்.
கம்பீரமாகத் தலைவி
முன் செல்ல
சூரியனின் கதகதப்பை
சுதந்திரத்தின் ஆனந்தத்தை
அனுபவித்தபடி 
பின் தொடருகிறது கூட்டம்
குட்டிகளுடன்
குடும்பம் குடும்பமாக.

பசும் புல்வெளியைக் கண்டதும்
நின்று இளைப்பாறி
மேயத் தொடங்குகின்றன.
காற்று மட்டுமே
நிறைந்த வெளியில்,
பசியாறி நகருகின்றன
வேலிகளற்ற நிலங்களும்
மூங்கில் காடுகளுமே
தம் வாழ்விடமாக.

சுனைகளில் தாகந்தணித்து
நதிகளில் நீராடிக் களித்து
நிலவொளியில் கூடிச் சுகித்து
இருபத்தியிரு திங்கள் சுமந்து
இனம் பெருக்கிப் பயணிக்கின்றன 
பருவங்கள் பல கடந்து
வனப்புடன் வளமாக.

அளவற்ற ஆன்ம பலத்துடன்
அடங்க மறுக்கும் செருக்குடன்
பிளிருகின்றன வான்நோக்கி  
சுயம் இழக்காத வல்விலங்குகள்
மனிதரின் மூச்சுக்காற்று கலக்காத
அடர் கானகத்தில்,
எப்போதும் மூர்க்கமாக
என்றென்றைக்கும் சுதந்திரமாக.
**

நன்றி காமதேனு!
***

18 கருத்துகள்:

 1. வனப்புடன் வளம் நீடிக்க வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான கவிதை.

  வனங்களையாவது மிச்சம் விட்டு வைக்கட்டும்....

  பதிலளிநீக்கு
 3. வரிகளும் வார்த்தைகளும் மிக அழகு ..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான படைப்பு. வாழ்த்துகள். அவைகளின் சுதந்தரத்தைக் கெடுக்க மனிதன் காத்துக்கொண்டிருக்கிறான். அவைகளின் மூர்க்கத்தை தன்னிடம் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

  பதிலளிநீக்கு
 5. அழகான படமும் கவிதையும். யானையைப் பற்றிய விவரங்கள் கவிதை வடிவில் வெகு அழகு

  பதிலளிநீக்கு
 6. அழகான படம் அருமையான கவிதை.
  வனங்கள் நல்ல வளத்துடன் இருக்கட்டும். இவைகளும் சுதந்திரமாக சுற்றி திரியட்டும்.

  பதிலளிநீக்கு
 7. யானையின் வாழ்வியல் குறிப்புகளோடு அவற்றின் எதிர்பார்ப்பையும் மிக அழுத்தமாகப் பதிவிட்டுள்ளீர்கள். காமதேனு இதழில் வெளியானதற்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. என்னவொரு அழகான யதார்த்தமான கவிதை. மனிதர்களின் மூச்சுக்காற்று கலக்காத அடர்வனம் ஏகிட நமக்கே கூட சிலவேளைகளில் தோன்றுகிறதே.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin