செவ்வாய், 15 டிசம்பர், 2015

தனித்துவங்கள் - நவீன விருட்சத்தில்..

காட்டுத் தீக்கு ஒப்பாக
இரத்தச் சிகப்பு இலைகளோடு
கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள்
பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன
இளவேனிற்கால முடிவில்.

ஒவ்வொன்றாய் உதிர்ந்து
ஒற்றை இலையோடு
ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின்
கடைசி இலையும்
விடை பெற்றுப் பறக்கலாயிற்று.

கண்களுக்குப் புலப்படாத வளியில்
சுழன்று சுழன்று பயணித்து
குவிந்து கிடந்த மற்ற இலைகளின் மேல்
வீழ்ந்த இலையின்
காற்றுக்கெதிரான கடைசிப் போராட்டத்தை
கண்டு பாராட்ட எவருமில்லை.
விருட்சத்தோடு
அதிகம் தாக்குப் பிடித்த முயற்சியை
கவனிக்க நேரமுமில்லை.

நேரே உதிர்ந்து உலர்ந்தவற்றுக்கும்
அதற்குமான வித்தியாசத்தை
உலகம் உணர வாய்ப்புகளற்று
இலைகளோடு இலையாக
வாடிச் சருகான அதன் மேல்
ஊர்ந்து கொண்டிருந்தது
மண் புழு.
*

11 டிசம்பர் 2015 நவீன விருட்சம் வெளியீடு, நன்றி நவீன விருட்சம்!
**

படம் நன்றி: Vinaya Dass
[https://www.flickr.com/photos/129379489@N07/23230860280/]
***

15 கருத்துகள்:

 1. அருமை. இது போன்ற ஒரு கவிதையை ஓரிரு வருடங்களுக்கு முன்னால் நான் கூட முக நூலில் போட்டிருந்தேன். தேடிப் பார்க்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முக நூலிலிருந்து தேடி எடுத்தேன். ஆனால் வாடிய மலர் பற்றி எழுதி இருந்தேன்!

   :))))   வாடியதால்
   வாசம் தொலைத்த
   மலரொன்று
   விழுந்து கிடக்கிறது
   வற்றிய குளத்தில்

   ஏற்கெனவே
   விழுந்து கிடந்த
   மஞ்சள் இலைகள்
   காற்றில் நகர்ந்து
   ஆதுரத்துடன்
   அணைத்து மூடுகின்றன
   மலரை

   நீக்கு
  2. தேடிப் பார்த்து வாசிக்கத் தரக் கேட்கவிருந்தேன்:). நீங்களே தந்து விட்டீர்கள், அருமையான கவிதை! நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. இலையின் இருத்தலுக்கானப் போராட்டம் எங்கும் எவராலும் பதிவுசெய்யப்படாமல் போனது, மனதோரம் ஒரு வலியை உணரச்செய்கிறது. அருமையான கவிதை, பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 3. மாற்றி யோசித்து எழுதப்பட்டுள்ள மகத்தான கவிதை மனதை மகிழ்விக்கிறது.

  // இலையோடு இலையாக வாடிச் சருகான அதன் மேல் ஊர்ந்துகொண்டிருந்தது மண்புழு //

  :) ஸ்பெஷல் பாராட்டுகள்.

  நவீன விருட்சம் வெளியீட்டுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை. அங்கேயும் இங்கேயும் ரசித்தேன்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin