சனி, 11 அக்டோபர், 2014

ஆறடி நிலம் (நிறைவுப் பாகம்) - நன்றி தினகரன் வசந்தம்!

பாகம் 1 ; பாகம் 2 . பாகம் 3.

புயலாக உள்ளே வந்தாள் ராணி ஜீனத் அவரது குழப்பங்களுக்குத் தீர்வு காண.  “முடிவு செய்து விட்டேன்.  நம் யாரையும் கொல்லக் கூடாதென  பிரிட்டிஷ்காரர்களுடன் பேரம் பேசப் போகிறேன். ஒப்புக் கொண்டால் சரணடைந்து விடுகிறோம் என்று சொல்லப் போகிறேன்” என்றாள். ஏதோ சொல்ல முற்பட்ட அகமதைப் பார்த்து “மகராஜாவின் அனுமதியையே நான் கேட்கவில்லை. கொட்டகையைக் கழுவும் முட்டாள்களின் பேச்சையா கேட்கப் போகிறேன்” சீறினாள் ஜீனத். குனிந்து வணங்கிய அகமது அமைதியாக வெளியேறி விட்டான்.

அவன் போகும் வரைக் காத்திருந்த ஜாஃபர், “செய்தி அனுப்பினால் நாம் இருக்குமிடம் அவர்களுக்குத் தெரிந்து போகுமே மகராணி” என்றார் கவலையாக. “டெல்லி முழுக்க தெரியும் நாம் எங்கே இருக்கிறோமென்று. காட்டிக் கொடுக்காமல் அத்தனை பேரும் விசுவாசமாய் இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவ்வளவு விசுவாசிகளாய் இருந்தால் அரண்மனையைத் தாக்க வரும்போது தடுத்திருக்க வேண்டாமா? பிழைத்தால் போதுமென்றல்லவா இங்கு வந்து கிடக்கிறோம்? சரியான முடிவுதான் எடுத்திருக்கிறேன். இது ஒன்றுதான் நம் சாம்ராஜ்ஜியத்தையும் வாரிசுகளையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி. இல்லையெனில் நம்மோடு நம் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் எல்லோரையும் மொத்தமாகத் தீர்த்துக் கட்டி விடுவார்கள்.”

பிள்ளைகள், பேரப் பிள்ளைகள்! முதுகுத் தண்டு சில்லிட்டது ஜாஃபருக்கு. ஜீனத் சொல்லும் அத்தனையும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவர் அறிந்ததுதான். ஆனால் வாய் வார்த்தையாகச் சொல்லக் கேட்கையில் நெஞ்சு படபடத்தது. உடனிருக்கும் விசுவாசிகள் எவரும் பயத்தில் வாட்களைத் தூக்கத் தயாராக இல்லை. பெயரளவில்தான் துணைக்கு இருக்கிறார்கள். 'உன்னிஷ்டம்’ என்பது போலத் தலையை ஆட்டி வைத்தார்.

ராணி ஜீனத் அனுப்பிய செய்தியை நம்பவில்லை மேஜர் வில்லியம் ஹட்சன். தன்னைப் பொறி வைத்துப் பிடிக்க நடக்கும் சதியோ என நினைத்தார். ஹுமாயூன் சமாதியை வளைந்து விட்டாலும், உள்ளே நெருங்காமல் இரண்டு தினங்கள் காத்துக் கிடந்தார். பின் தனி ஆளாக ஒலிபெருக்கியில் மகராணியின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்வதாய் அறிவித்தபடியே அரண்மனையை நோக்கி ஹட்சன் வரவும் ஜீனத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஜாஃபருக்கு ஹட்சன் மேல் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவர் கையில் இனி எதுவுமில்லை.

உறவுகளை இழந்து ஆத்திரத்தில் இருந்த பிரிட்டிஷ்காரர்களைக் குஷிப் படுத்த, வயதான ஜாஃபரையும் குடும்பத்தினரையும் கைது செய்து வீதி வழியே ஊர்வலமாக இழுத்துச் சென்று செங்கோட்டையில் சிறை வைத்தார் ஹட்ஸன். சில தினங்களுக்கு முன் வெற்றிக் களிப்பில் அல்லோகலப்பட்ட அதே வீதிகள். மெளனமாக வேடிக்கை பார்த்தனர் பொது மக்கள்.

ஹட்சன் தன் வேலையைக் காட்டி விட்டார்.  ஜாஃபரின் இரு மகன்களையும், பேரனையும் கொடூரமான முறையில் கொன்று விட்ட செய்தி வந்த போது ஜீனத்தை யாராலும் தேற்ற முடியவில்லை.  மிர்ஸாவை ஏசினாள். ஹட்சனைத் தூற்றினாள். அல்லாவிடம் நியாயம் கேட்டாள்.

‘மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கவில்லையே. எல்லா மக்களையும் என் மக்களாய்ப் பார்த்தேனே? எங்களுக்கு ஏன் இப்படி நேர வேண்டும்?’ நொறுங்கிப் போய் விட்டார் ஜாஃபர். காலடியில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தான் அகமது.

விசாரணை நடந்தது. எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை ஜாஃபர். உலுக்கிக் கேட்டால் ‘தெரியவில்லை’ எனும் ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினார். ராணி ஜீனத் மஹால், இரண்டு மகன்கள், மருமகள், பேத்தியோடு ஜாஃபரை பர்மாவுக்கு நாடு கடத்தி ரங்கூனில் சிறைவைக்கத் தீர்ப்பாயிற்று. அவருக்குத் துணையாகச் செல்ல மன்றாடிய அகமதை பெரிய மனதுடன் அனுமதித்தனர்.

நான்கு நூற்றாண்டு கால மொகல் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.

ரங்கூனில் எட்டுக்கு எட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த கவிஞருக்கு பேனா, காகிதங்கள் மறுக்கப்பட்டன. அப்படியும் கையில் கிடைக்கும் எரிந்த குச்சியால் ஆங்காங்கே சுவற்றில் கவிதைகள் எழுதி வைப்பார் ஜாஃபர். அவற்றை வாசித்துப் பார்க்கும் ஒரே இரசிகன் அகமது. மற்றவர்களுக்கு மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டிருக்க இவரைக் கவனிக்க இவர் அறையிலே இருந்தான். நிறைய மாற்றம் அவனிடத்தில். மன முதிர்ச்சியுடன் குறிப்பறிந்து நடந்து கொண்டான். முன் போல வளவளவெனப் பேசுவதில்லை. ஏன் என ஜாஃபரும் கேட்கவில்லை.  மாளிகையில் சிறை இருந்தபோது யாராவது தன்னோடு பேசமாட்டார்களா என ஏங்கிய காலம் நினைவுக்கு வந்தது. இப்போது உடன் இருக்கும் ஒரே ஜீவனின் குரலையும் கேட்கும் மனநிலை இல்லை.

‘ஆனால் என் குரலை கேட்டுதான் ஆக வேண்டும்’ என்பது போலக் கூவிக் கொண்டிருந்தது எங்கிருந்தோ ஒரு வானம்பாடி. அதன் பாடலில் இலயித்துப் போன  ஜாஃபர் மெல்ல எழுந்தார்.

நள்ளிரவு. சன்னலுக்கு வெளியே காய்ந்து கொண்டிருந்தது முழுநிலவு. அறைக்குள் பாய்ந்த அதன் ஒளியில், எழுதத் தொடங்கினார் சுவற்றில்:

என் இதயத்துக்கு இல்லை அமைதி இந்தப் பூமியில்
யாருக்குதான் இருந்தது திருப்தி இந்த அற்ப உலகில்?

காவல்காரனோ வேட்டைக்காரனோ
யார்மேலும் வருத்தப்படுவதில்லை வானம்பாடி
வசந்தகால அறுவடை சமயத்தில்
சிறைப்படுத்தி விளையாடுகிறது விதி

ஆசைகளிடம் சொல்லுங்கள் வேறெங்கேனும் குடிபுக
எங்கிருக்கிறது இடம், அதிலேயே மூழ்கிப்போன இதயத்தில்?

நீண்ட ஆயுள் கேட்டேன், நான்கு நாட்களைப் பெற்றேன்
ஆசைகளில் கழிந்தது இரண்டு, காத்திருப்பில் இரண்டு.

முடிந்தது வாழ்நாள் , சாய்ந்தது பொழுது
தூங்கப் போகிறேன், கால்களை நீட்டி, என் கல்லறையில்

எத்தனை துரதர்ஷ்டசாலி, ஜாஃபர்! அவனை அடக்கம் செய்ய
ஆறடி கூடக் கிடைக்கவில்லை, அவன் நேசிக்கும் திருநாட்டில்.

பெரிய கேவல் ஒன்று வெடித்தது பின்னாலிருந்து. பாடுவதை நிறுத்தியது வானம்பாடி. எழுதுவதை நிறுத்தி விட்டுத் திரும்பினார் ஜாஃபர். தேம்பியபடியே அவர் கால்களில் விழுந்தான் அகமது.

கவிதையை காட்டியபடியே, “இது எல்லாவற்றுக்கும் நான்தானே மாமன்னா காரணம்? அன்றொருநாள் காலையில் முட்டாள்தனமாக நான் பேசிய பேச்சுதானே உங்களை விபரீதமான முடிவுகளை எடுக்க வைத்தது? இருபதாண்டுகள் ஆட்சி செய்த தலைநகரின் வீதிகளில் உங்களைக் கொண்டாடிய மக்கள் முன்னிலையில் இழுத்துச் செல்லப்பட்டீர்கள். பிள்ளைகளை இழந்து வேதனையில் துடித்தீர்கள். குதிரைக் கொட்டகையை விடச் சிறிய இந்த அறையில் நோய்களுடன் சிரமப் படுகிறீர்கள். எல்லாவற்றுக்கும் என் ஒருவனைத் தவிர வேறு யார் காரணமாயிருக்க முடியும்? மாபெரும் சாம்ராஜ்யத்தின் சரிவுக்கு இந்த மடையனே பொறுப்பாகி விட்டேன்”

அவனைத் தொட்டுத் தூக்கி நிறுத்தினார் ஜாஃபர். அங்கு வந்த இரு வருடங்களில் முதன் முறையாக அவனைப் பார்த்துப் புன்னகை பூத்தார். “உனக்கும் நிகழ்ந்தவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அகமது. இப்படி நடக்க வேண்டுமென இருந்திருக்கிறது. இப்படிதான் என் பெயர் சரித்திரத்தில் நிலைக்க வேண்டுமென இருந்திருக்கிறது. மொகல் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி வருங்காலம் பேசும்போது அதை முடித்து வைத்தப் புண்ணியவானாக என் பெயர் இருக்க வேண்டுமென்பது விதிக்கப்பட்டது. இந்த விதி நான் பிறக்கும் முன்னரே, என் தாயாரின் திருமணத்தின் போதே எழுதப்பட்டு விட்டது.” என்றவர் “எந்த வருத்தமும் வேண்டாம்”  எனத் தோள்களில் தட்டிக் கொடுத்தார்.

“மேன்மக்கள் என்றும் மேன்மக்களே. இப்படிச் சொல்வது உங்கள் பெருந்தன்மை” கண்களைத் துடைத்தபடி அறைமூலையில் சுருண்டு படுத்துக் கொண்டான் அகமது. அவன் விம்மல் அடங்கக் காத்திருந்து, விட்ட இடத்திலிருந்து மீண்டும் பாடத் தொடங்கியது வானம்பாடி. அவர்கள் இருவரும் அறியாத சில உண்மைகள் தனக்குத் தெரியும் என்பது போல, முன்னை விட உற்சாகமாக.

*

(முற்றும்)

ஆம். மாமன்னரும் அகமதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தவறாக முடிந்தாலும் சிப்பாய்க் கலகம், அடக்கு முறைக்கு எதிராகப் புரட்சிகள் வெடிக்கக் காரணமாய் அமைந்ததும்.., ‘சுதந்திர இந்தியா’வுக்கு வித்திட்ட முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சரித்திரத்தில் இடம்பெற்றதும்.., இன்றளவும் மத நல்லிணக்கத்திற்காக இரண்டாம் பகதூர் ஷா ஜாஃபர் போற்றப்படுவதும்.., பர்மா செல்லும் இந்திய பிரதம மந்திரிகள், அரசாங்க அதிகாரிகள் அவர் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துவதும்.
**


நன்றி தினகரன் வசந்தம்!
 ***

10 கருத்துகள்:

 1. ஆழ்மான உணர்வுக்குவியலாய் அருமையான தொடர்..

  பதிலளிநீக்கு
 2. அடக்கப்பட்ட உணர்வுகள், அடக்கப்பட்ட வார்த்தைகளில்..

  அருமை.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. ஆறடி நில கவிதை அருமை.
  சரித்திர கதை அருமை.
  சுதந்திர போராட்டத்திற்கு சிப்பாய் கலகம் முன்னோடி. அதற்கு கட்டியம் கூறிய வானப்பாடி அருமை.

  பதிலளிநீக்கு
 4. @கோமதி அரசு,

  கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 5. அக்கா,

  அழகான ஒரு வரலாற்றுத் தொடர்...
  இறுதியில் வரும் கவிதை கலக்கல்...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin