புதன், 8 அக்டோபர், 2014

தினகரன் வசந்தம் தொடர்: ஆறடி நிலம் (பாகம் 3)

பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே.

யோசிக்கிறீர்களா மன்னா? சரி. யோசித்து முடிவு சொல்லுங்கள். அதுவரை இங்கேயே நிற்கிறேன்” என்றான் மிர்ஸா பணிவாக.  தப்பிக்க வழியில்லை.

“முடிவா? எந்த மனிதனாலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. நானும் அப்படியே. நடக்க வேண்டியவை நடக்க வேண்டிய தருணத்தில் நடந்து விடுகின்றன.” இரண்டு கைகளையும் உயரத் தூக்கிச் சொன்னார். ‘என்ன அற்புதமான பதில்’ எழுந்த சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் “மேலும் என்னைத் தலைவனாக்க விரும்பும் அந்த சிப்பாய்களோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லை” உதட்டைப் பிதுக்கி, தோள்களை உயர்த்திக் கைவிரித்தார் ஜாஃபர்.


“புரிகிறது மாமன்னா! உங்களுக்காக நானே முடிவெடுக்கிறேன். சிப்பாய்களோடு பரிச்சயம்? அந்தக் கவலையை விடுங்கள். நாளையே சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். உங்கள் விருப்பப்படியே நடக்க வேண்டியவை நடக்க வேண்டிய தருணத்தில் நடக்கும். உங்கள் மேலான நம்பிக்கையை இந்த எளியவன் மேல் வைத்ததற்கும் நன்றி மாமன்னா!” மேலே பேச வாய்ப்பே கொடுக்காமல் வணங்கி விடைபெற்றான் மிர்ஸா.  நிஜமாகவே தான் சொன்னது புரியவில்லையா? அல்லது சாதுவான தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறானா? அயர்ச்சியில் உறங்கிப் போனார் நாற்காலியில்.

ல்லவேளையாக சிப்பாய்களுடனான சந்திப்பை மிர்ஸா ஒரு தோப்பில் ஏற்பாடு செய்திருந்தான். அரண்மனைக்கு இந்தக் கூட்டத்தைக் கொண்டு வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? நினைக்கவே பயமாக இருந்தது ஜாஃபருக்கு.  முரட்டுத் தனமாய் இருந்தார்கள்.  சீருடையுடன் சிலர். கிழிந்து தொங்கிய உடையுடன் சிலர். அவர்கள் குளித்துப் பலநாள் ஆகியிருக்க வேண்டும். சாயம் போன சீருடையில் சிலர்.  அவர்கள் எப்போதோ வேலையிழந்த சிப்பாய்களாய் இருக்க வேண்டும். கையில் கிடைத்த கத்திகளுடன் சிலர். தோளில் தொங்கிய துப்பாக்கிகளுடன் சிலர்.  மிர்ஸா போல் குதிரைகளில் கனவான்கள் சிலர்.

பெரும்பாலான சிப்பாய்கள் குடித்திருப்பது தெரிந்தது. நிற்க முடியாமல் ஆடிக் கொண்டிருந்தார்கள். ‘பேரரசரே நீர் வாழ்க.. வெள்ளையனே ஒழிக...’  உற்சாகமாகக் கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆடிப்பாடி தங்கள் அச்சத்தைப் புதைக்க முற்படுவதாகவும் தோன்றியது ஜாஃபருக்கு. திடீரென ஒரு சின்னக் கும்பல் அவரை சூழ்ந்து கொண்டது. குனிந்து  நிமிர்ந்து கோணலாக வணக்கம் போட்டது. கலக்கத்தைக் காட்டிக் கொள்ளமால் அமைதியாக அவர்களை ஏறிட்டார். அதில் ஒருவன் இரண்டடி முன்னால் வந்து “மன்னாதி மன்னா, எங்களுக்கு நன்றி சொல்ல மாட்டீரா?  பரிசு கிடையாதா? எனக்கு மட்டும் ஏதாவது? இந்த முத்துமாலை.. என்ன பார்க்கிறீர்? நினைவிருக்கட்டும். உங்களை மறுபடி மன்னராக்கி இருக்கிறோம் நாங்கள்” பெரிதாகச் சிரித்தான். கூடியிருந்த கூட்டத்தில் பலரும் சேர்ந்து சிரித்தார்கள்.

இப்படியான அவமரியாதையை, அசிங்கத்தை எதிர்பார்க்கவில்லை ஜாஃபர். யாரும் அவர்களைக் கட்டுப்படுத்தவும் முன் வராதது பார்த்து அரண்மனைக்குத் திரும்பிட முடிவெடுத்த வேளையில்தான் அது நடந்தது. கூட்டத்தின் மறுபக்கத்திலிருந்து உற்சாகமான பெருங்கூச்சல் கிளம்பியது. சுற்றி நின்ற கும்பலும் என்னவென அறிய விரைய, ஜாஃபருக்கு எதுவும் ஊகிக்க முடியவில்லை. கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ஓடி வந்தான் அப்போது அகமது.

“மாமன்னா! நல்ல நேரம் பிறந்து விட்டது. நாம் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு டஜன் வெள்ளைக்காரர்களைப் பிடித்து விட்டோம். இதோ சிப்பாய்கள் அவர்களை இங்கே கொண்டு வருகிறார்கள். உத்திரவிடுங்கள் மாமன்னா. அவர்களைக் கொன்று போட ஆணையிடுங்கள்” சொல்லிக் கொண்டே போனான்.

என்ன? ஆங்கிலேயரைக் கொல்வதா? தான் அதற்கு ஆணையிடுவதா? ஒரு கணம் மூச்சே நின்று விட்டது.  கூச்சலிட்டபடி வெள்ளையரைச் சிறைபிடித்தக் கும்பல் வெறியோடு இவரை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கேயோ நின்றிருந்த  மிர்ஸா அவசரமாய் தன் குதிரையில் வந்து சேர்ந்தான்.

தன் முன்னால் நிறுத்தப்பட்டக் கைதிகளைப் பார்த்ததும் ஜாஃபருக்கு அதிர்ச்சி பன்மடங்கானது. அத்தனை பேரும் பெண்கள், குழந்தைகள். பின்பக்கமாகக் கைகளைக் கட்டி மோசமாகக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு வந்திருந்தனர் சிப்பாய்கள்.  சமீபத்தில் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விலகி வந்தவர்களாய் இருக்க வேண்டும். சீருடைகள் சுத்தமாகவும் புதிதாகவும் தெரிந்தன.

“ஆணை இடுங்கள் மன்னா” என்றான் அவர்களில் ஒருவன் வெற்றிக் களிப்புடன். 

“ வேண்டாம். இவர்களை எதுவும் செய்யாதீர்கள்! விட்டு விடுங்கள்” இவர் இறைஞ்சியது விண்ணைப் பிளந்த அவர்களது கரகோஷத்தில் அமுங்கிக் கரைந்து போனது.  ஆனால் அவர் முகபாவத்தை வைத்து அவருக்குப் பிடிக்கவில்லை எனப் புரிந்திருக்க வேண்டும். குதிரையை அவர்களை நோக்கிச் செலுத்திய மிர்ஸா இவருக்காக வாதிடுறான் எனத் தெரிந்தது. ஆனால் சிப்பாய்களோ அவன் சொன்ன எதையும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்வாதம் செய்தார்கள்.

ஒரு குரல் அதில் உரத்து ஒலித்தது: “முடியாது. உங்களிடம் ஒப்படைக்க முடியாது. வடிகட்டிய கோழைகள், உங்களைத் தெரியாதா? மீண்டும் பிரிட்டிஷ்காரார்களிடமே கொண்டு விடுவீர்கள். இவர்களைச் சிரச்சேதம் செய்ய உத்தரவு மட்டுமே வேண்டும். உங்களிடம் அனுமதி கேட்கவில்லை. அனுமதிக்க வாய்ப்புதான் கொடுக்கிறோம். மறுத்தாலும் நாங்கள் நீதியை நிலை நாட்டியே தீருவோம்”

மிர்ஸாவும் இன்னும் சில கனவான்களும் தொடர்ந்து அவர்களிடம் வாதம் செய்து கொண்டிருக்க “கிளம்புகிறேன் நான்” எழுந்து கொண்டார் ஜாஃபர்.  யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை.

நீர் வார்க்க ஆளில்லாமல் வாடிக் கிடந்த தோட்டத்துச் செடிகளைப் பார்த்தபடி நின்றிருந்தார் ஜாஃபர். ஒரு மாதம் முன் வரை நாட்கள் எவ்வளவு சீராக நகர்ந்து கொண்டிருந்தன? அரண்மனையிலேயே சிறை என்பதெல்லாம் ஒரு அவமானமாகவே தெரிந்ததில்லை அகமது பேச்சை ஆரம்பிக்கும் வரை. அடுத்த இரண்டே தினங்களில் வாழ்க்கையை அப்படியே அல்லவா புரட்டிப் போட்டு விட்டது சிப்பாய்களுடனான சந்திப்பு?

13 செப்டம்பர் (1857). ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என மொத்தமாய் நாற்பத்தைந்து பிரிட்டிஷ்காரர்களை கொன்று விட்டனர் சிப்பாய்கள். விழுந்த பழி ஒருபுறம் அலைக்கழிக்க, உயிர் பயத்தோடு தன்முன் வெருண்டு நின்ற பெண்களும், விம்மிக் கொண்டிருந்த குழந்தைகளும் கண்களை விட்டு அகல மறுத்தார்கள். பரிதவிப்பு அடங்கவில்லை. ஆனால் அன்றும் அடுத்தநாளும் டெல்லியே கொண்டாட்டத்தில் அதிர்ந்தது.

மக்களின் அந்த சந்தோஷம் அதிக காலம் நீடிக்கவில்லை. அடுத்த சில நாட்களிலேயே தேவையான படையைத் திரட்டிக் கொண்டு டெல்லியைச் சுற்றி வளைத்து விட்டார்கள் பிரிட்டிஷ்காரார்கள். இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை கலகம் செய்த சிப்பாய்களால். ஜாஃபர் குடும்பத்தோடு ஹூமாயுன் சமாதிக்குத் தப்பியோடிய சில மணிகளில் எல்லாம் அவர் அரண்மனையை முற்றுகையிட்டுத் தேடியிருக்கிறார்கள். 

ஜீனத் மஹால் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். நேரடியாக இவரிடம் காண்பிக்கவில்லை என்றாலும்  இவர் முன்னே, மிர்ஸாவை பார்த்துக் கத்திக் கொண்டிருந்தாள்:“எல்லாம் உன்னால்தான். அடிமையானாலும் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்படி எங்கள் உயிர்களை ஊசலாட விட்டு விட்டாயே”

“கவலை வேண்டாம் மகராணி. மக்களும் சிப்பாய்களும் நம் பக்கம். கிழக்கிந்திய கம்பெனியர் திரட்டி வந்திருக்கும் புதிய சிப்பாய்ப் படையிலும் இந்தியர்களே அதிகம். நீங்கள் மக்களால் எவ்வளவு நேசிக்கப் படுகிறீர்கள் என அறிவார்கள். உங்கள் யார் மேலும் கை வைத்து மீண்டும் சிப்பாய்களின் அதிருப்தியை சம்பாதிப்பதை விரும்ப மாட்டார்கள்.”

மிர்ஸாவின் எந்த சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை ராணி. தனக்கு ஆதரவாகப் பேச மாட்டரா என ஜாஃபரையே பார்த்து நின்ற மிர்ஸா ஏமாற்றத்துடன் வெளியேறினான். அதுதான் அவரை கடைசியாகப் பார்ப்பது என ஜாஃபர் நினைக்கவில்லை. அன்று மாலையே மிர்ஸா கொல்லப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. குற்ற உணர்வில் சில சிப்பாய்களுடன் பிரிட்டிஷ்காரர்களைத் தாக்கப் போன மிர்ஸா படுகாயமடைந்து இறந்தும் போய் விட்டான். அழுதபடியே அகமது சொன்னபோது திகைத்து நின்று விட்டார் ஜாஃபர்.

நடப்பவற்றுக்கு என்ன அர்த்தம்? இப்போது தான் என்ன செய்ய வேண்டும்? இதுவரை தனக்காக முடிவெடுத்தவன் போய்ச் சேர்ந்து விட்டான். இனி அந்த இடத்தில் அவரா? அவர் எடுக்கப் போகும் அந்த முடிவில்தான் அவர் பெயர் நிலைபெறப் போகிறதா?

கைகள் நடுங்க ஆரம்பிக்க அகமதை நோக்கி ஹூக்காவை எடுத்து வருமாறு சைகை செய்தார்.

(தொடரும்)

நன்றி தினகரன் வசந்தம்!
***

6 கருத்துகள்:

  1. கதை நன்றாக இருக்கிறது.
    இரக்க குண்ம் உள்ள மன்னர் பாத்திரம் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin