வியாழன், 9 அக்டோபர், 2014

உந்தன் சிரிப்பு - பாப்லோ நெருடா (4)

ன்னிடமிருந்து ரொட்டியை எடுத்துக் கொள்,
உனக்கு விருப்பமானால்
காற்றையும் கூட எடுத்துக் கொள், ஆனால்
உந்தன் சிரிப்பை மட்டும் என்னிடமிருந்து பிரிக்காதே.

பறித்துக் கொள்ளாதே ரோஜாவை,
ஆனந்தத்தில் திடீரெனத்
துள்ளித் தெறிக்கும் தண்ணீரை,
மின்னலென உன்னில் பிறக்கும்
வெள்ளி அலைகளை.

என் போராட்டங்கள் கரடுமுரடானவை
சமயங்களில் மாறாத இவ்வுலகைப் பார்த்து
சோர்ந்த கண்களுடன் திரும்புகிறேன்
ஆனால் நுழையும் போதே
வான் நோக்கி உயருகிறது உந்தன் சிரிப்பு என்னைத் தேடி
வாழ்வின் அத்தனைக் கதவுகளையும் எனக்காகத் திறந்தபடி.

என் அன்பே,
இருண்ட பொழுதுகளில்
ஒலிக்கிறது உந்தன் சிரிப்பு,
சட்டென்று என் இரத்தத்தால்
தெருவின் கற்கள் கரையாவதை
நீ காண நேர்ந்தாலும், சிரித்திடு,
ஏனெனில் உந்தன் சிரிப்பு
என் கைகளுக்குக் கிடைத்த
புத்தம்புது வாள் போன்றது.

கடலுக்கு அருகே இலையுதிர் காலத்தில்,
எழுப்பட்டும் உன் சிரிப்பு
நுரைகளாலான அதன் கோட்டையை.
வசந்த காலத்தில், அன்பே,
மலரட்டும் உன் சிரிப்பு
நான் காணக் காத்திருந்த பூவாக,
நீலப் பூவாக,
என் நாட்டின் ரோஜாவாக.


சிரித்திடு இரவில், பகலில், நிலவில்
சிரித்திடு தீவின் வளைந்து திரும்பும் தெருக்களில்
சிரிந்திடு உன்னை விரும்பும் இந்த
அலங்கோலமானவனைப் பார்த்து.
நான் கண்களைத் திறந்து மூடும்போது
என் காலடிச் சத்தம் போகும்போது
என் காலடிச் சத்தம் திரும்பி வரும்போது
மறுத்து விடு
எனக்கான ரொட்டியை, காற்றை, வெளிச்சத்தை, வசந்தத்தை
ஆனால் ஒருபோதும் உந்தன் சிரிப்பை மறுக்காதே
ஏனெனில் நான் இறந்து விடுவேன்.
**

மூலம்:
Your Laughter
by Pablo Neruda (in Spanish)

ஆங்கிலத்தினூடாகத் தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதை.
(இது ஆங்கிலத்தில் பிரபலமான பாடலும் கூட.)
மலைகள் (53_வது இதழ்) வெளியீடு

படங்கள்: Ramalakshmi Photography

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin