பரந்த காட்சி
கிராமம் கட்டிடக் காடாகி
வெகுகாலமான பின்னரும்
அந்த ஒரு மரம் மட்டும்
குன்றின் மேல்
நின்றுகொண்டே இருந்தது
அந்நாளில்
அதிலேறி விளையாடிய குழந்தைகள்
இப்போது
குளிரூட்டப்பட்ட கார்களிலிருந்து
தம் குழந்தைகளுக்கு
அதைச் சுட்டிக்காட்டிச் சென்றனர்
பறவைகள் இன்னமும்
ஏதோ அம்மரம் தனித்துவமானது
என்பதற்காக அல்ல
தன் காத்திருப்பை ஒருபோதும்
அது நிறுத்தியதில்லை என்பதற்காக
பருவங்கள் அதன் கிளைகளோடு
சமரசம் பேசின
புயல்கள் அதன் பொறுமையை
கடனாகப் பெற்றன
கோடை
எந்த மன்னிப்பும் கேட்காமல்
அதன் இலைகளை
உதிர்த்துச் சென்றது
இருப்பினும்
ஒவ்வொரு வசந்தத்திலும்
ஏமாற்றமென்பது இதற்குமுன்
ஒருபோதும் நிகழ்ந்ததே இல்லை
என்பது போல்
மீண்டும் துளிர்த்தது மரம்
ஒரு மாலை வந்தனர் சிலர்
எந்திரங்களோடு
ஒரு மணி நேரத்திற்குள்
சாய்க்கப்பட்டது மரம்
முதன்முறையாக
குன்று
முழுமையாகத் தெரிந்தது
எல்லோரும்
அந்தப் பரந்த காட்சியை
வியந்து ரசித்தனர்
*


கொடுமை! இந்தக் கவிதை கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறது. நான் நண்பனின் மகன் திருமணத்துக்காக கோவில்பட்டி செல்லும் வழியில் மதுரை சென்று அங்கு நாங்கள் இருந்த வீட்டைப் பார்க்க சென்றேன். சுற்றிலும் நிறைய மாற்றங்கள் இருந்தாலும் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டின் முன் இருந்த வேப்ப மரம் இன்னமும் அங்கே நின்று கொண்டிருந்தது வியப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
பதிலளிநீக்குமாற்றங்கள் வந்து கொண்டு இருக்கும். ஆனாலும் காலம் காலமாக நின்று மலை மேல் நின்று இருந்த மரம் வெட்டப்பட்டது வருத்தமே! மரத்தை சாய்த்தவர்கள், இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து மலையை தகர்த்துவிடுவார்கள், விரிந்த காட்சி போல விரிந்த பாதை வேண்டுமென்று.
பதிலளிநீக்கு