வெள்ளி, 6 நவம்பர், 2026

அர்த்தங்களின் பசி - நவீனவிருட்சம் தீபாவளி மலரில்...

நவீனவிருட்சம், குவிகம், பூபாளம் ஆகிய இதழ்கள் இணைந்து, 160 பக்கங்களில் சிறப்பான உள்ளடக்கத்துடன் வெளியிட்டுள்ள தீபாவளி மலர் 2026_ல், விருட்சம் தேர்வில் வெளியாகியுள்ள எனது கவிதை:

அர்த்தங்களின் பசி

சொற்கள் புறப்படுகின்றன
மனிதரின் உதடுகளிலிருந்து
நதியின் ஊற்றிலிருந்து 
பெருகும் நீரைப் போல
நஞ்சு தீண்டாத் தூய்மையுடன்

சிலவேளைகளில் அவை 
ஒரு மனதில் நெருப்பாக
மற்றொரு மனதில் 
அவமானமாக விழுகின்றன
நேர்மை நிறைந்த சொற்கள்
அகந்தையாக ஒலிக்கின்றன
விலகி நிற்கும் மனங்களுக்கு
நிராகரிப்பாகத் தோன்றுகின்றன

ஒரே வாக்கியம்
பல இதயங்களின் வழியே நடந்து 
வெவ்வேறு முகங்களை அணிந்து
திரும்பி வருகிறது

ஒவ்வொரு செவியும்
தன் எதிரொலியுடனேயே கேட்கிறது
கேட்கும் ஒவ்வொருவரும்
அவ்வொலியை மொழிபெயர்க்கிறார்கள்
தங்களது காயங்களின், பயங்களின்
பெருமிதங்களின், நினைவுகளின் மற்றும்
ஏக்கங்களின் வழியாக

கசப்பான இதயம்
தேனிலும் கசப்பைத் தேடுகிறது
மருண்ட உள்ளம்
மௌனத்தின் அசைவிலும்
காற்றின் சலனத்திலும்
இடியோசையைக் கேட்கிறது
ஐயத்தால் இருண்ட விழிகள்
வெளிச்சத்தைக் கூட
விரோதமாகக் காண்கின்றன

சொல்லின் பொருள்
அதனுள்ளே இருப்பதில்லை
அர்த்தங்களை ஊட்டும் மனங்களின் 
அடங்காத பசியில் இருக்கிறது

மெய்ப்பொருள் 
தான் விழும் கிணற்றின்
ஆழத்தைச் சுமந்து 
உள்ளாழத்தில் கல்லாகி
மெளனிக்கிறது
*

நன்றி நவீன விருட்சம்!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin