செவ்வாய், 29 செப்டம்பர், 2026

கடினமான பாடம் — நவீன விருட்சம் இதழ்:134

 

கடினமான பாடம்

மூன்றாவது வரிசையில் 
அமர்ந்திருக்கிறான்
சத்தத்திற்கும் சிரிப்பிற்கும் நடுவில்

வருகைப் பதிவேட்டில் மட்டுமே
ஒலிக்கிறது அவன் பெயர்
வேறெங்கும் எப்போதும் இல்லை

நாற்காலிகள் தரையில் உரசுகின்றன
பென்சில்கள் பக்கங்களில் விரைகின்றன
மடிக்கப்பட்ட காகிதங்களில் 
ரகசியங்கள் சுற்றுகின்றன
அவனுடைய மேசையை 
எதுவும் எட்டுவதில்லை

சில நேரங்களில் 
அவனுக்கு விடைகள் தெரியும்
ஆனால் அவற்றை 
அமைதியாக விழுங்கி விடுகிறான்
கேட்கப்படக் கொடுத்து வைக்காத 
வார்த்தைகளாக

மதிய உணவின் போது மைதானம் 
வட்டங்களால் நிரம்புகிறது
மலர்களைப் போல குழுக்கள் மலருகின்றன
அவற்றையெல்லாம் கடந்து நடக்கிறான்
இளைப்பாற இடமற்ற நிழலாக

ஆசிரியர் புன்னகைக்கிறார்
மணி  சரியான நேரத்திற்கு அடிக்கிறது
நாள் வழக்கம் போல நகர்கிறது
அவனுள் மட்டும் எல்லாம்
உறைந்து நிற்கிறது

குரல்கள் நிறைந்த அறையில்
எல்லோரும் ஏதோவொரு இணைப்பில்
ஒன்றுபட்டவராகத் தோன்றுமிடத்தில்
அவன் கடினமான பாடத்தைக் கற்கிறான்
பலரால் சூழப்பட்டிருந்தாலும்
இவ்வுலகிலிருந்து காணாமற் போக முடியும்
*
படம்: AI உருவாக்கம்
*
நவீன விருட்சம் இதழ்:134_ல்.., நன்றி நவீன விருட்சம்!



***

4 கருத்துகள்:

  1. இது அவன் தப்பா, அவன் கூட இருப்பவர்களின் தப்பா என்று மனம் யோசிக்கிறது.  முதலில் நாம் சென்று கலந்து பழகவேண்டும் அல்லவா?  நிறைய இல்லாவிட்டாலும் ஓரிருவராவது அமைவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயங்கி சுருங்கி நிற்பவர்களைக் கவனிக்கக் கூட அவகாசம் இல்லாத உலகம். நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஆனால்
      யாருடைய தவறு என்பதைத் தாண்டி அவனது நிலைமையைப் பேசுகிறது கவிதை.

      கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அந்த மாணவனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. பள்ளி பருவம் மகிழ்ச்சியான பருவம். படிப்பு வந்தாலும், படிப்பு வரவில்லை என்றாலும் மாணவர்கள் உற்சாகமாக இருப்பார்கள் ஏன் என்ன காரணம் என்று கவிதையில் சொல்லப்படவில்லையே!
    இக்கால ஆசிரியர்களின் மன போக்கை சொல்கிறதா?முன்பு ஒவ்வொரு மாணவனின் நடவடிக்கையை கண்கானிப்பார் ஆசிரியர் "ஏன் இப்படி இருக்கிறான் உங்கள் பையன் "என்று பெற்றோரை அழைத்து பேசுவார். அந்த பையணிடம் "உங்கள் பெற்றோரை கூட்டி வா பேச வேண்டும்" என்று முதல்நாளே சொல்லி விடுவார் அந்த மாணவரிடம்.
    ஆசிரியர் புன்னைகைக்கு என்ன காரணம்?

    நிறைய கேள்விகளை எழுப்பும் கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், கோமதிம்மா. வாசிப்பவரின் மனதில் எழும்பும் கேள்விகளுக்காகவே இக்கவிதை. தனிமை கொடியது. காரணங்களும் வாசிப்பவரின் ஊகங்களுக்கே விட்டுள்ளேன். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin