செவ்வாய், 15 ஜனவரி, 2013

வன தெய்வங்களின் ஆசிர்வாதம் - மைசூர் காரஞ்சி ஏரி இயற்கை பூங்கா (1)

# 1

இரவு பனியில் குளித்துக் காலைச் சூரியனில் தமை உலர்த்திக் கொண்டிருந்த வனதெய்வங்களுக்குக் காட்டு மலர்களைச் சூட்டிச் சென்றிருந்தனர் பணியாளர்கள். இதயத்தை விட்டு அகலா எளிமையான அழகு. யாரை ஆசிர்வதித்து எங்கே வீற்றிருக்கின்றன இவை?

# 2
காவல் தெய்வம்

ஐம்பத்தைந்து ஹெக்டேர் தண்ணீர் பரப்பளவைக் கொண்ட காரஞ்சி ஏரியின் கரையோரமாய் இன்னுமொரு முப்பத்தைந்து ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கிற இயற்கைப் பூங்காவில் அதன் செழுமைக்குக் காவலாக..

# 3

மிருகக்காட்சி சாலைக்குச் சொந்தமான இப்பூங்காவுக்கு தினசரி வருகையாளர் மூலமாக டிக்கெட் விற்பனையில் நல்ல இலாபம் கிடைப்பதாக அறியப்பட்டாலும், மைசூர் செல்லும் பெரும்பாலானோர் zoo வரை சென்று விட்டு இந்தப் பூங்காவை பார்க்காமல் திரும்பி விடுகிறார்கள் என்பதும் உண்மை. நானும் முதல் சிலமுறைகள் இந்தத் தவறைச் செய்திருக்கிறேன். காரணம் பரப்பளவு. மைசூர் zoo-வில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருப்பதால், அடுத்து இதைப் பார்க்கும் எண்ணமே ஏற்படாமல் மக்கள் களைத்து விடுகிறார்கள். இதற்கெனத் தனி நாள் ஒதுக்குவது நல்லது.  ஏரிக்குள்ளே சின்னத் தீவில் அமைந்த வண்ணத்துப்பூச்சி பண்ணை வரை சென்று திரும்பும் தூரம் இரண்டரை கிலோமீட்டராவது இருக்கும். வழியெங்கும் ஏரியின் எழிலும் மரங்களின் அழகும் மயக்குகிறது. அவற்றின் ஒரு பாகத்தை காரஞ்சிக் கரை மரங்களாக ஏற்கனவே இங்கு காட்டியிருந்தேன்:
இன்னும் சில உங்கள் பார்வைக்கு விருந்தாக..# 4 எதிர்த்திசையில் பாதையோர மரங்கள்


# 5 கவிழ்ந்து படர்ந்த கிளைகள்


 # 6 பரந்து விரிந்த மரங்கள்

 # 7  பிரதிபலிப்பு
நிச்சலனமாய் தெரிகிற நீரில் ஆங்காங்கே வட்ட வட்டமாய் சலனங்கள்

பக்கத்துப் பகுதிகளில் இருந்து வந்து கலந்த கழிவு நீரால் ஏரியின் நீர் மீன்கள் மற்ற உயிரினங்கள் வாழ ஏற்புடையதாக இல்லாது போக பெரும் செலவில் சமீபத்தில் சுத்தகரிப்பு செய்திருக்கிறார்கள்.  ஏரியைச் சுற்றிவர நாமே பெடல் செய்து செல்லும் வகையிலான அன்னப்பறவை தோற்றத்திலான படகுகள் உள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்ற போது எடுத்த படம் ஒன்றை மாதிரிக்குப் பகிர்ந்திருக்கிறேன்.


# 8

நடுவில் இரண்டு வருடங்கள் படகுச் சவாரியை முதலை பயத்தால் மூடி வைத்திருந்தார்களாம். படகு ஓட்டும் போது நீரைக் கைகளில் காண்பித்ததில் இரண்டு பேரை முதலைகள் உள்ளே இழுத்துக் கொண்டு விட்டிருக்கின்றன. இப்போது எச்சரிக்கை செய்து அனுப்புவதாக அங்கிருந்தவர் தெரிவித்தார். எப்படியானாலும் இரண்டு மணி நேரத்தில் கபினிக்குக் கிளம்பும் திட்டத்தில் இருந்ததால் படகு சவாரி செய்யும் எண்ணம் இருக்கவில்லை.

ரிக்குக் குறிப்பிட்ட காலங்களில் புலம்பெயர்ந்து வரும் பறவைகளைக் கண்டு இரசிக்க என மூன்று அடுக்கு ‘வாட்ச் டவர்’ ஒன்று கட்டியிருக்கிறார்கள். அதன் மேலிருந்து ரங்கன்திட்டு சரணாலயத்தில் காண முடிகிற பல பறவைகளைப் பார்க்க முடிந்தது. (500mm zoom lens இருந்தாலே அவற்றைக் கேமராவில் தெளிவாகச் சிறைப்பிடிக்க முடியும்.)  Pelican, நாரைகள், நீர்க் காக்கைகள், கொக்குகள் நிறைய இருந்தன.

வண்ணத்துப்பூச்சிப் பூங்காவை நோக்கி உள்ளே வெகுதூரம் நடக்கும் போது, ஒரு பகுதி மூங்கில் வனமாய் இருந்தது. நிறையக் கீரிகள் குறுக்கும் நெடுக்கமாக ஓடிக் கொண்டிருந்தன. பாம்புகள் கடந்த தடமும் கோடு இழுத்தாற்போல் இருந்தன. பாம்புகள் ஜாக்கிரதை என சொல்லியே அனுப்புகிறார்கள். இயற்கைச் சூழலில் பாம்பைப் படமெடுக்க ரொம்ப நாளாக ஆசை. கண்ணில் சிக்குமா எங்கேனும் (தூங்கும்) பாம்பு எனப் பார்த்துக் கொண்டே சென்றேன்:)! அகப்படவில்லை.  ஆனால் அந்தப் பக்கம் பருந்தும் கருடனும் ஓரளவு தாழப் பறந்து கொண்டிருந்தன.  பாம்பு கிடைக்காவிட்டால் போகிறதென நடந்தபடியே சிறைப்படுத்தியவை:

# 9 கிருஷ்ணப் பருந்து
# 10 கருடன்

இந்தியாவின் மிகப் பெரிய (aviary) பறவைப் பண்ணை இங்கேதான் உள்ளது. அதற்குள் செல்லலாம் அடுத்த பாகத்தில்.

(தொடரும்)

32 கருத்துகள்:

 1. அடுத்த மாதம் பெங்களூர் செல்ல இருக்கிறேன். அப்போது பார்க்க வேண்டிய இடங்களை இப்போது தெரிந்து கொண்டேன். அழகான புகைப்படங்கள். நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 2. வாவ் சொல்ல வைக்கும் படங்கள்....

  பகிர்வுக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 3. மிக அழகிய படங்கள் மூலம் அந்த இடத்தின் அழகை எங்களுக்கும் காட்டியிருக்கிறீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஹைய்யோ!!!!!

  நேரில் வரணும் என்ற ஆசையத் தூண்டி விட்டுட்டீங்களே!!!

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்கள்!

  பறவைப் பண்ணைக் காட்சிகளைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. படங்கள் அட்டகாசம். வண்ணத்துப்பூச்சிப் பண்ணையைப் பார்க்கவும் இப்பத்தான் சீசன்னு நினைக்கிறேன். கரெக்டா இருந்தா அடுத்தாப்ல உங்க வலைப்பூவில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்ன்னும் எதிர்பார்க்கலாமா :-))))

  பதிலளிநீக்கு
 8. உங்களைப் போலத்தான் நானும். மைசூர் பலமுறை சென்றும் இந்த காரஞ்சி (கன்னட மொழியில் காரஞ்சி என்றால் நீரூற்று என்று பொருள்) ஏரிக்குப் போனதில்லை.

  அடுத்தமுறை முதலில் இங்கு சென்று விடவேண்டும்.

  அழகான படங்களுடன் சூப்பர் பதிவு.

  பதிலளிநீக்கு
 9. உற்சாக நீரூற்றாய் அருமையான படங்களும் பகிர்வுகளும் .. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அனைத்தும் அருமை. ஏரியைப் பற்றிய தகவல்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 11. @T.N.MURALIDHARAN,

  பயணத் திட்டத்தில் மைசூர் இருந்தால் அவசியம் இங்கே செல்லுங்கள்:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 12. @துளசி கோபால்,

  உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 13. @நடராஜன் கல்பட்டு,

  கூடிய விரைவில் பகிருகின்றேன்:). மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. @NKR R,

  நாள் முழுக்க இருந்தாலும் அலுக்காதென்று தோன்றியது எனக்கும். வாட்ச் டவரில் இருந்து பார்க்க இன்னும் அருமை. நன்றி நந்தா.

  ‘மைனஸ் ஒன்’ வெளியீட்டுக்கு வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 15. @அமைதிச்சாரல்,

  ஊஹூம்:)! நான் சென்றிருந்த அக்டோபர் மாதம், சீசன் என்றே சொல்லப்பட்டாலும் ஏமாற்றி விட்டது பண்ணை. அதிகமாய் moth வகையே காணப்பட்டது. இருப்பினும் கண்ணில் பட்ட சிலவற்றைப் படமெடுத்தேன். பறவைப் பண்ணைப் படங்களைப் பகிர்ந்ததும் அதையும் தனிப்பதிவாக இடுகிறேன். நன்றி சாந்தி.

  BTW, இப்போது பனர்கட்டா பட்டர்ஃப்ளை பூங்காவில் சீசன் எனப் பேசிக் கொள்கிறார்கள்:)!

  பதிலளிநீக்கு
 16. @Ranjani Narayanan,

  கன்னட உச்சரிப்பை அர்த்தத்துடன் புரிந்து கொண்டேன். இனி அப்படியே குறிப்பிடுகிறேன்:).

  அவசியம் அடுத்தமுறை மைசூர் செல்லும்போது போய் வாருங்கள்.

  நன்றி ரஞ்சனிம்மா.

  பதிலளிநீக்கு
 17. அருமையான இயற்கை காட்சிகள்,வனதெய்வங்களின் ஆசீர்வாதம் தான் அந்த இடம். பார்க்க தூண்டும் வர்ணனைகள்.
  நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 18. காவல்தெய்வங்கள் வடிவும் படம் அமைப்பும் விவரிப்பும் மிக அற்புதம் ராமலக்ஷ்மி.
  முதலை,பாம்பு...அப்பாடி பயமா இல்லையா.
  கர்நாடகாவே செம்மண் பூமி .அதில் இந்த நடமாட்டம் அதிகமாகத்தான் இருக்கும்,வீராங்கனையாக இயற்கையோடு ஓட்டிப் படங்கள் எடுத்தது பாராட்டுக்குரியது.நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 19. நல்ல புகைப்படங்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. அட்வென்ச்சர் ட்ரிப் போய் வந்திருக்கீங்க போல!! :-)))

  பதிலளிநீக்கு
 21. @வல்லிசிம்ஹன்,

  முதலை பற்றிக் கேள்விப்படும் முன்னரே, படகில் செல்லும் திட்டம் இருக்கவில்லை. கபினியிலோ நடுஆற்றிலிருக்கும் போது கையை வெளியே காட்டாதீர்கள், முதலைகள் இருக்கின்றன என்றார் பரிசல்காரர்:)! நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 22. @ஹுஸைனம்மா,

  அப்படிதான் இருந்தது:)! நன்றி ஹுஸைனம்மா.

  பதிலளிநீக்கு
 23. @Ranjani Narayanan,

  மீள் வருகைக்கு நன்றி. இந்தப் பதிவிலேயே ‘காராஞ்சி’ எனத் திருத்தி விட்டேன்:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin