செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அறுபடை வீடுகளில் முதல்படை வீடு - திருப்பரங்குன்றம் - கோபுர தரிசனம்

 #1

 "குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு"

திருப்பரங்குன்றத்தின் திருக்கோபுரத்தை முன்னர் 2015_ல் மதுரை சென்றிருந்த போது வெளியிலிருந்து எடுத்து 'இந்தப் பதிவில்..'  பகிர்ந்திருந்தாலும் அப்போது கோயிலுக்குள் செல்ல வாய்க்கவில்லை. இந்த முறை கோபுர தரிசனத்துடன் கோயிலுக்கு உள்ளேயும் சிறந்த தரிசனம் கிடைத்தது. 

#2

ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே!

நான் எடுத்த படங்களுடன், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து சேகரித்த தகவல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளேன்:

முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மதுரையிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

கோயிலில் இருக்கும் சில கல்வெட்டுகள் இது சமணர்களால் உருவாக்கப்பட்ட குகை எனக் கூறினாலும் வேறு சான்றுகள் இது ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே தோன்றிய முருகன் கோயில் என்றும் மன்னர் கூன் பாண்டியன் காலத்தில் சமணத் துறவிகள் இதைக் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கின்றன. பின்னர் ஏழாம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் மீண்டும் இது இந்துக் கோயிலாக கருவறை சந்நிதானங்களுடன் உருவானது. 16,17_ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்க மன்னர்களில் வீரப்பர் மற்றும் திருமலை மன்னர் ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள்  திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன.

து ஒரு குகைக் கோயில். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.

சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர, திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.

அர்த்த மண்டபத்தில், சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப் பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள், நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும். 'முருகன் தெய்வானை திருமணக்கோலம்' போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.

#3

"ஓம் குன்று தோறாடும்  குமரா போற்றி 
ஓம் அறுபடை வீடுடையவா  போற்றி"


#4


#5
“மறிமா னுகந்த இறையோன்
மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா”

கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதன் சிகரப் பகுதியில் காணப்படும் சுதைச் சிற்பங்களும் அழகு மிக்கவை. (சுதைச் சிற்பங்கள் என்பவை சுண்ணாம்பால் உருவாக்கப்படுபவை. மரக் குச்சிகளும் சுண்ணாம்பும் சேர்த்து செய்யப்படும் சிற்பங்கள்.) 

*சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி தெருவில் பழமையான சொக்கநாதர் கோயில் உள்ளது.

*திருப்பரங்குன்றத்தின் உச்சியில், காசி விசுவநாதர் கோவில் உள்ளது.

*திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது.

*மலையின் வடமேற்குப் பகுதியில், சமணர் கற்படுகைகள் உள்ள ஒரு குகை உள்ளது.

#6
“மலைமாவு சிந்த
அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா”

தல வரலாறு:

யிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஓம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான், பிரணவ மந்திரத்தினையும், அதன் உட்பொருளையும், பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

இந்நிலையில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்கு காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். 

#7
“அறிவால் அறிந்து
உன்னிருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே”

தைப்பூசம்:

முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே தைப்பூசத்தன்று, சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா, பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகன்-தெய்வயானை திருமணம்:

முருகப்பெருமான் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்துத் தேவர்களைக் காத்தவர். துயர் களையப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். தங்களைக் காத்த முருகனுக்கு நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை, திருமணம் செய்து கொடுக்க விரும்பவும் முருகன்-தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் சிறப்பாக நடந்தது.

சிறப்புகள்:

*முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில், இக்கோயில் அளவில் பெரியதாகும்.

*லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.

*சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.

*

#8

“அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.”

ந்தப் பதிவிலுள்ள படங்கள் Dslr உபயோகித்து எடுத்தவை. 2015_ல் சென்றிருந்தபோது கோபுரம் அப்போதுதான் வர்ணங்கள் தீட்டப்பட்டாற்போல் பளீரெனக் காட்சி தந்தது. இப்போது வர்ணங்கள் மங்கிப் போய்க் காணப்படுகிறது. 

‘முதல் படை வீடு’ என சிகப்பு நிறத்தில் காணப்படும் அறிவிப்புப் பலகை இரவில் ஒளிரும் வகையில் நியான் விளக்குகளால் ஆனது. சமீபத்தில் 2022_ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் கோயிலுக்குள் செல்லும் பொழுதும், வெளியில் வந்த உடனும் ராஜகோபுரத்தை நிமிர்ந்து பார்த்து முழுமையாகத் தரிசிக்க முடியாமல் பலகை மறைப்பதாக பக்தர்கள் வருத்தம் தெரிவித்ததாகவும், அதற்கு கமிஷனர், சுற்றுலா பயணிகள் இடத்தை அடைய வசதியாக இருக்குமெனப் பலகை வைத்திருப்பதாகவும், சன்னதித் தெருவில் நின்று பார்த்தால் கோபுரம் தெரியும் எனவும் சொல்லி விட்டதாக மாலை மலர் செய்தியொன்று தெரிவிக்கிறது. கருப்பு-வெள்ளையில் பலகை இல்லாத மற்றுமோர் (2015)  கோபுரப் படம் இங்கே.

குன்றில் அமைந்த இந்தக் குடைவரைக் கோயிலின் கருவறையை அடைய சுமார் 50 படிகள் வரையிலும் ஏற வேண்டியிருந்தது. கருவறைக்கு வலப்பக்கமாக ஏறி தரிசனம் செய்த பின் இடப் பக்கமாக இறங்குமாறு வழி அமைத்துள்ளார்கள்.  ஏறிச் செல்லும் படிகளை விடவும் இறங்கும் வழியில் பல இடங்களில் படிகள் சற்று செங்குத்தாக அமைந்திருந்தன. நான் ஏறும் வகையில் இருக்குமா எனும் தயக்கதுடனேயே சென்றேன். ஆனால் படிகளுக்கு அருகிலேயே எல்லா இடங்களிலும் இரும்பு அளிகள் அமைத்திருந்ததால் பற்றிக் கொண்டு ஏறவும் இறங்கவும் அவை வசதியாகவும் உதவியாகவும் இருந்தன.

மேலிருக்கும் தகவல்களில் உள்ளபடி, உச்சியில் ஐந்து சன்னதிகள் உள்ளன. கிழக்கு நோக்கி முருகன், உயரமான துர்க்கை அம்மன் மற்றும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. வடக்கு பார்த்து சிவன் சன்னதியும்  அவருக்கு நேரெதிரே தெற்கு பார்த்து பெருமாள் சன்னதியும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருப்பது விசேஷமாகவும் கருதப்படுகிறது. மின் விளக்குகள் அன்றி தீபங்களின் ஒளியில் ஜொலிக்கின்றன சன்னதிகள். இங்கும் கூட்டம் இருந்த போதிலும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிந்தது.

#9

”வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்!”


**

(ஆலய தரிசனம் தொடரும்..)

12 கருத்துகள்:

  1. திருப்பரங்குன்றம் வந்தீர்களா? பிள்ளையார்பட்டி போய் விட்டு மதுரை வந்தீர்களா? படங்கள் எல்லாம் அழகு.
    தலவரலாறு அருமை. தூண் சிற்பங்கள் நன்றாக இருக்கும்.
    பன்றிகுட்டிகளுக்கு பால் கொடுத்த ஈசன் சிலை இருக்கும், மன்மதன், ரதி சிற்பங்கள் அழகாய் இருக்கும்.

    ஆலயதரிசனம் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையிலிருந்துதான் வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி சென்று வந்தோம். ஆம், திருப்பரங்குன்றத்தில் சிற்பங்கள் மிக அழகு. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
    2. வைரவன்பட்டி மிக நன்றாக இருக்கும் அடுத்து அதுவும் அரும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஆம், அடுத்த பதிவு அதுதான்:)! நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. அட..  நம்மூரு முருகன்...    கோபுரம், மற்றும் கோவிலே மறைப்பது போலதான் பல கட்டுமானங்கள் அங்கே இருந்தன.  இப்போது எப்படியோ தெரியாது.  இந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறேனே தவிர, மலை மெது எறியதில்லை.  சொக்கநாதர் கோவிலும் சென்றதில்லை.  படங்கள் அழகு.  கோவில் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  3. பலமுறை இக்கோவிலுக்குச்‌சென்றிருந்தாலும் இப்பதிவில் சொல்லப்பட்ட பல தகவல்கள் அறியாததே.. பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. ஆலய தரிசனம் நன்று. கோபுரங்களின் படங்கள் நன்று. பழமையைக் காக்காகாமல் புதிய விஷயங்களை சேர்க்கும்போது பாதிப்பு தான் அதிகம். ஆனாலும் ஆலய நிர்வாகிகள் புரிந்து கொள்வதில்லை என்பது வேதனை.

    பதிலளிநீக்கு
  5. பல கோணங்களில் கோபுரங்களின் படங்கள்! ஒவ்வொன்றும் மிக அழகு.

    வண்ணப் படங்களை விட, கறுப்பு வெள்ளையில் அவற்றைக் காணும்போது, அவை இயல்பானதாக, கலை வடிவமாக, உண்மையைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுவது மனமயக்கம்?

    அகன்ற பார்வையில் திருப்பரங்குன்றத்தையும், அதன் கோபுரத்தையும் (2015), பார்ப்பது மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது! நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி. குறிப்பாக இணைப்பின் மூலமாகக் கருப்பு வெள்ளைப் படத்தையும் ரசித்துப் பார்த்ததற்கும். ஆம், கலையைச் சிறப்புறக் காட்டுவதில் கருப்பு வெள்ளைப் படங்களுக்கு ஈடு வேறில்லை.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin