#1
இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு இரு தினங்கள் முன்னதாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது. ஓரளவுக்குக் கூட்டம் இருந்தாலும் கூட பக்தர்களை நிதானமாக தரிசிக்க அனுமதித்தது மனதுக்கு நிறைவைத் தந்தது. கோயிலுக்குள்ளே படங்கள் அனுமதியில்லை ஆதலால் கோபுர தரிசனமும், உற்சவ மூர்த்தியின் பவனியும் படங்களாக உங்கள் பார்வைக்கு..
#2
சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்த பழமையான குடைவரைக் கோயில். சிறிய மலையின் அடிவாரத்தில் உள்ளது.
ஆறடி உயரத்தில் பிரதான தெய்வமாக வடக்குத் திசை நோக்கி வீற்றிருக்கும் கற்பக விநாயகரின் திருவுருவம் மலையைக் குடைந்தே அமைக்கப் பட்டிருக்கிறது. சிவன் மற்றும் பிற கடவுளர்களின் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.கோயிலின் அமைப்பு இரு பகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆறடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமைக்கப் பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது. பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது. இங்கு திருமணம் நடைபெற வைக்கும் "கார்த்தியாயினி" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் "நாகலிங்கம்" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்" சன்னதியும் உள்ளது. குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.
இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இக் கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும் கற்பக விநாயகரால் மக்களிடையே பிரசித்தி பெற்று பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
கோபுரங்கள்:
கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.
#4
கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.
இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது.
#5
#6
இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.
திருக்குளம்:
#7
விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.
குளக்கரை மரத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள்:
#8
இத் தலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பெருவிழாவாக உள்ளது. முதல் நாள் விழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து "காப்பு கட்டுதல்" மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பிள்ளையாருக்கு "சந்தன காப்பு" அலங்காரம் செய்யப்படுகிறது.பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.
*
#9
#10
ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்த போது சுற்றிவர இருந்த ஏழு கோயில்கள் வரை இரு தினங்களில் செல்ல முடிந்தது. பிள்ளையார் சதுர்த்திக்கு முன் தினம் மாலை வீடு திரும்ப வேண்டியிருந்ததால் அவசரப் பயணமாகவே அமைந்தது.
மற்ற கோயில்களின் கோபுர தரிசனப் படங்கள் பதிவுகளாக விரைவில் தொகுத்து அளிக்கிறேன். DSLR எடுத்துச் சென்றிருந்தாலும் எல்லா இடங்களிலும் உபயோகிக்க இயலவில்லை. இப்பதிவில் நிகான் மற்றும் சாம்சங் S22+ மொபைல் இரண்டிலும் எடுத்த படங்கள் இடம் பெற்றுள்ளன.
***
நான் இந்த இடத்துக்கு சென்றதில்லை. படங்கள் அழகாய் இருக்கின்றன. தகவல்களும் தெரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குமதுரைக்கு மிக அருகிலுள்ள இந்தக் கோயிலுக்கு நீங்கள் சென்றதில்லை என்பது வியப்பளிக்கிறது. நன்றி ஸ்ரீராம்.
நீக்குவிவர சேகரிப்பும் படங்க்களும் அழகு. பிள்ளையார் சதுர்த்தி நெருங்குகிற சமயத்தில் சென்றதும் சிறப்பு.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நீக்குசில முறை இந்த ஆலயத்திற்குச் சென்றிருக்கிறேன். உங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை தரிசனம். படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குநாங்கள் பொன்னமராவதி அருகில் பூலாங்குறிச்சி என்ற ஊரில் சில வருடங்கள் இருந்தபோது இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன. படங்கள், அதிலும் குளத்தின் படம் அழகு
பதிலளிநீக்குநான் இரண்டாம் முறையாகச் சென்றிருந்தேன். நேரிலும் அழகாக இருந்தது பரந்த குளம். இன்னும் சற்று அக்கறையுடன் பராமரிக்கலாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குபிள்ளையார்பட்டி கோவிலுக்கு நிறைய முறை போய் இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்று உங்கள் படங்கள் மூலம் மீண்டும் தரிசனம் கிடைத்தது.
படங்கள் எல்லாம் அழகு.
கோவில் தல வரலாறும் அருமை.
நீங்கள் பலமுறை சென்றிருப்பீர்கள் என்றே நினைத்தேன்:).
நீக்குமகிழ்ச்சி. மிக்க நன்றி கோமதிம்மா.
திருநெல்வேலி - கன்னியாகுமரி சாலைப் பணி அமைக்கும் திட்டத்தில், நான் மேலாளராக பணிபுரிந்த தருணம் (2004-2007). அது ஒரு மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம். அதன் நிறுவனர் மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்காக வந்த போது, அவருடன் உதவியாளனாகப் பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனது பணி வழிகாட்டி மற்றும் மொழி பெயர்ப்பு. ஆனால், உண்மையில் அவரது வழியாகவே பல ஆலயங்களைப் புதிதாக அறிந்து கொள்ள முடிந்தது:). அதில் ஶ்ரீரமண மகரிஷி வாழ்ந்த வீட்டிற்குச் சென்றதும், “நான் யார்?” எனும் நூலை வாங்கியதும் மறக்க முடியாத அனுபவம்.
பதிலளிநீக்கு#10 மலர் அலங்காரத்துடன் விநாயகர் அழகு. தலைப்பாக அமைந்த பாடல் வரிகளை வாசிக்கும் போது Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது குரல் கேட்கிறது.
உங்கள் பயணம் ஒவ்வொருவருக்கும் அந்த இடங்களுடன் உள்ள பரிச்சயத்தை நினைவூட்டுகிறது. தொடர்கிறோம். நன்றி.
பதிவு தங்களுக்கும் நினைவுகளை மலரச் செய்திருக்கிறது. மகிழ்ச்சி.
நீக்கு/Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது குரல்/ எனக்கும் அப்படியே:).
நன்றி.