சனி, 23 செப்டம்பர், 2017

ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்..

ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண ஹனுமன்
ழிவழியாய் மக்கள் வருடந்தோறும் கொண்டாடும் நவராத்திரியில் கொலு வைப்பதென்பது ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி எனத் தேவியரைப் போற்றும் இறை வழிப்பாட்டைத் தாண்டியும் சில முக்கியக் காரணங்கள் இந்தக் கலாச்சாரத்திற்கு இருந்திருக்கிறது.

ஒன்று, கல்வி. கொலு அலங்காரங்கள், பொம்மைகள் அடுக்குதல் என்பதில் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஈடுபடுவார்கள். முக்கியமாகக் குழந்தைகள் குதூகலத்துடன் தங்களால் இயன்றதைச் செய்வார்கள். அவர்களுக்கு கொலுப் பொம்மைகளின் மூலமாகவே நமது இதிகாசங்கள், புராணங்கள், வழிபாடுகள், கலாச்சாரங்கள், பொது அறிவு எனப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் பண்டிகையாக அமைகின்றன நவராத்திரி கொலுக்கள். அவரவர் வீட்டுப் பொம்மைகள் மட்டுமின்றி செல்லுமிடங்களில் காணும் பொம்மைகளைப் பற்றி கேட்டறிந்து அறிவை வளப்படுத்திக் கொள்ள உதவின.

#2
தசாவதாரம்
அடுத்து,
அக்காலத்தில் பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வதில்லை. ஏன், வெளியில் சென்று வருவது கூட அரிதே. நவராத்திரி கொலுப் பண்டிகை  சமூகத்தில் நட்பை வளர்க்க அவர்களுக்கான ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப் பட்டது. அக்கம் பக்கத்தினரை, நண்பர்களை அழைத்து, தாம்பூலம் தருவது, வருகிறவர்களைப் பாடச் சொல்லி அவர்களது திறனை வெளிக் கொண்டு வருவது எனப் பல மகிழ்ச்சியான காரணிகள்..

இறுதியாக,  நாட்டில் நீர்வளம் பெருகவும் பொம்மை செய்யும் கலைஞர்களை ஆதரிக்கவும் கூட இந்தப் பண்டிகை பயன்பட்டு வந்திருக்கிறது. மழைக்காலத்திற்குச் சற்று முன்னதாக வருகிற நவராத்திரிக்குப் பொம்மைகள் செய்வதற்கும் ஆயிற்று, மழை நீரைச் சேமிக்க ஏரி, குளங்களைத் தூர் வாறும் பணியும் முடித்த மாதிரி ஆயிற்று என செயல்பட்டிருக்கிறார்கள். தூர் வாறிய களிமண் பொம்மைகள் செய்யப் பயன்பட்டு வந்திருக்கிறது. (ஆனால் இப்போதைய நிலைமையே வேறு. சாயக் கழிவுகள், ஆலைக் கழிவுகளை ஏரி குளங்களுக்கும் ஆறுகளுக்கும் திருப்பி விடுவது, ஆற்று மணலை சட்டத்துக்குப் புறம்பாக அள்ளுவது என ஏதேதோ நடந்து கொண்டிருக்கிறது.)


சிறு வயதில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்திருந்த கதை எல்லாம் http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html திண்ணை நினைவுகளிலும் மற்றும் சில பதிவுகளிலும் பகிர்ந்திருக்கிறேன். கீழ் வரும் படங்கள் அந்த நாளில் எங்கள் வீட்டில் வைக்கப்பட்ட கொலுவின் படங்கள்:
#3
ஜிப்ஸி நடன set, band வாத்திய set, கோவில்-தெப்பக்குளம்
நால்வரோடு மகான்கள் வரிசையில் 
ஒளவையார் திருவள்ளுவர்... பொம்மைகள்..
மற்றும் பல..
படத்தில் அத்தைகள், பெரியம்மா ஆகியோர் இருக்கிறார்கள். சில படங்கள் நான் பிறக்கும் முன்பாக, சில நான் ரொம்பச் சின்ன வயதாக இருக்கையில் எடுக்கப்பட்டிருக்கலாம். எனக்கு நினைவு தெரிந்த நான்கைந்து வயதிலிருந்து இதே பொம்மைகளுடனான கொலு வீட்டில் தொடர்ந்தது.  நானும் பெரிய தங்கையும் தெருவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொலுவுக்கு அழைத்து வருவோம். அண்ணன்மார்கள் துணைக்கு வருவார்கள். கொலு பார்க்க வரும் சிறுவர் சிறுமியரை வரிசையில் நிற்க வைத்து பார்க்க அனுப்பும் வேலையை அண்ணன்கள் செய்ய சுண்டல் விநியோகம் நானும் என் தங்கையுமாகச் செய்வோம். என் ஒன்பதாவது வயதில் அப்பாவின் மறைவுக்குப் பின் வீட்டில் கொலு வைப்பது நின்று போனது. அப்பா ஆர்வத்துடன் கொலுவில் ஈடுபடுவார்கள் என்றும், அதனாலேயே மனச் சங்கடத்தினால் மற்றவர்களுக்கு அதில் நாட்டம் போய் விட்டதென்றும் பெரியம்மா சொன்னதாக அவரது பெண், என் அக்கா சமீபத்தில் தெரிவித்தார். கொலு வைக்காவிட்டாலும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. குறிப்பாக ஏடு அடுக்கி வழிபடுவது தொடர்ந்தது:
#4
அண்ணன்களுக்கு நடுவே நான்.. 
சகோதரிகள் நாங்கள் திருமணத்திற்குப் பின் கொலு வைத்ததில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஏடு அடுக்கத் தவறியதில்லை. என் வீட்டு சரஸ்வதி பூஜை படங்கள் சில:
#5

ந்த வருடம் பெங்களூரில் வசிக்கும் என் தங்கை ஆர்வத்தினாலும், அவரது மகளுக்கு இந்தப் பண்பாட்டைப் பழக்கவும் கொலு வைக்க ஆரம்பித்திருக்கிறார். அடுக்கும் போது நானும் இரு தினங்கள் உடனிருந்தேன். முதலிரண்டு படங்களும் அவரது கொலுவில் எடுத்தவையே.

#6

பொதுவாக 3,5,7 அல்லது 9 படிகளுடன் கொலு வைப்பார்கள்.  மேல்படியில் தெய்வங்கள், அடுத்து கீழே அவதாரங்கள், பிறகு மகான்கள், அதற்கடுத்து மனிதர்கள், கடைசியாக விலங்குகள் என்ற வரிசையில் படிகளில் கொலு வைக்கிறார்கள். பொம்மைகளை அடுக்கும் இம்முறையை கீழிருந்து மேலாகவே நாம் பார்க்க வேண்டும் என்றும், தத்துவப்படி விலங்குகளை விட ஒருபடி மேலான மனிதன் படிப்படியாகத் தன் நற்குணங்களால் தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்பதுவே இந்த வரிசையின் நோக்கம் என்றும் சொல்லப் படுகிறது.

#7

#8

அர்த்தநாரீஸ்வரர்
#9
மணவாளர்

#10
தேசிகர்
#11
ஆதி சங்கரர்

குடும்பத்தில் தம்பதியருக்கிடையேயான அமைதி, அந்யோன்யத்திற்கு மரப்பாச்சி பொம்மைகள், செல்வச் செழிப்புக்கு வணிகத் தம்பதியர் என ஒவ்வொரு வித பொம்மைகளும் ஒரு அர்த்தம் வைத்திருக்கிறார்கள். இவற்றை எல்லாக் கொலுக்களிலும் பார்க்கலாம்.

#12
மரப்பாச்சி


#13
வணிகம்

ராமாயணம், மகாபாரதம், கிராமம், திருமணம், கோவில் வழிபாடு என ஒரு குறிப்பிட்டக் கருவை எடுத்துக் கொண்டும் கொலு அமைப்பார்கள். இங்கே மைசூர் தசராவை அழகாக அமைத்திருக்கிறார்.

#14

#15

முதல் தினம் நானும் என் தங்கையும் சென்றிருந்த, அண்ணியின் கைவண்ணத்தில் உருவான, (பெரியம்மா மகன்) அண்ணன் வீட்டுக் கொலு.. உங்கள் பார்வைக்கு:
#16


#17
அனைவருக்கும் நவராத்திரி விழாக்கால வாழ்த்துகள்!

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை


#18

***

10 கருத்துகள்:

  1. நல்ல விளக்கங்கள், சுவாரஸ்யமான படங்கள்.

    கை கட்டிக் கொன்டு சமர்த்தாக அமர்ந்திருக்கும் ரா.ல புன்னகைக்க வைக்கிறார். அநேகமாக ''விஷமம் செய்யாமல் கைகட்டி உட்காரு.. அப்போதான் சுண்டல்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்!

    //இந்தப் பண்பாட்டைப் பழக்கவும்//

    ஆம். இந்த காரணத்தினாலேயே இது போன்ற விழாக்கள், பழக்கவழக்கங்கள் வீடுகளில் தொடரப்படவேண்டும் என்பது என் அபிப்பிராயமும்.

    தங்கை வீட்டு கொலு படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தொடர வேண்டும்.

      /அப்போதுதான் சுண்டல்/

      இல்லாவிட்டாலும் சமர்த்துதான்:)! நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
  2. அன்பைப் பகிர்ந்து கொள்ளவும், மனதைப் பண்படுத்தவும் முன்னோர்கள் விழாக்களை அமைத்துக் கொடுத்தனர். தங்கையின் இல்லத்தில் கொலு நல்ல துவக்கம். அப்பாவின் ஆன்மா நிச்சயம் மகிழ்ந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

      மிக்க நன்றி, இணைப்பில் சென்று ‘திண்ணை’ பதிவை வாசித்தமைக்கும்:).

      நீக்கு
  3. முதன் முதலில் நாங்கள் சென்னை குறளகத்தில் இருந்து பொம்மைகள் வாங்கி வந்துகொலு வைத்தோம் அது 1967 என் மூத்தமகனுக்கு ஒரு வயது ஆகி இருக்கவில்லை கொலுவைப்பது குடியிருப்பில் சாதாரணமாக நினைக்கப்பட்டது சென்ற இரு ஆண்டுகளாகக் கொலு வைப்பதில்லை இயலாமையே காரணம் இப்போதும் மரப்பாசிகளை வைப்பது உண்டு என் மனைவி தாமரை பதித்த இருபது பைசா நாணயங்கள் கொண்டு அர்ச்சனை செய்வாள் கூடவே ஸ்தோத்திரங்களும் சொல்வாள் இருந்தபொம்மைகளை விரும்பியவர்களுக்குக் கொடுத்து விட்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரை பதித்த நாணயங்கள் கொண்டு விளக்கு பூஜை செய்யும் வழக்கம் எண்பதுகளில் பரவலாக இருந்து வந்தது.

      ஒரு கட்டத்திற்கு மேல் இயலாமையால் பலரும் நிறுத்தி விடுவதுண்டு. விரும்பியவர்களுக்கு அளித்ததன் மூலம் அவர்கள் வீட்டு நவராத்திரி கொலுவில் உங்கள் பொம்மைகள் தொடர்வதும் விசேஷமே.

      நன்றி GMB sir!

      நீக்கு
  4. அம்பிகையின் எண்ணற்ற படைப்புகளில் ஒரு சிலவற்றை காட்சிப்படுத்தி வணங்கி மகிழும் அற்புத திருவிழா நவராத்ரி.கொலு அழகோ அழகு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்களுடன் விளங்களும், மலரும் நினைவுகளும் அருமை.
    பழைய படங்கள் மிக அழகு.
    நானும் மகன் வீட்டு கொலுபதிவு போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் முகநூலில் பதிந்த சரஸ்வதி அற்புதம். அனைவரின் கை வண்ணமும் அதில் மிக அருமை. தங்கையோடு அதைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். பதிவு பார்க்கத் தவறியிருக்கிறேன் என நினைக்கிறேன். பார்க்கிறேன். நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin