திங்கள், 17 டிசம்பர், 2018

வெண் கன்னக் குக்குறுவான் - பறவை பார்ப்போம் (பாகம்:35)

#1
வெண் கன்னக் குக்குறுவான்
வேறு பெயர்கள்: 
சின்னக் குக்குறுவான், கழுத்தறுத்தான் குருவி

வெண் கன்னக் குக்குறுவான் பறவைகளின் பூர்வீகம் ஆசியா. இவை பரவலாக ஆசிய கண்டத்தின் வெப்பமண்டல நாடுகளில் காணப்படுகின்றன. இது கிளைகளைப் பற்றி அமரும் 'பாசரைன்' (Passerine) வகைப் பறவைகளுள் ஒன்றே. குக்குறுவான் என்கிற பெயர் அதன் தடித்த பெரிய அலகினாலும், அலகைச் சுற்றிச் சிலிர்த்து நிற்கும் முடிகளின் தோற்றத்தாலும் ஏற்பட்டது. இது பழங்களை உண்டு மரங்களில் வாழும் பறவை.

வெளுத்த இளஞ்சிவப்பில் தடிமனான அலகினைக் கொண்டவை.  இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு ஆகிய இடங்கள் பழுப்பு நிறத்தில் வெண்ணிறக் கீற்றல்களுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சைப் பசேலென்ற புல்லின் நிறத்தைக் கொண்டிருக்கும். மரங்களில் அமர்ந்திருக்கையில் இலைகளோடு ஒத்த பச்சை நிறம் இவற்றின் இருப்பைக் காட்டிக் கொடுக்காது. அப்படியும் என் கேமராக் கண்கள் இதன் இருப்பைக் கண்டு பிடித்து விட்டன.

#2

ஆங்கிலப் பெயர்: White-cheeked Barbet or Small Green Barbet
இவை பழுப்புத் தலைக் குக்குறுவான்களை (Brown-headed Barbet or Large Green Barbet) விடவும் சற்று சிறியவை ஆகையால் சின்னக் குக்குறுவான் (Small Green Barbet) என்று அறியப்படுகிறது. கழுத்தறுத்தான் குருவி என்ற பெயரும் இதற்கு உண்டு. அதற்கான காரணம் அறியமுடியவில்லை.

வளர்ந்த குக்குறுவான் 18 செ.மீ. நீளம் கொண்டது. உருண்டு திரண்டு கொழுத்துக் காணப்படும் இப்பறவையின் தலை 5 செ.மீ நீளத்திலும், குறுகிய வால் 6.5 செ.மீ நீளத்திலும் இருக்கும். ஆண், பெண் இரண்டும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும்.

சின்னக் குக்குறுவான்கள் மா, பலா, வாழை, பப்பாளி மற்றும் அத்தி, கொய்யா போன்ற சதைப்பற்றுள்ள பழங்களை விரும்பி உண்கின்றன. பூச்சிகளையும் பிடித்து உண்ணும்.

#3
உயிரியல் பெயர்: Psilopogon viridis
மரப் பொந்துகளில் கூடுகளை அமைத்து 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். ஆண், பெண் இரண்டு பறவைகளும் மாறி மாறி அடை காக்கும். ஒன்றுக்கொன்று ‘குர்ரா குர்ரா’ என ஒலியெழுப்பிப் பேசிக் கொள்ளும். பொதுவாகவே சின்னக் குக்குறுவான்கள் தங்களுக்கிடையே பெரும் சத்தத்தை எழுப்பியே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ‘குட்ரூ குட்ரூ குட்ரூ’ என்ற தொனியில் தொடர்ந்து கூவும். ஒரு பறவையைத் தொடர்ந்து மற்றவையும் அதே போலக் கூவும்.

பச்சைக் குக்குறுவானின் மூன்று வகையான இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. இலையுதிர் காடுகளிலும் மரங்களடர்ந்த பகுதிகளிலும் அதையொட்டிய மனிதர்களின் வாழ்விடங்களிலும் கிராமத் தோட்டங்களிலும் இவை வாழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென்னிந்தியாவின் குன்றுப் பகுதிகளில் வெண் கன்னக் குக்குறுவான்கள் அதிகமாகக் காணப்பட்டாலும், பழுப்புத் தலைப் பச்சைக் குக்குறுவான்களும் (Brown-headed Barbet or Large Green Barbet) அங்கே வசிக்கின்றன. பழுப்புத் தலைக் குக்குறுவான்களின் கண்களைச் சுற்றிப் பிரதானமாக மஞ்சள் வட்டம் காணப்படும்.  இரண்டு வகைக் குக்குறுவான்களும் எழுப்பும் ஒலி ஒரே போன்றதாக இருந்தாலும் கன்னத்திலிருக்கும் வெண்ணிறக்கோடும் சிறிய உடல் அளவும்  வெண் கன்னக் குக்குறுவான்களை வேறுபடுத்திக் காட்டும்.

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 44
தகவல்கள்: விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.

**
நீண்ட நாட்களாக என் கேமராவுக்குச் சிக்காமலிருந்த பறவை குக்குறுவான். வீட்டுத் தோட்டத்துச் சுவருக்கு அப்பக்கம் சுவரையொட்டி இருந்த பெரிய ஈச்ச மரத்தில் பழங்கள் காய்த்துக் குலுங்கும் போது நாலைந்து மைனாக்களுக்கு நடுவே அவ்வப்போது தென்படும். படம் எடுக்கும் முன் பறந்து விடும். சில மாதங்களுக்கு முன் ஒருநாள் காலையில் வெளியே சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது பார்த்தால் அத்தனை பெரிய ஈச்ச மரத்தைக் காணவில்லை. மொட்டை மாடிக்குப் போய் ஆராய்ந்ததில் வெட்டிய மாதிரியும் தெரியவில்லை. வேரோடு பிடுங்கிப் போனது போலிருந்தது. ஈச்ச மரம் போனதும் குக்குறுவான்கள் கண்ணில் அதிகம் படாமலிருந்தது. ஈச்சமரம் இருந்த இடத்துக்கு அடுத்தாற் போலிருந்த மூங்கில் மரத்தில் எப்போதாவது இப்படி வந்து அமரும்.

#4

#5
ஈச்சம் பழம் இனி கிடைக்காது என ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு மெல்ல வீட்டுக் கொய்யா மரத்தில் வந்தமர்ந்து பழத்தைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் என் கண்ணில் அகப்பட்டது குக்குறுவான். பறவைகளைப் படமாக்க எப்போதும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இலைகளுக்குள் ஒரு சிறு அசைவு தெரிந்தாலும் உடனே கூர்ந்து கவனிக்க வேண்டும். அவற்றின் கவனம் சிதைந்து விடாமல் சத்தமின்றி எடுக்க வேண்டும். அப்படி எடுத்தவைதாம் முதல் மூன்றும், கீழ் வரும் படமும்:

#6


***

6 கருத்துகள்:

  1. வெண் கன்ன குக்குறுவான்.... என்ன ஒரு பெயர்!

    பறவைகளைப் படம் எடுக்க டிப்ஸுக்கு நன்றி.

    படங்களும் விவரங்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் கொடைகானல் போன போது இந்த பச்சை இறகு கொண்ட குருவியை படம் எடுத்து போட்டு இருந்தேன். முகநூலில்.
    அந்த குருவியைப்பற்றி விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
    குக்குறுவான் படங்கள் அனைத்தும் மிக அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin