செவ்வாய், 4 நவம்பர், 2014

சிறுகதை: சின்னஞ்சிறு கிளியே.. - ‘சொல்வனம்’ பெண்கள் சிறப்பிதழில்..


ன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கணுமோ, தெரியலையே’ சலிப்பாக இருந்தது பூமாவுக்கு.

மணி அடித்து எல்லோரும் உள்ளே போய் விட்டிருந்தார்கள். “இந்த பெஞ்சுலயே இரு. சன்னல் பக்கம் அப்பப்ப வந்து பாத்துட்டிருப்பேன். மேனேஜர் வந்ததுமா சூப்பர்வைஸரை சொல்லச் சொல்லிருக்கேன். நானே கூட்டிட்டுப் போறேன். தெரிஞ்சுதா” தேவகியக்கா கண்டிப்பான குரலில் சொல்லி விட்டுப் போய் ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டது. ஒரே இடத்தில் ஒன்றுமே செய்யாமல் எவ்வளவு நேரம்தான் இருக்கிறதாம்?

வலது உள்ளங்கையை இடது கையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். ‘காயம் ஆறிட்டுதான். ஆனாலும் இப்பத்தானே கட்டுப் பிரிச்சிருக்கு. கூட ரெண்டு நாளு ரெஸ்ட் எடுக்க விட்டிருக்கலாம். அம்மாக்குதான் எம்மேலேத் துளிக்கூடப் பாசம் கெடயாதே. தம்பிங்கள மாதிரி நல்லாப் படிச்சிருந்தா என்னயும் தாங்கியிருப்பா. எவ்ளோ முட்டுனாலும் மண்டையில ஏறலன்னு அடம் புடிச்சுப் படிப்ப விட்டது தப்போ?’ அடிக்கடி தோன்றுகிறது இப்போதெல்லாம்.

அம்மா அன்னத்திற்கு அவள் மேல் பெரிய கனவு இருந்தது. இவளைக் கல்லூரி வரைக்கும் படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டுமென்று. இவளுக்கோ படிப்பென்றாலே வேப்பங்காய். ஐந்தாம் வகுப்பு வரை ஏதோ பாஸ் மார்க்காவது வாங்கி வந்தவள் ஆறு ஏழாம் வகுப்புகளில் தொடர்ந்து மாதத் தேர்வுகளில் ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயில் ஆக ஆரம்பித்தாள். அடிக்கடி பள்ளியில் அம்மாவை கூப்பிட்டு விட்டார்கள். அது அம்மாவுக்குக் கோபத்தை மட்டுமல்ல இவள் மேல் ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தி விட்டது என நினைத்தாள். அதனால்தான் எதற்கெடுத்தாலும் அடிக்கிறாள். ஒரு தடவை மூலையில் தள்ளி மிதிக்கக் கூட செய்திருக்கிறாள். நினைக்கும் போதே அழுகை வந்தது. முகத்தில் சரிந்த முடிக்கற்றையைத் தன்னிச்சையாகக் காது மடலுக்குப் பின் ஒதுக்கிக் கொண்டாள்.

அம்மாவுக்கு பிரச்சனை தான் படிக்காததா அல்லது தன் அழகா, என்றொரு கேள்வி அவளுக்குள் எப்போதுமே இருந்தது. என்னவோ அலங்கரிப்பில் ஆர்வம் போகப் போய்தான் படிப்பைக் கோட்டை விட்டதாகக் கூப்பாடு போடுவாள். தோழி கனகாவின் அக்கா பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். வண்ண வண்ண நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், மஸ்கரா, ஐ ஷேடோ, ஐ லைனர், ப்ளஷ் என அவள் மூலமாக விதம் விதமான அழகுச் சாதனங்கள் அவளுக்கும் தோழிகளுக்கும் அறிமுகமாயிற்று. பார்க்கும் போதே பரவசம் தந்தவை உபயோகித்த போது வானத்தில் மிதக்க வைத்தன. நேரமிருக்கையில் கனகாவின் வீட்டுக்கே போவார்கள். கனகாவின் அக்கா விதம் விதமாகத் தலை முடிக்கச் சொல்லித் தருவாள். மெஹந்தி இட்டு விடுவாள். அவள் தோழிகளிலேயே பூமாவுக்குதான் பெரிய கண்கள். கருகருவென நீண்ட கூந்தல். இவளை அழகு படுத்தியே மற்றவருக்குச் சொல்லித் தருவாள். அப்போதெல்லாம் ஒரு மகராணியைப் போல் உணருவாள்.

ஆனால் அந்த சந்தோஷத்தை சில மணிகள் கூட நிலைக்க விடுவதில்லை ஊர்க்காரர்கள். அடுத்த சில மணிகளில் எப்படியோ ஆஸ்பத்திரியில் வேலையாய் இருக்கும் அம்மாவுக்குச் செய்தி போய் விடும்.

“என்ன அன்னம். ஒம் மக படிக்கப் போறாளா? இல்ல சினிமா கினிமால நடிக்கப் போறாளா” கொளுத்திப் போட்டு விடுவார்கள். கேட்கணுமா? “லிப்ஸ்டிக் போட்டுக்கற வயசா இது”  விளக்குமாற்றால் விளாசி விடுவாள். அதே அம்மா சமயத்தில் “வயசுக்கு வந்த பொண்ணு மாதிரியா நடந்துக்குற?” எனும் போது, வயதைக் குறித்து மாற்றி மாற்றிப் பேசுகிறாளே எனக் கோபமாக வரும்.

கனகா சும்மாக் கொடுத்தது, அப்பா அவ்வப்போது தரும் காசில் ஃபேன்ஸி ஸ்டோரில் வாங்கியது என எல்லா அழகுச் சாதனங்களையும் வீட்டில் மறைத்து வைப்பது பெரிய சவால். அம்மா கண்ணில் பட்டால் நேராகக் குப்பைத் தொட்டிக்குதான் போகும். இவளுக்குதான் மனம் பதறும்.

எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் ஃபெயில் ஆன போது பிரச்சனை பெரிதானது. டி.சி வாங்கிக் கொண்டு போகச் சொல்லி விட்டார்கள். அம்மா டீச்சரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். இவளோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயம் நடப்பது போல் விட்டேத்தியாக நின்றிருந்தாள். ”பாருங்க எப்படி நிக்குறான்னு. அவ நெனப்பல்லாம் ஸ்டைல் பண்ணிக்கிறதுலதான் இருக்கு. இவ கூடச் சேந்த ரெண்டு மூணும் இப்படிதான் திரியுதுங்க. ஒங்களுக்காகதான் இரக்கப்பட வேண்டியிருக்கு. மாசப் பரீச்சையில கூட ஃபெயிலாகாமப் பாத்துக்குவீங்கன்னா சொல்லுங்க.” என்றார்கள்.

பள்ளி திறக்கும் நாள் நெருங்க நெருங்க பெரும் பயம் மனதில் அப்பிக் கொண்டது. படிக்க முடியும், பாஸ் ஆவோம் என்கிற நம்பிக்கையே இல்லை. என்ன செய்யலாம்?

’என்னை விட்டுடும்மா. எனக்கு படிப்பு வரல. வீட்டோட இருந்துக்கறேன். டெய்லரிங் கத்துக்கறேன்’ சாப்பிடாமல் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்து, விழுந்த அடி உதைகளை எல்லாம் தாங்கி, அடைந்தாள் வெற்றி. ஆனால் கிடைத்த பலன் இனிக்கவில்லை. நினைத்த மாதிரி வாழ்க்கை உல்லாசமாகச் செல்லவில்லை.

கடந்த ஆறு மாதங்களில், இது இவள் வேலைக்குச் சேர வந்திருக்கும் நாலாவது இடம்.
*
“கூப்பிடுவது கூடக் காதில் விழாம, அப்படி என்ன சிந்தனை அன்னம்?”

அடக்கி வைத்தக் கண்ணீர் மழுக் என வழிந்துவிட, வேதாச்சலம் பார்த்திடாதபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள் அன்னம்.

ஆனாலும் அவர் கவனித்திருக்க வேண்டும். ”எப்படியிருக்கா பூமா? கை தேவலாமா இப்போ?”

“இன்னிக்கு இன்னொரு கார்மெண்ட்ஸ் வேலைக்கு அனுப்பிருக்கேன் சார், தெரிஞ்சவங்க கூட” என்றாள்.

“பைத்தியமா ஒனக்கு? பாவம் புள்ள. இப்பதான அடிப்பட்ட காயம் ஆறிட்டு வருது? கொஞ்சமாவது புத்தி வேண்டாம்?” உரிமையோடு கோபித்துக் கொண்டார். நல்ல மனிதர். நாலும் தெரிந்தவர். அந்தத் தனியார் மருத்துவமனையில் துப்புரவு வேலைக்கு அன்னம் சேர்ந்து ஆறேழு வருடங்கள் ஆகின்றன. வேதாச்சலம் அங்கே ஃபார்மஸி நிர்வாகி. அவளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லா ஊழியர்களிடமும் அக்கறை காட்டுகிறவர். அவர்களின் பிரச்சனைகளைக்குச் செவிமடுப்பவர்.  நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்கெடுப்பவர். எல்லோரும் அவரைத் தந்தை ஸ்தானத்தில் பார்த்து வந்தார்கள். அன்னத்துக்கும் அப்படியே.

“மைனர் பெண்ணை வேலைக்கு அனுப்புறது சட்டப்படி குத்தம். நானே போலிஸில் சொல்லிடலாமான்னு பாக்குறேன்” பொய்யாக மிரட்டுவார் அடிக்கடி. பத்மினி அக்கா தன் பெண் கல்யாணத்துக்குப் பத்திரிகை வைத்தபோது கூட இப்படிதான் சொன்னார், “பதினஞ்சே முடியலையே பத்மினி. எந்தக் காலத்துல இருக்கீங்க இன்னும். போகட்டுமா போலிஸுக்கு” என்று. “என்னங்க சார். எங்க பக்கத்துல இதெல்லாம் ரொம்ப சகஜம். எல்லாக் காலத்துலயும் எங்களப் போல ஏழைப்பட்டவங்களுக்கு இதுதான் சரியா வருது. சொல்லப் போனா ஊரும் நாடும் நம்ம காலத்த விட பயங்கரமால்லா கெட்டுக் கெடக்கு” சிரித்து மழுப்பி விட்டாள் பத்மினி அக்கா. அவள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. பெண்ணைப் பெற்றவளுக்குதான் புரியும் இந்தப் பீதி.

பிளஸ் டூ வரை சமர்த்தாய்ப் படித்து வந்த வேலண்ணன் மகள் திடுமென ஒருநாள் படிக்காத, வேலை வெட்டியில்லாத பையனோடு காணாமல் போய் விட்டாள். ஒருவாரம் கழித்து ஏதோ ஒரு ஊரின் லாட்ஜில் பிடிபட்டு, மைனர் பெண்ணை அழைத்துச் செல்லுமாறு போலிஸிடமிருந்து தகவல் வர ஆடிப்போனது அவர் மட்டுமா? பெண்ணைப் பெற்று வைத்திருந்த அத்தனை பேரும்தான். அந்தப் பயத்தில்தான் சட்டுப்புட்டென பத்மினி அக்கா தன் பெண்ணுக்குக் கல்யாணம் பேசி விட்டாள் என ஆஸ்பத்திரியில் பேசிக் கொண்டார்கள்.

இதையெல்லாம் வேதாச்சலம் போன்றவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது ஆகிற காரியம் இல்லை. அதனாலேயே அதிகம் வாதிடாமல் அவர் சொல்வதைப் பணிவாகக் கேட்டுக் கொள்வாள் அன்னம். பூமாவைச் சுற்றி இவள் எழுப்பிய கனவுக் கோட்டை கலைந்த போது நிறைய ஆறுதல் தந்தது என்னவோ அவர்தான். படிக்க மாட்டேன் என்ற பூமாவிடம் இவளுக்காகப் பல மணி நேரம் பேசிப் பார்த்து, பிறகு வற்புறுத்திப் பிரயோசனம் இல்லையென இவளைத் தேற்றியவர். பூமாவின் விருப்பப்படியே டெயிலரிங் படிக்க ஏற்பாடு செய்யுமாறு நல்ல இடங்களின் முகவரிகள் கூடத் தேடித் தந்தார். ஆனால் வீட்டிலிருந்து இரண்டு மூன்று பஸ் மாறிப் போக வேண்டுமென்பதால் இவள்தான் தவிர்த்து விட்டாள். போகிற வருகிற வழியில் என்னென்ன பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு வருவாளோ என்கிற பயம். கோடை விடுமுறையில் பக்கத்துத் தெருவில் கொஞ்ச நாள் படித்த அடிப்படை டெயிலரிங்  போதுமென கார்மெண்ட்ஸுக்கு அனுப்ப முடிவு செய்தாள்.

வீட்டில் தனியே விடப் பயமாக இருந்தது. கணவன் சின்னசாமி ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்குக் கிளம்பினால் இரவாகி விடும் வீடு திரும்ப. ”தம்பிகளை ஸ்கூலுக்குக் கெளப்புறேன். சாப்பாடு கட்டிக் கொடுக்கிறேன். வீட்டு வேலையெல்லாம் ஒனக்கு சிரமமில்லாம முடிக்கிறேன். மிச்ச நேரம் டி.வி.” என்றுதான் பூமா சொன்னாள். சும்மா இருந்தால் சிந்தனை சிதறிவிடுமே எனக் கவலையாக இருந்தாலும் ஓரிரு மாதங்கள் வீட்டோடு விட்டும் பார்த்தாள்.

ஆனால் கடைக்குப் போகிறேன், கனகாவைப் பார்க்கிறேன் என அவ்வப்போது அவள் வெளியில் செல்வது தெரிந்தது. ‘ஃப்ரெண்ட்ஸுகளோட ஃபோன் பூத்தில் பார்த்தேன், ஒரு பையனோடு பார்த்தேன்’ என்றெல்லாமும் காதில் விழ கம்பை எடுத்து விட்டாள் அன்னம்.

“கனகாதாம்மா யாரோடயோ பழகுறா. எங்களச் சும்மா துணைக்குக் கூப்பிட்டா” நேருக்கு நேர் பார்த்துச் சொன்ன மகளின் கண்களில் பொய்யில்லை. ஆனால் பாதை மாறிப் போக எவ்வளவு நொடி பிடிக்கும்?

ஆஸ்பத்திரியில் இரண்டாவது பிரசவத்துக்கு வந்திருந்த ஒரு பெண், முதல் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் கேட்டது நினைவுக்கு வந்தது. வீட்டைக் கண்டுபிடித்து, பூமாவைக் கொண்டு விட்டாள். நான்கு வயது வால் பையன். மூன்று வாரம் போயிருக்கும். பூங்காவுக்கு விளையாட அழைத்துப் போன இடத்தில் அந்த வாண்டு சொல்லச் சொல்லக் கேளாமல் சாலைப் பக்கம் ஓடியதில் டென்ஷனாகி பூமா முதுகில் இரண்டு சாத்து சாத்தியிருக்கிறாள். அவ்வளவுதான். வெகுண்டு போன அம்மாக்காரி “எம் பிள்ளையைக் கைநீட்டி அடிக்கும் அதிகாரத்தை ஒனக்கு யார் கொடுத்தது” ஓங்கி விட்ட அறையில், வீங்கிய கன்னத்தோடு அழுதபடி வீடு வந்து சேர்ந்தாள் பூமா. அன்றோடு அந்த வேலைக்கு முழுக்குப் போடச் சொல்லி விட்டாள் அன்னம்.

“இவ மட்டும் இழுத்து வச்சுச் கண்டிக்காம இருந்தா இந்நேரம் புள்ள எந்த லாரிக்குள்ள போய் விழுந்திருக்குமோ? யோசிக்க மாட்டா ஒருத்தி? சரி. சின்னப்பொண்ணு தெரியாமக் கைய நீட்டிட்டா. அந்தப் பொம்பளக்கி யார் கொடுத்தாங்களாம் அதிகாரம் எம் பொண்ணு மேல கை வைக்க?” 

சின்னசாமியிடம் புலம்பித் தீர்த்து விட்டாள். திரும்பவும் யார் யார் மூலமாகவோ வந்தன சில வீட்டு வேலைகள். ’எங்க பிள்ள மாதிரி கவனிச்சுக்கறோம்னு கனியக் கனியப் கூப்புடுவாங்க. போகப் போகதான் தெரியும் பவுசு’ என அவற்றை ஒதுக்கி விட்டாள் அன்னம். அதுவுமில்லாமல் விவரம் தெரியாத வயசுப் பொண்ணை வீட்டு வேலைக்கு அனுப்புவது எந்த அளவுக்கு பாதுகாப்பு என்பதும் கேள்விக் குறியாய் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாய் போய்த் திரும்புவதுதான் நல்லதெனப் பட்டது. அக்கம் பக்கத்தில் நிறைய பேர் கார்மெண்ட்ஸ் வேலைக்குப் போவது தெரியும். ஆனால் அங்கே சேர்த்து விடுவதில் வேறொரு பிரச்சனை இருந்தது.
*
தாகமாய் இருந்தது பூமாவுக்கு. எங்கும் நகரக் கூடாதென்று கண்டிஷன் போட்டிருக்கிறாளே தேவகியக்கா. சன்னல் வழியே உள்ளே தெரிந்தவர்களில் எங்கே நிற்கிறாள் அவள் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அரைமணிக்கு ஒரு தடவை சன்னல் பக்கம் வந்து உஸ் உஸ் என சத்தம் கொடுத்து ‘அப்படியே இரு’ என சைகை காட்டிப் போகிறாள். இன்னுமா மேனஜர் வரவில்லை?

‘இந்த இடத்தில் என்ன சொல்வார்களோ. சேர்ப்பார்களோ மாட்டார்களோ.’

முதலில் அம்மா அழைத்து சென்ற கார்மெண்ட்ஸ் நினைவுக்கு வந்தது. அங்கே பதினெட்டு வயதானவர்களை மட்டும்தான் வேலைக்கு எடுப்பார்களாம். ஆனாலும் இவளை விட ஓரிரு வயதே அதிகமாயிருந்த பெண்களைப் பார்க்க முடிந்தது. அதிகாரிகள் சோதனைக்கு வரும் சமயத்தில் மைனர் பெண்களை பாத்ரூமில் அடைத்து வைத்து விடுவார்களாம். நல்லவேளை, அப்படியேதும் நடக்கவில்லை அவள் வேலை பார்த்த சமயத்தில். போகும் போதே அம்மா சொல்லியிருந்தாள். “பதினாலுன்னு சொல்லித் தொலையாதடி. பதினாறுன்னு சொல்லு. அப்பதான் போனாப்போகுதுன்னு சேர்ப்பாங்க’ என.

“பாக்க மதமதன்னு வளந்திருந்தாலும் மொகம் காட்டிக் கொடுக்கேம்மா. சரிப்படாது. நாங்கதான் மாட்டிக்குவோம்’ பிகு செய்த பிறகு சேர்த்துக் கொண்டார்கள் அங்கே.

எல்லாம் எடுபிடி வேலைகள். துணிகளை மடிப்பது. ஓரிடத்திலிருந்து இன்னொரு செக்‌ஷனுக்கு கொண்டு கொடுப்பது. ஓரம் தைப்பது, அயர்ன் செய்வது என. ஒரு நிமிடம் கூட உட்கார விடுவதில்லை. கால் வலி பின்னியெடுக்க போக மாட்டேன் என நின்று விட்டாள். ஒரு வாரம் கழித்து பிஸ்கெட் ஃபாக்டரியில் கொண்டு விட்டாள் அம்மா. கையில் உறையை மாட்டிக் கொண்டு பத்து பத்தாக பிஸ்கெட்டுகளைப் பாக்கெட்டில் போட வேண்டும். அத்தனை கஷ்டமாக இல்லைதான். ஆனால் சூழ்ந்திருந்த பிஸ்கெட்டின் வாசம் ‘குப்’ என்று நெஞ்சை அடைத்து வயிற்றைப் பிரட்டி எடுத்தது. வாந்தி எடுத்தாள். சாப்பாடு இறங்கவில்லை. அம்மாவே பாவப்பட்டு நிறுத்தி விட்டாள். ஆனால் நிம்மதி நீடிக்கவில்லை.

“காலு வலி கை வலியெல்லாம் பாத்தா எந்த வேலைக்கும் போக முடியாது. எல்லாம் பழகப் பழகச் சரியாப் போகும்.” கொஞ்சம் சமாதானமாகவே சொல்லித் திரும்பவும் இன்னொரு கார்மெண்ட்ஸுக்கு அனுப்பி வைத்தாள்.

அங்கேயும் அதே எடுபிடி வேலைதான். ஒருநாள் கிடைத்த இடைவேளையில் சும்மா இருக்காமல் பட்டன் அடித்துப் பார்க்கலாம் என முயன்றவள் மிஷினுக்குள் கையை விட்டு விட்டாள். ஊசி சதக் என உள்ளங்கையில் இறங்கி விட்டது. நல்லவேளை அத்தனை ஆழமாய் நுழையவில்லை என்றார் டாக்டர். மருத்துவச் செலவுக்கு கார்மெண்ட்ஸ் கொடுத்ததாக ஆயிரம் ரூபாயைக் கொண்டு தந்த செல்லாக்கா  “அரை குறை கேஸையெல்லாம் கூட்டிக்கிட்டு வந்து எங்க உசுர எடுக்காதன்னு திட்றாங்கக்கா” என சொல்லிச் சென்றாள்.

பார்லர் வேலைக்குப் போகதான் ஆசை பூமாவுக்கு. கனகாவின் அக்கா நிறையப் பாராட்டுவாள் இவளை. எதைச் சொல்லிக் கொடுத்தாலும் ‘கப்’பெனப் பிடித்துக் கொள்வதாக. அங்கே சேரப் பத்தாவது படித்திருக்க வேண்டுமாம். இல்லாவிட்டாலும் நன்றாக வேலையைக் கற்றுக் கொண்டால் சேர்த்துக் கொள்கிறார்களாம். என்ன, சற்று சம்பளம் குறைவாகக் கொடுப்பார்களாம். போகிறது. பிடித்த வேலையைச் செய்வது போல சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்? ‘வர்றியா, வர்றியா?’ கேட்டுக் கொண்டேதான் இருக்கிறாள். அம்மா நிச்சயம் அனுமதிக்க மாட்டாள் எனத் தெரியும்.  வருத்தமாய் இருந்தது. அப்போதுதான் சட்டென அவள் ஞாபகத்துக்கு வந்தது இரகசியமாய் நேற்று  கைப்பையில் போட்டு வைத்த ரோஸ் கலர் லிப்ஸ்டிக். இவளுக்குக் கையில் அடிப்பட்டது தெரிந்ததும் நலம் விசாரிக்க வந்த கனகா பரிசாகக் கையில் திணித்து விட்டுப் போனது.
*
களுக்குத் தன் மேல் நிறைய வருத்தம் இருக்குமென்பது அன்னத்துக்குத் தெரியாமல் இல்லை. கொஞ்சம் அவள் அழுது புரண்டதற்குத் தான் காட்டிய இரக்கம்தான் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்கிற எண்ணம் வேறு குற்ற உணர்வாகத் துரத்திக் கொண்டிருந்தது. அதனால் பாசத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு சதா சர்வமும் அவளிடம் சிடுசிடுவென இருக்க வேண்டியிருந்தது. தான் அடிப்பது வேறு. ஆனால் பூமா கன்னத்தில் அடி வாங்கி வந்த போது சில இரவுகள் தூங்க முடியாமல் வேதனைப்பட்டது இவளுக்கு மட்டுமே தெரியும். இப்போது கையில் ஊசியை இறக்கிக் கொண்டு வந்து நின்ற போது துடிதுடித்துப் போனாள். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

“அதான் டாக்டர் சொல்லிருக்கரே. எல்லாஞ் சரியாப் போகும். இனியாவது ஒண்ணு கிடக்க ஒண்ணச் செய்யாத” என்றாள் கடுமையாக. “பாவம் அதே பரிதவிச்சு நிக்கி. நீ வேற” இவளைப் புரிந்து கொள்ளாமல் மகளுக்குப் பரிந்து கொண்டு வந்தான் சின்னசாமி. கொஞ்சிக் கொண்டிருந்தால் மறுபடி வேலைக்குப் போக மாட்டேன் என அழ ஆரம்பித்து விடுவாள். தெரியாதா இவளுக்கு? இருக்கிற பயம் தொடருவதுதான் நல்லது.  அடிப்பதை மட்டும் சில நாட்களாக நிறுத்தி விட்டாள். பிள்ளைகள் மேல் கை வைக்கக் கூடாதென அடிக்கடி சொல்லும் வேதாச்சலம், இன்னும் மனதில் தைக்க வேண்டுமெனப் பேப்பரில் வரும் தற்கொலைச் செய்திகளைப் படித்துக் காண்பிக்க ஆரம்பித்ததும் ஒரு காரணம். அதே நேரம் பரிவாய்ப் பேச ஆரம்பித்தால் காரியம் கெட்டு விடும் என்பதிலும் உறுதியாய் இருந்தாள்.

மகளின் அழகு மேல் அவளை விட சொல்லப்போனால் அன்னத்திற்கே கர்வம் அதிகம்.  “அடியே அன்னம். சும்மா ஒம் முன்னாடி ஹேர்பின்னைக் குத்தி இழுத்துச் சீவிக்குறாடி ஒம் பொண்ணு. தெரு முனை தாண்டுனதும் இரண்டு பக்கமும் காதைத் தாண்டி குழலு மாதிரி சுருண்டு விழுது முடி.”  புகார் வாசிக்கிறவர்கள் எல்லோருமே பூமாவின் அழகைக் கண்டு ஆற்றமாட்டாமல் பெருமூச்சு விடுகிறவர்கள்தான். ஆனால் ஒரு அம்மாவாக பெண்ணை அடைகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே. அவர்களில் யாரையும் பகைத்துக் கொண்டால் எந்த செய்தியும் காதுக்கு வராது. வரும் செய்தியில் எதற்குக் கண்டிக்க வேண்டும், எதைப் புறந்தள்ள வேண்டுமென்பது அவளுக்குத் தெரியும்.

சின்னசாமி ஓட்டுவதோ வாடகை ஆட்டோ. இவளும் வேலைக்குப் போவதால்தான் குடும்ப வண்டி குடை சாயாமல் ஓடுகிறது. ஆஸ்பத்திரியில் சம்பளத்தை விடவும் வந்து போகிறவர்கள் தரும் அன்பளிப்பு அதிகமாய் இருக்கும் சமயங்களில். பையன்களை நல்ல ஸ்கூலுக்கு அனுப்ப முடிகிறது. தகராறு பண்ணாமல் பூமாவும் படிப்பைத் தொடர்ந்திருந்தால் எவ்வளவு நிம்மதியாய் இருந்திருக்கும். சிங்காரித்துக் கொள்வதில் நாட்டம் போனதைப் பெரிய குற்றமாகச் சொல்ல முடியாதுதான். இவளும்தான் சின்ன வயசில் குஞ்சலம் வைத்து முடித்து, மஞ்சளைப் பூசி, ஷிங்கார் சாந்தும் கண் மையுமாய் சிட்டுப் போலத் திரிந்திருக்கிறாள். பூமா ஒரு அளவோடு நின்றிருந்தால் தேவலாம். சவகாசம் சரியில்லை. அதைத் தவிர்க்கவே எங்கேயாவது வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம். நல்லவேளையாய் இந்த முறை தேவகி கை கொடுத்தாள். எப்படியாவது பேசிச் சமாளித்து தான் பார்க்கிற கார்மெண்ட்ஸில் சேர்த்து விடுவதாகவும், தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்வதாகவும் வாக்குத் தந்திருக்கிறாள்.
*
ங்க தண்ணி கிடைக்கும்’ மெல்ல எழுந்தாள் பூமா. தேவகியக்காவும் கொஞ்ச நேரமாய் சன்னல் பக்கம் வரக் காணோம். பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கட்டிடத்தை ஒட்டி நடந்தாள். மூடியிருந்த ஒரு அறையின் கண்ணாடிக் கதவைக் கண்டதும் நின்று விட்டாள். அடித்த வெயிலில் அறையின் உள் பக்கம் தெரியவில்லை. ஆனால் அவள் அழகு உருவத்தை முழுதாகப் பிரதிபலித்தது கதவின் கண்ணாடி. உள்ளங்கை வியர்வையில் நசநசத்தது லிப்ஸ்டிக். தலையைக் கோதிக் கொண்டாள். சற்று முன் ஒதுக்கி விட்டிருந்த முடிக்கற்றையை மீண்டும் காது மடல்களைத் தாண்டித் தொங்க விட்டாள். அக்கம் பக்கம் பார்த்தாள். வெளியில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லை. இன்னும் நெருங்கி, லிப்ஸ்டிக்கைத் திறந்து உதடுகளில் பூசத் தொடங்கினாள். முடித்ததும் பரவசமாகி அழகு பார்த்துக் கொண்டே நிற்கையில் சட்டெனத் திறந்து கொண்டது கதவு.

“வா பாப்பா. மேனஜர் வந்தாச்சு. மாடிக்குப் போகலாம்” என்றார் காலையில் பார்த்த சூப்பர்வைஸர்.

தயங்கினாள் பூமா.

“அட வாம்மா. தேவகிதான் கூப்புட்டு வரச் சொல்லுச்சு” என்றதும் மெலிதாகப் புன்னகைத்தாள். 'அண்ணே எப்படியாவது நீங்கதான் பேசிச் சரிகட்டி மேனஜர சம்மதிக்க வைக்கணும். கஷ்டப்பட்ட குடும்பம்’ தேவகியக்கா சொன்னபோது . ‘நான் பாத்துக்கறேன். கவலைய விடு தேவகி’ என சிநேகிதமாய் பதிலளித்தவராயிற்றே. உள்ளே நுழைந்தாள்.

அந்த அறைக்கு மறுபக்கம் இன்னொரு கதவு இருந்தது. அதைத் திறந்தால் மாடிப்படிக்கட்டு. எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்த பெரிய ஹாலின் ஒரு ஓரமாய் இருந்தது.

“அக்கா எங்கே?” தேடினாள் அந்தக் கூட்டத்தில்.

“அப்பவே மேல போயிருச்சு. மேனஜருட்ட உனக்காகப் பேசிட்டிருக்கு. சீக்கிரம் வாம்மா” அவசரப்படுத்தினார். விடுவிடுவென அவர் ஏற, பின் தொடர்ந்தாள் பூமா. மேலேயும் பெரிய ஹால். ஆனால் யாருமில்லை. பெரிய பெரிய அட்டைப் பெட்டிகள் அடுக்கப் பட்டிருந்தன.

“அதோ அந்தக் கோடியில இருக்கு மேனேஜர் ரூம்” தோளில் கையைப் போட்டு பெட்டிகளின் ஊடாகக் கூட்டிச் சென்றார்.  பின்னாலிருந்து “அண்ணே” பதட்டமான ஒலித்தது தேவகியக்காவின் குரல். மூச்சிறைக்க நின்றிருந்தாள். “அக்கா இங்க  இருக்கிறாங்க” என்றாள் பூமா வெகுளியாய். "அண்ணே. நல்லால்லண்ணே. சின்னப் பொண்ணு. எம்பொண்ணுன்னே நினைச்சுக்கிடுங்க” கைகளைக் கூப்பினாள். பதிலை எதிர்பாராமல் இவள் கையைப் பிடித்துக் தரதரவென இழுத்துக் கொண்டு கீழேயிறங்கினாள்.

“ஒன்ன எங்கியும் நகரக் கூடாதுன்னு சொன்னனா இல்லியா? ஒரு செகன்ட்ல கண்ணுல மண்ணத் தூவிட்டியே. அன்னம் செஞ்ச புண்ணியம். எவளோ பாத்து சொன்னா, நீ ஏறிப் போறத”

“தண்ணி குடிக்கதான் போனேன்கா. அவருதான் நீங்க கூப்புடுறதா..”

”வெளங்குச்சு போ. ஒலகந் தெரியாத பச்ச மண்ணா இருக்கியே. இந்த இடம் ஒனக்கு சரிப்படாது. இனி ஒரு நிமிசம் கூட நிக்க வேண்டாம். பஸ்ஸப் புடிச்சு வீடு போய் சேரு. அன்னத்துக்கும் தகவல் சொல்லிடுறேன்”  கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக கேட்டுக்கு வெளியே கொண்டு வந்து விட்டாள். “காசு இருக்கா பஸ்ஸுக்கு?”. தலையை ஆட்டினாள் பூமா.
*
“எங்க அன்னம் கெளம்பிட்ட. அதுவும் இந்நேரத்துல?”

“ஒண்ணுமில்ல சார். பள்ளிக்கூடத்துலருந்து மகன் பேசினான். பேரண்ட்ஸ் மீட்டிங். நேத்தே சொல்லிருந்தான். நாந்தான் மறந்துட்டேன். அரை நாள் பெர்மிஷன் போட்டிருக்கேன். பத்மினி அக்கா பாத்துக்கறேன்னு சொல்லிருக்கு. வரட்டுமா?” அவர் கண்களைப் பார்க்காமல் பதிலளித்தாள்.

நடந்ததைச் சொன்னால் அவளை லெஃப்ட் ரைட் வாங்கி விடுவார். பிள்ளைகளை வளர்ப்பதில்தான் எத்தனை சிக்கல்கள். எளிதாக எல்லோருக்கும் தீர்வுகள் வாய்த்திடுவதில்லை. மற்றவர் சொல்லும் தீர்வுகள் நடைமுறைக்கு ஒத்து வருவதும் இல்லை. ஆனாலும் பத்மினி அக்கா சில நாட்களாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி இனி யோசிக்கதான் வேண்டும்.

ஆட்டோ பிடித்துப் போய் விடத் தீர்மானித்தாள். தப்புதான். தான் கூடப் போயிருந்திருக்க வேண்டும். திரும்பத் திரும்ப லீவு போட வேண்டி வருகிறதே என யோசித்தது தப்பாகி விட்டது. பிரச்சனை வராது எனத் தீர்மானமாக தேவகி சொன்னதால் அனுப்பி விட்டாள்.  வயசு விஷயத்தில், எல்லா இடங்களிலும் போல முதலில் பிகு செய்து விட்டுப் பிறகு சேர்த்துக் கொள்வார்கள் என அசட்டையாக இருந்து விட்டாள். நகரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது அந்த கார்மெண்ட்ஸ். இந்த மத்யான நேரத்தில் பஸ் இருக்குமோ இல்லையோ தெரியாது. பூமா இதிலெல்லாம் விவரமானவள்தான். வழியும் தெரியும். ஆனாலும் ஏனோ பதட்டமாக இருந்தது. கேட்ட விஷயம் அப்படி. அதனாலேயே கிளம்பி விட்டாள்.
*
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேகவேகமாக நடந்து கொண்டிருந்தாள் பூமா. அவர்கள் அவளைதான் தொடருகிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் யாருமே இல்லை. உச்சி வெயிலில் தகதகத்துக் கொண்டிருந்தது தார்ச்சாலை. அச்சத்துடன் இன்னும் எட்டி எட்டி நடையைப் போட்டாள். அரை மணி நேரம் நின்றும் பஸ் வராததால் நடக்க ஆரம்பித்துப் பாதி வழி வந்தாயிற்று. திடீரென்றுதான் கவனித்தாள். குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவர்கள் தொடர்வதை. அவள் வேகமாய் நடந்தால் அவர்களும் வேகமாய் நடக்கிறார்கள். மெல்ல நடந்தால் மெல்ல நடக்கிறார்கள். மூன்று பேர்கள் எனத் தெரிந்தது. ஆனால் நின்று யார் எனப் பார்க்கப் பயமாக இருந்தது.

களைப்பாகவும் இருந்தது. நடந்ததில் தாகம் இன்னும் அதிகரித்தது. வியர்த்து ஊற்றியது. ஆனது ஆகட்டுமென மரநிழலில் கொஞ்சம் நின்றாள். அவர்கள் இப்போது நெருங்கி விட்டிருந்தார்கள். ஆனாலும் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“ஓகோ. ராணியம்மா திரும்பக் கூட மாட்டீங்களோ..”

பரிச்சயமான குரல். ‘இவனா?’ கோபமாகத் திரும்பினாள்.  நினைத்தது சரி. அவனேதான். கூட அதே நண்பர்கள்.  இந்த இடத்தில் இவர்கள் எப்படி?

கடந்த சில வாரங்களாக இவளை எங்கே தனியாகக் கண்டாலும் நண்பர்களோடு தொடருகிறான் இந்தக் குறுந்தாடிப் பையன். கனகா வீட்டுக்கோ, கடைக்கோ நிம்மதியாகப் போய் வர முடிவதில்லை. நிறுத்திப் பேச முற்படுகிறான். ஒதுங்கிப் போனால் கோபப்படுகிறான். தம்பிகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போனாலும் வருகிறான். ஆனால் சற்று தள்ளி. அவர்கள் அறிந்து விடாமல்.

அம்மாவிடம் சொல்லப் பயமாக இருந்தது. சொன்னால் ‘இப்படி சிங்காரிச்சுகிட்டு போனா வரத்தான் செய்வாங்க.’ எனத் திட்டுவாள். சி ஐ டி மாதிரி வீட்டைப் புரட்டி, இவள் ஒளித்து வைத்திருக்கும் அத்தனை சாமான்களையும் எடுத்துக் கடாசி விடுவாள்.

“என்னடி. நானும் பாக்குறேன். பிடி கொடுக்காமப் போற. எனக்கென்ன குறச்சல். சரின்னா ஒன்னயக் கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் பின்னால வாரேன்” என்றான்.

முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள் பூமா. வழி மறித்து நின்றவன் “பெரிய ஒலக அழகின்னு நினைப்போ. இது என்ன தெரியுதா?” பாட்டிலைத் தூக்கிக் காட்டினான். உள்ளே தண்ணீர் போல ஏதோ..

“ஆஸிட்.” என்றான். “அடிக்கட்டுமா மூஞ்சில. இல்ல ஒழுங்கு மரியாதயா எங்கூடப் பேசிப் பழகுறியா?”

விதிர்விதிர்த்துப் போனாள் பூமா. டிவியில் பேப்பரில் பார்த்திருக்கிறாளே. அய்யோ... போச்சு... அவள் முகமும் சிதைந்து கோரமாகி..

நினைப்புத் தந்த அதிர்ச்சியில் கைகளால் காதுகளை மூடிக் கொண்டு அலறினாள்.
*
ரியான நேரத்தில் தான் மட்டும் அங்கே போயிருந்திருக்கா விட்டால்? அடுத்தடுத்து நடந்தவற்றை நினைத்து மனது ஆறவேயில்லை அன்னத்துக்கு.

நல்லவேளையாக கார்மெண்ட்ஸ் வாட்ச்மேனிடம் கேட்கத் தோன்றியது. அவர்தான் பூமா அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து பார்த்து விட்டு, நடந்தே போய் விட்டாளெனச் சொன்னது. எந்த வழியாகப் போயிருப்பாள் என இவளுக்கும் உடனேயே ஊகிக்க முடிந்தது. காவாலிப் பயல்கள். இவள் ஆட்டோவிலிருந்து இறங்கியதும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள். ஓடும் போது விழுந்து சிதறியது பாட்டில். சாலையில் தெறித்த திரவம்.. தண்ணீர்தான். இன்னொரு நாள் நிஜமாகவே ஆஸிட்டை நிரப்பிக் கொண்டு வரமாட்டார்கள் என என்ன நிச்சயம்?
*
ச்சரியமாய் இருந்தது பூமாவுக்கு. அம்மாவிடமிருந்து அடி விழும். திட்டு விழும். ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழும் என்றெல்லாம் நினைத்தவளுக்கு அவள் ஒன்றுமே கேட்காவிட்டால் வியப்பாக இருக்காதா? இரவு நன்றாகச் சாப்பிட்டாள். அம்மா அனுசரணையாகப் பரிமாறினாள். அப்பா வந்தார். இவளை இரகசியமாய் அழைத்து பொன் வண்ண நகப் பூச்சு பாட்டிலைக் கொடுத்தார். மார்க்கெட் பக்கம் போனபோது அவள் நினைவு வந்ததாகச் சொன்னார். சந்தோஷமாய் இருந்தது. அம்மாவிடம் காட்ட வேண்டாமெனக் கண்சாடை காட்டிச் சிரித்தார். இவளும் சிரித்தாள். சீக்கிரமாய்த் தூங்கிப் போனாள்.

வண்ண மலர்கள் நிறைந்த சோலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தாள் பூமா. சலசலத்த ஒரு ஓடையின் அருகே தெரிந்த பாறையில் இறங்கிக் கால்களை நீட்டி அமர்ந்தாள். அப்பா கொடுத்த நெயில் பாலிஷை எடுத்து நிதானமாக நகங்களில் பூசத் தொடங்கினாள். ஒரு கை விரல்களில் பூசியதும் அழகு பார்த்தாள். நகங்களிலிருந்து பொன் வண்டுகள் புறப்பட்டு அவளைச் சுற்றி வந்து ரீங்காரமிட்டன.  விழிப்பு வந்தது. முகத்துக்கருகே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன கொசுக்கள். கனவு கலைந்த எரிச்சலில் திரும்பிப் படுத்தாள்.

“அவ குழந்தடி” அப்பாவின் குரல்.

“அதான் பெரியவளாகி இரண்டு வருஷமாச்சே.” அம்மாவின் பதில்.

இருவரும் தன்னைப் பற்றிதான் பேசுகிறார்கள் எனப் புரிந்தது. ஆனால் அவள் அவசரத்தில் இருந்தாள். அடுத்த கைக்குப் பொன் வண்ணப் பாலீஷைப் பூச வேண்டும். இழுத்துப் போர்வையைத் தலை வரை மூடிக் கொண்டாள்.

“எனக்கு மட்டும் ஆசையா என்ன? இப்பப் போய், அதுவும் பயினஞ்சு வயசு வித்தியாசத்துலக் கட்டிக் கொடுக்க? நெலமயப் புரிஞ்சுக்க. காஞ்ச வயத்தோட இருந்திரலாம். தெனந்தினம் என்ன நடக்குமோன்னு அக்னிய அடிவயத்துல கட்டிக்கிட்டு வாழ முடியலைய்யா. நல்ல பையனாம். நல்ல குடும்பமாம். பத்மினிக்கா வீட்டுக் கல்யாணத்துல இவளப் பாத்தாங்களாம். என்ன முடியுமோ செஞ்சாப் போதுமாம்” அன்னம் சொல்லிக் கொண்டிருக்க, பூமாவோ விட்ட கனவைப் பிடித்து விட்டப் பூரிப்பில் போர்வைக்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
***

பெண்கள் சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் 24 அக்டோபர் 2014 சொல்வனம் 115_வது இதழ் வெளியீடு: http://solvanam.com/?p=36219 
நன்றி சொல்வனம்!
***

14 கருத்துகள்:

  1. அடப்பாவமே..

    கடைசியில் இதுதான் கதியா? படிப்புத்தான் ஒரு பெண்ணுக்கு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது கதை. நகரத்துப் பெண்கள் இவ்வளவு அப்பாவியாய் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  2. குழந்தைத் திருமணங்களில் குற்றவாளிகள் பெற்றோர்கள் அல்ல, சமூகம்தான் என்பதைச் சொல்லிய விதமும், நுணுக்கமான விளக்கங்களும் (வழக்கம்போல) அருமை.

    //நகரத்துப் பெண்கள் இவ்வளவு அப்பாவியாய் இருப்பதில்லை//

    ஸ்ரீராம் சார்!! :-) ஏமாறும் பெண்களில் நகரம், கிராமம் என்றெல்லாம் அதிக வித்தியாசம் இல்லை சார்!! என்ன, நகரம்னா ஃபேஸ்புக்கி(னா)ல் ஏமாறுவார்கள்; கிராமம்னா இந்த மாதிரி ஆலை, வயற்காடு...

    பதிலளிநீக்கு
  3. சொல்வனம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சிறப்பான கதை அக்கா...
    குழந்தைத் திருமணம் இன்னும் இந்தச் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது....
    நெருப்பை வயிற்றில் கட்டிக் கொள்ள முடியாத அன்னம் மாதிரி பெற்றோர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது...
    அருமை அக்கா...
    சொல்வனத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சொல்வனம் இதழில் கதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    சின்னஞ்சிறு கிளிக்கு இவ்வளவு துன்பங்களா?

    வெளிஉலகம் எப்படி பட்டது அதில் பலரும் பல குணத்துடன் இருப்பார்கள். எதிர்கொள்ளும் மனவலிமை இல்லையென்றால் குழந்தைகள் பாடு கஷ்டம் தான்.
    ஏழைகளின் கதி இது தான் என்று நினைக்கும் போது மனம் கனத்து போகிறது.

    தேவகி பூமாவை காப்பாற்றும் இடம் மனம் பதை பதைத்து போகிறது. சரியான நேரத்தில் தேவகி காப்பாற்றினாள்.





    பதிலளிநீக்கு
  6. @ ஸ்ரீராம்,

    நன்றி ஸ்ரீராம். படிப்பும் அவசியமே. ஆனால் படிக்கப் போகும் இடங்களிலும் கூட பாதுகாப்பில்லை. இச்சிறுமிக்கு வேறு திறமைகள் இருந்தும் கூட அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அப்பாவியாக இருப்பதும் அவரவருக்கு வாய்க்கும் சூழலைப் பொறுத்தே அமைகிறது. ஹுஸைனம்மா சொல்லியிருப்பது போல் இதில் கிராமம் நகரமென்ற பாகுபாடில்லை. மேலும் பெருநகரங்களின் மறுபக்கத்து நிகழ்வுகளே இவை. கர்நாடகாவில் மட்டும் நடக்கிற திருமணங்களில் 50 சதிவிகிதம் பால்ய விவாகங்களே. மணப்பெண்கள் பதினெட்டைத் தாண்டியிருப்பதில்லை என்கிறது புள்ளிவிவரங்கள்.

    பதிலளிநீக்கு
  7. @ஹுஸைனம்மா,

    சமூகம் துரத்திக் கொண்டேயிருக்கிறது இவர்களை. இயலாமையில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் இத்தகைய முடிவுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  8. @ -'பரிவை' சே.குமார்,


    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  9. @ கோமதி அரசு,

    இந்தியா முழுவதுமே பால்ய விவாகங்கள் தடுக்க முடியாத அளவில் இன்னமும் நடைபெற்று வருகின்றன.
    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  10. பெண்களுக்கான பிரச்சனைகள் நிறையவே உள்ளன......

    எத்தனை எத்தனை இன்னல்கள்.....

    சிறப்பான கதை. சொல்வனத்தில் வெளியானமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. "குழந்தைத் திருமணங்களில் குற்றவாளிகள் பெற்றோர்கள் அல்ல, சமூகம்தான் என்பதைச் சொல்லிய விதமும், நுணுக்கமான விளக்கங்களும் (வழக்கம்போல) அருமை" என்று ஹுஸைனம்மா சொல்லியதுதான் என்னுடைய கருத்தும்.

    'அமைதி விரும்பி' பிறக்கு முன், ஏன்,எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டாம் என்று நினைகிறேன் என்று நண்பர்களிடம் நான் சொன்னக் கராணம், "பெண் பிறந்தால், என் கொள்கைகளை நான் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதே நேரத்தில், பையன் என்றால் என்னுடைய கொள்கைக்கு பாதிப்பு வராது" என்றேன்.

    பெண் குழந்தைகளை வளர்ப்பதில் இவ்வளவு சிரமங்களை அப்பொழுது நான் அறிந்தவனில்லை. ஆனால், இன்றைய காலச் சூழல் வேறு மாதிரி உள்ளது. 'டெல்லி பஸ் முதல் காரைக்கால் ஆசிட் வரை' நினைப்பதற்கே பயமாக உள்ளது.

    ஒரு பெண்ணுக்கு நல்ல அப்பாவாக இருப்பதைவிட நல்ல மாமனாராக இருப்பதையே நானும் விரும்புகிறேன்.

    பெண்களுக்கு இந்த சமூகம் இன்னும் கூடுதல் பாதுக்காப்பும், முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்க வேண்டும் என்பதை சொல்கிறது இக்கதை.

    வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் மேடம்!

    பதிலளிநீக்கு
  12. @ வெங்கட் நாகராஜ்,

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  13. @ அமைதி அப்பா,

    விரிவான கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  14. @ அமைதி அப்பா,

    விரிவான கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin