செவ்வாய், 8 ஏப்ரல், 2014

“அப்பாவும் மீன் போலத் தோன்றுவார்!” - கல்கி சித்திரைச் சிறப்பிதழில்.. புதுகை, சென்னை, பெங்களூர்.. ஓவியர் மூவர் அறிமுகம்

கலையைக் கொண்டாடும் முயற்சியாக கல்கி இதழ் ‘கல்கி கேலரி’ பகுதியில் திறமை வாய்ந்த ஓவியர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. சித்திரைச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் இந்த வாரக் கல்கியில் பெங்களூர் சித்திரச் சந்தையில் நான் சந்தித்த மூன்று ஓவியர்கள் குறித்த அறிமுகம்:
#

#

புதுவையைச் சேர்ந்த ஓவியர் குபேரன் குபேந்திரனின் அதிசயப்பட வைக்கும் படைப்புகளை மீன்கள் நீந்தும் ஓவியங்கள் ஆக சென்ற ஆண்டு சித்திரச் சந்தைக்குச் சென்று வந்த போதே பகிர்ந்திருந்தேன். இந்த ஆண்டும் அவர் படைப்புகள் காணக் கிடைத்தாலும் ஸ்டாலில் அவர் இருக்கவில்லை. புதுவையைச் சேர்ந்தவர் என்ற ஒரு தகவலைக் கொண்டு அங்குள்ள ஆர்ட் கேலரிகளில் விசாரித்து அவர் அலைபேசி எண்ணைக் கண்டு பிடித்துத் தந்தார் நண்பர் நித்தி ஆனந்த். அவருக்கு என் நன்றி:).

எப்படி குபேரனுக்கு இந்த மாதிரியான ஓவியங்களை வரையும் ஆர்வம் வந்தது என எனக்குள் சுழன்று கொண்டேயிருந்த கேள்விக்கு சுவாரஸ்யமான விடைகள் கிடைத்தன அவருடனான உரையாடலில். ஆம், ‘மீனவக் குடும்பத்திலிருந்து வந்தவர்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் அடக்கி விட முடியாது இந்த வித்தியாசமான ஓவியங்களின் பின்னணியை.

குபேரனின் குடும்பத்தினருக்குச் சொந்தமாகப் படகுகள் உண்டு. கடல் ஓரத்தில் வீடு. அப்பா, அண்ணன்களுடன் இரவுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற அனுபவங்கள் திரில்லிங் ஆக இருந்திருக்கின்றன. கடலில் கழிந்த இரவுகள், அதைச் சார்ந்த நிகழ்வுகள், எதிர் கொண்ட ஆபத்துகள், பிடித்துப்போன கடும் உழைப்பு அத்தோடு கூட்டம் கூட்டமாகக் காண நேர்ந்த மீன்கள் இவையே இவருக்கு இதுமாதிரியான ஓவியங்கள் வரையத் தூண்டுதலாக இருந்திருக்கின்றன.

“மீன் பிடித்து வீடு திரும்பும் மீனவன் சாப்பிடுவதும் மீன். சாப்பிட்டதும் அக்கம்பக்கத்தினரிடம் ‘இன்று நீ எவ்வளவு பிடித்தாய்? நான் இவ்வளவு பிடித்தேன்!’ என பேசும் பேச்சும் மீன் பற்றியே. தூங்கப் போகையில் ‘நாளை நிறைய பிடிக்க வேண்டும்’ எனக் கனவும் மீன் குறித்தே.” என்று சிரித்தவர் மேலும் பகிர்ந்து கொண்டதைப் பேட்டியில் தந்திருக்கிறேன். சித்திரகலா பரீக்ஷ்த் கலைக்கல்லூரியில் MVA இறுதியாண்டில் இருக்கும் இவருக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துவோம்.

 குபேரன் மேலும் வரைந்த ஓவியங்கள் மேலே தந்திருக்கும் இணைப்பில் உள்ளன. முன்னர் பார்த்திராதவர்கள் கண்டு இரசிக்கலாம்.

*

சென்னையில் பிரபல கணினி நிறுவனமொன்றில் கிராஃபிக் டிசைனராகப் பணியாற்றும் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டதாரியான சரவணன் வரைந்த மேலும் சில ஓவியங்களையும்; பெங்களூரில் உள்ள பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் சீனியர் டிசைன் எஞ்சினியராக பணியாற்றும், ‘தமிழ்ப் பறவை’ என வலையுலகில் நண்பர்களால் அறியப்படும் பரணிராஜனின் அழகான ஓவியங்களையும் தனித்தனிப் பதிவாக விரைவில் பகிந்து கொள்கிறேன்.
**

இவர்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை அளித்த கல்கிக்கு என் நன்றி!

***
[*ஓவியர்கள் மற்றும் அவர்களது ஓவியங்களின் ஒளிப்படங்கள் நான் எடுத்தவை.]

10 கருத்துகள்:

 1. எந்நேரமும் மீன் பற்றிய சிந்தனை போல, உறுதியான ஒரே சிந்தனையுடன் முயற்சி - ஓவியர் குபேரன் அவர்களின் வெற்றிக்கு காரணம்... அவருக்கு வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
 2. குபேரன், சரவணன், பரணி என மூவரது வரைவதற்கான பின்னணியும்,
  பாணியும் அருமை. இந்த மூன்று ஓவியர்களுக்கும், அவர்களை
  அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 3. குபேரன், பரணி, சரவணன் ஆகியோருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியிலும் வெளிப்படும் ஓவியரின் மனநிலை சிலிர்ப்பூட்டுகிறது. அதிலும் ஒரு வருடம் காத்திருந்து ஒரு ஓவியத்தை முடித்த சரவணன் அவர்களின் முயற்சி அசரவைக்கிறது. அனைவருக்கும் மனங்கனிந்த பாராட்டுகள். அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 5. இன்றுதான் கல்கி வாங்கிப் படித்தேன் ஒவ்வொரு ஓவியத்தையும் ரசித்தேன். அழகாய் அறிமுகப்படுத்திய உங்களைப் பாராட்ட நினைத்தேன். இங்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்..! உங்களுக்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin