ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

அடை மழை - திருமதி செல்வி ஷங்கரின் கருத்துக் கண்ணோட்டம்


அன்பின் ராமலக்ஷ்மி ,

அறிவது நலனே விழைவதும் அஃதே !

நூல்களில் கவிதையை முதலில் படிக்கலாமே என்று படித்தேன். சுருக்கமாய் இருக்கிறதே - தெளிவாகவும் சிறியதாகவும் இருக்கிறதே என்று வேக வேகமாகப் படித்து முடித்தேன்.

அடுத்தது - சிறுகதை தானே - இதை எல்லாம் படிக்கின்ற ஆர்வம் எல்லாம் எப்பொழுதோ போய்விட்டதென்று நினைத்துக் கொண்டு சில நாட்கள் தொடாமலேயே இருந்தேன்.

நூலின் பின்பக்க அட்டைப்படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் நம்ம புது வண்டு - பிரியா மாதிரியே இருக்கே - அவள் தான் இந்தக் கதை எல்லாம் எழுத வேண்டுமென்று எதிர்பார்த்து ஏமாந்தேன். சரியென்று மனதைத் தேற்றிக் கொண்டு நிச்சயம் படிக்க வேண்டுமென முடிவெடுத்தேன்.

படிக்கின்ற போது தான் உணர்ந்தேன் . இந்த வயதில் இத்தனை நிகழ்வுகளையும்   கண்களால் பார்த்து - கருத்தினில் தேக்கி காவியங்களாய்த் தீட்டுகின்ற கவி வண்ணம் எப்படி வந்ததென்று உண்மையில் வியந்தேன்.

அடைக்கோழியில் அது எப்படி கோழி வளர்ப்பை எல்லாம் இப்படி இயல்பாக பார்த்தது போலவே எழுதி இருக்கிறீர்கள் !

மணல் பரப்பி - வைக்கோல் பரப்பி - முட்டைகளை அடுக்கி - கோழியை அமர விட்டு - கூடாரம் அமைத்து - அதன் கூவலை எல்லாம் கேட்கின்ற வரைக்கும் - ஒரு தவம் செய்வது போல் சரசுவின் அன்றாட வாழ்க்கை முறையை அழகாய்ச் சொல்லி இருப்பதும் குடும்பச் சூழலை குறை கூற முடியாமல் எடுத்துச் சொல்லி இருப்பதும் மிக அழகு.

இதுவும் கடந்து போகும் - இதில் அப்படி ஒரு சுற்றுச் சூழல் அக்கறையை மனம் கசிந்து கசிந்து கதையாய், பாசமும் பண்பும் மரங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைய அன்பால் வடித்திருக்கிறீர்கள்.

உலகம் அழகானது - அடைமழை - இவற்றில் பெங்களூரு வாழ்க்கை முறையின் இயல்போட்டம் அப்படியே படம் பிடிக்கப் பட்டுள்ளது.

பாசம் - சிரிப்பு - ஜல்ஜல் - இவற்றிலெல்லாம் கதையோட்டத்தோடு தொடரும் கருத்துகள் சிறு கதைக்கே உரித்தான போக்கில் செல்வது என்னைச் சற்று சிந்திக்க வைத்தது. அக்கால எழுத்தாளர்கள் கூறும் சிறு கதை இலக்கணம் எல்லாம் அப்படியே கதையில் அமைந்திருக்கிறது. 

பயணம், அடையாளம், ஈரம்-இக்கதைகளில் எல்லாம் அந்தந்த வயதில் வாழ்க்கையில் ஏற்படும் சூழ்நிலைப் போராட்டங்களை  கதா பாத்திரங்களாக நடமாட விட்டது கதை ஆசிரியரின் ஆளுமையைக் காட்டுகிறது.

வயலோடு உறவாடி - காலத்துக்கேற்ற கருத்து வளமிக்க சுற்றுச் சூழலியல் கதை. இப்பொழுது நாட்டில் வேளாண்மையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட பரம்பரைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. 

பொட்டலம் - இன்றைக்கும் பொருளையே வளமாகக் கொண்டு கல்வியைத் தொழிலாக்கி விட்ட பள்ளிகளிலே கண்கூடாகக் காணக் கிடைக்கின்ற காட்சி !

வசந்தா - நல்ல சமுதாயக் கதை - சீர்திருத்தம் பார்த்தால் தினசரி வாழ்க்கை ஓடுவதில்லை. அன்றாட வாழ்க்கையை அமைதியாக நடத்த வேண்டுமென்றால் அந்தந்த வேலைக்கும் ஆள் தேவைப் படுகிறது. அவர்களின் நலனை எல்லாம் பார்த்தால் நம் இயலாமைக்கு யாரும் துணை செய்ய முடிவதில்லை. இது எந்தக் காலத்தும் நடக்கின்ற போராட்டம் தான் .

இந்த வரிசையில் தான் கதைகளைப் படித்தேன் - கதைத் தொகுப்பு நல்ல பயனுள்ள தொகுப்பு.எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது- இது போன்ற கதைகளை மேல் நிலை வகுப்புகளுக்கோ கல்லூரி வகுப்புகளுக்கோ பாடமாக வைக்கலாம் என்று.

பல்வேறு சூழலில் அனுபவம் பெற்ற தாங்கள் இதையும் முயன்று செயல் படுத்தினால் நூல் மேன்மேலும் சிறப்புறும்.

பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் !

கருத்துக் கண்ணோட்டம் : செல்வி ஷங்கர்
*

நூல் குறித்த தங்கள் கருத்துகளுக்கும், மகளின் இடத்தில் வைத்துப் பார்த்திருக்கும் அன்புக்கும் மிக்க நன்றி, செல்விம்மா!

**

கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட:
aganazhigai@gmail.com

இணையத்தில் வாங்கிட:
அடை மழை
***

10 கருத்துகள்:

 1. படித்ததை நல்ல முறையில் பகிர்ந்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 2. செல்வி ஷங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையான விமர்சனம் அக்கா...
  விமர்சகருக்கு வாழ்த்துக்கள்.
  தொடரட்டும் உங்கள் ஆசிரியர் பணி.

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான விமர்சனம்....

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin