வியாழன், 24 ஜனவரி, 2013

தூறல்:11 - ஆட்டிசம்; பெங்களூர் மலர் கண்காட்சி, சித்திரச் சந்தை தகவல்கள்; குழந்தைத் தொழிலாளர் மீட்பு

கடந்த சில தினங்களாக எனது முந்தைய மலர்கண்காட்சிப் பதிவுகளையும், சென்ற வருடச் சித்திரச் சந்தை பதிவையும் தேடி யாரேனும் வந்தபடி இருப்பதைக் காட்டுகிறது ஸ்டாட்ஸ். மின்னஞ்சல் அனுப்பியும் நண்பர்கள் தகவல் கேட்கவே, செல்ல விரும்புகிறவர்களுக்குப் பயனாகும் என விவரங்களைப் பகிருகிறேன்.

குடியரசு தின மலர் கண்காட்சி 2013:
18 ஜனவரி 2013, அன்று கர்நாடக முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு பெங்களூர் லால்பாகில் நடந்து கொண்டிருக்கிறது மலர் கண்காட்சி. இந்த வருடத்தின் பிரதான அம்சமாக 35 அடி உயரமும், 20X20 அடி பரப்பளவும் கொண்ட ஈஃபில் டவர் உருவாகியிருக்கிறது இரண்டரை இலட்சம் ரோஜாக்களாலும் பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்களாலும். அதன் முன்னே 6 அடி உயரத்தில் எழுந்தருளி நிற்கிறார் விவேகானந்தர். அவரது பொன்மொழிகளும் சிலையைச் சுற்றி பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிற ஆண்டு இது. இந்த இரண்டு மலர்க் கட்டுமானங்களுடன் அந்தூரியம் மலர்களால் ஆன உயரமான பார்பி பொம்மையும் இடம் பெற்றிருக்கிறது. போக சுற்றி வரப் பல மலர் அலங்காரங்கள், போன்சாய் பார்க்கில் 500 செடிகள் என நீள்கிறது மக்களைக் கவரும் அம்சங்கள்.

500 போலீஸ், 25 சிசி டிவி பாதுகாப்புக்கு, நான்கு நுழைவாயில்களிலும் சாமான்களை வைத்துச் செல்ல க்ளாக் ரூம் வசதி என ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், டபுள் ரோடு நுழைவாயில் வழியாக பொதுஜனங்களின் வாகனங்கள் வழக்கமாக பார்க் செய்கிற இடத்தில் இந்த முறை அனுமதி இல்லை. எங்கேனும் சாலையில் கிடைக்கிற இடத்தில் நிறுத்தி விட்டு வர வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி. அதுவும், இன்று 24 ஆம் தேதியைப் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமேயாக ஒதுக்கியிருக்கிறார்கள், அனுமதி இலவசம் என. மற்றபடி நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ 40. குழந்தைகளுக்கு ரூ 10.

“இத்தனை வருடங்களிலும் பெங்களூரில் எது மாறினாலும், திருவிழா போல் வருடம் இருமுறை நடைபெறும் மலர்கண்காட்சிகளும், அலைமோதும் கூட்டமும், ஆர்வத்துடன் காண வரும் மக்களின் உற்சாகமும் மட்டும் மாறவேயில்லை” என ஒருவர் பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையும் கூட. இந்தமுறை செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நேரம் கிடைத்து, சென்றால் படங்களைப் பகிருகிறேன்.
***

சித்திரச் சந்தை 2013:
ஜனவரி கடைசி ஞாயிறன்று கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் நடத்துகிற ‘சித்திரச் சந்தை’ ( CHITRA CHANDHE ) நிகழ்வுக்காக ஆவலுடன் காத்திருப்போர் அநேகம் பேர். வருகிற ஞாயிறு, ஜனவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையிலுமாக நடைபெற உள்ள பத்தாவது சித்திரச் சந்தையைத் தொடங்கி வைக்கிறார் கர்நாடக முதல்வர். முன்னாள் முதல்வரும் இந்நாள் மத்திய மந்திரியுமான எஸ்.எம். கிருஷ்ணாவும் கலந்து கொள்கிறார். 26,27,28 ஆகிய மூன்று தினங்களும் வளாகத்தில் தனிப்பட்ட கண்காட்சிகளும் நடக்க உள்ளது. இந்த சமயத்தில், பத்து ஓவிய ஆசிரியர்களையும், 2 ஓவிய விமர்சகர்களையும் கெளரவிக்க இருக்கிறது கல்லூரி.

வந்து குவிந்திருக்கும் 2000 விண்ணப்பங்களில் 60 சதவிகிதம் கர்நாடாகாவிலிருந்து என்றாலும், நாட்டின் பிற மாநிலங்களிலிருந்து வரும் விண்ணப்பங்கள் வருடத்துக்கு வருடம் அதிகரித்து வருவதாய் தெரிகிறது. சென்ற வருடம் 1260 ஸ்டால்கள் வழங்கிய நிறுவனம் இந்த முறை மேலும் சில சாலைகளை எடுத்துக் கொண்டு 1500 ஸ்டால்கள் வரை வழங்கிட எண்ணியுள்ளது. இந்த சாலைகளில் வாகனங்கள் நுழையத் தடை என்றாலும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சுற்றிப்பார்க்க சிறிய ட்ராம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்ற வருடப் பதிவைக் காண இங்கே செல்லலாம்: சிந்தை கவர்ந்த ‘பெங்களூர் சித்திரச் சந்தை’ 2012  
***  

ஆட்டிசம்:

ஆட்டிசக் குழந்தைகள், அவர்தம் பெற்றோர்கள் நலன் கருதி விரிவாகத் தான் எழுதிய பதினெட்டு கட்டுரைகளின் தொகுப்பை இந்த இழையில் பகிர்ந்திருக்கிறார் யெஸ். பாலபாரதி.

ஆட்டிசம் - Autism


மேலிருக்கும் பதிவின் சுட்டியை முடிந்தவரை மற்றவரும் பகிர்ந்திடுவது விழிப்புணர்வு பரவ உதவியாய் இருக்கும். 

தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் இணைப்பைத் தனித்தனியாகவும் இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன்.

1. ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்   

பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. .. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. .. சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.” ..
2. ஆட்டிசம் -வரலாறு

ஆட்டிசம்என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது.

3. ஆட்டிசம் – உட் பிரிவுகள்

வகைப்படுத்தல்கள் ஒரளவுக்கு ஆட்டிசத்தைப் பற்றிய புரிதலை நமக்குத் தரலாம். ஆனாலும் இந்த ஸ்பெக்ட்ரத்திலிருக்கும் குறைபாடுகளின் வகைகளை நாம் துல்லியமாக வரையறுத்துவிட முடியாது என்பதே உண்மை.  ஒவ்வொரு வகையிலும் கூட  அதற்கான அறிகுறிகளின் அளவும் குழந்தைக்கு குழந்தை மாறுபடுகிறது.
4. ஆட்டிசம் – சரியும் தவறும்

புனைகதைகளும், தவறான பரப்புரைகளும் எல்லா இடங்களிலும் நிகழ்க்கூடியது தான் என்றாலும் மருத்துவத்துறையிலும் அது நிகழ்வது வேதனையானது. ஆட்டிசம் குறித்து பல்வேறு விதமான செய்திகள் உலா வருகின்றன. அவற்றில் சரியானதும், தவறானதும்...

11. ஆட்டிசம் – சிகிச்சை முறைகள்
 
14. ஆட்டிசம்- பத்துகட்டளைகள்

Jene Aviram என்ற மேலைநாட்டவர் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான குழந்தையின் பெற்றோருக்கு, பத்துகட்டளைகளை குறிப்பிட்டுள்ளார். இதே செய்தியினை நாம் முந்தைய கட்டுரைகளில் பார்த்திருக்கக்கூடும். அவை நான் பார்த்த பெற்றோர்களின் வழியாகவும், தெரபிஸ்டுகள், மருத்துவர்கள் வழியாகவும் கிடைக்கப் பெற்றவை. ஆனாலும், இக்கட்டளைகள் எனக்கு மிகவும் முக்கியமானதாகப்படுவதால்.. அதனைத் தமிழில் தந்திருக்கிறேன்.”
18. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 4

ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.
ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமானது.என நம்பிக்கை தரும் மனிதர்களைப் பற்றியப் பகிர்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் இத்தொடர் இன்னும் சில ஆய்வுகளுடன் நூலாக்கப்படும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. நம் பங்காக, இன்னும் பலரை இந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் சென்று சேரும் வகையில் பகிர்ந்திடுவோம்.
***


50 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு:

நேற்று முன் தினம் மாலை  எட்டு முதல் பதினான்கு வயது வரையிலான 50 குழந்தைத் தொளிலாளர்களை  பெங்களூர் சிட்டி மார்க்கெட்டின் ஊதுபத்தி, கோணிப்பைகள் செய்யும் சிறு தொழிற்சாலைகளிலிருந்து மீட்டிருக்கிறார்கள் போலிஸார். இதில் 3 சிறுமிகளும் ஐந்தே வயதான பாலகனும் கூட அடக்கம். இவர்கள் பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட், பஞ்சாப், ஒரிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த குழந்தைகள். எந்த சம்பளமும் கொடுக்காமல், எந்த அடிப்படை வசதிகளையும் வழங்காமல் கிட்டத்தட்ட கைதிகளைப் போல் எட்டுக்கு எட்டு அடி உள்ள சிறு கொட்டகைகளில் பத்துக்கும் மேலானோர் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டு இருக்கிறார்கள். தினசரிக் குளியல், இவர்கள் வாழ்க்கை அறியாதது. அழுக்குத் துணியும், பஞ்சடைந்த தலையுமாக எழுந்த நேரத்திலிருந்து இரவு வரை, மூன்றுவேளை தரப்பட்ட உணவுக்காக உழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். வட இந்தியாவில் வாரம் ஒருமுறை ரெய்ட் செய்யப்படுவதால் இக்குழந்தைகள் இங்கே அனுப்பப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் பெற்றோரைத் தேடி ஒப்படைத்தால் மீண்டும் வெறெங்கேனும் விற்கப்பட்டு விடக் கூடாதென கவலை தெரிவிக்கிறது போலீஸ். இவர்களுக்கு சரியான எதிர்காலத்தை அமைத்துத் தரும் வழியை சமூகத் தொண்டு நிறுவனங்களும் குழந்தைகள் நலத் துறையும் ஆராய்ந்து வருகின்றன.

மனசாட்சி, மனித நேயம் அற்று விட்ட உலகில் மீட்கப்படாமல் அல்லாடும் மழலைகள் இன்னும் எத்தனை பேரோ?

தொடர்புடைய முந்தைய பதிவு: உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?
***


படத்துளி

புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பூக்கூடை

‘எங்களின் இந்த நிலைக்கு யார் காரணம்?’
இவள் கேள்விக்கு என்ன பதில் உண்டு நம்மிடம்?

***

31 கருத்துகள்:

 1. அறியாதன பல அறிந்தேன்
  விரிவான அருமையான பயனுள்ள பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 2. மலர்க்கண்காட்சியைப் பார்க்கறதுக்காகக் காத்திருக்கோம்..

  ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே நிச்சயமாக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. மிக உபயோகமான பதிவு..அழகான புகைப்படங்கள்!!

  பதிலளிநீக்கு
 4. ஆட்டிசம் பற்றி நானும் நிறய்ய கேள்விபட்டிருக்கேன். மனதுக்கு ரொம்ப வேதனையான விஷயம். என் நெருங்கிய தோழி இதன் பயிற்ச்சி பெற்று தன்னுடைய்ய 2 குழந்தைகளுக்கும் தெரபிஸ்டாக இருக்கிறாங்க. தன்னுடைய்ய இரண்டு குழந்தைகளுக்கும் ஆட்டிசம் இருக்கிறது ( அதை தெரிந்ததும் நம் மக்கள் அவர்கள் வீட்டு பக்கம் கூட எட்டி பார்க்காமல் இருக்கிறாங்க) அது மிகவும் வேதனை. நான் சில நேரங்களில் போய் வாலண்டிய சர்விஸ் செய்திருக்கேன். இங்கு அமெரிக்காவில் இதற்க்காக தனி பயிற்ச்சி மையங்கள் இருக்கிறது. அரசு பள்ளிகளில் தெரபிஸ்ட்கள் இருக்கிறார்கள். இப்ப இருக்கும் கால்த்தில் 100 6 என்கிற விதத்தில் ஆட்டிசம் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பெருகி கொண்டே போகிறது. இன்று வரைக்கும் இது எதனால் வந்ததது. இதற்க்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை என்பது தான் பெரிய கவலை.அந்த குழந்தைகளை பார்க்க பாவமாக இருக்கும், அவங்களில் ஒரு சிலர் பார்க்க டிப்பிகல் குழந்தைகள் போலவே இருப்பாங்க.சொல்லிகொண்டே போகலாம். நானும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்க ஆசை படுகிறேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பல நல்ல தகவல்களை எல்லோருக்கும் தெரியப் படுத்தும் உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள.எல்லாமே கதம்பம்.

  பதிலளிநீக்கு
 6. பெங்களூர் நிகழ்வுகளைப்பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
  குழந்தைத் தொழிளார்களில் 5 வயது குழந்தை இருந்தது மிகவும் வேதனையான விஷயம்.

  பதிலளிநீக்கு
 7. நண்பர் ஒருவரின் மகனுக்கும் ஆட்டிசம் இருக்கிறது. அவருக்கும் கட்டுரைகளின் லின்க் அனுப்பி வைக்கிறேன்....

  கடைசி படம் - அப்பெண் கேள்விக்கு நம்மிடம் பதிலேது? :(

  சிறப்பான பகிர்வு.

  த.ம. 7

  பதிலளிநீக்கு
 8. ஹப்பா,, எத்தனை தகவல்கள்..

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் அருமையான பதிவு! சித்திர சந்தை சென்று பார்த்தேன். மிக அருமையாக ஓவியங்களைப்பகிர்ந்துள்ளீர்கள்! எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தேன்.என் அன்பு நன்றி!

  பதிலளிநீக்கு
 10. ஆட்டிசம் குறித்தான தகவல் அவசியமானது.
  நான் புரிந்துக் கொள்வதோடு மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஆட்டிசம் பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறார். நான் ஏற்கனவே இது பற்றி என்னுடைய தளத்தில் குறிப்பிட வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.. இவர் அனைத்தும் எழுதி முடித்த பிறகு கூறலாம் என்று விட்டு இருக்கிறேன்.

  "எங்களின் இந்த நிலைக்கு யார் காரணம்?"

  இவர்கள் பெற்றோரே காரணமாக இருக்க முடியும் உடன் சமூகமும்.

  பதிலளிநீக்கு
 12. @அமைதிச்சாரல்,

  உங்களின் இந்தப் பின்னூட்டமே என்னைப் போய்வரத் தூண்டியது:)! நன்றி சாந்தி.

  விழிப்புணர்வு பரவ நம்மால் இயன்றதைச் செய்வோம்.

  பதிலளிநீக்கு
 13. @Vijiskitchencreations,

  நன்றி விஜி. உங்களுக்குத் தெரிந்ததை அவசியம் பதிவுகளாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 14. @வெங்கட் நாகராஜ்,

  நல்லது வெங்கட். அவசியம் அனுப்பி வையுங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. @- யெஸ்.பாலபாரதி,

  புத்தகமாகக் கொண்டு வர இருக்கும் உங்கள் எண்ணம் விரைவில் ஈடேறட்டும்.

  பதிலளிநீக்கு
 16. @மனோ சாமிநாதன்,

  ஓவியக் கலைஞர் உங்களுக்கு நிச்சயம் சித்திரச் சந்தை பகிர்வு பிடித்திருக்கும். இந்த வருடமும் சென்று வந்தேன். நேரமிருக்கையில் படங்களுடன் பகிருகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 17. @கிரி,

  நன்றி கிரி. அவசியம் நீங்களும் பகிர்ந்திடுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. ஆட்டிசம்,குழந்தை தொழிலாளர் என விழிக்கவைக்கும் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 19. வருஷா வருஷம் மலர்க் கண்காட்சிக்கும், சென்ற வருடம் ஓவியச் சந்தைக்கும் உங்ககூடவே வந்ததில், இந்த வருஷமும் கூட்டிட்டுப் போவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு.

  இவற்றிற்கு தம்பி மகனாரும் வருவார்தானே? அவரின் படங்களுக்காகவாவது வந்து பார்ப்பேன். :-))

  பதிலளிநீக்கு
 20. @ஹுஸைனம்மா,

  சித்திரச் சந்தை படங்களை இன்னும் அப்லோட் செய்யவில்லை:). நேரம் கிடைக்கும் போது பகிருகிறேன். தம்பி மகனை என் தங்கை வீட்டில் விட்டுவிட்டு அவன் அம்மாவும் நானும் சென்றிருந்தோம். அவர் படங்களை தனிப்பதிவாக இன்னொரு சமயம் பகிர்ந்திட்டால் ஆச்சு:)! சென்ற முறையை விட இந்தமுறை திகைக்க வைக்கும் அளவுக்குக் கூட்டம் ரொம்ப அதிகம்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin