வியாழன், 17 ஜனவரி, 2013

இதுவும் கடந்து போகும் - பொங்கல் சிறப்புச் சிறுகதை - அதீதத்தில்...


சென்னை விமான நிலையத்திலிருந்து நேராகப் புதுவையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது டாக்ஸி.

‘வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுக் கிளம்பலாமேக்கா’ என்ற தங்கையிடம் . “அதுக்கெல்லாம் நேரமில்ல. இன்னைக்கு எனக்கு என் வீட்டுல இருந்தாகணும், தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ” படபடப்பாய்ப் பர்வதம் பேசி விட ஃபோனை வாங்கி “அதான் பொங்கல் வரைக்கும் இருப்பமே சித்தி. வர்றோம் பிறகு” எனச் செந்தில் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

ரு வருடம் முன் இதே நாளின் இரவில்தான் தாண்டவமாடிக் கொண்டிருந்தது ‘தானே’ புயல்.

காற்றின் சீற்றம் கட்டுக்கடங்காததாக, இடிமுழக்கங்கள் இதயத்துடிப்பை நிறுத்தி நிறுத்தி இயங்க வைப்பதாக இருக்க, பொழிந்த பெருமழை மொத்த வீட்டையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது. நடுக்கூடத்தில் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தாள் பர்வதம்.  நல்லவேளையாக அடித்துப் பிடித்து அந்தக் கிறுஸ்துமஸ் லீவுக்கு வந்தோம் என நினைத்தான் செந்தில். இல்லையென்றால் இயற்கையின் இந்தக் கோர தாண்டவத்தைத் தனியொருத்தியாக அல்லவா அம்மா எதிர் கொண்டிருந்திருப்பாள் எனும் சிந்தனையே அதிகக் கிலியாக இருந்தது.

முதலில் இந்தியா வர அவனுக்கு லீவு கிடைக்குமா என்பதே சந்தேகமாகதான் இருந்தது. புதுவையை விட்டு ஃபிரெஞ்சுக்காரர்கள் வெளியேறிய சமயத்தில் விருப்பமானவருக்குத் தங்கள் நாட்டில் குடி உரிமை தருவதாக ஃப்ரெஞ்சு அரசாங்கம் அறிவித்தபோது விரும்பி வாங்கிக் கொண்டவர்களில் செந்திலின் குடும்பமும் ஒன்று. அதில் அத்தனை விருப்பம் காட்டாத அப்பாவை மற்றவர்கள் “உனக்குப் பிடிக்காட்டா என்ன? வாரிசுங்க எதிர்காலத்துக்காவது வாங்கி வச்சுக்க!” என வற்புறுத்த சரியென வாங்கிக் கொண்டவர், பேருக்குச் சிலகாலம் இருந்து விட்டுத் திரும்பி விட்டிருந்தார். இப்போது அவன், இரண்டு அண்ணன்கள், அக்கா எல்லோருமே இருப்பது ஃபிரான்ஸில்தான். அம்மா மட்டும் இங்கே. அப்பா காலமான பிறகும் அவர் கட்டிய வீட்டை விட்டு வர ஒரேடியாக மறுத்து விட்டாள். அதற்குக் காரணமும் இருந்தது.

அப்பா பார்த்துப் பார்த்து கட்டிய வீடு என்பதை விட அவர் நட்டு, விதைத்து, வளர்த்துப் பராமரித்து வந்த மரங்கள்.வீட்டைச் சுற்றிச் சூழ அம்மாவின் தோழர்களாய், காவலர்களாய், பெறாத பிள்ளைகளாய். இவர்கள் மட்டுமென்ன, ஊரிலிருந்து எப்போது வந்தாலும் பெட்டிகளை வாசலோடு போட்டு விட்டு தோட்டத்தைச் சிலமுறை சுற்றி வந்த பிறகுதானே வீட்டுக்குள்ளே காலடி வைப்பார்கள்? சின்ன வயதில் அப்பா ஆளாளுக்கு இன்ன மரம் இன்னசெடியெனப் பிரித்துக் கொடுப்பார் பராமரிக்க. மூன்று மாதங்களுக்கொரு முறை பொறுப்பு மாறவும் செய்யும்.அப்பாவின் திட்டமிடல் எப்போது நினைத்தாலும் வியப்பு.  யார் செடி நன்றாக வளருகிறது என்கிற போட்டியாக இல்லாமல், எல்லோருக்கும் தோட்டத்தின் எல்லா மரங்களின் மேலும் ஒட்டுதலாகிப் போனது.

வலப்பக்கம் அடர்ந்து நின்ற மாமரத்தின் கன்று பெரியண்ணாவின் பத்தாவது பிறந்தநாளில் அப்பா நட வைத்தது. அவை தந்த பழத்தின் சுவையைப் போல் வேறொரு மாங்கனியைச் சுவைத்தார்களில்லை. அது என்ன வகை எனச் சரியாக அறிய எத்தனையோ பிரயத்தனப்பட்டும் ஒரு முடிவுக்கு வர முடிந்ததில்லை. இவன் எட்டாம் வகுப்பில் இருக்கையில் என்.சி.சி  கேம்ப் சென்ற இடத்திலிருந்து கொண்டு வந்து நட்டத் தேக்கு, நெடுநெடுவென வீட்டை விடப்பல மடங்கு உயர்ந்து நின்றிருந்தது.

எல்லோருக்கும் செல்லம் பலா. கேரள வகை. சின்னச் சின்னப் பழமாய் இருந்தாலும் சுளைகளெல்லாம் கற்கண்டாக இனிக்கும். பலாக் கன்றை நடுகிறவர் விளைச்சல் கொடுப்பதைப் பார்க்க உயிரோடிருப்பதில்லை என சாரதி மாமா சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை அப்பா.  தன் கையாலேப் பழங்களைப் பறித்து, இவன் சைக்கிள் கேரியரில் கட்டி மாமா வீட்டுக்குக் கொடுத்து விட்டிருக்கிறார் பலமுறை. வெள்ளைக் கொய்யாவின் பழங்களுக்கு அக்காவின் பள்ளித் தோழிகள் எல்லாம் ரசிகைகள். ஒரு பழம் விடாமல் பறித்துப் போய் விடுவாள் அவர்களுக்காக. அதன் விதைகள் கண்ணுக்கும் தெரியாது. பற்களிலும் மாட்டாது. புதுவைக்கு வந்து விட்டு சென்னை திரும்பும் சித்தியுடன் ஒரு கூடைச் சாத்துக்குடியும் வாடிக்கையாய்க் கிளம்பிவிடும் தோட்டத்திலிருந்து. கோடையில் வேப்பமரக் காற்றுக்காகவே அதனடியில் கயிற்றுக் கட்டில்களை வரிசையாகப் போட்டு உறங்குவார்கள். வேடிக்கைப் பேச்சுகள் நள்ளிரவு தாண்டி நீளும். அமைதியாகத் தலையசைத்து அத்தனை சந்தோஷங்களையும் ரசித்திருந்தனவோ மரங்களெல்லாம் எனப் பின்னாளில் தோன்றியிருக்கிறது.

தோட்டத்துச் சூழலை இன்னும் ரம்மியமாக்கியிருந்தன அதில் வசித்த பறவைகளும் பிற ஜீவராசிகளும். வாழை இலைகளில் வழுக்கி விளையாடும் அணில்கள்.   கல் குருவிகளுக்கும் சிட்டுக் குருவிகளுக்கும் பலாமரம் அடைக்கலம் கொடுத்திருக்க, மாமரமும் வேப்பமரமும் காக்கைகளின் வீடாகியிருந்தன. கொய்யா மரத்தைத் தேடித் தினம் வரும் கிளிக் கூட்டம். இப்போது அதில் ஒரு குடும்பம், வேப்ப மரத்தில் மரங்கொத்திப் பறவையொன்று உருவாக்கி விட்டுச்சென்று விட்டப் பொந்தில் குடியேறி இருந்ததைக் காட்டித் தந்தாள் அம்மா. அப்பாக் கிளியும் அம்மாக் கிளியும் குஞ்சுகளைக் கொஞ்சி மகிழ்வதை நின்று கவனிப்பதே சுவாரஸ்யமாய் இருந்தது செந்திலுக்கு.

கடந்த மூன்று வருடங்களாகத் தோட்டத்தைத் தனியாகவே பராமரித்து வருகிறாள் அம்மா. அங்கே நேரத்தைச்செலவிடுவது அப்பாவோடு இருக்கிற உணர்வைத் தருவதாகத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறாள். கண்கவரும் மெஜந்தா காஸ்மாஸ் மலர்ச் செடிகள், ஜினியாச் செடிகள் எனப் புதிது புதிதாக வாங்கி அவைப் பூக்கும்செய்திகளையும், அவற்றைத் தேடிவரும் வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகளைப் பற்றியும்  ஃபோன் பேசும் போது தவறாமல் பகிர்ந்து கொள்வாள்.

ஒவ்வொரு கிறுஸ்துமஸ் லீவிலும் புதுவை வருவதை வழக்கமாக வைத்திருந்தான் செந்தில். இன்னும் திருமணம்செய்து கொள்ளவில்லை. அம்மாவுக்காக இந்தியாவுக்கே வந்து விடுவதா அல்லது ஃபிரான்ஸிலேயே வேலையைத்தொடருவதா என்பதில் குழப்பம் இருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்த பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருந்தான். அந்த விடுமுறை இத்தனை பெரிய சோகத்தைத் தருமெனக் கிளம்பும் போது நினைத்தே இருக்கவில்லை.

மின்சாரம் நின்று போயிருந்தது. இன்வெர்ட்டர் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்குமெனத் தெரியவில்லை. ஊழிக்காற்றில் யாரும் ஓய்ந்து படுக்கையில் சாய்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அம்மாவின் அருகே அமர்ந்து ஆதரவாக அவள் கையைப் பற்றிக் கொண்டான். ஒவ்வொரு இடிக்கும் அவள் பதறியபடியிருந்த வேளையில்தான் நிகழ்ந்தது அந்தப் பிரளயம். மூடியிருந்த கண்ணாடிச் சன்னல்களின் திரைகளையும் மீறி மின்னல் வெளிச்சம் வீட்டுக்குள் பாய, தொடர்ந்தது இடைவெளியற்றப் பேரிடிகள். கூடவே மரங்கள் முறிந்து சாயும் ஒலி. ‘ஓ’வென அலறிவிட்டாள் அம்மா. ஒன்று மாற்றி ஒன்றாக மேலும் மேலும் பலமாக எந்தப் பக்கத்தில் என்ன நிகழ்கிறது என்றேஊகிக்க முடியாதபடி வீட்டின் நாலாபக்கங்களில் இருந்தும் சத்தங்கள்.  சுவர் மேல் விழுந்தால்? இவன் பதறி உத்தேசமாய், பாதுகாப்பாய் இருக்குமெனக் கருதியச் சாப்பாட்டு அறைக்கு அம்மாவை அணைத்து இழுத்துச் சென்றுவிட்டான். மூன்று மணி நேரத் தாண்டவத்துக்குப் பின் காற்றின் இரைச்சல் சற்று குறைந்தது. ஆனாலும் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

மெல்ல எழுந்தான். சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள் அம்மா. இன்வெர்ட்டர் நள்ளிரவோடு வேலை செய்வதை நிறுத்தி விட்டிருக்க மெழுகுவர்த்தியின் தீபத்தில் அம்மாவின் நிழல் இனம் புரியாத சங்கடத்தைத் தந்தது.  திரைச்சீலைகளை விலக்கிப் பார்த்தபோது சன்னலுக்கு அப்பால் அப்பிக் கிடந்த இருளில், விழுந்த கிடந்த மரங்களின் காட்சி சீரணிக்க முடியாததாக இருந்தது. “அம்மா, தைரியப்படுத்திக்கோ”  இவன் ஆரம்பிக்க, “இதுவும் கடந்து போகும்னு சொல்லிச் சொல்லியே உங்கப்பா எனக்குள்ள நிறைய தைரியத்தை விதைச்சுட்டுதான் போயிருக்காரு. ஆனாலும் ஆனாலும்...”  அவள் குரல் உடைந்தது.

நிமிட நேர மெளனத்துக்குப் பின் தொடர்ந்தாள், “உனக்குத் தெரியாதுடா. செந்தி. இந்த ஊரு இப்ப முன்னப் போல இல்ல. மனசாட்சிய நம்ம சனங்க தொலச்சுட்டாங்க. சுனாமி வந்தப்ப மத்த ஊரயெல்லாம் விட இங்க பாதிப்புக் கம்மியாத்தான் இருந்ததுச்சு. காரணம் அன்னையோடு ஆசியும், சமாதியாகிவிட்ட சித்தருங்க அருளும். ஆனா இன்னிக்கு அரணா நின்ன சித்தரெல்லாம் கோபமாயிட்டாங்க. அடிதடிக்கு ஆளுங்க வேணுமின்னா நம்ம ஊருலருந்து கிடைப்பாங்கன்னு வெளியப் பேச்சாச் கெடக்கு. அதான்.. அதான்.. என்னென்னவோ நடக்கு.” ஆதங்கத்தில் வந்த அவள் பேச்சைப் பேதமை என ஒரேடியாய் ஒதுக்கிவிட முடியவில்லை. அவள் கோணம் சரியோ இல்லையோ இயற்கையை நிறைய விரோதித்துக் கொண்டாயிற்று.

தூங்காமலே கண் மூடிக் கிடந்தவனை விடியலின் வெளிச்சம் தானாக விழிக்க வைத்தது. அம்மாவைக் காணவில்லை. திறந்து கிடந்த பின்கதவின் வழியாக ஓடினான். சிலையாய் அங்கு அதிர்ந்து நின்றிருந்தாள் அம்மா. எதுவுமே மிச்சம் இருக்கவில்லை.  “செந்தீ”  இவன் கையைப் பிடித்து அழுத்தியபடி பலா, வாழை, சாத்துக்குடி எனஒவ்வொரு மரத்தையாய்க் காட்டினாள். அவள் தோள்களைப் பற்றி உள்ளே அழைத்து வந்தான். வெளியேற வழியின்றி  முன்பக்கத்தில் வீட்டுக்கும் கேட்டுக்கும் நடுவே படுத்துக் கிடந்தது வேப்பமரம். வாசல்படிகளையொட்டி நசுங்கிக் கிடந்தது ஒரு கிளிக்குஞ்சு. ஆங்காங்கே உடைந்து கிடந்தன பல அளவுகளில் முட்டைகள். எத்தனை பறவைகள் தப்பித்தனவோ? எத்தனை கிளைகளுக்கு மாட்டிக் கிடக்கின்றனவோ.

சேதம் பலம் எனப் புரிந்தது. செய்தி கேட்கக் கூட வழியிருக்கவில்லை. தாண்டித் தாண்டி வாசலுக்கு வந்தான்.  ஊரே திகைப்பில் தவித்துப் போயிருந்தது. சாலையோர மரங்களெல்லாமும் உயிர் விட்டிருக்க, வெறுமை முகத்தில் அறைந்தது.  வீதியில் ஆங்காங்கே சின்டெக் டாங்க் மூடிகள் இறைந்து கிடந்தன. மின்சாரம் எப்போது திரும்பி வருமெனத் தெரியாத நிலையில் பலரின் மொபைல் ஃபோன்கள் உயிரிழந்திருந்தன. ‘அவசர உலகில் இதுவே அதிகம்’என அரைகுறையாய்ப் புன்னகையை வீசிச் செல்கிறவரெல்லாம் மற்றவரோடு ‘ஒண்ணுக்குள்ள ஒண்ணா’ ஆகிப்போன அன்றைய தருணங்கள் மனிதம் முழுவதுமாய் மறைந்து போகவில்லை என மனதுக்கு ஆறுதலைத் தருவதாக இருந்தது. ஒருவருக்கொருவர் கேட்காமலே உதவிக் கொண்டிருந்தனர். சிடுசிடு ரிடையர்ட் புரொபசர் தன்கார் பாட்டரியில் மொபைல்களை சார்ஜ் செய்து கொள்ளச் சொல்ல, செந்தில்தான் வேண்டியவர்களுக்கு அதைசெய்து தந்தான். இவன் எல்லோருக்குமாய்ப் பால் வாங்கக் கிளம்பினால், தான் ரொட்டிகள் வாங்கி வருவதாகக் கிளம்பினார் அதிகமாய்த் தெருமனிதரிடம் பேசியே இராத எதிர்வீட்டுத் தொழிலதிபர்.

அம்மாவும் வெளியில் வந்து விட்டிருந்தாள். ஒருவருக்கொருவர் பேசி ஆறுதலாகிக் கொண்டிருந்தார்கள். கடலூரிலும் புதுவையிலும் பலா மரங்கள், வயல்கள் நிறைய அழிந்து போனதாக அலைபேசிய சென்னை நண்பர்கள் தெரிவித்தார்கள். யார் வீட்டிலாவது மொத்தமாய் சமைத்து விடலாமா என ஆலோசித்துக் கொண்டிருந்த போது, எந்த நேரமும் நிலநடுக்கம் வரலாமென யாருக்கோக் கிடைத்த செய்தியால் அத்தனை பேரும் அலறியடித்துக் கொண்டுத் தெருவுக்கு வரலானார்கள். வீட்டுக்குள் போக பயந்து நடு வீதியில் உட்கார்ந்து விட்டவர்களில் அழும் கைக்குழந்தைகளைச் சமாதானம் செய்யும் இளம்பெண்கள், நெஞ்சைப் பிடித்த வயதானவர்கள் எல்லோருமே இருந்தார்கள். செந்தில் ஒவ்வொருவருக்குத் தேவையானதையும் அவரவர் வீட்டுக்குள் சென்று எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

“என்ன பர்வதம். பாத்துட்டே இருக்க. பூகம்பம் எப்ப வெடிக்கும்னு தெரியாது. மரங்க சாஞ்சாப்ல வீடுங்களும் விழலாம்ங்கிறாங்க. இவன் பாட்டுக்குப் பாட்டையாக்கு மாத்திரை, பாப்பாவுக்குப் பாலுன்னு உள்ள போகவும் வரவுமா இருக்கான். சொல்லப்படாதா?” எனக் கமலம் அத்தை சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை அம்மா. ”இவனுக்கு வரப் போறவ நெசம்மாவே பெரிய அதிர்ஷ்டசாலிதான்” யாரோ சொல்ல “பொழச்சுக் கிடந்தா எல்லோரும் சேந்தே பொண்ணப் பாப்போம். இப்ப சும்ம இருக்கியா” யாரோ அதட்டல் போட்டார்கள்.

நேரம் கடந்து கொண்டேயிருந்தது. பூகம்பப் பயத்தை விட அந்த நேரப் பசி பெரிதாகப் பட ஆரம்பித்தது. வதந்தி எனஒருசிலர் சொன்னதை முதலில் நம்ப மறுத்தக் கூட்டம் “வதந்தியாதான் இருக்குமோ” என பேச ஆரம்பித்திருந்தது. நிலைமையின் தீவிரம் புரியாமல் ஓடியாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓய்ந்து அம்மாக்கள் மடியில் சாய்ந்து விட்டிருந்தன. சகிக்க முடியாமல் செந்தில் சென்னை நண்பர்களை அலைபேசியில் விரட்டிக் கொண்டேயிருந்தான். செய்தி வதந்திதான் என அவர்கள் உறுதிப்படுத்திய தகவலை இவன் தெரிவிக்கவும் “மகராசனா இருக்கணும்ப்பா” வாழ்த்தியபடியே கலைந்து அவரவர் வீட்டுக்குள் சென்றார்கள். மற்ற பகுதிகளுக்குத் தெரிவிக்க இளைஞர்கள் குழுவாகக் கிளம்பிப் போனார்கள்.

அடித்த காற்றில் வீடிழந்த ஏழைகள், பயிர்களை இழந்த விவசாயிகள், கூடுகளையும் குஞ்சுகளையும் இழந்த பறவைகளின் கஷ்டங்களுக்கு முன் நமது இழப்பையும் வருத்தத்தையும் மற்றவரிடம் பெரிது படுத்தக்கூடாதென்றாள் அம்மா. சொன்னாளே தவிர சித்தி அழைத்து விசாரிக்கையில், குரல் தழுதழுத்துதான் போனது.

ரண்டாம் நாள் காலை ஊர் எம்.எல்.ஏ வீடுவீடாக வந்து கொண்டிருந்தார் விசாரிக்க. அம்மாவிடம் “வணக்கம்மா.சீக்கிரமா, அதுவும் இன்னைக்கே உங்க தோட்டத்தை சரி செய்யச் சொல்லிருக்கேன். புள்ளைய ரொம்ப நல்லா வளத்திருக்கீங்கம்மா. நாங்க செய்ய வேண்டிய ஒதவிய ஓடிஓடிச் செஞ்சுருக்காரு ஊருக்கு.” சலனமின்றிக் கேட்டுக்கொண்டாள் அம்மா. நாலைந்து பேர் மரங்களை வெட்டி ஓரமாக அடுக்கும் வேலையில் இறங்கினார்கள்.வாசலுக்கான பாதையை சீர் செய்தார்கள்.

“ஒங்க வீட்ல மட்டும்தான் சார், இத்தனை மரம் சாஞ்சதுக்கு சுவத்துல சின்னக் கீறல் கூட விழலை. அதெப்படி சார் சொல்லி வச்ச மாதிரி எல்லா மரமும் கவனமா வீட்டத் தொடாம விழுந்திருக்கு?” மிகுந்த ஆச்சரியம் அடைந்தான் ஒருவன். இவன் அம்மாவைப் பார்த்தான். ‘நல்லா வளத்தது ஒங்கள மட்டுமா?’ எனக் கேட்பதாக இருந்தது அவள் பார்வை.

இனி என்னசெய்வாள்? பேணி வளர்த்த அந்தப் பிள்ளைகள் வீட்டு மேலே விழுந்து விடக் கூடாதெனத் தங்களது கடைசி நிமிடங்களிலும் போராடியிருக்கின்றன. பெற்று வளர்த்தவளுக்கு பிள்ளையாய் தான் என்ன செய்ய? ‘இப்போதாவது முடிவெடு’ மரங்கள் சொல்லாமல் சொல்லுவதாய்த் தோன்றியது. ‘ஒப்புக்கொண்ட வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு ஊரோடு வந்திட வேண்டியதுதான்’ அந்தக் கணத்தில் பிறந்த உறுதியை அம்மாவிடம் சொல்ல வாயெடுக்கும் முன்னரே “செந்தி, இந்தத் தடவை எனக்கும் சேத்தே டிக்கெட்டப் போடு. முடிவு செஞ்சுட்டேன். வந்திரு வந்திருன்னு உள்ளங்கையில் வச்சுத் தாங்கத் தயாரா இருக்குற புள்ளங்கக்கிட்டப் போகாமா இந்த வயசுகாலத்துல எங்களுக்காகத்தானே தனியாக் கெடந்து அல்லாடிட்டிருந்தேன்னு இதுங்க சொல்லாமச் சொல்லிட்டுப்பா” என்றாள். திகைத்தான். “இல்லம்மா. நானே இங்க..” என்றவனை மேலே பேசவிடவில்லை, எடுக்கும் தீர்மானங்களிலிருந்து என்றைக்கும் பின்வாங்கும் வழக்கமற்ற அம்மா.

அப்போது ‘கிய்யூ கிய்யூ’ என ஈனமாகக் குரலெழுப்பியபடிப் ‘பொத்’தென்று அருகில் வந்து விழுந்தது கல்குருவிக்குஞ்சொன்று, ஒருவன் அள்ளிச் சென்று கொண்டிருந்த கொப்புகளிலிருந்து. பதறிப்போய் அதைத் தூக்கினாள் அம்மா.முந்தானையைச் சுருட்டிக் கையில் மெத்தை போலாக்கி அதில் இருத்தினாள். ஒரு கால் உடைந்து போயிருந்தது. “பாவம். இனி எப்படிம்மா இது வாழும்?" கவலையாய்ப் பார்த்தவனிடம் “உயிர் மட்டும் ஒட்டிக் கிடந்தா போதுமடா இதுங்களுக்கு. எந்த சோதனையையும் ஒடச்சுட்டு வந்துடும். ஒனக்கு ஃபோனில் கூடச் சொன்னனே. வெயில்காலத்தப்போ நம்ம சமையக்கட்டு சன்னலுக்குத் தெனமும் வந்த சங்கீத வித்வானப் பத்தி. ஒத்தக்கால வச்சுக்கிட்டு அந்த மைனா  செஞ்ச ஆவர்த்தனத்தில எவ்ளோ உற்சாகம். மறக்கவே முடியாது.” என்றவள் “சரி. நான் இதோட காலுக்கு மருந்து வச்சுக் கட்டிட்டுக் கொஞ்சம் தண்ணியும் தானியமும் கொடுக்கறேன். அதுக்குள்ள தூங்க வைக்க ஒரு அட்டப் பெட்டியத் தயார் பண்ணு.” என்று கட்டளையிட்டாள்.

“ஆமாம் தாயீ. வீட்டுல வச்சு கவனிச்சீங்கன்னா ரெண்டுவாரத்துல பறக்க ஆரம்பிச்சிடும்” என்றார், வயதில் பெரியவராய் இருந்த முனிசிபல்காரர்.

வர் சொன்னபடியே பறந்து விட்டது குருவி. அம்மாவும் தான் சொன்னபடியே கிளம்பி விட்டாள் அவனோடு. எல்லாமே அவசரகதியில் நடந்தன. விழுந்த மரங்களை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விலைக்குக் கேட்டு நின்றவர்களை விரட்டி அடித்து விட்டு, படிக்கற பிள்ளைகளுக்கு மேசையோ நாற்காலியோ செய்து கொள்ளட்டுமெனப் பக்கத்துத்தெரு பள்ளிக் கூடத்தில் கொண்டு இறக்கி விட்டார்கள். வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பை இவனது பால்ய நண்பன் சுந்தர் ஏற்றுக் கொள்ள, மூன்றே வாரத்தில் ஃபிரான்ஸ் வந்து விட்டார்கள்.

அண்ணன்கள் அக்கா வீடுகளிலும், இவனுடனுமாக மாறி மாறி இருந்தாலும், பேரக் குழந்தைகளோடு விளையாடிப் பொழுதைப் போக்கினாலும் ஏதோ ஒரு அயர்வு அவள் முகத்தில் நிரந்தரமாகக் குடியேறி விட்டிருந்தது.  ‘நிலம்’ புயல் வந்த நாளில் அது கரையைக் கடக்கும் வரை துளித் தண்ணியைத் தொண்டையில் விடாமல் நாள் முழுக்க ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்தாள். உடலால் தங்களோடு இருந்தாலும் அவள் உள்ளம் புதுவையில்தான் வசித்துக் கொண்டிருப்பதாக இவனுக்கு அடிக்கடித் தோன்றும்.

டிசம்பர் இறுதி நெருங்க நெருங்க அவளது மனச் சோர்வு அதிகமானது போலிருந்தது. ஒருநாள் தலைவலியெனப்படுத்து இருந்தவளிடம்“கெட்வெல் சூன் பாட்டி” என தோட்டத்து மலர்களால் தானே உருவாக்கியப் பூங்கொத்தைநீட்டினாள் அண்ணன் மகள் நேஹா. அதிலிருந்த வெள்ளை, மெஜந்தா வண்ண மலர்களைச் சிலநாழிகை பார்த்துக்கொண்டேயிருந்தவள் மார்போடு அவற்றை அணைத்துக் கொண்டு “புயலடிச்ச அதே நாளில நம்ம வீட்டுலஇருக்கணும் போலிருக்குடா செந்தீ. இத்தனை லேட்டா சொல்றனே. டிக்கெட்டு கிடைக்குமா?” என்று கேட்டாள் பரிதாபமாக.

அவளோடு ஆண்டுக்கணக்கில் வாழ்ந்தவற்றுக்கான முதலாம் ஆண்டு அஞ்சலியாக இதை நினைப்பதாகவும், போகிற இடத்தில் வீட்டை வாடகைக்கு விட்டு வந்து விடாலாமென்றும் சொன்னாள், இனி வரும் வருடங்களில் தொந்திரவு செய்ய மாட்டேன் என்கிற அர்த்தத்தில். இரண்டு மூன்று மாதமாகவே சுந்தர் ஆன்லைனில் இவன் தலையைக் கண்டாலே “வீட்டுக்கு ஒரு வழி செய்யப்பா. யாருக்காவது வாடகைக்கு விடற வழியப் பாருங்க.போட்டே வச்சா கரையான் புடிச்சுடும்.” என நச்சரித்துக் கொண்டுதான் இருந்தான். அதை அம்மாவிடம் சொன்னபோதெல்லாம் அத்தனை அக்கறை காட்டவில்லை. ‘என்ன அவசரமிப்ப? செய்யலாம் யோசிச்சு! நம்ம வீட்டுக்கு சந்தோசத்தக் கொடுக்கறவங்களாப் பாக்கணும்.’ என சொல்லிக் கொண்டிருந்தாள்.

இப்போது வீட்டைப் பற்றிய கவலையைவிட அஞ்சலி செலுத்த நினைக்கும் அவள் விருப்பமே முக்கியமாய்ப்பட்டது. அங்கே இங்கே சொல்லி டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்து, இந்திய மண்ணில் இறங்கியாயிற்று. இதோ புதுவைக்குள்ளும் நுழைந்தாயிற்று.

டாக்ஸி திடீரெனக் குலுங்கி நிற்க, முன்னால் சைக்கிளோடு விழுந்து கிடந்தான் அந்தப் பள்ளிச் சிறுவன். டிரைவரும் இவனும் இறங்கி ஓடினார்கள். நல்லவேளையாக  அடியேதும் படவில்லை. “ஸ்கூல் ஏரியான்னு மெதுவாத்தான் வந்துட்டிருந்தேன். இப்படித் திடீருனு பாஞ்சுட்டியே தம்பி” டிரைவர் பையனை எழுப்பிவிட, இவன் விழுந்து கிடந்த சைக்கிளைத் தூக்கி நிறுத்தினான். யாரோ தோளைத் தொட்டார்கள். ஃபாதர் வில்லியம்.

“செந்தில், எப்ப வந்தீங்க? உங்க மெயில் ஐடியோ ஃபோன் நம்பரோ கிடைக்காதான்னு ஏங்கிட்டிருந்தேன்.” என்றவர் காருக்குள் இருந்த அம்மாவுக்கு வணக்கம் சொன்னார்.  “இறங்கி ஒரு பத்து நிமிஷம் வந்துட்டுப் போங்களேம்மா” கார்கதவைத் தானே திறந்து விட்டார்.

பள்ளி அலுவலக வராந்தாவில் பளபளத்தப் புதுச் சங்கலிகளில் பிணைக்கப்பட்ட வழுவழுப்பான நீண்ட ஊஞ்சலைக் காட்டினார். அதில் நாலைந்து சிறுமிகள் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அம்மா விரைந்து சென்று அதைத் தொட்டுத் தடவினாள்.

“ஒங்க வீட்டுத் தேக்குதாம்மா.”

‘தெரியுது’ என்பதாகத் தலையாட்டிய அம்மாவின் கண்கள் தழும்பியிருந்தன.

“சாயங்காலமானா ஹாஸ்டல் பசங்க இதுலேயேதான் மாற்றி மாற்றி ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும் படிச்சுட்டும் இருப்பாங்க” என்று புன்னகைத்தார்.

“பலா மரத்துல பெஞ்சுகள் செஞ்சுகிட்டோம். லைப்ரரிக்கு புக் ஷெல்ஃப் கூட செய்ய முடிஞ்சுது. அதயும் பார்த்துட்டு அம்மாவுக்காக நான் செஞ்சு வச்ச நினைவுப் பரிசையும் வாங்கிக்கிறீங்களா செந்தில்?  மாடி வரை அம்மா ஏறவேண்டாம். நீங்க மட்டும் வாங்க” அழைத்துப் போனார் ஃபாதர்.

ரொம்ப அழகாய் இருந்தது பரிசு. ஜெபமாலை வைத்துக் கொள்ள சின்னப் பெட்டி. தேக்கில் நுண்ணிய வேலைப்பாட்டுடன் இழைத்திருந்தார்கள்.

“எங்களாலான சின்ன அன்பளிப்பு” என்றவரிடம் “தேங்க்ஸ் ஃபாதர். அம்மாவுக்கு நிச்சயம் பிடிக்கும்.” என்றான். அங்கிருந்து ஊஞ்சல் தெரிந்தது. இப்போது அம்மாவை உட்கார வைத்துப் பிள்ளைகள் ஆட்டிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. எதன் மீதும் அதிக பற்று வைக்கக் கூடாதெனத் தங்களுக்குச் சொல்லித் தந்தவளும் அவளே. இன்று தன் உணர்வுகளுடன் மெளனமாகப் போராடி ஜெயித்துக்கொண்டு வருபவளும் அவளே.

இவன் எண்ண ஓட்டம் புரியாமல், “வீசி வீசி ஆட முடியாத எடத்துல போட்டிருக்கமேன்னு பாக்கிறீங்களா? சீக்கிரம் வேற எடத்துக்கு மாறிடும்.  புயலுக்கு அப்புறம், ‘நஷ்டத்திலருந்து மீண்டு வர வருசக் கணக்காகும் போலிருக்கு. படிக்கிற புள்ளங்களுக்கு ஒருவேளச் சாப்பாடாவது சரியாப் போட முடியுமான்னு சந்தேகமா இருக்கு’ன்னு கலங்கிப் போய் நின்ன விவசாயிங்க குழந்தைங்க பலபேரை ஹாஸ்டலில் சேத்துகிட்டோம். கடந்த ஒருவருசமாப் படிக்கவும் படுக்கவும் நெருக்கடியா இருக்கறதாலப் பிரைமரி ஹாஸ்டலை மட்டும் வெளிய மாத்திடலாம்னு யோசனை. அப்ப ஊஞ்சலும் அங்க போயிரும். ஒரு எடம் இப்பதான் அமைஞ்சு வந்திருக்கு. ஆனா ஊருக்கு வெளிய. சின்னப் பசங்களை இரண்டு நேரம் வேன்ல அலைக்கணும். பொறுப்பா செய்யணும். வாடகை கம்மின்னு வேற வழியில்லாம ஒத்துக்க வேண்டியதாச்சு” என்றார் ஃபாதர்.

‘நம்ம வீட்டுக்கு சந்தோசத்தக் கொடுக்கறவங்களாப் பாக்கணும்’ பளிச்சென அம்மா சொன்னது நினைவுக்கு வர, பூத்தது மனம். வண்ணத்துப் பூச்சிகளாய்த் தங்கள் வீட்டில் குழந்தைகள் சிறகடிக்கிற காட்சியின் ஒரு நொடிக் கற்பனையே பரம சுகமாய் இருந்தது. ‘நான் சொல்றத விட அம்மாவே ஃபாதரிடம் சொல்லட்டும். அதுதான் சரி.’

யாரோ பார்க்க வந்திருப்பதாகப் பியூன் வந்து அழைக்க, “சாரி செந்தில். நீங்களும் பயணக் களைப்புல இருப்பீங்க. இன்னொரு நாள் சந்திப்பமா? உங்க நம்பரையும் எஸ் எம் எஸ் செய்யுங்க” அவர் நீட்டிய கார்டை அமைதியாய் வாங்கிக் கொண்டான்.

ஆச்சரியமாய் இருந்தது. அம்மாவைக் கடைசி நிமிடத்தில் இந்தியா புறப்பட வைத்தது நேஹாவின் பூங்கொத்து என்றால், வளர்த்த மரம் பரிசாக மாறிக் கைக்கு வந்திருக்கிறது பள்ளி வாசலில் நிகழ்ந்த விபத்தினால். ஊஞ்சல் மீட்டுத் தந்திருக்கிறது அம்மா முகத்தில் மலர்ச்சியை. கூடவே ஃபாதரின் தேவையும் அந்தப் பத்து நிமிடச் சந்திப்பில் தெரிய வந்திருக்கிறதென்றால்.. ஏதோ ஒரு சக்தி எங்கிருந்தோ என்னென்ன ரூபத்திலோ, அடுத்தடுத்து நிகழுமாறு அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை?

‘எதேச்சையா நடக்கிறதையெல்லாம் ஒண்ணோட ஒண்ணு சேத்து முடிச்சுப் போட ஆரம்பிச்சா அதுக்கு முடிவேயில்லடா முட்டாள்...’ பகுத்தறிவு நகையாட, புன்னகைத்தவாறேப் படியிறங்கப் போனவனைத் தடுத்தது “கிய்யூ.. கிய்யூ..” என்ற குரல்.  தொடர் சத்தமாக இல்லாமல், யாரோ நெருக்கமானவரை அழைக்கிற மாதிரி.  திரும்பினான். மாடி வராந்தாவைத் தொட்டுக் கொண்டிருந்த மரத்தின் கிளையில் இவனை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றிருந்தது, தன் ஒற்றைக்காலில் கம்பீரமாய், கொழுகொழுவென்றிருந்த குண்டுக் கல்குருவி.

***

16 ஜனவரி 2013 அதீதம் இதழில், பொங்கல் சிறப்புச் சிறுகதையாக.

படம் நன்றி: இணையம்


49 கருத்துகள்:

 1. மன ஓட்டம் மிக அழகாய் அழுத்தமாய் பதிவு.

  பதிலளிநீக்கு
 2. கதை ஆரம்பத்திலிருந்து நிறைவு பகுதி வரை அனைத்து வரிகளும் அருமை.
  நிறைவில் மனது நிறைந்து விட்டது.அந்தவீட்டில் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து அங்கும் இங்கும் ஓடும் காட்சி மன்க்கண்ணில் தெரிந்தது.

  மரங்கள் வீட்டின் மேல் விழவில்லை என்பதற்கு காரணம் அருமை.
  அங்கு அந்த தோட்டத்தையும் செந்திலையும் அன்பாய் வளர்த்த தந்தையின் முகம் மனக்கண்ணில் தெரிந்தார்.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 3. கதை ரொம்ப நல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 4. மனதைத்தொட்ட கதை. பாசத்துடன் வளர்க்கப்பட்டால் மரஞ்செடி கொடிகளும் பிள்ளைகள்தானே. அதுதான் தான் வளர்ந்த வீட்டைச் சேதப்படுத்தாமல் பாசத்தைக் காண்பித்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 5. அழகான கதை. எப்பவுமே இயற்கை சார்ந்த கதைகளையே எழுதிவருவதிலிருந்து உங்கள் ஆர்வம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. கதை ரொம்ப நல்லா இருக்கு....மிக அருமையாக எழுதி இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 7. அக்கா...

  அழுத்தமான அழகான கதை...

  மனவோட்டத்தோடு அழகாக பின்னப்பட்டிருக்கும் கதை அருமை....

  பதிலளிநீக்கு
 8. முடிவு மனதுக்கு நிறைவாக இருந்தது. கதை முழுவதுமே கதை மாந்தர்களோடும் உணர்வுகளோடும் ஒனறச் செய்து விட்டது உங்கள எழுத்து நடை. அமமா கேரக்டர் வார்ப்பு அற்புதம். ஒரு புயலோ பூகம்பமோ கடந்து சென்று விட்டால் கண் முன் தெரியும் பாதிப்புகளைத தவிர உணர்வுகளால் ஏற்படும் பாதிப்பும் அதிகமே என்பதை சிந்திக்கச் செய்து விட்டீர்கள். ஹாட்ஸ் ஆஃப் மேடம்.

  பதிலளிநீக்கு
 9. அற்புதங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. அன்புள்ளங்கள் பொங்கிப் பாசத்தைக் கொட்டும்போது நடக்க முடியாததோ கடக்கமுடியாத கஷ்டமோ இல்லை.ராமலக்ஷ்மி எவ்வளவு அழகான கதை. அந்தக் குண்டுக் குருவியைப் போய்ப்பார்க்க மனசு துடிக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. அருமை. உணர்வுகளால் நெய்யப் பட கதை. கல்குருவி அழைப்பது நம்ப முடியா விட்டாலும் நெகிழ்வாய் இருக்கிறது. அந்தக் காட்சி கண்ணில் நிற்கிறது. மலர்களையும், மரங்களையும், பறவைகளையும் ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுக்கும் நீங்கள் எழுதாமல் யார் இந்தக் கதையை எழுதப் போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
 11. Superb .....very touching...still some people r there like this ...well done ramalakshmi

  பதிலளிநீக்கு
 12. The same thing happened at our home in pondy. We have a coconut farm and has lost around 200 trees last year and when we asked the labourers to dig out the root part of trees they promised to do it but flew away with advance amount. This is pondy now.

  பதிலளிநீக்கு
 13. அற்புதம் சகோ.... படிக்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை கதையில் அப்படியே ஒன்றிப்போக முடிந்தது.....

  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 14. அருமையாக இருக்கிறது ஒரு இயற்கையின் சீற்றத்தை வைத்து புனையப் பட்ட கதை.

  பதிலளிநீக்கு
 15. அருமை..."தானே" புயலை பின்னிய இக்கதை மிக அழகாக வந்துள்ளது.வாழ்த்துக்கள் இராமலஷ்மி

  பதிலளிநீக்கு
 16. anbu sagothari

  mikka nandri

  vazkkaiyai migavum yatharthathodu thaan inaindu purinhu kolla iyalum

  miga nalla karuthukkal

  பதிலளிநீக்கு
 17. எழுத்து நடை அருமையாக இருக்கின்றது.

  மனதைத் தொட்டகதை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. @ரிஷபன்,

  தங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 19. @கோமதி அரசு,

  ரசித்து வாசித்ததற்கும் விரிவான கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 20. @வல்லிசிம்ஹன்,

  சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 21. @ஸ்ரீராம்.,

  மகிழ்ச்சி. இரசிக்கிற இயற்கையைப் படமாக்கும் போது நான் என்னையே மறந்து விடுகிறேன்.

  எதேச்சையாய் எடுத்துக் கொள்வதும் அற்புதமாய் பார்ப்பதும் தனிமனிதர் மனநிலையைப் பொறுத்ததே. புனைவென்றாலும் ‘அழைப்பது’ மிகையாய்த் தோன்ற வாய்ப்பிருக்கு. ‘அழைக்கிற மாதிரி’ சவுகரியமான பதமாய்க் கை கொடுத்தது. நன்றி ஸ்ரீராம்:)!

  பதிலளிநீக்கு
 22. @UNITA,

  நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 23. @Unknown,

  கருத்துக்கு நன்றி. தங்கள் பெயரையும் பகிர்ந்து கொண்டிருக்கலாமே.

  பதிலளிநீக்கு
 24. @நடராஜன் கல்பட்டு,

  தங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. @Nithi Clicks,

  புயல் அன்று நீங்கள் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட வேளையில், மனதில் விழுந்த விதையே இந்தக் கதை. உங்களுக்குப் பிடித்தது மனதுக்கு நிறைவாக உள்ளது. நன்றி நித்தி.

  பதிலளிநீக்கு
 26. @raki,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. பல்வேறு தகவல்களை ஒரே கதையில் மொத்தமாக சொல்லிவிடும் வழக்கம் இக்கதையிலும் தொடர்கிறது.

  ‘கதையல்ல நிஜம்’ என்பது தங்கள் கதைக்குத்தான் பொருந்தும் போல் உள்ளது. தானே புயலை கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். இயற்கை பேரிடரின் போது மக்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதை அழகாக சித்தரித்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 28. Dearest Ramalakshmi,
  cannot express my feelings. so nice to read it again. heart wrenching story. so realistic.thank you.

  பதிலளிநீக்கு
 29. கதையின் மாந்தர்கள், நிஜவாழ்வில் இடைப்பட்ட அநேக மனிதர்களின் முகங்களை நினைவூட்டுகிறது. மனசாட்சியை இழக்கும் உலகத்திற்கு இவர்கள்தான் உப்பும், ஒளியும்.
  நல்லா வளர்த்தது உங்களை மட்டுமா?
  எதன் மீதும் அதிகப் பற்று வைக்கக்கூடாதென...,
  கதை முழுவதும் தூய்மையாக வாழ முற்படும் மனதில் இருந்து எழும் வார்த்தைகளால்..,
  மனதை வருடும் எழுத்து. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin