வியாழன், 31 மார்ச், 2011

ஆனந்த விகடனில் சுகாவின் ‘மூங்கில் மூச்சு’ - ஒரு பகிர்வு

லகமெங்கும் விரவி ஊரின் நினைவோடு வாழும் திருநெல்வேலிக்காரர்கள் அனைவரும் கடந்த 12 வாரங்களாக ஆனந்த விகடன் கைக்குக் கிடைத்ததுமே முதலில் வாசிப்பது ‘மூங்கில் மூச்சாகவே’ இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்.

சில அத்தியாயங்கள் அப்படியே நம்மை எண்பதுகளின் காலக் கட்டதுக்குக் கொண்டு செல்லுபவையாக இருக்க, அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிந்தவர்களாகவோ அல்லது அறிந்தவர்களுடன் தொன்னூறு சதவிகிதம் ஒப்பிடும்படியாகவோ சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.ஹை லைட்டாக அமைந்து தொடரை மேலும் நெருக்கமாக உணரச் செய்கிறது நெல்லைப் பேச்சுத் தமிழ்.

இழையோடும் நகைச்சுவையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் வாசிக்கையில் அடக்க முடியாமல் சிரிப்பார் கணவர். அவருக்கும் நெல்லைதான். அப்படி என்னதான் என அடுத்து வாசிக்கையில் அடக்க முடியாது எனக்கும் சிரிப்பை!

தொடர் நிறைவுற்றுத் தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறேன்..

தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..

ழுத்தாளர் சுகாவுக்கு ஒரு வலைப்பூவும் இருப்பது சமீபத்தில் நண்பர்களின் buzz மூலமாக அறிய வந்தேன். வேணுவனம் அதன் பெயர். இதுவும் நெல்லைக்காரர்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்குமான தகவல்:)!

திங்கள், 28 மார்ச், 2011

‘அவனும் இவனும்’-ஷைலஜாவின் சிறுகதைத் தொகுப்பு-ஒரு பார்வை : கீற்றினில்..

ழுத்தாளரின் முதல் பத்திரிகைப் பிரவேசம் எந்தப் பத்திரிகையில் எந்த வயதில் என்பது சுவாரஸ்யம். பத்து வயதில், ஆனந்த விகடனில். இன்று இவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வுக்கும் சேர்த்து பிள்ளையார் சுழியை இட்டது விகடன், இவரது நகைச்சுவை துணுக்கைப் பிரசுரித்து. பிறகு பதின்மங்களில் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் தொடர்ந்த எழுத்து, கல்லூரி வயதில் மறுபடி விகடனில் கட்டுரையாகக் கால் பதித்து எம்பிப் புறப்பட்டு, இன்று வரையிலும், இவர் எழுத்துக்கள் வெளிவராத பத்திரிகைகளே இல்லையென சொல்லக்கூடிய வகையில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது 230-க்கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள்,கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 2 தொலைக்காட்சி நாடகங்கள், சில கவிதைகள் என இடைவெளி என்பதே இல்லாமல் இருபத்து ஐந்து ஆண்டுகளாய்.

1996-ல் விகடனின் பவழவிழா ஆண்டில் நடந்த போட்டியில் இவரது படக்கதை நாவலுக்கு ரூ.30,000 பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

லில்லி தேவசிகாமணியின் ‘பெண் எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு’; எழுத்தாளர் உத்தமசோழன் தயாரித்த ‘மழைசார்ந்தவீடு’; மகரம் தயாரித்த ‘வானதி சிறப்பு சிறுகதைகள்’ ஆகிய மூன்று தொகுப்புகளில் பிற எழுத்தாளர்களின் கதைகளுடன் இவரது கதைகள் இடம்பெற்றிருப்பினும், இவரது தனிக் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு 2001-ல் திருமகள் நிலையம் வெளியிட்ட, 14 சிறந்த கதைகளை உள்ளடக்கிய ‘திரும்பத் திரும்ப’ என்பதாகும். பிறகு வெளிவந்த நல்ல கதைகளை இசைக்கவி ரமணன் அவர்கள் ஊக்கம் தந்து எடுத்த முயற்சியில், திரிசக்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டு கௌரவித்திருந்தது சென்ற ஆண்டில். அதுவே நம் கைகளில் தவழ்கிறது “அவனும் இவனும்” ஆக.

பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின் அணிந்துரைகளோடு, கதாசிரியரின் ‘என்னுரை’யும் பதிப்பகத்தாரின் முன்னுரையும் சிறப்பு சேர்க்கின்றன நூலுக்கு. தொகுப்பில் இருக்கும் பதினாறு சிறுகதைகளும் பத்திரிகைகளில் வெளிவந்தவை. கலைமகள், கல்கி, அமுதசுரபி, கணையாழி, தினமலர், தினமணி கதிர், இலக்கிய பீடம் என நீள்கிறது பட்டியல்.

இவரது கதைகள் மானுடத்திற்கு பெருமதிப்பு அளிப்பவையாகவும், குடும்பம் சார்ந்தவையாகவும், முதியோர்களின் மனவலியைப் பிரதிபலிப்பவையாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது. சமீபமாக இணையத்தில் பெண் எழுத்தைப் பற்றி தொடர் சங்கலியாகப் பலரும் எழுதி வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பெண் எழுத்து பேசப்படவேண்டும் பலராலும் அறியப்படவேண்டும் எனும் ஆசையிலும் அக்கறையிலும் ஷைலஜாவின் இத்தொகுப்பினைப் பாராட்டி, சிறப்பானதொரு பெண் எழுத்தை அற்புதமாய் அடையாளப்படுத்தி அங்கீகாரம் தந்திருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கும் நன்றி சொல்லி, தொகுப்புக்குள் செல்கின்றேன்.

வனும் இவனும்’ தலைப்புச் சிறுகதையை கலைமகளில் வெளியான போதே, சம்பவங்களை அழகாகக் கோர்த்திருந்த விதம் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறேன். நாயகன் அமெரிக்காவில். குடும்பமே இவன் ஒருவனை நம்பியிருக்க, தன் வேலை போய்விட்டதை சொல்ல இயலா தவிப்புடன் இருக்கையில் கிடைக்கிறது தந்தையின் மறைவைப் பற்றிய தகவல். மூன்றாம் நாள் ஊர் போய் சேருகிறவன் ஒருவருக்கும் உண்மையை சொல்லாமல் இருப்பதும், அண்ணனின் மகள் இவன் வாங்கிக் வ்ந்திருந்த க்ரேயான் பென்சில்களை சிலாகித்தபடி இருப்பதும், காரியம் செய்ய வந்த இளைஞன் வேறு வழியில்லாமல் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இவனிடம் வெளிநாட்டு வேலை கேட்பதும், ‘இருட்டு அறையில் எல்லா வர்ணங்களும் ஒன்றுதான்’ என அக்கணத்தில் தான் பெற்ற தெளிவையே சொல்லி அண்ணன் மகளின் சந்தேகத்தை தீர்ப்பதுமாக, ஆரம்பித்த புள்ளிக்கே கொண்டு வந்து முடித்து அழகான கோலத்தை இட்டிருக்கிறார் இக்கதையில்.

ஸ்ரீரங்கத்தை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ‘அரங்கபவன்’ கதையோடு அதிகமாக ஒன்றிட இயலும். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை முகத்தில் அடித்த மாதிரி நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிய வைக்கிற இக்கதை இலக்கியபீடம் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றதாகும்.

தவழ்ந்து வளர்ந்த, பிறந்த வீட்டின் மீது கல்லால் மண்ணால் ஆன கட்டிடம் என்பதை மீறி தீராத ஒரு பாசம் வைத்திருப்போர் எத்தனையோ பேர் இந்த உலகினில். ‘மனிதரை நேசியுங்கள். உயிரற்ற உடமைகள் மேல் வைக்காதீர் அநாவசிய ஒட்டுதல்கள்.’ ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமென்றாலும், நம் உணர்வுகளால் உயிர் கொடுத்து விடுகிறோம் அவற்றிற்கு என்பதே உண்மை. ‘காத்திருக்கிறேன்’ கதையில் தன் மேல் கசிந்துருகி அன்பு வைத்திருக்கும் வசந்தாவுக்காக, அவளது கொலுசுச் சத்தத்தை ஒரே ஒரு முறையேனும் கேட்பதற்காக, மண்ணோடு போகும் கடைசி நிமிடம் வரை பரிதவித்துக் காத்திருப்பது.. ஆம் வீடேதான். அது பேசுவதாகவே கதையை அமைத்திருப்பது வித்தியாசம், உணர்வுப் பூர்வம்.

கல்லூரி மாணவியர் உயிரோடு பேருந்தில் கொளுத்தப்பட்ட அநியாயம், ஈவ் டீஸிங் தொல்லையால் சிலர் உயிரை விட்ட அவலம் போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டு கொந்தளித்த தன் உணர்வுகளை, படிப்பறிவில்லாத சின்னசாமியின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ‘தப்புப் பண்ணியவர்கள்’ தினமலர் போட்டிக் கதையில்.

நடுத்தர வர்க்கத்திலிருந்து அமெரிக்கா சென்று, ஒருவர் கொண்டு வரும் டாலர்கள் எப்படி சில குடும்பங்களில் அன்பை பாசத்தை மறக்க வைத்து, பகட்டுக்கும் போலித்தனத்துக்கும் வழிவகுத்து, சம்பாதிப்பவரை ஒரு பணங்காய்ச்சி மரமாகப் பார்க்கவும் வைக்கிறது என்பதைச் சொல்லுகிறது ‘பாரத சமுதாயம் வாழ்கவே’.

நம் கலாச்சாரத்தில் குடும்ப உறவுகளின் பின்னல், பிணைப்பு ஒரு காலத்தில் மற்ற நாடுகளால் வியந்து பார்க்கப்பட்டு வந்தது. இப்போது எங்கெங்கும் முளைத்து நிற்கின்றன முதியோர் இல்லங்கள். வளர்த்து ஆளாக்கியவர்களை எப்படி கைகழுவத் துடிக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என்பதைப் பேசுகிறது ‘மானுடம் வெல்லும்’.

தன்னலமற்ற மனிதநேயம் மரித்துப் போகவில்லை என நம்பிக்கை தருகிறது ‘புதிய உறவு’. கோவிலின் கருவறைக்குள் சென்று இறைவனை பூஜிக்க பிறப்பு முக்கியமன்று, நல்ல மனதும் ஆத்ம சுத்தியுமே போதுமெனக் கூறி உயர்ந்து நிற்கிற ‘மனம் நிறைந்தது’ கதையுடன் நிறைவடைகிறது தொகுப்பு. நிறைந்து போகிறது மனமும்.
***

விலை ரூ:70. பக்கங்கள்: 120. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்
*** ***

25 மார்ச் 2011 கீற்று இதழில்..
, நன்றி கீற்று!

ஞாயிறு, 20 மார்ச், 2011

என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON

1. அபூர்வ நிலா

துதான் பதினெட்டு ஆண்டுகளுக்கு பின் தெரிந்த அபூர்வ நிலா. சூப்பர்மூன் என உலகமே உற்றுப் பார்த்த உச்சி நிலா. பூமிக்கு வெகு அருகாமையில் வந்து வழக்கத்தை விட 10% பெரிய அளவிலும், 30% அதிக பிரகாசத்துடனும் ஒளிர்ந்த நிலா. இதற்கு முந்தைய சூப்பர் நிலாக்கள் 1955,1974, 1992 and 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் வந்து ‘ஹலோ’ சொல்லி கவனம் பெற்றிருந்தன.

நேற்று இந்நிலாவைப் பதிய பரபரப்புடன் தயாரானார்கள் பதிவுலக நண்பர்களும் புகைப்பட ஆர்வலர்களும். ஏற்கனவே நான்கு மாதங்களாக நிலவைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நான் சூப்பர்நிலவைத் தவற விடுவேனா:)? எம் குடியிருப்பின் எட்டாவது தளத்தில் அமைந்த மொட்டை மாடியிலிருந்து காட்சிப் படுத்தியாயிற்று கண் கொள்ளா பிரகாசத்துடன் மிளிர்ந்த வெண்ணிலவை. முன்னிரவில் கிழக்கே உதிக்கும் போதே எடுத்தவர்களுக்கு ‘மெகா நிலா’வாகப் பதிய முடிந்திருக்கிறது. இரவு பதினொரு மணியளவில் நான் பதிந்தது மேலே.

தேய்வதும் பின்னர் வளர்வதுமாய் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தியும், கோடியில் புரளும் கோமானுக்கும், வீதியில் வாழும் இல்லாதவனுக்கும் எந்த பாகுபாடும் காட்டாமல் பாசம் பாராட்டும் அன்னையைப் போல் பாலாய் பொழியும் நிலவின் மேல்தான் எத்தனை பாடல்கள்? மனதோடு ஒன்றி விடுகின்றன நிலவுப் பாட்டுகளும்.

பதிவுலகம் வந்த புதிதில் PiT மூலமாக இணையத்தில் நிபுணர்கள் எடுக்கும் படங்கள் காணக் கிடைத்ததுடன், புகைப்படத் தளங்களும் அறிமுகமாயின. ஒரு முறை நந்துவின் நிலாவை [அவர் பொண்ணைச் சொல்லவில்லை:)] பார்க்க நேர்ந்த போது அதுபோல எடுக்க ஆசை வந்து zoom செய்தால் ஒரு வெள்ளிப் பொட்டு கிடைத்தது:)! பின்னரே அறிந்தேன் அதற்கு SLR அல்லது அதிக optical zoom வேண்டுமென. அதிக optical zoom-க்கு மாற நேர்ந்த போதும் [குறைந்த பட்சம் 8X optical zoom அவசியமாம் P&S-ல் நிலவை முயற்சிக்க-தகவல் நன்றி ஜீவ்ஸ்] வெள்ளிப் பொட்டு வெள்ளித் தட்டாகக் கிடைத்து வந்ததே தவிர நிலவுக்குள்ளே வடை சுடும் பாட்டியும், காதுகளை உசத்தி அமர்திருக்கும் மொசலும் மாட்டவே இல்லை!

2. வெள்ளித் தட்டு


வம்பர் இறுதியில் SLR வாங்கும் போதே 55-200mm lens, tripod-ம் வாங்கி விட்டேன் நிலவைப் பிடிக்கவே. வீட்டின் பால்கனிகள் மேற்கு பார்த்தவை என்பதால் அஸ்தமன நிலவே கண்ணுக்குக் கிடைத்தது, இம்மாதம் தவிர்த்து. உதய நிலா பிடிக்க மொட்டை மாடிக்குதான் செல்ல வேண்டும். அதுவும் கொஞ்சம் உயரம் வந்த பிறகே காணக் கிடைக்கும். கீழ்வானம் தெரிவதில்லை. உதய நிலாவில்தான் விவரங்கள் தெளிவாகக் கிடைக்குமென சொல்லுகிறார்கள் நிபுணர்கள். போகட்டுமெனப் பிடித்த மேற்கு நிலாக்கள் இங்கே வரிசையாக:

3. மார்கழித் திங்கள் அல்லவா..?
மதி கொஞ்சும் நாள் அல்லவா..?


4. தைத்திங்கள் திருநாளில்..


முதலிரண்டு மாதமும் எந்த mode-ல் வைத்து எடுத்தால் நன்றாக வருமெனும் வித்தை பிடிபடவில்லை. ஆனாலும் காமிரா அதுபாட்டுக்குப் பிடித்து, ஃப்ளிக்கரில் தவறாமல் போட்டு தன் கடமையை செவ்வனே ஆற்றி வந்தது:)! மாசியும் வந்தது.

5. மாசி நிலா


இருபத்தைந்து நிமிட இடைவெளியில்..
6. வெள்ளி நிலா தங்கமாய்..
இந்த தங்க நிலா, காலைத் தேநீர் தயாரித்துவிட்டு வந்த பத்தே நிமிட அவகாசத்தில் கீழ்வானைத் தொட்டு பெரிய சைஸில் ‘தகதகதக தகதகதக என ஆடவா?’ எனக் கேட்க காமிராவை கோணம் வைப்பதற்குள் ஒருசில நொடியிலேயே ‘ஓடவா?’ என ஓடி விட்டது!! மஞ்சள் நிலாவுக்கு ஒரே அவசரம்..!


ற்றுக் குட்டி முயற்சிகள்தாம்.

இருப்பினும் இம்மாத(பங்குனி) முழுநிலாவுக்கு என்னைத் தயார் செய்து கொள்ள சென்ற வாரம் வெண்ணிலா வானில் வரும் வேளையில்... விழித்திருந்து, அடுத்தடுத்த நாட்கள் எடுத்தவை கீழே. இவை நள்ளிரவிலேயே மேற்கு வான் உச்சிக்கு வந்தவை.


7. அரை நிலா ஆகாசத்திலே..



சற்றே படம் ஆட்டம் கண்டிருக்க மறுநாளே முயன்றதில்...

8. வளர் நிலா வானிலே..



இப்படியாக எடுத்த பயிற்சி நேற்று கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ஓரளவு திருப்தியாக அமைந்து விட்டது அபூர்வ நிலா[படம் 1]. ஃப்ளிக்கர் தளத்திலும் கிடைத்தது நல்ல வரவேற்பு: "Rare" Super Moon/View from Bangalore.

இதுதான்...

அந்த நிலாவை நான்.. காமிராவில் புடிச்ச கத:)!
*****


நிலவை எடுத்த விதத்தைப் பற்றிய இதே அனுபவப் பகிர்வு விளக்கங்களுடன் PiT தளத்தில்: அபெச்சர் மோட்.. ஓர் அதிசயம் - அவ்வ்வ்... டு வாவ் ரசசியம்

சனி, 19 மார்ச், 2011

திறந்திடு ஸீஸேம்.. கதவுகள்.. படங்கள்- மார்ச் PiT போட்டி

1.‘குயிலப் புடிச்சு.. கூண்டில் அடைச்சு..
கூவச் சொல்லுகிற உலகம்..’
எதிர்காலம் நோக்கி
இன்றைய தலைமுறையை இட்டுச் செல்லும் முறை???

2.கண்ணாடிக் கதவுகளின் வழியே..
காட்சி தரும் கதவுகளும்.. தாமரைக் குளமும்..
ரூம் போட்டு யோசிக்க.. உகந்த இடம்.

3. சாளரக் கதவுகள் திறந்திருக்க
அதன்
நிழல்கள் நீரில் தத்தளிக்க


4.எத்தனை கதவுகள் எண்ணுங்கள்
கதையையும் கொஞ்சம் கேளுங்கள்

குமரகத்தின் வேம்பநாடு ஏரிக்கரையில் 1881-ல் இந்த இரண்டடுக்கு விக்டோரியன் கட்டிடம் ஆல்ஃப்ரட் ஜார்ஜ் பேக்கர் என்பவரால் பெரிய பெரிய தேக்கு மரக்கட்டைகளால் இழைத்து இழைத்துக் கட்டப்பட்டது. இப்போது தாஜ் க்ரூப்பின் சுற்றுலா விடுதியின் உணவகமாக செயல் பட்டு வருகிறது.

5.அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி..

அருகிலேயே அமைந்த பறவைகள் சரணாலயம், அழகான ஏரி இவை அடுத்தடுத்து துரையின் நான்கு தலைமுறைகளை இங்கேயே உல்லாசமாக வாழ வைத்திருந்தது. இதைக் கட்டப் பயன்படுத்தபட்ட நம் மக்களின் கடின உழைப்பு காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாக.., இன்றும்
திறந்திருக்கும் கதவுகளின் உள்ளே உறைந்திருக்கிறது மெளனமாக.

6. நூலகத்தின் சாளரங்கள்
பெங்களூரு மைய நூலகம். உள்ளிருக்கும் புத்தகங்களின் அறிவு மூச்சு கசிகிறதோ திறந்திருக்கும் ஒற்றை சன்னல் வழியே..?

7.மங்களூரில் ஒரு பிரிட்டிஷ் கட்டிடம்சிகப்பில் சுவர் இருந்தால் பச்சையில்தான் கதவுகள் இருக்கணுமோ#டவுட்டு

8. தியானக் கதவுகள்
மைசூருக்கு அருகிலிருக்கும் பைலாக்குப்பேயில் திபத்தியர் கட்டியிருக்கும் பெளத மத தங்கக் கோவிலின் பிரதான தியான மண்டபம். தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற உதவுகிறது தியானம் என வரவேற்கின்றன இதன் கதவுகள்.

9.கம்பளமும் கதவுகளும்


10.கதவிலே கையூன்றி..
கதவிலே கையூன்றி நிற்கலாம் கம்பீரமாய் காவலாளி!
கையூட்டு கேட்டுதான் தன்மானம் இழந்து
தலைகுனியக் கூடாது அரசின் தொழிலாளி!

11.கதவுகளின் இருபுறமும்..
ஆஞ்சநேயரின் திருவுருவம்!!

12. கதவைத் தட்டும் கஜேந்திரர்



நினைவோ ஒரு பறவை.. விரிக்கும் அது சிறகை..

13.அறிவுக்கண்களைத் திறந்த கதவுகள்
அ ஆ அறிவித்த ஆரம்பப் பள்ளி
***
14. ஞானக் கதவுகள்
உருவாக்கிய கல்விக் கூடம்
***
15.தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
[பள்ளி தேவாலயம் அப்படியே மாறாமல்..]
கேட்டிருக்கிறோமே ஒவ்வொரு பரீட்சைக்கும்:)!
கொடுக்கப்பட்ட வரங்களின் நினைவாகவே இப்படம்:)!
சில மாதம் முன்னர் செய்த பள்ளி விஜயம் பற்றிய பதிவு இங்கே: ‘தாயுமானவராய்’!
***

16.கதவைத் தட்டாமல் நினைவைத் தட்டி..
நானும் தங்கைகளும் ஒரே சமயத்தில் கல்லூரியில் இருந்த சமயம். அதன் அருகேயே இருந்தால் சென்று வர எளிதாக இருக்குமென்ற அம்மாவின் முடிவால் சில வருடங்கள் தங்கியிருந்த வீடு. யாரையும் தொந்திரவு செய்யாமல் அதன் வழியே சென்று நினைவுகளை மீட்ட வேளையில்.. பதிந்த படம் :)!
***



17. உச்சி வெயிலில் பச்சப் புள்ளைகள்
நெல்லையப்பர் கோவில், பூட்டிய தாமிர சபை முன்னபாக..

18. திறக்கப் பயந்த கதவுகள்

கோடை வெயில் கண்டும்..
கொட்டிடுமோ தேனீ என்றும்..
***


19. சாமியறைக் கதவுகள்




திறந்திடு ஸீஸேம்!

குரல் கொடுப்போமே நம் உள்ளக் கதவுகளைத் தட்டி..

பாராட்டாகட்டும் வாழ்த்தாகட்டும் நன்றியாகட்டும்
மனம் திறந்து.. மனம் நிறைந்து..
பாராட்டுவோம் வாழ்த்துவோம் நன்றி சொல்வோம்

குகையின் கடும்பாறைக் கதவுகளைப் போல் மனதை இறுக மூடி வைத்திருந்தால் குறுகித்தான் போகும் அது.

அன்பு

தொகுப்பாய் பல படங்களைப் பதிந்து, எதைக் கொடுக்க எதைக் கொடுக்க என நானும் குழப்பமாகி, உங்களையும் கேள்வி கேட்டு சிரமப் படுத்தி.., இதெல்லாம் செய்யாம ஒண்ணே ஒண்ணு, போய் வாம்மா கண்ணே கண்ணுன்னு சென்றமாத போட்டிக்கு அனுப்பி வைத்த இப்படம் தளிர் நடை போட்டு சென்று வீர நடையுடன் வெளிவந்திருக்கிறது இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தைப் பெற்று:)! நன்றி PiT!

அதீதம்
எனது இப்படத்தை (மார்ச் 1-15) அதீதம் இணைய இதழ்,' புகைப்படங்கள்' பிரிவில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. நன்றி அதீதம்!

இரண்டையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

கேட்க மறந்து விட்டேனே!
போட்டிக்கு எதைக் கொடுக்க:)?
அல்லது
எந்தப் படம் உங்கள் ரசனைக் கதவைத் திறந்தது:)?
*** *** ***

புதன், 16 மார்ச், 2011

தொடர்பு எல்லைக்கு அப்பால்..


முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின்
சில்லிப்பை அனுபவித்திருக்கையில்,
சோளத்தைக் காட்டிச்
சிணுங்கியது மழலை

அதன் விரல்பிடித்து நடந்து
மினுங்கும் தணலில்
மஞ்சள்முத்துக்கள்
வேகக் காத்திருந்து
வாங்கித் திரும்பும் வழியில்

சந்தித்தான் எதிர்பாராமல்
ஆருயிர் நண்பனை
ஆண்டுகள் பலகழிந்து.

பரவசமாய் பிணைந்து கொண்ட
கரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு

கிடைத்தசில நிமிடத்துள்
நீந்தித் திளைத்தார்கள்
மலரும் நினைவுகளில்

"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
அவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக

சுட்ட சோளத்தைச்
சுவைத்துக் கொண்டிருந்த
இவன் குழந்தையின் கன்னந்தட்டி
பெயர் கேட்கத் தோன்றாத அவனும்

பச்சைநிற பலூனைத் தக்கவைக்கக்
காற்றோடு போராடிக் கொண்டிருந்த
அவன் குழந்தையின் கேசங்கலைத்து
'என்ன படிக்கறாய்?'
தெரிந்திட ஆர்வம் காட்டாத இவனும்

மின்னஞ்சல் முகவரி
அலைபேசி எண் பரிமாறி
"தொடர்பில் இருப்போம்" உறுதிகூறி
விடைபெற்று நகர்ந்தார்கள்
காலடியில் மிதிபட்டுக்
கலைந்து கொண்டிருந்த
அழகிய சிறு மணல் வீடுகள்
பற்றியக் கவனமின்றி..
சந்தித்த அவ்வினிய தருணத்தின்
அருமை பற்றிய பிரஞ்ஞையுமின்றி.

வீசிக் கொண்டிருந்தது சில்லிப்பாய்
தொடர்ந்து கடற்காற்று.
***

படம்: இணையத்திலிருந்து...

27 டிசம்பர் 2010 திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. நன்றி திண்ணை!

ஞாயிறு, 13 மார்ச், 2011

ஜனாதிபதி அப்துல்கலாமும்.. அன்பான ஏழைத்தாயும்..


  • இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்” சொன்ன ஏழைத் தாயைக் கண்டு கண்கலங்கியவர்.
யார்?

  • இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் இந்தியத் திருநாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள அவர்களை நினைவு கூர்ந்தவர்.
யார்?

  • ‘வாழும் கடவுள்’ எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை, உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் வைத்தவர்.
யார்?

  • திரு. சீனா அவர்கள், முத்துலெட்சுமி ஆகியோருடன்..

தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா, ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் , சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன், மோகன் குமார்

இவர்களுக்கும் நன்றி!


படம் நன்றி:‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ பதிவு.


பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



நிறைவுப் பதிவில் நிற்க வருகிறார்கள் அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த இப்பதிவர்கள்:

ஜெய்வாபாய் ஈசுவரன்

இந்திய அளவில் 7300 மாணவிகள் படிக்கும் மாபெரும் பள்ளியாக, பல்வேறு சாதனைகளைப் படைத்து, பெண்கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வரும் “திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்” விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு அசாத்தியமானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலராக இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்ததினத்தை ‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ எனப் பதிவிட்டவரின் இடுகையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்வுக்குரியது: “இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்

இந்த ஏழைப் பெண்ணின் தாய்மைக்கு எது ஈடாகும்? முழு விவரம் அறிய பதிவுக்கே செல்லுங்கள்.


அமைதி அப்பா
நாட்டிலும் உலகிலும் அமைதியே நிலவ வேண்டும் என விரும்பிப் பெயர் வைத்த இவரது மகன் ‘அமைதி விரும்பி’ சட்டம் படித்து வருகிறார். சமூக அக்கறையுடனான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

வாழும் கடவுள்...! எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை:“செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!, அக்கறையுடன் வழங்குகிறார் ஆலோசனைகளை.
‘வெடிவால்’ சகாதேவன்
நேரிலோ இணையத்திலோ பார்த்தது, ரசித்தது, மற்றவருக்குப் பயனாகும் தகவல்கள் என அனைத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருபவர். வரலாற்றை நினைவு கூர்ந்து இடும் பதிவுகளும் சிறப்பானவை ஹே ராம்;

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்’:“அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது;

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?: “ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்...அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.

இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் நாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அணில் சுமந்த கற்களாய்..
வரவர் வாசிப்பில், நினைவில் நின்ற பதிவுகளைப் பகிர்வதன் மூலமாக சிறந்த இடுகைகள் ஆவணப்படுத்தப் படுகிற ஒரு தளமாகவும், அதைப் படைத்தவர்களை அறியாதவர் அறிந்திட உதவும் ஒரு பாலமாகவும் திகழ்ந்து வருகிறது வலைச்சரம். தினம் தினம் நீளும் அப்பாலத்துக்கு, இராமருக்கு உதவிய அணிலைப் போல ஏழுகற்களை எடுத்து வைத்துள்ளேன்.

என் வலைவாசிப்பில் ரசித்தவரின் பட்டியலில் வெகுசிலரை மட்டுமே சொல்ல இயன்றதற்கு நேரமின்மை மட்டுமே காரணம். விரிவாகச் செய்ய நினைத்ததில், ஒருநாளைக்கு பத்து பதினைந்து பதிவர்கள் எனத் திட்டமிட்டிருந்ததை செயல்படுத்த இயலவில்லை.

என் வாசிப்பு வட்டதுள் வந்த புதியவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்றாலும்.. மேலும் பலரையும், பிரமிக்க வைத்த இடுகைகளைத் தந்த பதிவர்கள் எத்தனையோ பேரினையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பினை சீனா சாரிடம் கேட்டுப் பெற்று இங்கே பகிர்ந்திட முயன்றிடுவேன்.

பல நல்ல இடுகைகளை உங்கள் முன் வைத்த மன நிறைவுடனும், சில பதிவர்களை இதன் மூலமாக ‘அறிய வந்திருப்பதாகவும் இனித் தொடருவதாகவும்’ வந்திருக்கும் பின்னூட்டங்களால் கிடைத்த திருப்தியுடனும், வாய்ப்பளித்த சீனா சாருக்கும், வரவேற்றுப் பதிவிட்ட முத்துலெட்சுமிக்கும், என்னை இதுகாலமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய கீழ்வரும் அத்தனை நண்பர்களுக்கும்
தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா,ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் ,சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன் , மோகன் குமார்
[அறிமுகமான பதிவுகளின் இணைப்புடனே தொகுத்திருப்பதில்,
எவர் பெயரேனும் விடுபட்டிருப்பின் அது என் கவனக்குறைவே, மன்னியுங்கள்.]

ஒருவாரமும் பதிவுகளைப் படித்துக் கருத்து கூறியவருக்கும்

என் மனமார்ந்த நன்றி!
***

சனி, 12 மார்ச், 2011

‘நன்றே செய் இன்றே செய்’ - இன்றைய வலைச்சரத்தில்..

  • ‘வறண்ட பிரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கேத் திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியில் 68 வயதான ஸ்ரீதரன், துணை நிற்கும் கற்பகம், ஸ்ரீராம்.’ பாராட்டுகிறார் மண்ணை நேசிக்கும் இம்மாந்தரை.
  • “பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது” கேட்கிறார்.
  • “ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர், அசத்தல்.” நெகிழ்கிறார்.
யார்?

  • இயற்கையின் மீதான அளவற்ற நேசத்தால், உலக நலன் மேல் கொண்ட உள்ளார்ந்த அக்கறையினால், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் பாராட்டுக்குரிய மனிதர்.
  • வெட்டப்பட இருந்த ஐம்பத்து ஐந்து வயது மரத்தை, அரசிடம் முறையிட்டுக் காப்பாற்றிய சிறுவன் அருண்குமாரையும் நண்பர்களையும் கொண்டாடுகிறார். அவனைப் பாராட்ட நம்மையும் அழைக்கிறார்.
யார்?

  • “ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்...”
  • “கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.”
  • எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம் வாழ்க்கை முழுவதையும் மண்ணுக்கு அர்ப்பணித்து, தம் பிள்ளைகளாய் நேசித்து, மரங்களை வளர்ந்த மாமனிதர்களை.. கோடியில் இருவராய்க் கொண்டாடி விழா எடுத்தவர்.
யார்?
  • வீட்டருகே இருக்கும் பூங்காவில் வேப்பங்கன்றை நட்டு, அனுதினம் மாலை மறக்காமல் நீர் வார்த்து, நாளைய உலகுக்காக மரம் வளர்த்து வரும் இளங்கன்று, நம்பிக்கை நாற்று.
யார்?


பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



Surveysan-அழிப்பவன் அல்ல அளப்பவன்!
இவரைப் பற்றிய அறிமுகம்‘பதிவுலகில் நானு-Q & A’ இதிலேயே கிடைத்து விடும், இவரே தந்திருக்கும் சுட்டிகளைப் பிடித்துச் சென்றால்! இப்போதுதான் கவனிக்கிறேன், அதில் தன் எழுத்தை “இதுவரைக்கும், யாரும், ஆகாககாகான்னு பாராட்டியதா ஞாபகம் இல்லை” என சொல்லியிருப்பதை:)!


இரண்டு வருடங்களுக்கு முன்னரே என் பதிவொன்றில், “தன் எழுத்துக்களால் ஒரு உத்வேகத்தைத் தந்தவர் சர்வேசன். எனது சமூகக் கவிதைகள் பலவற்றிற்கான பொறியினை இவரது பதிவுகளிலிருந்து பெற்றேன். சர்வேசன்-ஆக்கியவன்[அப்போது ‘ஆக்கியவன்’தான்] அல்ல அளப்பவன் என்கிற இவரது வலைப்பூ "surveys about anything and everything in Tamil for the Tamil" என்றே சொல்கிறது. சமூகத்தைப் பற்றி சகலதையும் அலசும் இவரது எழுத்துக்களில் காணப்படும் வீச்சும், பேச்சு வழக்கிலே எழுதும் ஸ்டைலும் பிடிக்கிறது எனக்கு. முத்துச்சரத்தின் ப்ரொஃபைல் படம் இவர் எடுத்ததே. என் வலைப்பூவுக்குப் பொருத்தமாய் இருக்குமே என்றதுமே தந்து விட்டார். எதற்கு நன்றி சொன்னாலும் ‘தன்யனானேன்’ என்றிடுவார் தன்னடக்கத்துடன்.”

இப்படிக் குறிப்பிட்டிருந்தது ‘ஆகாககாகா’ வகையிலே அடங்காத வருத்தத்துடன் வலைச்சர வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன், பல நல்ல விஷயங்களைத் தன் முகம் காட்டாமல் பகிர்ந்தும், செய்தும் வருபவரை முன்னிலைப் படுத்தும் ஆவலில்.

எதைச்சொல்ல எதைவிட எனும் அளவுக்கு இரண்டரை ஆண்டுகால வாசிப்பில் சமூக அக்கறையுடனான பதிவுகள் பல இருப்பினும் ஒருசிலவற்றை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.

சென்னை விசிட் - உதவும் கரங்கள்:“மலர்வனம்னு ஒரு வயதானவர்களுக்கான முகாமும், அதே காம்ப்ளெக்ஸில், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு மையமும், சற்று தள்ளி இன்னொரு கட்டிடத்தில், குழந்தைகள், சிறுவர்கள் மையமும், உதவும் கரங்களே நடத்தும் பள்ளியும் கண்டு வந்தோம்.

தொண்டைக் குழிக்குள்ள ஒரு பெரிய உருண்டை வந்து அடச்சுக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. குறிப்பா, அந்த மனநிலை சரியில்லா ஆட்களையும், அவர்களைப் பராமரிக்கும் வாலண்ட்டியர்ஸும் பாத்தா ஒரு நிமிஷம், வாழ்க்கையே சூன்யம் ஆன மாதிரி ஆயிடுது.

சும்மா சொல்லக்கூடாது,
ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர்,அசத்தல்.

ஒரு போட்டியை அறிவிக்கும் போது சர்வேசன், வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை போக அவர்களது பெயரிலேயே உதவும் கரங்களுக்கு ஒரு தொகையை அனுப்ப முன்வந்தது பாராட்டுக்குரிய மகிழ்வான விஷயமென்றால், வெற்றி பெற்றவர் தமக்கான தொகையையும் சேர்த்து உதவும் கரங்களுக்கு வழங்கிட முன் வந்தது மேலும் நெகிழ்வு. நல்ல உணர்வுகளை எழுத்திலும் செயலிலும் பரப்பும் அவருக்கு வைப்போம் ஒரு சல்யூட்.

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல் :பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத,பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

கற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி?
68 வயதான ஸ்ரீதரன்... 17 ஏக்கர் வறண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.”

“மும்பையைச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், இவருக்கு உறுதுணையாக இருந்து, PointReturnல் காடு வளர்க்க, முழுநேரமும் தங்களை இணைத்துக் கொள்கிறார்களாம். இருவரும் முப்பதுகளில் இருப்பவர்கள்.
ஐஐடி யில் முதுகலைப் பட்டம் பெற்று, கன்னாபின்னா என்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்.

நன்றே செய் இன்றே செய்
:“வெற்றிகரமாய் போயிக்கிட்டு இருக்காங்க; இயற்கை விவசாயம்; எண்ணை உற்பத்தி; ராகி பயிரிட்டு; குளம் வெட்டி அல்லி வளர்த்து, வீடு கட்டி,மனிதக் கழிவையும் புனிதமாக்கி, இவங்க பயணம், சூப்பரா போயிக்கிட்டே இருக்கு;

மேற்கண்ட பயணத்தின் ஒவ்வொருபடியைப் பற்றிய படங்களுடன் விரிவான விவரங்களுக்கான சுட்டிகளைத் தேடி வழங்கியிருக்கிறார் சர்வேசன்.

இந்த மாதிரி இயக்கங்களுக்கு சொற்ப நேரத்தை செலவிடுவது, திருப்திகரமான பொழுது போக்காய் அமைவதோடு மட்டும் அல்லாமல், சொந்த வாழ்க்கையில், நம்மை அறியாமல் ஒரு பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யும்...சென்னை/செங்கல்பட்டு வாசிகள், DV ஸ்ரீதரனை தொடர்புகொண்டு, தன்னார்வலராக விருப்பம் தெரிவித்தால், இருகரம் நீட்டி ஆரத் தழுவி வரவேற்பார்.” எனத் தொடர்பு விவரங்களைத் தந்துள்ளார்.

அத்துடன் நின்றிடாமல், மண்ணை நேசிக்கும் அம்மாந்தரிடம் பதிமூன்று கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றுப் பதிந்துள்ளார் இங்கே: கற்பகம், ஸ்ரீராம், DV ஸ்ரீதரனின் பதில்கள்.
***

இவரது கலகலப்பான எழுத்துக்கு, [அறிமுகப் பதிவில் இருப்பினும் நீங்கள் தவற விடக் கூடாதென], மகளிர் தின வாரத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பெண்களை நம்பவே நம்பாதே, ‘அநியாயத்துக்கும் அருமையா எழுதி’யிருப்பதாக அங்கேயே பாராட்டியிருப்பதாலும்:)!
‘மண், மரம், மழை, மனிதன்.’திரு வின்சென்ட்
இயற்கையின் மீதான அளவற்ற நேசத்தால், உலக நலன் மேல் கொண்ட உள்ளார்ந்த அக்கறையினால், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் பாராட்டுக்குரிய மாமனிதர்,நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.

சென்னை அண்ணாநகர் ‘நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்’ மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற பலவற்றிற்கும் அறிவிக்கும் ஒருநாள் பயிற்சிகளைப் பற்றியதான உடனுக்குடன் அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும். “பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது....உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும். ப. தண்டபாணி : 94420-15060” என்று கேட்டுக் கொள்வதுடன், அவர்களை நேரில் சென்று பார்த்துப் பாராட்டி மரத்தின் அருகே நின்று புகைப்படங்களும் எடுத்து வெளியிட்டுள்ளார் இங்கே.

பெங்களூரில் மெட்ரோவுக்காக பலநூறு வயதான ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதை வேதனையுடன், கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பல இலட்சம் மக்களில் நானும்தான் அடக்கம்:(! இந்த வயதில் நின்று சாதித்த அந்தச் சிறுவனுக்கு நம் வாழ்த்துக்கள்!

தண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு, கடந்த வருடம் தண்ணீர் தினத்துக்காக இவர் விடுத்த அழைப்பினை ஏற்று எழுதப்பட்டவை யாவும். அனைத்து சுட்டிகளிலும் சென்று படித்துப் பயன் பெறுங்கள்.

இந்தவருட "உலகநீர்" நாள் சின்னத்தை
அனைவரும் வலைப்பூவில் இணைத்திடக் கேட்டுக் கொண்டுள்ளார். நான் செய்து விட்டேன். அப்போ நீங்க?


‘கசியும் மெளனம்’ ஈரோடு கதிர்
56 வயதான திரு. நாகராஜன், 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

74 வயதைத் தாண்டிக் கொண்டிருந்த திரு. அய்யாச்சாமி அவர்கள் ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்... சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள்

கோடியில் இருவராய்
இவர்களை அறிமுகப்படுத்திய கதிர் , “ இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை....அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.” எனும் உத்வேகத்துடன் செயல்பட்டு எடுத்தார் மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா!

கடந்த வாரம் திரு அய்யாச்சாமி, 3000 பிள்ளைகளின் தந்தை, இயற்கையின் அன்னையின் பிரியத்துக்குரிய மைந்தர் காலமானார். “அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில் அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆம், அந்த சுவாச மூச்சு தெற்கிருந்தே வடக்கே, பின் மேற்கே கிழக்கே என உலகெங்கும் பயணப்பட்டு எங்கெங்கும் இயற்கையைக் காக்கும் சக்தியாய், இயற்கையைப் போற்றும் சந்ததிகளுக்கு உறுதுணையாய் இருப்பது நிச்சயம். அதற்கான சான்றாக....இதோ இந்தச் சிறுவன்.
‘ட்விங்கிள் ட்விங்கிள்’(லிட்டில் ஸ்டார்)சபரி
வீட்டருகே இருக்கும் பூங்காவில் வேப்பங்கன்றை நட்டு, அனுதினம் மாலை பள்ளி விட்டு வந்ததும், தமக்கையின் உதவியுடன் மறக்காமல் நீர் வார்த்து, நாளைய உலகுக்காக மரம் வளர்த்து வரும் இளம் நட்சத்திரம் சபரியை வாழ்த்துவோம், One Boy One Tree!

மண்ணை மரங்களை மனிதர்களை நேசிப்போம்.
இயற்கையைப் போற்றுவோம்.
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin