கர்நாடகாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் ரங்கனதிட்டு. 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு 3 கிமீ தொலைவில் மாண்டியா மாவட்டத்திலுள்ளது. காவேரி நதிக் கரையில் அமைந்த இதன் ஆறு தீவுகளுக்கும் விதம் விதமான பறவைகள் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்த பறவையியலாளரான டாக்டர் சலீம் அலி, மைசூர் மன்னரிடம் பரிந்துரைத்ததன் பேரில் 1940_ஆம் ஆண்டு இந்த சரணாலயம் உருவானது என்பது குறித்து ‘பக்ஷி காசி - பாகம் 1’_ல் குறிப்பிட்டிருந்தேன். அவரைக் கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே "டாக்டர் சலீம் அலி தகவல் மையம் ( Dr. Salim Ali Information Centre )".
சரணாலய நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வரும் இத்தகவல் மையம் சரணாலத்தின் நுழைவாயில் பகுதியிலேயே அமைந்துள்ளது.
ரங்கனதிட்டுவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் மீது இந்த மையம் ஆழமான மதிப்பை ஏற்படுத்துகிறது. பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக டாக்டர் சலீம் அலியின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
#2
#3
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த மையத்தில், ரங்கனதிட்டு சரணாலயம் முழுமையாக அறிந்து கொள்ள, சுற்றிப் பார்க்க உதவும் வகையில் தெளிவான வரைபடம் உள்ளது. பறவைகளின் குரல்களைக் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ‘விநாடி வினாப் பலகை’ அமைக்கப்பட்டுள்ளது.
#5
ஒளியூட்டப்பட்டத் தகவல் பலகைகள்:
உரிய படங்களுடன், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில், எளிதாக வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்களுடன், சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஒளியூட்டப்பட்ட பலகைகள் இந்த மையத்தின் சிறப்பு. கூடுமானவரையில் மற்ற மின் விளக்குகளின் ஒளி அவற்றின் மேல் பிரதிபலிக்காமல் படமாக்கியுள்ளேன் ஆயினும், தமிழிலும் அத்தகவல்களைத் தந்துள்ளேன்.
காஷி அல்லது வாராணசி (பனாரஸ்) போலவே, ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் பறவைகளுக்கும் பறவை ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த புனித இடமாக விளங்குகிறது. வரலாற்று நகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ரங்கநத்திட்டு, இந்தியாவின் பறவைகள் வரைபடத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் இனிப்புநீர் வாழ்விடங்களுடன் தொடர்புடைய பல்வேறு வகையான பறவைகள் மற்றும் அவற்றின் மிகுதியான எண்ணிக்கைக்காக புகழ்பெற்றது.
இங்கு உள்ளூர் பறவைகள் மற்றும் வலசைப் பறவைகள் இரண்டும் சேர்த்து சுமார் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறவைகளின் இந்த வளமும், பெங்களூர், மைசூர் ஆகிய இரண்டு நகர மையங்களுக்கு அருகில் இருப்பதும், வெறும் 67 ஹெக்டேர் அளவே உள்ள இந்த சிறிய சரணாலயத்தை நாட்டில் அதிகமாகப் பார்வையிடப்படும் சரணாலயங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.
2014–15 ஆண்டில் மட்டும் 3,15,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த சரணாலயத்தைப் பார்வையிட்டுள்ளனர்
படகுகளுக்கு மிக அருகிலே தாழ்வாகப் பறந்தபடியும் அல்லது நீரிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் சிறிய பாறைகளின் மீது அமர்ந்தபடியும் வசீகரிக்கும் இந்த இனம், பொதுவாக மனிதர்கள் மிக அருகில் நெருங்குவதை அதிகம் பொருட்படுத்துவதில்லை.
பளபளப்பான கறுப்புத் தலை, அதற்கு முரணான மஞ்சள் நிற அலகு, ஆரஞ்சு நிறக் கால்கள், ஆழமாகப் பிளவுபட்ட வால் மற்றும் கூர்மையான இறக்கைகளைக் கொண்டவை. நன்னீர் சதுப்பு நிலங்களில் அதிகம் தென்படும். மீன் பிடிப்பதில் திறமையானவை. நீருக்குள் பாய்ந்து மூழ்கி மீன்களைப் பிடிக்கும். இது ரங்கன்திட்டுப் பகுதியில் வசிக்கும் ஓர் உள்ளூர் இனம். ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.
நீங்கள் படகில் சவாரி செல்லும் போது, பறவைகளின் எச்சத்தால் மூடப்பட்ட சாம்பல் நிறப் பாறை ஒன்று திடீரென நகர்ந்து ஒரு பெரிய முதலையாக மாறுவதைக் காண நேரிட்டால் ஆச்சரியம் அடைய வேண்டாம்.
‘சதுப்புநில முதலை’ (Mugger) ஆனது வரலாற்றுக்கு முந்தைய, பழங்காலத்திலிருந்தே அறியப்பட்ட, ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்காகும். பெரும்பாலும் நீரின் மேற்பரப்பில், மேலே மூக்கு மற்றும் துருத்திய கண்கள் மட்டும் தெரியும்படி வெயிலில் காய்ந்து கொண்டோ அல்லது மெதுவாக நகர்ந்து கொண்டோ இருக்கும்.
மேலும் இங்கு காணக் கிடைக்கும் மற்றொரு சுவாரஸ்யமான உயிரினம் . ‘நீர்நாய்’ (Otter). இது ஒரு துறுதுறுப்பான, மீன் உண்ணும் ஒரு பாலூட்டி. தண்ணீரில் செய்யும் சாகசங்களுக்காகப் பெயர் பெற்றது.
மரங்களின் மேலிருந்து கேட்கும் கீச்சுச் சத்தம் . ‘இந்தியப் பறக்கும் நரி’ (Indian Flying Fox) என அறியப்படும் வெளவால்களைக் கவனிக்க உங்களுக்கு உதவும். பழங்களை உண்ணும் இந்த உயிரினம் தலைகீழாகத் தொங்கியப்படி கூட்டமாக வாழ்கின்றன.
ஒருவேளை பறவைகளே இங்கு வராமல் போயிருந்தாலும் கூட, இது போன்ற உயிரினங்கள் இந்தச் சூழல் மண்டலத்தின் செயல்பாட்டிற்கு ஆற்றிவரும் முக்கிய பங்கிற்காகவும் ரங்கனதிட்டு நிச்சயம் புகழ் பெற்றிருக்கும்.
#10 பெரிதும் சிறிதுமாக ஏராளமான உயிரினங்கள்:
பட்டாம்பூச்சிகள்: இங்கு 60_க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
#11 ரங்கனதிட்டின் "பறவை திருவிழா"
இந்த "பக்ஷி காஷி"யில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 221_க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்குள்ள பறவை இனங்களின் வளமையும் செழுமையான எண்ணிக்கையும், இப்பகுதி பறவைகளின் உணவிற்கும் இனப்பெருக்கத்திற்கும் ஏற்ற பல்வேறு சூழல்களை ஏற்படுத்திக் கொடுப்பதை நமக்கு உணர்த்துகின்றன.
காவிரி ஆறு ரங்கனத்திட்டின் பல்வேறு வாழ்விடங்களைப் பராமரிப்பதோடு, அங்கு வசிப்பவர்களையும் தாயாகத் தாங்கி நிற்கிறது.
ஆற்றுப்படுகை மீன் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் வடிவில் பறவைகளுக்குக் குறைவற்ற உணவை வழங்கும் அதே நேரத்தில், இங்குள்ள தீவுகள் பறவைகள் தங்குவதற்கும், கூடுகட்டுவதற்கும் இடம் அளிக்கின்றன. பசுமையான மற்றும் இலையுதிர் மரங்களுடன் கூடிய அடர்ந்த புதர்க்காடுகள் பறவைகளுக்கு கூடுக்கட்டவும் தங்கவும் பயனாகின்றன. நீர்நொச்சி (Salix), தாழை (Pandanus), நாவல் (Jamun), நீர்மருது (Arjuna) மற்றும் தூங்குமூஞ்சி மரம் (Rain tree) ஆகியவை பறவைகள் அதிகம் பயன்படுத்தும் மரங்களாகும்.
தீவுகளை ஒட்டியுள்ள மண் கரைகளும், நீரிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மரக்கட்டைகளும் பல்வேறு பறவை இனங்களுக்குத் தனித்துவமான வாழ்விடங்களை வழங்குகின்றன. சரணாலயத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் (முக்கியமாக நெல் மற்றும் கரும்பு), காவிரி நீரால் பாசனம் பெறுவதுடன், பூச்சிகள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களின் சிறந்த ஆதாரமாகவும் விளங்குவது குறிப்பிடத் தக்கது.
ரங்கனதிட்டு ஒரு விலைமதிப்பற்ற ரத்தினத்திற்கு ஒப்பானது. இது இந்தியாவின் பறவைகள் சராணலய வரைபடத்தில் தொடர்ந்து பிரகாசிக்க பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
தீவுகளின் பாதுகாப்பு; வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் கரை அரிப்பை சரி செய்வது; சட்டவிரோத மீன்பிடித்தல், பெரிய மரங்களை வெட்டுதல், வேட்டையாடுதல் போன்றவற்றைக் கண்காணித்துத் தடுப்பது; காடு சாராத பொருட்களைச் சரணாலயத்திலிருந்து அகற்றுவது போன்றவை நிர்வாகத்தினருக்கு சவாலாக இருக்கும் விஷயங்களாகும்.
மாநில வனத்துறை பணியாளர்களும் பறவைகளைச் சிறப்பாகப் பாதுகாப்பதற்கும், பார்வையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதற்கும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மைசூர் உடையார் வம்சத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் பறவைகளின் சொர்க்கம், எதிர்கால சந்ததியினருக்காக நாம் பாதுகாக்க வேண்டிய விலைமதிப்பற்ற பரிசு.
சுதந்திரத்திற்கு முன்பே நிறுவப்பட்ட ஒரு சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ரங்கனதிட்டு, 1940-ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக மாறியது. புகழ் பெற்ற பறவை ஆய்வாளரான டாக்டர் சலீம் அலி, 1939-ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் மாநிலத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியபோது இந்தச் சிறிய பறவை சொர்க்கத்தால் கவரப்பட்டார். அவரது வேண்டுகோளின் பேரிலேயே, மைசூர் ஆட்சியாளர்கள் இந்த இடத்திற்குப் பாதுகாப்பு அளித்தனர்.
அதன்பின்னர் வெகு காலம் கழித்து, 1998_ஆம் ஆண்டு கர்நாடக அரசால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது ஒரு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக ரங்கனதிட்டு ஒரு உள்ளூர் பறவை சொர்க்கமாக மட்டும் நின்று விடாமல் தேசிய அளவிலான முக்கியத்துவம் பெற்று, ராம்சர் உடன்படிக்கையின் (Ramsar Convention) கீழ் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இடமாகவும் மாறியுள்ளது.
#15 பறவைகளுக்கான தாவரங்கள்
சிறிய பரப்பளவு கொண்ட இடமாக இருந்தாலும், ரங்கனதிட்டு தாவர வளம் மிகுந்ததாக உள்ளது.
500_க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மரங்கள், புதர்கள், சிறு செடிகள், நீர்த் தாவரங்கள், புல் வகைகள் மற்றும் கோரைப் புல் வகைகள் ஆகியவை அடங்கும். இவற்றில் பல தாவரங்கள் மருத்துவப் பயன்களும் கொண்டவை.
இங்கு காணப்படும் சில பெரிய மரங்கள்:
வஞ்சி மரம் (Salix), நாவல் மரம் (Jamun), அர்ஜுனா மரம் (Terminalia arjuna), ஆவு மரம் (Indian Elm Tree), மழைமரம் (Rain Tree), வாகை மரம் (Lebbeck tree) தாழை (Screwpine) ஆகியவை.
மேலும் வில்வம் (Wood Apple), யானை ஆப்பிள் (Elephant Apple) மற்றும் தூங்குமூஞ்சி மரம் (Monkeypod Apple) போன்றவையும் காணப்படுகின்றன.
50-க்கும் மேற்பட்ட புல் வகைகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கோரைப்புல் இனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பல நீர்த் தாவரங்களும் உள்ளன.
மலரில்லாத தாவரங்களில் பன்னம் (ferns), கற்பாசி, மரப்பாசி மற்றும் பூஞ்சைப் பாசி வகைகள் அடங்குகின்றன.
குதிரைவால் செடி (Horsetail fern) என்ற அரிய வகைத் தாவர இனமும் இங்கு காணப்படுகிறது.1640-_களில் மைசூர் ஆட்சியாளர்களால் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு சிறிய அணை கட்டப்பட்டதன் விளைவாக இத்தகையதொரு பறவைகளின் சொர்க்கம் உருவாகும் என்று யார் கற்பனை செய்திருப்பார்கள்?
நமது நாட்டின் பெரும்பாலான தேசிய பூங்காக்களும், சரணாலயங்களும் இயற்கையின் தனித்துவம் மற்றும் செழுமைக்கு மனிதர்கள் காட்டிய அக்கறையினால் உருவானவை. ஆனால், ரங்கனதிட்டு ஒரு மனிதரின் தலையீட்டிற்கு இயற்கை அளித்த பதிலாக உள்ளது. ஸ்ரீ காந்தீரவா நரசிம்மராச உடையார் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை போன்ற அமைப்பு காவிரியில் பல தீவுகளையும், மணல் திட்டுகளையும் உருவாக்கியது. அவையே நீரில்வாழும் மற்றும் நீரைச் சார்ந்து வாழும் பறவைகள் கூடுகட்டவும், தங்கவும் ஏற்ற சூழலை ஏற்படுத்தின.
இந்தப் வாழ்விடங்கள் நாரைகள் (Storks), கொக்குகள் (Herons, Egrets), அரிவாள் மூக்கன் மற்றும் அன்றில் (Ibises) மற்றும் கூழைக்கடாக்கள் (Pelicans) போன்ற பறவைகளுக்குப் பாதுகாப்பான இடங்களை அளித்தன. இது தவிர, ஆறும் அதனைச் சுற்றியுள்ள பாசன விவசாய நிலங்களும் பறவைகளுக்குத் தேவையான மீன் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களை உணவாக, ஏராளமாக வழங்குகின்றன. இதன் காரணமாக, இன்று நாம் ரங்கனதிட்டில் அற்புதமான பறவை பன்முகத்தன்மையைக் காண முடிகிறது.
#13 உங்கள் பயணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? / மற்றும் எங்களது வேண்டுகோள்:
இங்குள்ள பறவைகளை பாதுகாக்க உங்கள் உறுதியும் ஆதரவும் தேவை. இந்த சரணாலயத்தை பரமாரிக்க, மேம்படுத்த உதவப் போகிறவர்கள் உங்களைப் போன்ற பார்வையாளர்களே. முந்தைய தலைமுறைகள் பாதுகாத்து வந்த இந்த இயற்கை பாரம்பரியத்தை நாம் நமது குழந்தைகளிடத்திலும், அடுத்து வரும் தலைமுறைகளிடத்திலும் ஒப்படைக்க வேண்டியுள்ளது.
இந்த“பக்ஷி காஷி”யை பார்வையிட நீங்கள் நேரம் ஒதுக்கியதே அதன் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்த உங்கள் அக்கறையைக் காட்டுகிறது. இங்குள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த முயற்சிக்கு உங்கள் சிறந்த பங்கை அளிக்கலாம்.
அமைதியைக் கடைப்பிடித்து, சுற்றியுள்ள இயற்கையின் அதிசயங்களை ரசிப்பது ம்னதுக்கு அமைதியையும் மனநிறைவையும் அளிக்கும். அதேநேரம், சுற்றுலா தலம் என்பதைத் தாண்டி இது உண்மையில் பறவைகளுக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் உருவாக்கப்பட்ட இடம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். தங்கள் வருகைக்கு நன்றி.
#17 இந்தியாவில் எங்கெங்கு பறவை சரணாலயங்கள் உள்ளன என்பதைக் காட்டும் வரைபடம்:
#18 உள்ளே நுழைகையில் வரவேற்கும் உயரமான மரம்
#20 வாழுங்கள், வாழ விடுங்கள்!
இந்த சரணாலயத்திற்கு பறவைகள் கூடுகட்டும் காலமான ஜூன் முதல் நவம்பர் வரையிலும் செல்வது நல்லது என்றும், வலசை வரும் பறவைகளைக் காண டிசம்பர் மாதம் உகந்தது என்றும் கூறப்படுகிறது.
இங்கே வருகை புரியும் பறவை வகைகளின் பட்டியல்.
மேலே பதியப்பட்டுள்ள 30 வகைப் பறவைகளில் 20 வகைகளை வீட்டுத் தோட்டம் மற்றும் பெங்களூர், மைசூர், ஸ்ரீலங்கா ஏரிகளில் பார்த்திருக்கிறேன். இதிலுள்ள 17 வகைப் பறவைகளை நான் எடுத்தப் படங்களுடனும் சேகரித்தத் தகவல்களுடன் தனிப் பதிவுகளாக முத்துச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
இதுவரையிலும் 40 வகை வீட்டுத் தோட்டப் பறவைகள், 5,6 ஏரிப்பறவைகள் பற்றிய தனிப் பதிவுகள் முத்துச்சரத்தில் ஆவணப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து மின்னூல் ஆக்கும் எண்ணம் உள்ளது.
இவ்விடத்தில், எந்தப் பறவையைப் படமாக்கினாலும் ‘அதன் பெயரை அறிந்து ஃப்ளிக்கரில் பகிர வேண்டும், தகவல்களுடன் ஆவணப்படுத்த வேண்டும்’ எனும் ஆலோசனையை வழங்கியவரும், அதை நான் பின்பற்றத் தொடங்கியதும் மகிழ்ந்து பாராட்டி ஊக்கம் தந்தவருமான காலம் சென்ற பறவை ஆர்வலர் காலம் சென்ற பறவை ஆர்வலர் திரு. கல்பட்டு நடராஜன் https://tamilamudam.blogspot.com/2017/07/30.html அவர்களை நினைவு கூர்கிறேன்.
பறவைகள் மேலான ஈடுபாட்டினால் இந்தத் தகவல் மையத்தில் கிடைத்தத் தகவல்களை நேரம் எடுத்துத் தமிழாக்கம் செய்து தந்துள்ளேன், ஆர்வமுடையவர்களுக்கும் பின்னாளில் தகவல் தேடுபவருக்கும் பயனாகக் கூடுமென.
**
தொடர்புடைய முந்தைய பதிவு:

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக