ஞாயிறு, 11 அக்டோபர், 2026

பகிரப் பகிர வளரும் பேரொளி — நவராத்திரி பாமாலை

 

நவராத்திரையை முன்னிட்டு, சென்றவாரம் பண்புடன் மின்னிதழின் வாராந்திரப் போட்டியில் ஈற்றடிக்குப் பதிலாக “பாமாலை” போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. 

கருப்பொருள் கல்வி, செல்வம், வீரம் குறித்ததாக இருத்தல் வேண்டும். (பாடல் அல்லது) கவிதையின் தொடக்கச் சொல்லும் இறுதிச் சொல்லும் ஒன்றாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பத்தியின் இறுதிச் சொல்லும், அடுத்த பத்தியின் முதல் சொல்லும் ஒன்றாக இருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் 3 பத்திகள் அல்லது 3_லிருந்து 9 வரையில் இருக்கலாம்  எனப் பாமாலைக்கான விதிமுறைகளும் விளக்கப்பட்டிருந்தது. 

மூன்று கருப்பொருட்களிலும் எழுதிப் பார்த்தேன். சுவாரஸ்யமான சவாலாக இருந்தது. அனுப்பியவற்றில் ‘கல்வி’ கவிதை தேர்வாகி பண்புடன் இதழ்:17_ல் வெளியாகியுள்ளது. எழுதிய மூன்று கவிதைகளையும் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன் நான் எடுத்த படங்களுடன்:

கல்வி

கல்வி 
புத்தகங்களும் தேர்வுகளும் 
பட்டங்களும் மட்டுமன்று.
ஒவ்வொரு காலையிலும்
ஒரு பாடத்துடன் உடன் வரும் 
ஆசிரியராக இருக்கும் வாழ்க்கை

வாழ்க்கை கற்றுத் தருகிறது
நிறைவின் வழியே 
இழப்பின் வழியே
மறந்துவிட விரும்பும் 
தவறுகளின் வழியே
ஒருவரின் நாட்களுக்குள் 
வருபவர் வழியே
விலகிச் செல்பவர் வழியே.
கற்க வயதென்றும் 
தடையன்றென புரிய வைத்து 
இறுதிவரையிலும் அறிந்துகொள்ள 
ஏதோவொன்றை முன்வைத்து 
காத்திருக்கிறது உலகம்

உலகம்
ஒருபோதும் மூடப்படாத புத்தகம்.
அந்நியரின் கருணை
புயலைத் தாங்கி நிற்கும் மரம்
கேள்வி கேட்கும் குழந்தை
பாதையை மாற்றும் தோல்வியென
எந்தப் புத்தகத்திலும் காண முடியாத
அறிவைத் தந்து 
வாழ்வின் மீதான பார்வையை 
மாற்றுகையில் அங்கே
செருக்கழிந்து மலர்கிறது அன்பு

அன்பு 
தராசில் அளக்கும் பொருளன்று
கற்றதற்கான சான்று
அரவணைக்கும் கை 
உதவும் உள்ளம்
வெறுப்பைக் கரைக்கும் மென்சுடர்
பகிரப் பகிர வளரும் பேரொளி
உலகை இணைக்கும் நூல்கண்டு 
இவற்றை உணரும்போது 
கனிகின்ற ஞானம்

ஞானம் எனும் உன்னத நிலை
அனைத்தையும் அறிந்திருப்பதன்று
அறிந்தவற்றைச் சரியாக 
பயன்படுத்தத் தெரிந்திருப்பது.
பொறுமையானவருக்கு
கிடைக்கும் பரிசு.
உணர்ந்தவற்றால் 
அன்பைக் கொடுக்க 
அமைதியைப் பரப்ப 
கற்றுக்கொண்டதையும்—
பகிர்வது கல்வி

*

செல்வம்
செல்வம் 
ஓடியோடிச் சேர்க்கும்
நிதியும் நிலமும் மட்டுமன்று
குரல்கள் கூடும் உணவு மேசை
வீட்டை இல்லமாக்கும்
அன்பான குடும்பம்

குடும்பம்
புயல் வருகையில் 
காக்கும் கூரை.
விழுகையில் 
தாங்கும் கைகள்.
வாசலைத் தாண்டி 
வட்டத்தை விரித்து
வழிப்பயணத்தில் 
அண்டை அயலாரையும், 
கவலையை சிரிப்பைப் பகிர்ந்திட
நல்ல நண்பர்களையும் 
பெற்றுத் தரும்.
நட்பின் அருகாமையையும்
உறவின் அன்பையும்
அனுபவிக்கத் தேவையான
மற்றோர் செல்வம் ஆரோக்கியம்

ஆரோக்கியம் இருக்கையில் 
எளிய நாட்களும் 
நிறைவானதாகும்.
உடல்நலம் விலகுகையில் 
இருக்கும் பலவும் 
ஒளியை இழக்கும்.
நலமான உடலே 
நடக்கும், அமரும் 
புன்னகைக்கும்.
தெளிந்த மனதை
உடன் அழைத்துச் செல்லும்.
மனம் அலைபாயுமாயின்
வலிமையான உடலும் தடுமாறும்.
அது இளைப்பாற
தேடும் இடம் அமைதி

அமைதி
அனைத்து மகிழ்ச்சியும் 
வேரூன்றும் மண்.
குடும்பமும் நலமும் 
உறவும் நட்பும் கூடினாலே
ஈட்டிய பணம் அர்த்தம் பெறும்.
அல்லேல் 
பொன் வெறும் சுமையாகும்.
எவ்வளவு முழுமையாக
வாழ முடிகிறது என்பதே
உண்மையான செல்வம்

*

வீரம்
வீரம், நடுக்கம் 
அறியா நெஞ்சம் அன்று—
நிலத்தில் ஊன்றி நிற்கும்,
நடுங்கும் ஒருவரது
உறுதியான பாதங்கள்.
இரவு நெருங்குகையில் 
அவருள் எழும் குரல்.
நேருக்குநேர் விழிகளை
எதிர்கொள்ளும்
அவரது துணிவைக் கண்டு 
துவண்டு போகும் அச்சம்.

அச்சம் முணுமுணுக்கும்—
ஒருவர் சிறியவர் என்றும் 
இரவு ஆழமானது என்றும்
முன்னால் இருக்கும் மலை
மிகச் செங்குத்தானது என்றும்.
மீறி எடுத்து வைக்கும்
ஒரு சிறிய அடி
அவரை இட்டுச் செல்லும்
இடம் ஒளி.

ஒளி தேடி வரும்—
துணிந்து நிற்பவரை,
விழுந்தெழுந்து
கடினமான பாதையில் 
நடப்பவரை,
ஒவ்வொரு புயலிலும்
நடந்துகொண்டே இருப்பவரை. 
இறுதியில் அவருக்கே
காணக் கிடைக்கும் விடியல்.

விடியல் சொந்தமாகும்—
இருள் திரும்பிப் போ என்றபோதும்
கேளாது தொடர்பவருக்கு,
எவ்வளவு தூரம் வந்தோம் என்பதை
சத்தமின்றி நினைவூட்டும்
தழும்புகளைச் சுமப்பவருக்கு.
தயக்கங்களைப் புறந்தள்ளி 
தன்னால் இயலும் என
அவர்தம் இதயம் துடிக்கையில்
நிமிர்ந்து நிற்கும் அங்கே வீரம்.

*

  “ஈற்றடிக்கோர் பாட்டு – 15 – பாமாலை” .

தேர்வான மற்ற பாமாலைகளையும் இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
நன்றி பண்புடன்!
*

நவராத்திரியின் தொடக்க நாளாகிய இன்று, அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
***

3 கருத்துகள்:

  1. சவால்களை சந்தித்து வெற்றிபெறும் உங்கள் இயல்புக்கு பாராட்டுகள்.  மூன்றுமே நன்றாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. சரஸ்வதி சபதம் பாடலிலிருந்து இந்த எண்ணம் அவர்களுக்கு தோன்றி இருக்குமோ!

    பதிலளிநீக்கு
  3. பாமாலை மிக அருமை.
    கல்வி, செல்வம், வீரம் அனைத்து கவிதைகளும் அருமை. வாழ்க்கை தினத்தோறும் கற்றுக் கொடுக்கிறது. நலமான உடல், நிறைவானமனம் செல்வம்.
    மனவலிமை , வைரக்கியம், கொண்ட கொள்கையில் பிடிப்பு என்றவை வீரம் தான். அனைவருக்கும் நல்லதொறு விடியல் கிடைக்கட்டும்.
    நவராத்திரி வாழ்த்துக்கள் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin