#1
இந்திய வெள்ளைக்கண்ணி, Zosterops palpebrosus எனப்படும் வெள்ளைக்-கண் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பாடும் பறவை இனமாகும். இதன் கண்களைச் சுற்றி ஒரு வெள்ளை வளையம் இருப்பதால், இதற்கு "வெள்ளைக்கண்ணி" என்று பெயர் வந்தது. 8-9 செ.மீ நீளமே உடைய மிகச் சிறிய பறவை.
#2
இவற்றின் உடலின் மேற்பகுதி மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு வித ஆலிவ் நிறத்தையும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் நல்ல மஞ்சள் வண்ணத்தையும் வயிற்றுப் பகுதி வெள்ளை கலந்த சாம்பல் வண்ணத்தையும் கொண்டு காணப்படும். சில துணை இனங்களில் வயிற்றின் பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
[வெகு காலமாக இதைக் காண இயலாதா என எதிர்பார்த்துக் காத்திருந்த போது கிளைகளுக்கு நடுவே, அடர்ந்த இலைகளுக்கு உள்ளேயிருந்து வெளிப்பட்டது ஓர் நாள்:)!
மஞ்சள் நிறத்தைப் பார்த்து வழக்கமாக வரும் பெண் தேன் சிட்டு எனத் தவற விட இருந்த நான் கண்களைச் சுற்றிய வெள்ளை வட்டத்தைப் பார்த்ததும் பரவசம் ஆனேன்:).]#3
இவற்றின் வரம்பு கிழக்கு நோக்கி இந்தியத் துணைக்கண்டம் முதல் தென்கிழக்காசியா வரையிலும் இந்தோனேசிய, மலேசியா நாடுகள் வரை பரந்து காணப்படுகின்றன.
இந்திய வெள்ளைக்கண்ணி பறவையை டச்சு விலங்கியல் அறிஞர் கோன்ராட் ஜேக்கப் டெம்மிங்க் 1824_ல் வங்காளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் விவரித்துள்ளார். இந்தக் குடும்பப் பறவைகளின் ஆங்கில மற்றும் அறிவியல் பெயர்கள் கண்களைச் சுற்றியுள்ள வெள்ளை நிறத்தைக் குறிப்பவையாக உள்ளன. அவற்றில் பல வகைப்பாடுகளும் உள்ளன. ஆகவே பெயர் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. புவியியல் வரம்பைத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவில் காணப்படும் பறவையின் ஆங்கிலப் பெயர் "ஓரியண்டல் வெள்ளைக்கண்" என்பதில் இருந்து "இந்திய வெள்ளைக்கண்" என மாற்றப்பட்டது. தமிழில் இந்திய வெள்ளைக்கண்ணி என அழைக்கப்பட்டது.
#4
இப் பறவைகள் குறுங்காடுகள், சதுப்பு நிலங்கள், தோட்டங்கள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கின்றன. வாழ்கின்றன. சமூகப் பாங்கானவை. சிறு கூட்டமாக உணவைத் தேடுகின்றன. சிறு பூச்சிகள், மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்கின்றன. பெரும்பாலும் மரங்களில் காணப்படும், மிக அபூர்வமாகவே தரைக்கு வரும்.
இனப்பெருக்கக் காலத்தில் கூட்டத்திலிருந்து பிரிந்து வாழும். மரக்கிளைகள் பிரியும் இடத்தில் சிலந்திவலை, மரப்பாசி, மரநார் ஆகியவற்றால் தொட்டில் போன்று நெருக்கமாகக் கூடுகளைக் கட்டுகின்றன. கூடு கட்ட 4 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன. இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடுகின்றன. அடை காத்த பத்து நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். இருபாலினப் பெற்றோரும் குஞ்சுகளைக் கவனித்து உணவூட்டுகின்றன. அடுத்த பத்து நாட்களில் குஞ்சுகள் பறக்கத் தயாராகி விடுகின்றன.
#5
**
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
சுவாரஸ்யமான தகவல்கள். தோட்டத்தில் மரங்களை பார்த்தவாறு இருப்பீர்களோ, புதிய பறவை கண்ணில் படுகிறதா என்று! ஏற்கனவே இவை பற்றி அறிந்திருந்த காரணத்தால் உங்களுக்கு சட்டென தெரிந்து விட்டது. கேமிரா எடுக்கும்வரை அவையும் அங்கிருந்திருக்கின்றன!
பதிலளிநீக்குஎனக்கு எல்லாம் குருவிதான்!
தோட்டத்தை நோக்கியவை ஃப்ரெஞ்சு ஜன்னல் எனப்படும் கண்ணாடிக் கதவுகள் ஆகையால், அங்கு சிறிய அசைவு தெரிந்தாலும் கவனத்துக்கு வரும் திறன் தானாகவே வந்து விட்டது:). எல்லாப் பறவைகளும் படம் எடுக்கும் வரை ஓரிடத்தில் இருப்பதில்லை. சில நொடிக்கு நொடி தாவியபடி இருக்கும். இந்தப் பறவையும் அப்படியான ஒன்று. நன்றி ஸ்ரீராம்.
நீக்குநானும் தேன்சிட்டு என்று முதலில் கீழ் உள்ள படத்தைப் பார்த்து நினைத்தேன்
பதிலளிநீக்குவெள்ளைக்கண்ணியை இது வரை பார்த்ததில்லை.
சூப்பர் படங்கள். ஒவ்வொரு போஸிலும் எடுத்துருக்கீங்க. படங்களை ரசித்தேன் வெள்ளைக்கண்ணியையும்தான்,
கீதா
நன்றி கீதா. இப்பறவை பெங்களூரில் அதிகமாக வசிக்கும் வகைதான். அளவில் சிறியது என்பதால் கண்ணில் பட வாய்ப்பின்றிப் போகிறது.
நீக்குமரங்கள் இருக்கும் வீடு என்றால் அதுவும் பெங்களூரின் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி என்றால் இப்படிப் பறவைகளைப் பார்க்க முடியும் போலும். எனக்கும் ரொம்ப ரொம்ப ஆசை. இயற்கை பறவைகள் விலங்குகள் ....மலைகள் என்று. ...உங்கள் பகுதி சூப்பர் பகுதி என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஇங்கு இப்போதைய பகுதியில் மரங்கள் அதிகம். கார்டன் லேஅவுட் பெயரே....ஆனாலும் பறவைகளைக் காண முடிவதில்லை. புறாக்கள். வந்தாலும் நம் வீட்டிலிருந்து தெரியாது. உள்ளடங்கி இருப்பதால்.
முன்பு இருந்த எலஹங்கா வீட்டில் வாசலில் கறிவேப்பிலை மரம், இருந்தது. அதற்கு குயில் வரும்....ஹையோ குயில் வரும் சத்தம் தெரிந்துவிடும் உடனே என் ஓட்டை காமெராவைத் தூக்கிக் கொண்டு மெதுவாக வாசல் பக்கம் வந்து மரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் குயிலை நிறைய எடுத்தேன் குயில் கூவும் சத்தத்துடனும் வீடியோ எடுத்தேன் கறிவேப்பிலை பழங்களைச் சாப்பிடுவதையும் எடுத்தேன். எனக்கே ஆச்சரியும் அதுவரை பறக்காமல் இருந்தது.
பொதுவாக நாம் கொஞ்சம் அசைந்தாலும் பறவைகள் பறந்துவிடும். நாம் எடுக்கும் போது பறந்துவிடும். பறந்து பறந்து இடம் மாறிக் கொண்டே இருக்கும்.
அப்படியும் நீங்க இத்தனை அழகா எடுத்திருக்கீங்க சூப்பர், ராமலஷ்மி
கீதா
சில பறவைகள் நொடிக்கு நொடி இடம் மாறும். அப்படியும் அதிகாலை 7 முதல் 9 மணி வரையிலான வெயிலில் ஓரிடத்தில் அமர்ந்திருக்க அவற்றுக்குப் பிடிக்கும். எந்தப் பறவைகள் நம்மைக் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருக்கும், எந்தப் பறவைகளை வீட்டுக்குள் ஒளிந்து நின்று எடுக்க வேண்டுமென்பதெல்லாம் ஓரளவுக்குப் பழகி விட்டது:).
பதிலளிநீக்குகுயில்கள் நம்மைக் கண்டு அதிகம் பயப்படுவதில்லை. நேரம் இருக்கையில் நீங்கள் எடுத்த படங்களை பகிர்ந்திடுங்கள். நன்றி கீதா.