#1
இந்திய வெள்ளைக்கண்ணி, Zosterops palpebrosus எனப்படும் வெள்ளைக்-கண் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பாடும் பறவை இனமாகும். இதன் கண்களைச் சுற்றி ஒரு வெள்ளை வளையம் இருப்பதால், இதற்கு "வெள்ளைக்கண்ணி" என்று பெயர் வந்தது. 8-9 செ.மீ நீளமே உடைய மிகச் சிறிய பறவை.
#2
இவற்றின் உடலின் மேற்பகுதி மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு வித ஆலிவ் நிறத்தையும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் நல்ல மஞ்சள் வண்ணத்தையும் வயிற்றுப் பகுதி வெள்ளை கலந்த சாம்பல் வண்ணத்தையும் கொண்டு காணப்படும். சில துணை இனங்களில் வயிற்றின் பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
[வெகு காலமாக இதைக் காண இயலாதா என எதிர்பார்த்துக் காத்திருந்த போது கிளைகளுக்கு நடுவே, அடர்ந்த இலைகளுக்கு உள்ளேயிருந்து வெளிப்பட்டது ஓர் நாள்:)!
மஞ்சள் நிறத்தைப் பார்த்து வழக்கமாக வரும் பெண் தேன் சிட்டு எனத் தவற விட இருந்த நான் கண்களைச் சுற்றிய வெள்ளை வட்டத்தைப் பார்த்ததும் பரவசம் ஆனேன்:).]#3
இவற்றின் வரம்பு கிழக்கு நோக்கி இந்தியத் துணைக்கண்டம் முதல் தென்கிழக்காசியா வரையிலும் இந்தோனேசிய, மலேசியா நாடுகள் வரை பரந்து காணப்படுகின்றன.
இந்திய வெள்ளைக்கண்ணி பறவையை டச்சு விலங்கியல் அறிஞர் கோன்ராட் ஜேக்கப் டெம்மிங்க் 1824_ல் வங்காளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் விவரித்துள்ளார். இந்தக் குடும்பப் பறவைகளின் ஆங்கில மற்றும் அறிவியல் பெயர்கள் கண்களைச் சுற்றியுள்ள வெள்ளை நிறத்தைக் குறிப்பவையாக உள்ளன. அவற்றில் பல வகைப்பாடுகளும் உள்ளன. ஆகவே பெயர் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. புவியியல் வரம்பைத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவில் காணப்படும் பறவையின் ஆங்கிலப் பெயர் "ஓரியண்டல் வெள்ளைக்கண்" என்பதில் இருந்து "இந்திய வெள்ளைக்கண்" என மாற்றப்பட்டது. தமிழில் இந்திய வெள்ளைக்கண்ணி என அழைக்கப்பட்டது.
#4
இப் பறவைகள் குறுங்காடுகள், சதுப்பு நிலங்கள், தோட்டங்கள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கின்றன. வாழ்கின்றன. சமூகப் பாங்கானவை. சிறு கூட்டமாக உணவைத் தேடுகின்றன. சிறு பூச்சிகள், மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்கின்றன. பெரும்பாலும் மரங்களில் காணப்படும், மிக அபூர்வமாகவே தரைக்கு வரும்.
இனப்பெருக்கக் காலத்தில் கூட்டத்திலிருந்து பிரிந்து வாழும். மரக்கிளைகள் பிரியும் இடத்தில் சிலந்திவலை, மரப்பாசி, மரநார் ஆகியவற்றால் தொட்டில் போன்று நெருக்கமாகக் கூடுகளைக் கட்டுகின்றன. கூடு கட்ட 4 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன. இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடுகின்றன. அடை காத்த பத்து நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். இருபாலினப் பெற்றோரும் குஞ்சுகளைக் கவனித்து உணவூட்டுகின்றன. அடுத்த பத்து நாட்களில் குஞ்சுகள் பறக்கத் தயாராகி விடுகின்றன.
#5
**
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக