ஞாயிறு, 5 அக்டோபர், 2025

கிளி ஜோஸியம் - பண்புடன் இணைய இதழின் நவராத்திரி சிறப்பிதழில்..

 


லய வாசலின் முன்னிருந்த
ஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டி
வீதியின் அமைதியான ஓரத்தில்
சாயம் போன குடைக்குக் கீழ்
மூங்கில் கூண்டிற்கு உள்ளே
சைகைக்காகக் காத்திருக்கிறது கிளி.

வருவோர் போவோரைக் கவரும்
வாய்கொள்ளாப் புன்னகையுடன்
பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்
இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்
விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்
தரித்த ஜோஸியர்
விரல்களைச் சொடுக்கவும்
தாவிக் குதித்து வெளியே வருகிறது கிளி.
அதன் பச்சை இறக்கைகள்
பருவமழையால் நனைந்த
இலைகளைப் போல் மின்னுகின்றன.

ஒவ்வொருவருக்காகவும்
அடுக்கிய கட்டிலிருந்து ஓர் அட்டையை
கொத்தி எடுத்து முன்னே வைக்கிறது:
தேர்வுகளை நினைத்து நடுங்கும் மாணவன்,
அலுவலக ஆட்குறைப்பில்
அடுத்தது தானோ எனப் பதறும் தகப்பன்,
மகளின் திருமணத்தைப் பற்றிய கவலையில் தாய்,
கடன்களால் அமைதியற்று அலைக்கழியும் மனிதன்.

ஒவ்வொரு அட்டையும் ஒரு விதி.
ஒவ்வொரு கணிப்பும் ஒரு தீர்க்கதரிசனம்.
கிளி அறியாது
நட்சதிரங்களையோ கிரகங்களையோ
சாஸ்திரங்களையோ, ஆனால்
தலை வணங்குகிறார்கள் மக்கள் அதன்
மெளனத் தீர்ப்புக்கு.

குழந்தைகள் கிளியின் சிவந்த அலகைப் பார்த்து
குதூகலிக்கிறார்கள்
முதியவர்கள் அதன் வாக்குத் துல்லியத்தை வியந்து
சிலாகிக்கிறார்கள்
ஜோஸியர் தலையசைத்து விடைகொடுத்து
அடுத்த வருமானத்திற்குத் தயாராகிறார்.

மாலைச் சூரியன் விழுகிறது
மஞ்சள் வெயிலால் நிறைந்திருந்த தெப்பக் குளம்
இருளத் தொடங்கிய வானத்தால்
கருப்புப் போர்வையை இழுத்து மூடிக் கொள்ள
வீடு நோக்கிக் கைகளை வீசி நடக்கிறார் ஜோஸியர்
கடைசி வாடிக்கையாளரை அனுப்பி விட்டு.

ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் ஆடிய
கூண்டுக்குள் இருந்து
வானத்தைப் பார்த்தபடியே
உடன் செல்கிறது கிளி.
உண்மையான நட்சத்திரங்கள் விண்ணெங்கும்
விதைகளைப் போலச் சிதறிக் கிடக்கின்றன.
ஏங்குகிறது: ‘என் விதியை யார் சொல்வார்,
இக்கூண்டு உடையும் நாளெப்போதென?’

*

படமும் கவிதையும்...
2 அக்டோபர் 2025, பண்புடன் இணைய இதழின் நவராத்திரி சிறப்பிதழில்.., 
நன்றி 'பண்புடன்'!
***





























7 கருத்துகள்:

  1. கிளியின் ஏக்கம் புரிகிறது கூண்டு உடைந்தாலும் பறக்க முடியுமா கிளியால் அதன் இறக்கைகள் கத்திரிக்கப் பட்டு இருக்குமே! கவிதையும் ,படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். சுதந்திரத்துக்காக ஏங்கும் கிளிக்கு இருக்கலாம் கத்திரிக்கப்பட்ட இறக்கைகள் வளரும் எனும் ஒரு நம்பிக்கை. நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  3. எல்லையில்லா வானத்தில் குதூகலத்துடன் பறந்து கொண்டிருந்த கிளியின் உலகம்தான் எவ்வளவு சுருங்கி விட்டது! பாவம்.

    பதிலளிநீக்கு
  4. கூண்டுக்குள் கிளி ரொம்ப பாவம் வேதனை. இதற்கெல்லாம் அனுமதி பெற்றிருப்பார்களோ? இப்படியான பறவைகள், விலங்குகள் (வீட்டுச் செல்லங்கள், வளர்ப்பு விலங்குகள் தவிர) எல்லாம் வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி வாங்க வேண்டும் என்று என் அறிவுக்கு எட்டியவரையில் தெரிந்த ஒன்று.

    செல்லக் கிளி லிஸ்டில் வந்துவிடுமோ? ஆனாலும் பாவம்.

    அது சுதந்திரத்திற்கு ஏங்குகிறது. வெளியில் பறந்தால் உலகம் புதுசாக இருக்குமோ? கொஞ்சம் கஷ்டப்படுமோ? இறக்கைகள் விரித்து நாளாகியதால். நேரம் எடுக்குமோ அட்ஜஸ்ட் செய்து கொள்ள? நமக்குமே நடக்காமல் கை கால்களை அசைக்காமல் இருந்தால் மூட்டி முடங்குவது போல?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கவிதையில் சிந்தனை ரொம்ப நல்லாருக்கு, ராமலக்ஷ்மி.

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin