#1
சென்னகேசவர் கோயில் மைசூரிலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள சோமநாதபுரத்தில், காவேரி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. வைணவ இந்து கோயிலாகிய இது, சென்னகேஷவா கோயில் மற்றும் கேசவா கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சென்னகேசவ என்ற சொல் "அழகான கேசவன்" என்று பொருள்படும். இதுவே ஹொய்சாள அரசர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். ஹொய்சாள கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றும் ஆகும்.
#2
#3
இக்கோயில் கிபி 1268_ஆம் ஆண்டில் ஹொய்சாள மன்னன் மூன்றாம் நரசிம்மனின் கீழ் தளபதியாக இருந்த சோமநாத தண்டநாயகரால் கட்டப்பட்டது. ஹொய்சாளர் கட்டிடக்கலையால் ஆன கோவில்களுள் இதுவே நன்கு பாதுகாக்கப்பட்ட முழுமையான கோயிலாக தற்போது உள்ளது. இது கட்டப்பட்ட காலத்தில் ஹொய்சாள பேரரசு தென்னிந்தியாவில் வலுவாக இருந்தது. குறிப்பாக கர்நாடகத்தில் ஹொய்சாளர்கள் 260 ஆண்டுகள் ஆட்சி செலுத்தி வந்திருக்கின்றனர்.
#5
இக்கோயில் புகழ் பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞருமான ருவாரி மல்லித்தம்மா என்பவரால் கட்டப்பட்டது. இதன் சமச்சீரான கட்டிட அமைப்பு, முதன்மை கோயிலின் கொண்ட ஒரே அளவவிலான மூன்று கருவறைகள், அதன் சிற்பங்கள் போன்ற இயல்புகளால் பிற ஹோய்சாலக் கோயில்களுக்கு மத்தியில் தனித்துவமாக விளங்குகிறது. இதை விடச் சிறப்பான சிற்பங்களையும், சிறப்பான கட்டிடக் கலையையும் கொண்ட பல ஹோய்சாளக் கோயில்கள் இருப்பினும், இக் கோயில் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது.
#6
பெரிய மதிலால் சூழப்பட்ட கோயிலின் நுழைவாயிலில், உயரமான தூண்களைக் கொண்ட ஒரு நுழைவு மண்டபம் அமைந்துள்ளது. இக் கோயிலின் கட்டிடம் மாவுக் கற்களால் அமைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் தூண் வரிசைகளோடு கூடிய சுற்று மண்டபங்களும் உள்ளன. கோயில் கட்டிடங்களின் புறச் சுவர்களுக்கு வெளியேயும் நீண்டிருக்கும் நடை மேடை, பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும் முன் அதனைச் சுற்றி வருவதற்கான இடவசதியை வழங்குகிறது.
நடுவே 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவிலான ஒரு மேடை மீது அமைந்துள்ள முதன்மை கோயில் ஒன்று போலவே அமைந்த மூன்று சன்னதிகளையும் அவற்றின் மீதமைந்த மூன்று கோபுரங்களையும் கொண்டது. கோயிலுக்கு உள்ளே முறையே கேசவன், ஜனார்த்தனன், வேணுகோபாலன் ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
கோயிலின் கீழ்ப் பகுதி, 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவிலான மேடை மேல் அமைந்துள்ளன. மேலுள்ள கோபுரங்களும் அதே வடிவத்தையே பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர அமைப்பிலான மேடை:
#8
நட்சத்திர வடிவத்தைப் பின்பற்றி, கோபுரங்கள்:
#9
#10
கோயிலைச் சுற்றி வந்து அனைத்து சிற்பங்களையும் ரசிக்க நிறைய நேரம் தேவைப்படும். நாங்கள் சென்றிருந்த நேரத்தி வெளிநாட்டினர் ஒரு குழுவாக வந்திருந்தனர். வியப்பை அடக்க முடியாமல் ஒவ்வொரு சிற்பமாக ரசித்தபடி நின்றிருந்தனர். நமது நாட்டினரும் விதிவிலக்கல்ல.
#11
#12
#15
வராகர்:
கீழ் வரும் சிற்பத்தில் உள்ள சிறுதெய்வம் வலக்கையில் ஏந்தியிருக்கும் சோளக்கதிர், வளமையைக் குறிக்கின்றது.
#16கீழ்வரும் சிற்பத்தில் சோளமணிக்குப் பதிலாக தெய்வத்தின் ஒரு கையில் சோளமணிகள் நிரம்பிய கிண்ணம் இருப்பது போலச் செதுப்பட்டிருப்பது, சிற்பியின் கற்பனைத் திறனைக் காட்டுகிறது:
#17
விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றியதோடு தேவையான சுதந்திரத்தையும் பெற்றிருந்திருக்கிறார்கள் சிற்பிகள்.
செவ்வொழுங்குடன் வெகு நுட்பமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் வியக்க வைக்கின்றன:
இக்கோயிலில் உள்ள சிற்பங்களைச் செதுக்கியவர்களின் பெயர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்திய கோயில்களின் வழக்கத்தில் இருந்து சற்று வேறாகவும் பாராட்டுக்குரியதாகவும் உள்ளது. பிரதான சிற்பியாகிய மல்லித்தம்மா, கோயிலிலைச் சுற்றியுள்ள புறச்சுவரில் உள்ள 194 சிற்பங்களில் 40 சிற்பங்களை செதுக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற சிற்பிகளாகிய பல்லையா, சௌடைய்யா, பார்மய்யா,காமய்யா, நஞ்சய்யா ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
#20
*
கோயிலின் உள் மண்டபம், தூண்கள், மேலும் பல சிற்பங்களின் படங்களுடன் பாகம் 2 வரும்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக