திங்கள், 23 நவம்பர், 2009

மறுகூட்டல்


றுபடி மறுபடி கூட்டிப் பார்த்தான் குணா. எத்தனை முறை கூட்டினாலும் தொன்னூற்றெட்டே வந்தது. ஆசிரியரோ முதல் பக்கத்தில் நூற்றுக்கு தொன்னூற்றைந்து என பெரிதாக வட்டமிட்டுக் காட்டியிருந்தார்.

'தப்பு விட்டதோ ஒரே ஒரு ரெண்டு மார்க் கணக்கில். ஒருவேளை எதேனும் ஒரு கேள்வியை விட்டிருப்பேனோ?' வினாத்தாளை வைத்துக் கொண்டு பார்த்தால், அப்படியும் தெரியவில்லை.

சரியெனப் பக்கத்திலிருந்த பாலனிடம் கொடுத்துக் கூட்டிப் பார்க்கச் சொன்னான்.

பாலன் திணறித் திணறி இரண்டு முறை சரி பார்த்ததிலும் அதே தொன்னூற்றெட்டு. “போடா, போய் உடனே சார்கிட்டே சொல்லு. கூட்டலிலேதான் தப்பு!” என்று திருப்பிக் கொடுத்தான்.

அவசரப் படாமல் கவனமாய் இன்னொரு முறை பக்கம் பக்கமாய்ப் பார்த்தான் குணா. எல்லா விடைகளுக்கும் அவற்றின் இடப்பக்கத்தில் மதிப்பெண் இட்டிருந்த ஆசிரியர், நான்காம் பக்கத்தில் கடைசியாய் இருந்த கணக்குக்கு அதன் அடியிலே மூன்று எனச் சுழித்து விட்டிருந்தார். புரிந்து போயிற்று மூன்று மதிப்பெண்கள் எப்படிக் ஆற்றோடு போயிற்று என.

"என்னடா நீ சொல்றியா, இல்லே நான் சொல்லட்டுமா?” எழ எத்தனித்த பாலனை இழுத்து அமரவைத்தான் குணா.

”உனக்கென்ன பைத்தியமா? நீயும் சொல்ல மாட்டேன்கிற. என்னையும் விட மாட்டேன்கிற. பாரு அந்தப் பயலை. மொத மார்க்குன்னு கைதட்டல வாங்கிட்டான். இந்த மூணு மார்க்கால உன் க்ளாஸ் ராங்க்குமில்லே ரெண்டாவதாகுது?”

“தெரியும், போகட்டும் விடு” என்றான் முன் வரிசையில் வானத்தில் மிதக்கிற மாதிரி அமர்ந்திருந்த சரவணனைப் பார்த்தவாறே.

"கணக்கில முதல்னதுக்கே தலைகால் புரியல. ரேங்க கார்ட் வாங்கும் போது ரெண்டு கொம்பே மொழைச்சிடும்" முணுமுணுத்தபடியே இருந்த பாலனை சட்டை செய்யவில்லை குணா.

ப்போது மணி அடித்தது.

“எல்லோரும் மார்க்குகளைச் சரி பார்த்தாச்சா? நாளைக்கு ஆன்சர் பேப்பரில் மறக்காம வீட்டிலிருந்து கையெழுத்து வாங்கிட்டு வந்திடணும். ரிப்போர்ட் கார்ட் இன்னும் இன்னும் ரெண்டு நாளிலே ரெடியாகிடும்” எழுந்தார் வகுப்பாசிரியராகவும் இருந்த கணக்கு ஆசிரியர்.

"சார் நம்ம குணா..." எனத் தாங்க மாட்டாமல், கூவியபடி துள்ளி எழுந்தே விட்டான் இப்போது பாலன்.

அவன் கையை இறுகப் பிடித்தான் குணா. அந்த இரும்புப் பிடியிலும் நெருப்புப் பார்வையிலும் ஆடித்தான் போனான் பாலன். பால்ய காலத்திலிருந்து சிநேகிதனாய் இருப்பவனின் செயல், புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தைத் தந்தது.

“குணாவுக்கு என்ன?” கேட்டார் ஆசிரியர்.

பாலன் திணறி நிற்க, “ஒண்ணுமில்லே சார். அம்மாவும் அப்பாவும் ஒரு கலியாணத்துக்கு வெளியூர் போயிருக்காங்க. கையெழுத்து உடனே வாங்க முடியாதே” சாதுவாகச் சமாளித்தான் குணா.

”சரி, அதனாலென்ன. இது ரிப்போர்ட் கார்ட் இல்லையே. உன் அண்ணன் குருவிடம் வாங்கிட்டு வா, பரவாயில்லை” எனச் சிரித்தார் ஆசிரியர்.

குரு அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு. படிப்பில் சூரப்புலி. பள்ளியின் மாணவர் தலைவனும் என்பதால் அவனைத் தெரியாதவர் கிடையாது.

ஆசிரியர் வெளியேற, மாணவர்கள் பைகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். குணா எழுந்து சென்று சரவணனின் கைகளைப் பற்றிக் குலுக்க அதைச் சற்றும் எதிர்பாராதவனாய் சந்தோஷத்தில் நெளிந்தான் அவன்.

வாசலில் பையோடு முறைத்தபடி நின்றிருந்த பாலனை நெருங்கி அவன் தோள் மேலே கைபோட்டபடி அழைத்துச் சென்றான் சமாதானமாக. கைகள் விலக்கப்பட்ட வேகத்தில் தன் மேலான கோபம் தீரவில்லை அவனுக்கு எனப் புரிந்தது.

ருவரும் பள்ளியின் சைக்கிள் ஸ்டாண்டை அடைந்தபோது வழக்கம் போல அண்ணன் குரு தயாராக ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றியபடி சைக்கிள்மேல் காத்திருந்தான் அவனை டபுள்ஸில் அழைத்துச் செல்ல.

“என்னடா கணக்கு பேப்பர் வந்திடுச்சா?”

“தொன்னூத்தஞ்சு”

“போ! அஞ்சு மார்க் கோட்டை விட்டுட்டியா? அப்போ ரேங்க்?”

“அநேகமாய் செகண்டுதான்”

“இருந்திருந்து நைன்த் ஃபைனலில் இப்படி சறுக்கிட்டியேடா!”

“ஆனைக்கும் அடி சறுக்கும்ங்கிற கதையில்ல தலைவா இது. தானே தலையிலே மண் வாரிப் போட்டுக்கும்ங்கிற கத”

தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அங்கு வந்த பாலன், தங்கள் மாணவர் தலைவனிடம் நடந்ததை விளக்கி, பொங்கிக் கொண்டிருந்த மனதை, போட்டுக் கொடுத்து ஆற்றிக் கொண்டான்.

"முட்டாளா நீ? பெரிய தியாகச் செம்மல்னு நினைப்போ?”

"அய்யோ அப்படில்லாம் இல்லேண்ணா. வீட்ல சொல்லிடாதே. பாரு அவன் இதுவரை என்னை முந்தினதே இல்லை. கைதட்டலும் முதல் மார்க்கும் எப்பவும் எனக்கேதாங்கிற மாதிரி ஆயிடுச்சு. என்னைவிட ஓரிரு மார்க்குதான் கம்மியா வாங்கிருப்பான். அதுவும் நல்ல மார்க்தான்னாலும் பேப்பரை கையில வாங்கும்போது அவன் சந்தோஷப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த முறை முதலாவதுன்னு சார் சொன்னதும் அவன் முகத்துல இருந்த ஆனந்தத்தைப் பார்க்கணுமே. அதுவுமில்லாம எனக்கு சொல்லித் தர வீட்ல நீ இருக்கே. அக்கா, அம்மா, அப்பா இருக்காங்க. அவன் அம்மாப்பா சாதாரண கூலி வேலை செய்யறவங்க. இனித் தன்னாலேயும் முடியுங்கிற நம்பிக்கையோடு பத்தாவது க்ளாஸிலே இன்னும் நல்லாப் பண்ணுவான். அவன் குடும்பமே அவனை நம்பித்தானேண்ணா இருக்கு."

நண்பனைப் பார்த்து பிரமித்து நின்றிருந்தான் பாலன்.

குருவோ சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி விட்டு அப்படியே சகோதரனை இறுகக் கட்டிக் கொண்டான்.

மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.
***

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்104 கருத்துகள்:

 1. நல்ல கதை மேடம். யூத் விகடனில் பார்த்துட்டு கமெண்ட் போட்டிருந்தேன். அந்த சாஸ்வதம் -ங்கிற வார்த்தையை மட்டும் எடுத்திருக்கலாம்.. அவ்ளோ சின்ன பையன் அந்த வார்த்தை சொல்வது சந்தேகம் என்பதால் சொல்கிறேன். தொடர்ந்து நிறைய உங்களிடம் எதிர் பார்க்கிறோம்

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள், கலக்குறீங்க

  விஜய்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் ராமலஷ்மி!
  நல்ல கதை + கருத்துகளோட!! முத்துச்சரம் கருத்துசரமாக விளங்குகிறது!!

  பதிலளிநீக்கு
 4. Mohan Kumar said...

  // நல்ல கதை மேடம். யூத் விகடனில் பார்த்துட்டு கமெண்ட் போட்டிருந்தேன். அந்த சாஸ்வதம் -ங்கிற வார்த்தையை மட்டும் எடுத்திருக்கலாம்.. அவ்ளோ சின்ன பையன் அந்த வார்த்தை சொல்வது சந்தேகம் என்பதால் சொல்கிறேன்.//

  சரிதான்:), விகடனில் உங்கள் கருத்தைப் பார்த்த போது இங்கு பதிகையில் மாற்றிட எண்ணி மறந்து விட்டிருந்தேன். மறுபடி சுட்டியமைக்கு நன்றி. இப்போது அந்த வார்த்தையை நீக்கியாயிற்று:)!

  //தொடர்ந்து நிறைய உங்களிடம் எதிர் பார்க்கிறோம்//

  நன்றி மோகன்குமார்!

  பதிலளிநீக்கு
 5. கவிதை(கள்) said...

  // வாழ்த்துக்கள், கலக்குறீங்க//

  நன்றி விஜய்.

  பதிலளிநீக்கு
 6. சந்தனமுல்லை said...

  // வாழ்த்துகள் ராமலஷ்மி!
  நல்ல கதை + கருத்துகளோட!! முத்துச்சரம் கருத்துசரமாக விளங்குகிறது!!//

  நன்றி சந்தனமுல்லை!

  பதிலளிநீக்கு
 7. இளமை விகடனில் படித்தேன்..நல்ல கதை...

  பதிலளிநீக்கு
 8. அருமையான கதை. முடிவு மனதை நெகிழ்த்தியது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. ஏற்கனவே
  யூத்புல் விகடன் தளத்தில் வாசித்த சிறுகதை. இன்று தான் உங்கள் வலை தளம் எனக்கு அறிமுகம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான சிறுகதை ராமலக்ஷ்மி!

  //மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.//

  கதையின் நெருக்கமான வரிகள்..

  சந்தனமுல்லை said..

  // நல்ல கதை + கருத்துகளோட!! முத்துச்சரம் கருத்துசரமாக விளங்குகிறது!!//

  ஆம்,உண்மை!

  பதிலளிநீக்கு
 11. கதையை படித்து ரசித்தேன். பள்ளியிலேயே மாணவனுக்கு இவ்வளவு பக்குவம் இருப்பது ஆச்சர்யம். கதையோடு கருத்தையும் திணித்தவிதம் அருமை...

  இளமைவிகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. விட்டுக்கொடுத்தலும் சுகமே. நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 13. நல்ல கருத்துள்ள கதை

  வாழ்த்துக்கள் ராம் மேடம்

  பதிலளிநீக்கு
 14. ரொம்ப நல்ல கதை அக்கா...

  இலகு நடையில அழகா கருத்த சொல்லி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 15. இந்த கதையை ரொம்பவே நெருக்கமாக உணர்ந்தேன். :))

  டோட்டல் மிஸ்டேக்னா மட்டும் வாங்க!னு ரொம்ப கறாரா சொல்லிடுவாரு எங்க ஆசிரியர். ஒரு தடவை என் பேப்பரில் கூட்டி பாத்தா நூத்துக்கு நூத்தி நாலு வந்தது. கப்சிப்னு இருந்துட்டேன். :)

  (சாய்ஸ்ல உள்ள ஒரு கொஸ்டினையும் எதுக்கும் இருக்கட்டும்னு எழுதிட்டேன்.) :))

  பதிலளிநீக்கு
 16. ராமலக்ஷ்மி கதை நல்லா இருந்தது ... ஸ்கிப் பண்ணாம முழுதும் படித்தேன் நம்புங்க :-)

  பதிலளிநீக்கு
 17. //இப்போது அந்த வார்த்தையை நீக்கியாயிற்று:)!//

  கதையோட சேர்ந்து இதுவும் நல்லா இருக்கு! ;-)

  பதிலளிநீக்கு
 18. சும்மா சும்மா நடை நல்லா இருக்கு, உடை நல்லா இருக்குனு கமண்ட் போட்டு போரடிக்குது. :))

  நெறைய்ய மிஸ்டேக்கோட ஒரு கதை எழுதுங்க பாப்போம். :p

  பதிலளிநீக்கு
 19. விட்டுக்கொடுத்து போவோர் கெட்டுப்போவதில்லை..

  அருமையான கருத்தாழமிக்க கதை இவ்வளவு சின்னஞ்சிறிய பிள்ளைக்கும் எவ்ளோ பெரிய தங்க மனசு..

  நல்ல ஃப்லோ மேடம்..

  பதிலளிநீக்கு
 20. //மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.//

  எனக்கும்தான்... உங்கள் எழுத்துகளை பார்க்கின்றபொழுதும் பெருமையா இருக்கு நண்பா, வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 21. இதுபோல் நல்ல "குணா"க்களை உருவாக்கி நம்ம மக்களின் மனதை பெரிதாக்க முயலும் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதுங்க, ராமலக்ஷ்மி! :)

  பதிலளிநீக்கு
 22. இப்படி என்னைப் பார்த்து எல்லோருமே பரிதாப பட்டு இருந்தால் நானும் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பேன்

  பதிலளிநீக்கு
 23. அருமையான கதை. சொல்லியிருக்கும் விதமும். விகடன்ல நான் போட்ட கமெண்ட்டை காணும் :(

  அம்பியோட தங்க மனசையும் வெளிப்படுத்திருச்சே இந்தக் கதை! :P

  பதிலளிநீக்கு
 24. எப்படிக் கூட்டினாலும் ஒவ்வொரு மறுகூட்டலிலும், மதிப்பெண் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. குணாவை கட்டித் தழுவவேண்டும் போலிருக்கிறது. நல்ல கதை. வாழ்த்துக்கள் மேடம்

  பதிலளிநீக்கு
 26. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா!

  நெகிழவைத்த கதை.. குணாவை அழகாகப் படைச்சிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 27. இந்த பள்ளித் தோழமை, குணாவின் குணம் இதெல்லாம் தழைத்தோங்க வேண்டும். கதையின் கரு, முடிவு எல்லாம் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. புலவன் புலிகேசி said...

  //இளமை விகடனில் படித்தேன்..நல்ல கதை...//

  நன்றி புலிகேசி.

  பதிலளிநீக்கு
 29. அமுதா said...

  //அருமையான கதை. முடிவு மனதை நெகிழ்த்தியது. வாழ்த்துக்கள்//

  நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 30. tamiluthayam said...

  //ஏற்கனவே
  யூத்புல் விகடன் தளத்தில் வாசித்த சிறுகதை. இன்று தான் உங்கள் வலை தளம் எனக்கு அறிமுகம். வாழ்த்துக்கள்.//

  தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தமிழ்உதயம்.

  பதிலளிநீக்கு
 31. பா.ராஜாராம் said...

  //அருமையான சிறுகதை ராமலக்ஷ்மி!//

  //கதையின் நெருக்கமான வரிகள்..//

  வருகைக்கும் வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் நன்றிகள் ராஜாராம்.

  பதிலளிநீக்கு
 32. க.பாலாசி said...

  //கதையை படித்து ரசித்தேன். பள்ளியிலேயே மாணவனுக்கு இவ்வளவு பக்குவம் இருப்பது ஆச்சர்யம்.//

  இருந்தால் நல்லாயிருக்கும்தானே?

  //கதையோடு கருத்தையும் திணித்தவிதம் அருமை...//

  திணித்துதான் விட்டிருக்கிறேன், வழக்கம் போலவே:)!

  //இளமைவிகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்...//

  தங்கள் தொடர் வருகைக்க்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பாலாசி.

  பதிலளிநீக்கு
 33. சின்ன அம்மிணி said...

  //விட்டுக்கொடுத்தலும் சுகமே.//

  நிச்சயமாக.

  //நல்ல கதை.//

  நன்றி அம்மிணி.

  பதிலளிநீக்கு
 34. அமிர்தவர்ஷினி அம்மா said...

  //நல்ல கருத்துள்ள கதை

  வாழ்த்துக்கள் ராம் மேடம்//

  நன்றி அமித்து அம்மா.

  பதிலளிநீக்கு
 35. சுசி said...

  //ரொம்ப நல்ல கதை அக்கா...

  இலகு நடையில அழகா கருத்த சொல்லி இருக்கீங்க.//

  உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி சுசி:)!

  பதிலளிநீக்கு
 36. பெரிய விஷயத்தை சின்னப் பையன்களை வைத்து எளிமையாக சொல்லி விட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
 37. யூத்புல் விகடனில் வந்த கதை அருமை! வாழ்த்துக்கள்!

  மிகவும் எளிய நடையில் அருமையான கவிதை நயம் மிக்க கதை!

  என் மனதில் குணா பெற்றது.. நீங்கா இடம்....

  விட்டு கொடுத்தலில் இருக்கும் சுகமே அலாதிதான்!

  முடிவும் அருமை சகோதரி!

  பதிலளிநீக்கு
 38. ambi said...

  // இந்த கதையை ரொம்பவே நெருக்கமாக உணர்ந்தேன். :))//

  வாங்க அம்பி. இதே கருத்தை விகடன் இணையபக்கத்திலும் ஒருவர் கூறி, தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்:)!

  // டோட்டல் மிஸ்டேக்னா மட்டும் வாங்க!னு ரொம்ப கறாரா சொல்லிடுவாரு எங்க ஆசிரியர். ஒரு தடவை என் பேப்பரில் கூட்டி பாத்தா நூத்துக்கு நூத்தி நாலு வந்தது. கப்சிப்னு இருந்துட்டேன். :)

  (சாய்ஸ்ல உள்ள ஒரு கொஸ்டினையும் எதுக்கும் இருக்கட்டும்னு எழுதிட்டேன்.) :))//

  எத்தனை சமர்த்து:))!

  //சும்மா சும்மா நடை நல்லா இருக்கு, உடை நல்லா இருக்குனு கமண்ட் போட்டு போரடிக்குது. :))

  நெறைய்ய மிஸ்டேக்கோட ஒரு கதை எழுதுங்க பாப்போம். :p//

  ஒரு தீர்மானத்தோடுதான் இருக்கிறீர்கள்:))!

  பதிலளிநீக்கு
 39. கிரி said...

  // ராமலக்ஷ்மி கதை நல்லா இருந்தது ... ஸ்கிப் பண்ணாம முழுதும் படித்தேன் நம்புங்க :-)//

  நம்பி விட்டேன்:)!

  ***/ //இப்போது அந்த வார்த்தையை நீக்கியாயிற்று:)!//

  கதையோட சேர்ந்து இதுவும் நல்லா இருக்கு! ;-)/***

  சரி என்று பட்டால் சரி செய்து விட வேண்டும்தானே? நன்றி கிரி:)!

  பதிலளிநீக்கு
 40. அன்புடன் அருணா said...

  // பூங்கொத்து ராமலக்ஷ்மி!//

  தவறாமல் வந்து தந்தபடி இருக்கும் பூங்கொத்துக்களுக்கு நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 41. பிரியமுடன்...வசந்த் said...

  //விட்டுக்கொடுத்து போவோர் கெட்டுப்போவதில்லை..//

  சரியான காரணங்களுடன் செய்கையில் அந்தப் பெருந்தன்மை ஏமாளித்தனமாகாது என்பதுதான் என் கருத்தும் வசந்த்.

  //அருமையான கருத்தாழமிக்க கதை இவ்வளவு சின்னஞ்சிறிய பிள்ளைக்கும் எவ்ளோ பெரிய தங்க மனசு..

  நல்ல ஃப்லோ மேடம்..//

  தப்பில்லைதானே? நன்றி வசந்த்.

  பதிலளிநீக்கு
 42. கவிநயா said...

  //அருமையான கதை. சொல்லியிருக்கும் விதமும்.//

  நன்றி கவிநயா.

  // விகடன்ல நான் போட்ட கமெண்ட்டை காணும் :(//

  உடனடியாக வெளியாகாது. மறுநாள்தான் பெரும்பாலும் வெளியிடுவார்கள்.

  // அம்பியோட தங்க மனசையும் வெளிப்படுத்திருச்சே இந்தக் கதை! :P//

  ஆமாங்க நூற்றுக்கு நூற்றிநாலு யாருக்கு கிடைக்கும்:))?

  பதிலளிநீக்கு
 43. நசரேயன் said...

  //இப்படி என்னைப் பார்த்து எல்லோருமே பரிதாப பட்டு இருந்தால் நானும் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பேன்//

  என்ன சொல்ல வருகிறீர்கள் என புரிகிறது நசரேயன்:)! மதிப்பெண்களை வைத்துதான் ஒருவரது திறமை நிர்ணயிக்கப் படும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை என்றாலும் இன்றைய நடைமுறை அப்படி இருப்பது ஒருபுறமிருக்க, வெற்றியின் விளிம்பில் ஒவ்வொரு முறையும் அதைத் தவற விட்ட தோழனுக்காக, தவறுதலாய் வந்த அறிவிப்பில் அவன் பெற்ற மகிழ்ச்சியைக் கலைக்க வேண்டாமென குணா நினைப்பதாகக் காட்டியிருக்கிறேன். கூடவே அதனால் நலம்தரக் கூடிய சில பின்விளைவுகளையும் அவன் யோசித்ததாக. பரிதாபத்தில் தனக்கு கிடைத்த வெற்றி என சரவணனுக்குத் தெரிய வந்தால் அவனே அதை விரும்ப மாட்டான் என்றுதான் நினைக்கிறேன்:)! நன்றி நசரேயன்.

  பதிலளிநீக்கு
 44. கோபிநாத் said...

  //அம்புட்டு அருமை!! ;-))//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபிநாத்.

  பதிலளிநீக்கு
 45. ஆ.ஞானசேகரன் said...

  ***/ //மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.//

  எனக்கும்தான்... உங்கள் எழுத்துகளை பார்க்கின்றபொழுதும் பெருமையா இருக்கு நண்பா, வாழ்த்துகள்.//***

  மிக்க நன்றி ஞானசேகரன்.

  பதிலளிநீக்கு
 46. ஈ ரா said...

  //நல்ல கதை மேடம்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஈ ரா.

  பதிலளிநீக்கு
 47. goma said...

  //எப்படிக் கூட்டினாலும் ஒவ்வொரு மறுகூட்டலிலும், மதிப்பெண் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
  வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி கோமா. விகடன் நவம்பர் மின்னிதழ் பக்கத்தில் பெயர் சரியாகப் பதிவாகாமல் வெளியாகியிருக்கும் கருத்தும் இந்தக் கதைக்காகத் தாங்கள் இட்டதென்றே நினைக்கிறேன். அதற்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 48. வருண் said...

  //இதுபோல் நல்ல "குணா"க்களை உருவாக்கி நம்ம மக்களின் மனதை பெரிதாக்க முயலும் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதுங்க, ராமலக்ஷ்மி! :)//

  ஸ்மைலியில் இருக்கும் கிண்டல் (சரிதானே:)?) புரியுது வருண். முயற்சி பலித்தால் சந்தோஷம்தான். அப்புறம், இந்தக் கதை சரியான கோணத்தில் பார்க்கப்பட வேண்டும். நசரேயனுக்கும் வசந்துக்கும் தந்திருக்கும் பதில்களில் சில விளக்கங்கள் இருக்கின்றன. அதுபோக இக்கதையின் பொறியையும் சொல்லி விடுகிறேன். போன வருஷம் 10வது தேர்வில் ஒரு மாணவன் மறுகூட்டலில் மாநிலத்தில் முதலாவதாக வந்ததாகத் தாமதமாக அறிவிக்கப் பட்டான். அரசு மரியாதை, கணினி பரிசு எல்லாம் இழந்தது வேதனை, அதுவும் சற்று வசதிக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவன். பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டது என்றாலும் ஆசிரியர்கள் கவனக் குறைவால் இப்படி சாதாரணமாகவே எவ்வளவோ நடக்கின்றன. யாரோ செய்யும் தவறில் முதலாவது வந்தவனை நீயில்லை இந்தப் பாராட்டுக்குத் தகுதியானவன் என சொல்லுவது அவனுக்கும்தானே வலிக்கும் என நினைக்கையில் பிறந்த கதை:)! கருத்துப் பகிர்வுக்கு வழிவகுத்த ஸ்மைலிக்கு நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 49. " உழவன் " " Uzhavan " said...

  //குணாவை கட்டித் தழுவவேண்டும் போலிருக்கிறது. நல்ல கதை. வாழ்த்துக்கள் மேடம்//

  நன்றி உழவன்:)!

  பதிலளிநீக்கு
 50. சுந்தரா said...

  // வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா!

  நெகிழவைத்த கதை.. குணாவை அழகாகப் படைச்சிருக்கீங்க.//

  மிக்க நன்றி சுந்தரா.

  பதிலளிநீக்கு
 51. சதங்கா (Sathanga) said...

  // இந்த பள்ளித் தோழமை, குணாவின் குணம் இதெல்லாம் தழைத்தோங்க வேண்டும். கதையின் கரு, முடிவு எல்லாம் அருமை. வாழ்த்துக்கள். //

  தவறாமல் தரும் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சதங்கா.

  பதிலளிநீக்கு
 52. ஸ்ரீராம். said...

  //பெரிய விஷயத்தை சின்னப் பையன்களை வைத்து எளிமையாக சொல்லி விட்டீர்கள்...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 53. RAMYA said...

  // யூத்புல் விகடனில் வந்த கதை அருமை! வாழ்த்துக்கள்!

  மிகவும் எளிய நடையில் அருமையான கவிதை நயம் மிக்க கதை!

  என் மனதில் குணா பெற்றது.. நீங்கா இடம்....

  விட்டு கொடுத்தலில் இருக்கும் சுகமே அலாதிதான்!

  முடிவும் அருமை சகோதரி!//

  தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி ரம்யா.

  பதிலளிநீக்கு
 54. விகடனில் படித்தேன்..நல்ல கதை...

  பதிலளிநீக்கு
 55. Sangkavi said...

  //விகடனில் படித்தேன்..நல்ல கதை...//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி.

  பதிலளிநீக்கு
 56. இதுபோல் குணாக்களைப்பார்த்து சிலர் திருந்தனும்னு நினைத்தேன்.

  My side story:

  நான் கல்லூரியில் படிக்கும்போது என்னால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு மாணவிக்கு கூட்டுதலில் தவறு செய்து ப்ரபஸர் அதிக மதிப்பெண்கள் கொடுத்துவிட்டதாக சில சக மாணவிகள் என்னிடம் வது "பொறணி" சொன்னார்கள். They said she did not want to get that mistake fixed as she might get lower score. என்னால் நம்பவே முடியவில்லை!

  உங்கள் கதை படிக்கும்போது அந்த நினைவு வந்தது. அந்த மாணவியும் இதுபோல் குணாவைப்பார்த்து திருந்தனும்னு நினைத்துக்கொண்டேன்.

  I formed a great opinion on that girl and liked her a lot. She was a wonderful girl and a good friend. So, I did not know whom to believe as she was closer than the other girls who told about this.

  Still I find it hard to accept her being like that. I feel bad when honorable people do such silly things. The reason is that I can never enjoy such miscalculated score ever!

  இதுதான் என் பக்கத்து ஸ்டோரி :)

  பதிலளிநீக்கு
 57. ராமலக்ஷ்மி said...
  வருண் said...

  ****//இதுபோல் நல்ல "குணா"க்களை உருவாக்கி நம்ம மக்களின் மனதை பெரிதாக்க முயலும் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதுங்க, ராமலக்ஷ்மி! :)//

  ஸ்மைலியில் இருக்கும் கிண்டல் (சரிதானே:)?) புரியுது வருண். முயற்சி பலித்தால் சந்தோஷம்தான். அப்புறம், இந்தக் கதை சரியான கோணத்தில் பார்க்கப்பட வேண்டும். நசரேயனுக்கும் வசந்துக்கும் தந்திருக்கும் பதில்களில் சில விளக்கங்கள் இருக்கின்றன. அதுபோக இக்கதையின் பொறியையும் சொல்லி விடுகிறேன். போன வருஷம் 10வது தேர்வில் ஒரு மாணவன் மறுகூட்டலில் மாநிலத்தில் முதலாவதாக வந்ததாகத் தாமதமாக அறிவிக்கப் பட்டான். அரசு மரியாதை, கணினி பரிசு எல்லாம் இழந்தது வேதனை, அதுவும் சற்று வசதிக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவன். பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டது என்றாலும் ஆசிரியர்கள் கவனக் குறைவால் இப்படி சாதாரணமாகவே எவ்வளவோ நடக்கின்றன. யாரோ செய்யும் தவறில் முதலாவது வந்தவனை நீயில்லை இந்தப் பாராட்டுக்குத் தகுதியானவன் என சொல்லுவது அவனுக்கும்தானே வலிக்கும் என நினைக்கையில் பிறந்த கதை:)! கருத்துப் பகிர்வுக்கு வழிவகுத்த ஸ்மைலிக்கு நன்றி வருண்.

  November 25, 2009 10:41 AM ***

  என்னங்க ராமலக்ஷ்மி, பின்னூட்டம் மாறிவிட்டது (கொஞ்சம் மாற்றியிருக்கீங்க).

  இல்லைங்க நான் கிண்டல் தொனியில் இதை சொல்லவில்லை.

  குணாவைவிட, இந்த குணாவை உருவாக்கிய உங்களுக்குத்தான் பாராட்டு போய் சேரனும்ங்கிற மாதிரி சொல்ல வந்தேன்.

  Thanks for the additional information about 10th grade marks and mess up :(

  பதிலளிநீக்கு
 58. @ வருண்,
  பின்னூட்டம் அதிக மாற்றமின்றி சில விளக்கங்களைச் சேர்த்துக் கொண்டு மறுபடி வெளியாகியுள்ளது:)! வழக்கமாகவே எதுவானாலும் நேரடியாக சொல்லிவிடுவீர்கள் என்பதால் எனக்கே நீங்கள் அப்படி விளையாட்டாக சொல்லியிருக்க மாட்டீர்களோ என ஒரு சந்தேகமும் வந்து விட்டது. ஆகையால்தான் ‘சரிதானா’ எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஏமாற்றவில்லை நீங்கள்:)!. மிக்க நன்றி வருண். எல்லோரும் 'எப்போதும்' விட்டுக் கொடுங்கள் என்பதன்றி அந்த பெருந்தன்மைக்கு சரியான காரணங்களும் உள்ளன என சொல்லிக் கொள்ளவே விரும்பினேன்.

  அதே போன்ற ஆனால் எதிர்மறையான நிகழ்வை, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருப்பதற்கும் நன்றி. படிப்பவர்களை சிந்திக்கவைக்கும் உங்கள் பக்கக் கதையும்.

  பதிலளிநீக்கு
 59. பள்ளி வாழ்கை மனதில் தென்றலாக வீசினாலும் பாள்ளி வாழ்கையில் நான் குணாவாக இருந்ததில்லையே என்று நினைக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 60. துளசி said...
  //பள்ளி வாழ்கை மனதில் தென்றலாக வீசினாலும்//

  ஆமாங்க வாசிக்கையில் தத்தமது பள்ளி கல்லூரி நினைவுகள் வந்து அதைப் பகிர்ந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள் இங்கே. நான் உங்கள் தளத்தில் மிக மிக விரும்பி வாசித்த தொடர்களில் ’அக்கா’வுக்கு அடுத்தது ‘பள்ளி நினைவுகள்’தான். நீங்கள் இப்படிச் சொன்னதும் எனக்கு அந்த நினைவு வந்து விட்டது:)! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 61. கருத்தாழம் கொண்ட நல்லபடைப்பு.

  பதிலளிநீக்கு
 62. Dr.எம்.கே.முருகானந்தன் said...

  //கருத்தாழம் கொண்ட நல்லபடைப்பு.//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டாக்டர்.

  பதிலளிநீக்கு
 63. taamira parani chedi ondru thalaiththu thoppaagi irukkiradhu. perumai padugiren.

  பதிலளிநீக்கு
 64. http://www.thandora.in/2009/11/blog-post_26.html

  உங்களுக்கு ஒரு அழைப்பு...

  பதிலளிநீக்கு
 65. இந்த மாடல் கதைகள் நிறைய படித்திருந்தாலும் களம் புதிது.

  ரொம்ப டச்சிங்காக இருந்தது. எக்ஸெலெண்ட் செண்டிமெண்ட். நல்ல நடை.

  பதிலளிநீக்கு
 66. ஊகிக்கக்கூடிய முடிவு என்றாலும் நான் ஊகிக்கவில்லை. வேறெதுவாவது காரணம் இருக்கும் என நினைத்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 67. //அந்த மாணவியும் இதுபோல் குணாவைப் பார்த்து திருந்தனும்னு நினைத்துக்கொண்டேன்.//
  சென்ற வருடம் என் மகளுக்கு நிகழ்ந்தது. அவளுடைய ஆசிரியர் அவளின் விடைத்தாளில் சில மதிப்பெண்கள் அதிகமாக அளித்திருந்தார். என் மகள் அதைக் கண்டுபிடித்து, கூட்டலில் சிறுதவறு என்று சொல்லி உண்மையாக வரவேண்டிய குறைந்த மதிப்பெண்ணையே பெற்றுக்கொண்டாள். அதற்காக அந்த ஆசிரியர் வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அவளைப் புகழ்ந்து பேசினார்.

  பதிலளிநீக்கு
 68. Chitra said...

  //taamira parani chedi ondru thalaiththu thoppaagi irukkiradhu. perumai padugiren.//

  தாமிரபரணிக் கரையோரம் வளர்ந்த இன்னொரு செடியின் பாராட்டுக்கு மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 69. தண்டோரா ...... said...

  // உங்களுக்கு ஒரு அழைப்பு..//

  அழகு பற்றிய உங்கள் இடுகை அற்புதம் தண்டோரா. உங்கள் அன்பான அழைப்புக்கும் என் நன்றி. முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 70. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //ஊகிக்கக்கூடிய முடிவு என்றாலும் நான் ஊகிக்கவில்லை. வேறெதுவாவது காரணம் இருக்கும் என நினைத்துவிட்டேன்.//

  :)!

  //இந்த மாடல் கதைகள் நிறைய படித்திருந்தாலும் களம் புதிது.

  ரொம்ப டச்சிங்காக இருந்தது. எக்ஸெலெண்ட் செண்டிமெண்ட். நல்ல நடை.//

  பாராட்டுக்கு நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 71. பாலராஜன்கீதா said...

  ***/ //அந்த மாணவியும் இதுபோல் குணாவைப் பார்த்து திருந்தனும்னு நினைத்துக்கொண்டேன்.//

  சென்ற வருடம் என் மகளுக்கு நிகழ்ந்தது. அவளுடைய ஆசிரியர் அவளின் விடைத்தாளில் சில மதிப்பெண்கள் அதிகமாக அளித்திருந்தார். என் மகள் அதைக் கண்டுபிடித்து, கூட்டலில் சிறுதவறு என்று சொல்லி உண்மையாக வரவேண்டிய குறைந்த மதிப்பெண்ணையே பெற்றுக்கொண்டாள். அதற்காக அந்த ஆசிரியர் வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அவளைப் புகழ்ந்து பேசினார்./***

  பதிலளிநீக்கு
 72. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. தகப்பனாக நீங்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் சார். உங்கள் மகளின் கைகளைப் பற்றி மானசீகமாகக் குலுக்கி என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  வருகைக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 73. வருண் said...

  //இதுபோல் குணாக்களைப்பார்த்து சிலர் திருந்தனும்னு நினைத்தேன்.//

  பாலராஜன் கீதா அவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள் வருண். குணாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என மகிழ்ச்சி அடைவோம்.

  பதிலளிநீக்கு
 74. ய‌க்கோவ்..எப்ப்டி இருக்கீங்க‌?

  பதிலளிநீக்கு
 75. தமயந்தி said...

  // ய‌க்கோவ்..எப்ப்டி இருக்கீங்க‌? //

  அன்பான விசாரிப்புக்கு நன்றி தமயந்தி:)!

  பதிலளிநீக்கு
 76. திறமைகள் இங்கே கொட்டிக்கிடக்கிறது. எனக்கு தெரிந்து யூத் விகடனில் உங்களின் பல படைப்புகள் வெளிவந்திருக்கிறது. அதிகமான வாசகர்கள் படித்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள். எழுத்துக்களில் நயம்.... கருத்துக்களில் நச் பஞ்ச். முத்துசரம் உண்மையிலே முத்துக்கள் தான். தொடரட்டும் உங்கள் வெற்றி.

  நிதானமான பதிவுகள். எடுத்தெறியாது வார்த்தைகள். அன்பாக தொடரும் 100-க்கும் மேற்பட்ட உள்ளங்கள் முத்துக்களாக சரமாக இங்கே. மானசிகமாக பின்தொடர்ந்து வாசிக்கும் உள்ளங்களும் எண்ணிக்கையில் அடங்கா. இவையெல்லாம் உங்களின் வெற்றிக்கு ஒரு காரணம். முத்துச்சரத்தில் இன்னும் பல முத்துக்கள் பதிக்க வாழ்த்துக்கிறேன் அக்கா.

  பதிலளிநீக்கு
 77. @ கடையம் ஆனந்த்,

  மிக்க நன்றி ஆனந்த். உங்கள் போன்றவர்களின் தொடர் வருகையும் ஊக்கமுமே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது என்றால் அது மிகையே அன்று.

  பதிலளிநீக்கு
 78. @ சிங்கக்குட்டி,

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி.

  பதிலளிநீக்கு
 79. //மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது...//

  அக்கா,

  முத்துச்சரம் மிகமிக நேர்த்தியாய் கோர்க்கப் பட்டிருக்கிறது.

  அழுத்தமான, இன்றைய தலைமுறைக்கு அவசியமான கதை.

  பதிலளிநீக்கு
 80. சத்ரியன் said...

  //அக்கா,

  முத்துச்சரம் மிகமிக நேர்த்தியாய் கோர்க்கப் பட்டிருக்கிறது.

  அழுத்தமான, இன்றைய தலைமுறைக்கு அவசியமான கதை.//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.

  பதிலளிநீக்கு
 81. விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!!

  கதை மிக அருமை!!

  பதிலளிநீக்கு
 82. Mrs.Menagasathia said...

  //விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!!

  கதை மிக அருமை!!//

  கருத்துக்கும் தங்கள் முதல் வருகைக்கும் நன்றி Mrs.Menagasathia!

  பதிலளிநீக்கு
 83. ஒரு சின்ன பையனிடம் இயல்பாகவே அமைந்த
  HUMAN RELATIONS APPROACH கண்டு
  மனம் நெகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 84. ****ராமலக்ஷ்மி said...

  வருண் said...

  //இதுபோல் குணாக்களைப்பார்த்து சிலர் திருந்தனும்னு நினைத்தேன்.//

  பாலராஜன் கீதா அவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள் வருண். குணாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என மகிழ்ச்சி அடைவோம்.***

  சந்தோஷமாக இருக்குங்க, பாலராஜன் கீதா மற்றும் ராமலக்ஷ்மி!

  பகிர்தலுக்கு நன்றிங்க, பாலராஜன் கீதா!

  பதிலளிநீக்கு
 85. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  // ஒரு சின்ன பையனிடம் இயல்பாகவே அமைந்த
  HUMAN RELATIONS APPROACH கண்டு
  மனம் நெகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்!!//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆர் ராமமூர்த்தி!

  பதிலளிநீக்கு
 86. வருண் said...

  // சந்தோஷமாக இருக்குங்க, பாலராஜன் கீதா மற்றும் ராமலக்ஷ்மி! //

  உங்கள் சந்தோஷம் வாழ்த்துக்களாக பாலராஜன்கீதா அவர்களின் மகளைச் சென்றடையும். நன்றி வருண்:)!

  பதிலளிநீக்கு
 87. டிசம்பர் 1-15 தேவதை இதழ்ல உங்க வலைப்பூ பற்றிய அறிமுகம் அசத்தலாக இருந்தது. முன்பே நான் யூத்புல் விகடனில் மறுகூட்டல் சிறுகதையை படித்து விட்டேன். அதற்கு மறுமொழியிட முயற்சித்த போது இணையம் ஒத்துழைக்க வில்லை. எனவே இப்போது கூறுகிறேன். வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 88. @ சரண்,

  தகவலுக்கு மிக்க நன்றி சரண். பெங்களூரில் எல்லா தமிழ் வார, மாத இதழ்களும் சற்று தாமதமாகத்தான் கிடைக்கின்றன. வாங்கிப் பார்க்கிறேன்!

  சிறுகதை பற்றி மறக்காமல் மறுபடி வந்து வாழ்த்தியமைக்கும் நன்றி:)!

  பதிலளிநீக்கு
 89. ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க. நெகிழ்ச்சியான கருத்து.

  பதிலளிநீக்கு
 90. A very late comment..!! hahaha..

  கதை அருமை.. நான் யூகித்த வகையில் அமையாதது கண்டு மிக்க மகிழ்ச்சி!!

  நல்ல சிறுகதை..!!

  பதிலளிநீக்கு
 91. மாணவப் பருவத்திலேயே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைவருக்குமே எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை மறு கூட்டல் சிறுகதை அழகாக விளக்கியிருந்தது. இந்த நெகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத படி, வேதாரண்யத்தில் மழலைகளின் மரண செய்தி என்னையும் உலுக்கி விட்டது. மனிதனின் வசதிக்காக கண்டறிந்த எல்லாவற்றையுமே தன்னுடைய அழிவுக்குப் பயன்படுத்துவதில் மனிதனுடன் போட்டியிட எந்த உயிரினங்களாலும் முடியாது என்ற வேதனையுடன் என்னுடைய வலைபக்கத்தில் ஒரு பதிவை இட்டிருக்கிறேன்.
  http://writer-saran.blogspot.com/2009/12/blog-post_04.html

  பதிலளிநீக்கு
 92. Shakthiprabha said...

  //ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க. நெகிழ்ச்சியான கருத்து.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷக்திப்ரபா.

  பதிலளிநீக்கு
 93. ரங்கன் said...

  // A very late comment..!! hahaha..

  கதை அருமை.. நான் யூகித்த வகையில் அமையாதது கண்டு மிக்க மகிழ்ச்சி!!

  நல்ல சிறுகதை..!!//

  எப்போது வந்தால் என்ன கருத்தைப் பதிந்திருக்கிறீர்களே, அதற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ரங்கன். நீங்கள் யூகித்த முடிவு என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 94. @ சரண்,

  கதை பற்றிய கருத்துக்கும், தங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரண். வருத்தத்துக்குரிய நிகழ்வு அது.

  பதிலளிநீக்கு
 95. நான் யூகித்தது என்னவென்றால்:

  அந்த முதல் மதிப்பெண் பெற்ற சிறுவனிடம், நமது பாலன் குணாவின் விட்டுகொடுத்தலை பற்றி “போட்டு குடுக்க”..

  அந்த சிறுவன் குணாவை சந்தித்து நன்றி சொல்ல..
  பிறகு அந்த இருவரும் நட்பாகிறார்கள்..
  ..

  இதுவே நான் யூகித்தது..!!

  பதிலளிநீக்கு
 96. hmm, Continue to rock M'am. Congrats for youthful vikatan

  (Tamil font problem. pl excuse)

  Anujanya

  பதிலளிநீக்கு
 97. @ ரங்கன்,
  அவர்களிருவருக்கும் போட்டி இருந்தாலும் பகை இருப்பதாகக் காட்டாததால் இந்த முடிவு எனக்குத் தோன்றவில்லை. உங்கள் யூகத்தைச் சொன்னதற்கு என் நன்றிகள் ரங்கன். நேரம் கிடைத்தால் இக்கதையின் கரு பிறந்த விதத்தை வருண் அவர்களுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்:)!

  பதிலளிநீக்கு
 98. அனுஜன்யா said...

  // hmm, Continue to rock M'am. Congrats for youthful vikatan//

  ஊக்கம் தரும் வாழ்த்துக்களுக்கு நன்றி அனுஜன்யா.

  பதிலளிநீக்கு
 99. மேடம் ஒரு உதவி. விகடன் முகப்பு பக்கத்தில் இருந்தத உங்கள் கதை பற்றிய அறிவிப்பை ஸ்நாப் ஷாட்டாக உங்கள் பதிவில் இணைத்திருக்கிறீர்கள். இது எப்படி என்று விளக்கம் சொல்ல முடியுமா?

  மேலும் யூத்புல் விகடனுக்கு wordpad டாக்குமென்ட்டில் அழகி சாப்ட்வேர் பயன்படுத்தி யுனிகோடு பாண்டில் டைப் செய்து சாதாரணமாக திறந்து பார்த்தால் வெறும் கட்டங்கள் தானே தெரிகின்றன. உங்களுக்கு நேரம் கிடைத்தால் இது குறித்தும் விளக்கம் வேண்டும்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 100. ராமலக்ஷ்மி said...

  சரண் said...

  //மேடம் ஒரு உதவி. விகடன் முகப்பு பக்கத்தில் இருந்தத உங்கள் கதை பற்றிய அறிவிப்பை ஸ்நாப் ஷாட்டாக உங்கள் பதிவில் இணைத்திருக்கிறீர்கள். இது எப்படி என்று விளக்கம் சொல்ல முடியுமா?//

  நாஞ்சில் பிரதாப் ஏற்கனவே இதுபற்றி உங்களுக்கு விளக்கம் தந்ததிருந்தாலும் நானும் சொல்லுகிறேன். Print Screen --Paste in Paint and save as jpg file--crop the portion you need.

  //மேலும் யூத்புல் விகடனுக்கு wordpad டாக்குமென்ட்டில் அழகி சாப்ட்வேர் பயன்படுத்தி யுனிகோடு பாண்டில் டைப் செய்து சாதாரணமாக திறந்து பார்த்தால் வெறும் கட்டங்கள் தானே தெரிகின்றன. உங்களுக்கு நேரம் கிடைத்தால் இது குறித்தும் விளக்கம் வேண்டும்.//

  வேறொரு நண்பரும் இதே சந்தேகத்தை முன் வைத்திருந்தார். NHM writer பயன்படுத்திப் பாருங்கள். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin