செவ்வாய், 29 ஜூலை, 2025

பக்ஷி காசி - ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் (1)

 #1

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ளது  ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் (Ranganathittu Bird Sanctuary). ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், மைசூருக்கு வடக்கே 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கர்நாடகாவின் ‘பக்ஷி காசி’ என, பறவைகளைப் பாதுகாக்கும் புனிதமான இடம் எனும் பொருள்பட அழைக்கப்படுகிறது. 

#2  

#3


மாநிலத்தின் மிகப் பெரிய பறவைகள் காப்பகம் இதுவே.  சுமார் 40 ஏக்கர் (16 ஹெக்டேர்) பரப்பளவு கொண்டது. காவிரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது.

1645 - 1648 ஆண்டுகளில் அப்போதைய மைசூர் மன்னர் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது இத்தீவுகள் உண்டானது. 

#4

பின்னாளில் பறவையியலாளர் சலீம் அலி, பல வகையான பறவைகள் இத்தீவுகளைத் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்து,

மைசூர் மன்னரை 1940_ஆம் ஆண்டு இதனை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கத் தூண்டி அதில் வெற்றியும் பெற்றார். அதனாலேயே இங்கு அவரது நினைவாக அவரது பெயரில் ஒரு ஆய்வு மையம் உள்ளது. அதனை தனிப்பதிவாகப் பகிர்ந்திடுகிறேன்.

மைசூர் மன்னர்கள் பறவைகளையும், இயற்கை எழிலையும் பார்வையிட அமைக்கப்பட்ட மகராஜா கோபுரம். இங்கிருந்து காவேரி ஆறும் அதன் தீவுகளும்:

#5


#6


#7


#8

சுமார் 170 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இங்கே காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, கரண்டிவாயன், வெண்கழுத்து நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சிறிய சீழ்க்கைச்சிரவி, கொண்டை நீர்க்காகம், தடித்த அலகு மீன்கொத்தி, நீர்க்காகம், மற்றும்  ஹெரான் எனப்படும் குள நாரை போன்ற பறவைகள் குறிப்படத் தக்கவை. கூழைக்கடாக்கள் இதை தங்கள் நிரந்தர இல்லமாக மாற்றியுள்ளன.

#9
கூழைக் கிடாக்கள் - (PELICANS)

#10

#11

#12

பிரபலமான கூடு கட்டும் தளமாக அறியப்படும் இந்த சரணாலயத்தில்  2011_ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் செய்யப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 8,000 கூடுகள் காணப்பட்டுள்ளன.

டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி குளிர்கால மாதங்களில் சுமார்  40,000 பறவைகள் இங்கு கூடுகின்றன. சைபீரியா, இலத்தீன், அமெரிக்கா மற்றும் வட இந்தியாவின் பகுதிகளிலிருந்து இங்கே குடிபெயர்கின்றன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முப்பதிற்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கே புலம் பெயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

#13


#14
அன்றில் பறவைகள் (IBIS)

நாங்கள் சென்றிருந்த போது பெரும்பாலும் காணக் கிடைத்தவை கூழைக் கிடாக்களும்,  அன்றில் (ஐபிஸ்) பறவைகளுமே. 

இயற்கைச் சூழலில் ஏகாந்தமாக வீற்றிருந்த பறவைகளும், அங்குமிங்கும் பறந்தபடி இருந்தவற்றையும் 70-300mm லென்ஸ் கொண்டு அங்கிருந்த பார்வையாளர் கோபுரத்தில் தட்டுத் தடுமாறி ஏறி, படமாக்கியவற்றையே இங்கு பகிர்ந்துள்ளேன் :) !

#15


#16

தீவுகளைச் சுற்றிக் காட்ட படகுப் பயண வசதி நாள் முழுவதும் கிடைக்கின்றன. பறவைகள், முதலைகள், நீர்நாய்கள் மற்றும் வெளவால்களைப் பார்க்க இது சிறந்த வழியாக உள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் இதே சரணாலத்திற்குச் சென்றிருந்த போது படகுப் பயணம் சென்றிருந்தோம். அப்போது ஸ்டில் கேமராவை விடவும் வீடியோ கேமராவை ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்த காலம். படகோட்டி, அசையாமல் வாருங்கள், இல்லையெனில் படகு கவிழ்ந்து விடும்’ என அவ்வப்போது பயம் காட்டிய நிலையிலும் தீவுகளின் மரங்களில் அமர்ந்திருந்த பறவைகளை காணொளியாக்கிய நினைவுள்ளது. இந்த முறை படகுப் பயணம் செல்லவில்லை.

இந்த சரணாலயம் தற்போது கர்நாடக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை பராமரிப்பில் உள்ள சலீம் அலி விளக்க மையம், சிறப்பு ஆர்வமுள்ள மக்கள் குழுக்களுக்கு நான்கு நிமிட ஆவணப்படத்தைத் திரையிடுகிறது. வனத்துறை இந்த சரணாலயத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

*

*பறவை பார்ப்போம் - பாகம்: (128)

*மேலும் படங்கள் மற்றொரு பாகமாக வரும்.

*இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

**

றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. மிக அருகாமையில் எடுத்த படங்களுடன் பறவையைப் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட முந்தைய பகிர்வு இங்கே:

கூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)

***

2 கருத்துகள்:

  1. பறவைகள் அருமை.
    கீதாரெங்கனும் ரங்கனதிட்டு போய் வந்து பதிவு போட்டார்.
    கூழை கிடாக்கள், அன்றில் பறவைகள் மரத்தில் அமர்ந்து இருப்பது , பறக்கும் போது எடுத்தவை எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  2. அழகான இடம். அருமையான புகைப்படங்கள். பறக்கும் பறவையின் க்ளிக் வெகு அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin