புதன், 7 ஜனவரி, 2026

தர்பார் மண்டபங்கள்; கூரை ஓவியங்கள் - மைசூர் அம்பா விலாஸ் அரண்மனை

 

மைசூர் அரண்மனை பற்றிய விரிவான தகவல்களுடனும் 27 படங்களுடனும் ஆன எனது 2017_ஆண்டுப் பதிவு ஒன்று இங்கே: “அம்பா விலாஸ்”.

முன்னரெல்லாம் அரண்மனையை வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. உள்ளே செல்லும் முன் மீண்டும் நுழைவாயிலுக்குச் சென்று கேமரா, மொபைல் அனைத்தையும் லாக்கரில் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறைகள் சென்ற போதும் இதுதான் விதிமுறையாக இருந்ததால் ‘அதில் என்ன மாற்றம் வந்து விட்டிருக்கப் போகிறது’ என்று சற்றே அலட்சியமாக இருந்து விட்டேன் இந்த முறை. அரண்மனைக்குச் செல்வது பயணத் திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால் உயிரியல் பூங்காவுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் நேரம் இருந்ததால், அரண்மனைக்கு வெளியே மட்டும் சுற்றி விட்டு வரலாம் என்கிற முடிவுடன் சென்றேன். 

#2


#3


அந்தியில் மின்னிய அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஓரிரு படங்கள் எடுப்போம் என ஆரம்பித்த போதுதான் கவனித்தேன், முதல் தளத்தில் பலபேர் கையில் அலைபேசிகளுடன் செல்ஃபி எடுத்தபடி நின்றிருந்ததை. வியப்பாகி அங்கிருந்த காவலரிடம் கேட்ட போது, ‘உள்ளே ஃபோட்டோகிராஃபி அலவ்ட்’ என்றார். “ நீங்கள் போக வேண்டுமா? ஐந்தரை மணி வரையிலும்தான் அரண்மனைக்குள் நுழைய முடியும், ஆறு மணிக்கு வெளியேற்றி விடுவார்களே. வேகமாகப் போங்கள்” என்றார். இன்னும் 5 நிமிடங்களே இருக்க அரக்கப் பரக்க விரைந்து ஒருவாறாக நுழைந்து விட்டோம்.

#4

அரை மணி நேர அவகாசமே இருந்ததாலும், உள்ளே இருந்த கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே மக்களை அவசரப்படுத்தியபடி இருந்ததாலும், ஆற அமர படமாக்க முடியவில்லை. கிடைத்த நொடிகளில் ரசித்து எடுத்தவற்றின் அணிவகுப்பு கீழே.. 

ரண்மனையில் முதல் தளத்தில் அமைந்துள்ளன இரண்டு தர்பார் மண்டபங்கள். தெற்கு பார்க்க அமைந்திருப்பது மன்னர் பார்வையாளர்களைச் சந்திக்கும் பொது தர்பார் மண்டபம்.  

கிழக்குப் பார்க்க அமைந்திருப்பது மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், தனிப்பட்ட தர்பார் மண்டபம். 

னிப்பட்ட (private) தர்பார் மண்டபம் ‘அம்பா விலாஸா’ என அழைக்கப்படுவதுடன் அதன் பெயரே அரண்மனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

#5

இது இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) கட்டடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இந்திய, இஸ்லாமிய, கோதிக் (Gothic) மற்றும் விக்டோரியன் கூறுகளின் கலவை என்றும் கூறப்படுகிறது. ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1912_ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

#6


நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட தேக்கு மரத்தாலான கூரைகள்,  நீலம் மற்றும் தங்க நிறத்தாலான தூண்கள், மலர் வடிவங்களைக் கொண்ட பளிங்குத் தரைகள் கண்களைக் கவருகின்றன. நீல வண்ணக் கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட சன்னல்கள் நீல ஒளியை மண்பத்துக்குள் பரப்பி ரம்மியமான சூழலைத் தருகின்றன. 

#7

மைசூர் அரண்மனையின் பொது (public) தர்பார் மண்டபமும் ஹென்றி இர்வின் வடிவமைத்ததே. இதுவும் இந்தோ-சரசெனிக் பாணியில் கட்டப்பட்டது. இந்து, முகலாய, ராஜபுத்திர, கோதிக் கூறுகளின் கலவையாக எழுப்பப்பட்டது. 145 அடி உயரத் தங்க பூச்சுடனான குவிமாடத்துடன், சுமார் 245 அடி நீளம் மற்றும் 156 அடி அகலம் கொண்ட பரந்த மண்டபமாக உள்ளது. 

#8

அழகிய வளைவுகளைத் தாங்கிய சமச்சீரான தூண்கள், வட்டவடிவ ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட கூரைகள், மிதமான வெளிச்சம் தரும் மின்விளக்குகள்:

#9

தூண்கள் மேல் பகுதியில் செதுக்கப்பட்டச் சிற்பங்கள்:

#10

இந்த மண்டபம்  அரச குடும்பம் பொது மக்களைச் சந்திக்கும் தர்பாராக செயல்பட்டிருக்கிறது. தசரா விழாக்களுக்கு மையமாக இருந்திருக்கிறது. அங்கு மகாராஜா ரத்தினங்கள் பதித்த தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மக்களுக்குக் காட்சி தருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

#11

தாழ்வாரங்களில் அலங்கரிக்கப்பட்ட தேக்கு மரச் செதுக்கு வேலைகள் மற்றும் தெய்வங்களின் ஓவியங்கள்:

#12


#13

வேலைப்பாடுகளுடனான தேக்குமரக் கதவுகள்:

#14

அற்புதமான கூரை ஓவியங்கள். தூரத்தில் தெரிவது கிழக்கிலிருக்கும் ஜெயமார்த்தாண்டா எனப்படும் பிரதான வாயில்.

#15

#16


#17

மூடவிருக்கும் நேரத்திலும் கூட்டம் கூட்டமாக நுழைந்து கொண்டே இருந்தார்கள் மக்கள். 

#18

மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மக்கள் செல்ஃபி மற்றும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.  கொல்கத்தா விக்டோரியா அரண்மனையில் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லாதது இன்றளவிலும் ஒரு ஆதங்கமாகவே உள்ளது. அதன் உள் அலங்காரங்களும் கட்டுமானங்களும் பிரமிப்பானவை. சென்ற வருடம் ஹைதராபாத் செளமஹல்லா மாளிகையில் ஆசை தீரப் படம் எடுத்தேன். 

பல இடங்களில் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டாலும், மக்களின் மகிழ்ச்சி, அதனால் சுற்றுலாப் பயணிகளின் வரவை அதிகமாகும் வாய்ப்பு இவற்றையும் நிர்வாகம் கவனத்தில் கொண்டு விதிமுறைகளைத் தளர்த்தலாம்.

#19

*

ஹொய்சாளா கட்டிடக் கலையில் எழும்பிய ஸ்வேதா வராக சுவாமி கோயில். இது தெற்குப்புற நுழைவாயில் வழியாக அரண்மனை வளாகத்தினுள் நுழைந்ததும் வலப்பக்கத்தில் அமைந்திருக்கிறது. அரண்மனைக்குள் இருக்கும் 12 கோயில்களில் ஒன்று.

#20

மைசூர் மன்னர் சிக்கா தேவராஜ உடையார் (கி.பி. 1672-1704) தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து ஸ்வேதா வராகசுவாமியின் கற்சிலையைப் பெற்று, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தார். ஆனால், அந்த கோயில் இடிக்கப்பட்டபோது, கிருஷ்ணராஜ உடையார் IIIமைசூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தற்போதைய கோயிலுக்குச் சிலையைக் கொண்டு வந்து சிலையை மாற்றி, 1809ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்.

#21

தற்போது இருக்கும் இந்தக் கோயில் மைசூர் தேவான் பூர்ணையாவால் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹொய்சள கட்டிடத்தின் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அடுத்த முறை  செல்லும் போது கோயில் திறந்திருக்கும் நேரத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

#22

*

*இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.


2 கருத்துகள்:

  1. அம்மாடி..  அற்புதமான வேலைப்பாடுகள்.  கண்ணைக் கவர்ந்து மனதைக் கொள்ளை கொள்கின்றன. 

    அரக்கப்பரக்க எடுத்த படங்களே இவ்வளவு அற்புதம் என்றால், நீங்கள் நின்று நிதானித்து எடுத்திருந்தால் இன்னும் நிறைய காட்சி விருந்துகள் கிடைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் வழி பார்க்கும்போதே மனதில் பிரமிப்பு. மிகச் சிறிய வயதில் இங்கே சென்ற நினைவு. ஆனால் வேறு எதுவும் நினைவில் இல்லை. சென்று வர வேண்டும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin