அறிவேன் நான் நதிகளை:
அறிவேன் நான் நதிகளை இவ்வுலகைப் போன்று பழமை வாய்ந்த, மனித நரம்புகளில் மனித இரத்தத்தின் பாய்ச்சலை விடவும் வயதானவற்றை.
எனது ஆன்மா வளர்ந்துள்ளது ஆழமாக அந்நதிகளைப் போன்று.
யூஃப்ரேட்டிஸ் நதியில் குளித்திருக்கிறேன் அதிகாலைப் பொழுதுகளில்.
நான் நைலைப் பார்க்கிறேன், அதன் மேல் பிரமிடுகளை எழுப்புகிறேன்.
மிஸிஸிப்பியின் பாடலைக் கேட்கிறேன் ஆப்ரகாம் லிங்கன் நியூ ஆர்லன்ஸ்
சென்றிருந்த வேளையில், மற்றும் பார்க்கிறேன் அதன் சேறும் சகதியுமான மார்பு அந்திவேளையில் தங்கமாக மாறியதை.
அறிவேன் நான் நதிகளை:
பழமை வாய்ந்த, கருநிற நதிகளை.
எனது ஆன்மா வளர்ந்துள்ளது ஆழமாக அந்நதிகளைப் போன்று.
*
நினைவில் கொள்ளுங்கள்
நினைவில் கொள்ளுங்கள்
அடிமைத்தனத்தின் நாட்களை-
அத்துடன் மறவாதீர்கள்-
அப்படியே நின்று விடாதீர்கள்.
அதி உயர மலை மேல் ஏறி
குனிந்து நகரத்தைப் பாருங்கள்
எங்கே நீங்கள் இன்னும் அடிமையாக இருக்கிறீர்கள் என்பதை.
குனிந்து கரோலினாவின் எந்த ஒரு நகரத்தையும் பாருங்கள்
அல்லது மைனேவின் எந்த ஒரு நகரத்தையும், அந்தவொரு விஷயத்திற்காக,
அல்லது ஆப்பிரிக்காவை, உங்கள் தாயகத்தை-
அப்போது பார்ப்பீர்கள், நீங்கள் எதைப் பார்க்க வேண்டுமென நான் விரும்பினேனோ அதை-
அந்த வெள்ளைக் கரம்:
அந்தத் திருட்டுக் கரம்.
அந்த வெள்ளை முகம்:
அந்தப் பொய் முகம்.
அந்த வெள்ளை அதிகாரம்:
அந்த தீவினைக்கஞ்சாத அதிகாரம்
இன்று நீங்கள் இருக்கும் பசித்த துயரம் தோய்ந்த நிலைமைக்கு
உங்களை ஆளாக்கியவற்றை.
*
நான் உலகத்தைப் பார்க்கிறேன்
நான் உலகத்தைப் பார்க்கிறேன்
கருப்பு முகத்தின் விழிப்படையும் கண்கள் மூலமாக-
இதைத்தான் நான் பார்க்கிறேன்:
எனக்கு ஒதுக்கப்பட்ட
இந்த வேலியிடப்பட்ட குறுகிய எல்லையை.
அடுத்து அற்பத்தனமான சுவர்களைப் பார்க்கிறேன்
கருத்த முகத்தின் கருத்த விழிகளின் மூலமாக-
இதைத்தான் நான் அறிய வருகிறேன்:
அதாவது இந்த எல்லா சுவர்களும் அநீதி இழைப்புகளும்
சென்றாக வேண்டும்!
நான் எனது சொந்த சரீரத்தைப் பார்க்கிறேன்
இனிமேலும் குருடாக இல்லாத விழிகள் மூலமாக-
என் சொந்தக் கரங்களால்
என் உள்ளத்திலிருக்கும் உலகத்தை உருவாக்க இயலும் என்பதை
நான் பார்க்கிறேன்
உடனே விரைவோம் நாம், தோழர்களே,
அந்த வழியைத் தேடி.
*
மூலம்:
1. The Negro Speaks of Rivers
2. I look at the world
3. Remember
By James Langston Hughes
*
பிரபலமான அமெரிக்க கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், பத்தி எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அனுபவங்கள், போராட்டங்கள், மனஎழுச்சி குறித்து உணர்வுகளைத் தூண்டும் சக்தி மிகுந்த கவிதைகளை எழுதியவர். நியூயார்க்கில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகமாக வசித்த ஹாலம் பகுதியை மையமாகக் கொண்டு 1920-1930 ஆண்டுகளில் எழுந்த ஹாலம் மறுமலர்ச்சி இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிப் பிரபலமாகத் திகழ்ந்தவர்.
மிஸ்ஸெளரியிலுள்ள ஜாப்லின் நகரில் பிறந்தவர். பல்வேறு நகரங்களில் வளர்ந்தவர். இளம் வயதிலேயே இலக்கியம் மற்றும் கலை மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். கொலம்பியா பல்கலைக்கழகத்திற்குக் கல்வி கற்கச் சென்று இனக் காழ்ப்புணர்ச்சியை எதிர்கொண்ட காரணத்தால் பாதியிலேயே அப்படிப்பை விட்டு வந்தவர்.
இவரது கவிதைகள் ஆப்பிரிக்க அமெரிக்க சமுதாயத்தின் அடையாளம், இனப்பெருமை, மீட்டெழுச்சி ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டவை. எளிமையும் உணர்வுப்பூர்வமும் இணைந்த தனித்துவக் குரலாக இவரது கவிதைகள் இன வேறுபாடின்றி அனைத்து மக்களின் மனதோடும் பேசியவை. இவரது கவிதைகளின் சந்தங்களிலும் லயங்களிலும் ஆப்ரிக்க அமெரிக்க இசையின் பாதிப்பைக் காணலாம், குறிப்பாக ஜாஸ் மற்றும் ப்ளூஸ். இவரது முக்கிய நூல்களில் சில: "The Negro Speaks of Rivers", "Harlem (Dream Deferred)" மற்றும் "I, Too."
*
[கவிதைகள் மற்றும் ஆசிரியர் குறிப்பின் தமிழாக்கம்.]
*
படங்கள்: இணையத்திலிருந்து.. நன்றியுடன்.
*
நன்றி சொல்வனம்!
***
இரண்டாவது முதலாகவும், மூன்றாவது இரண்டாவதாகவும் கவிதையை ரசித்தேன். கவிஞர் அறிமுகம் நன்று. அந்தக் காலத்தில் மிக எழுச்சியை இவை ஊட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குமூன்று கவிதைகளையும் ரசித்தேன். எழுச்சி மிகு கவிதைகள் 2, 3 அந்தக்காலத்தில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளைச் சொல்லும் விடுதலை எழுச்சிக் கவிதைகள். இப்போதும் கூட அமெரிக்காவில் ஆங்காங்கே இருப்பதாகத் தெரிகிறது. நதிக்கரை கவிதையும் செம.
பதிலளிநீக்குகவிஞர் பற்றியும் தெரிந்து கொண்டேன்.
கீதா
நன்றி கீதா.
நீக்கு//ஆப்ரகாம் லிங்கன் நியூ ஆர்லன்ஸ் சென்ற போது சேறும் சகதியும், தங்கமாக மாறியது// மாபெரும் வரலாற்று மாற்றம் நிகழக் காரணமான நாள். இப்போது எல்லா நிறங்களிலும் அதிகார தீவினைக்கு அஞ்சாதவர் பெருகி விட்டனர்.
பதிலளிநீக்கு//என் சொந்தக் கரங்களால்
என் உள்ளத்திலிருக்கும் உலகத்தை உருவாக்க இயலும் என்பதை
நான் பார்க்கிறேன்// நல் நம்பிக்கையும் உத்வேகமும் ஊட்டும் வரிகள். வாழ்த்துக்கள். நன்றி.
/வரலாற்று மாற்றம்/ ஆம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்குகவிதை பகிர்வு அருமை.
பதிலளிநீக்குவிடுதலை வேட்கை மிகுந்த கவிதை நன்றாக இருக்கிறது.நல்லவழியை தேடி தோழர்களை அழைக்கும் கவிதை அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்கு