வியாழன், 9 மார்ச், 2023

கொண்டலாத்தி ( Eurasian hoopoe ) - பறவை பார்ப்போம்

ஆங்கிலப் பெயர்: Eurasian hoopoe

கொண்டலாத்தி பத்து முதல் பன்னிரெண்டரை அங்குலம் வரை நீளம் கொண்ட நடுத்தர அளவிலான வண்ணமிகு பறவை. தலைப் பகுதியில் இறகுகள் கிரீடம் போன்று அமைந்திருப்பது இதனை எளிதில் வேறுபடுத்திக் காட்டும். 

ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டம், மடகாஸ்கர் பகுதிகளில் காணப்படுகிறது. முன்னொரு காலத்தில் ஒரே இனமாகக் கருத்தப்பட்ட இப்பறவை, பின்னாளில் மூன்று வகையாகப் பார்க்கப்பட்டன:

யுரேசிய (ஐரோவாசியா) கொண்டலாத்தி; மடகாஸ்கர் கொண்டலாத்தி; ஆப்பிரிக்க கொண்டலாத்தி.

பழுப்பு நிற உடலையும், பிரகாசமான கருப்பு-வெள்ளை இறகுகளையும், கீழ்நோக்கி வளைந்த அலகையும் கொண்டது இப்பறவை. இதன் அலகு நீண்டு இருப்பதால் இதனை மரங்கொத்தி என மக்கள் தவறாக நினைப்பதுண்டு. 

இறக்கை நீட்டம் 17 முதல் 19 அங்குலம் வரையிலும்.  சுமார் 46 முதல் 89 கிராம் வரையிலான எடை கொண்டவை. 

மலைப்பகுதி, சமவெளி, மரங்கள் அருகிய வெப்பமண்டலங்களின் புல்வெளி இவற்றின் வாழ்விடம். பெரும்பாலும் தனிப் பறவையாகச் சுற்றித் திரியும். தனியாகவே நிலத்தில் தன் உணவைத் தேடிக் கொள்ளும் வழக்கம் கொண்டது.

#2

உயிரியல் பெயர்: Upupa epops

ழகான உருவத்தைக் கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. நிலத்தை தன் உறுதியான கால்களால் தோண்டி, கூர்மையான அலகுகளால் , பூச்சிகளைப் பிடித்து உண்ணும். புழுப்பூச்சிகள் மட்டுமின்றி சிறிய தவளைகள், வண்டுகள், சில் வண்டுகள், வெட்டுக்கிளிகள், எறும்புகள் போன்றனவும் இதன் உணவு பட்டியலில் அடங்கும். கரையான்கள் அமைக்கும் புற்றுகளில் தன் நீண்ட அலகினை நுழைத்து அவற்றின் இளம் பருவப் புழுக்களையும் உணவாக உண்ணும். அத்துடன் தாவரப் பொருட்களான விதைகள் சதைப்பற்றுள்ள பழங்களையும் விரும்பி உண்ணும்.

எப்போதேனும் பறந்தபடியே உணவைத் தேடிக் கொள்வதும் உண்டு. அப்போது இதன் உறுதியான வட்ட வடிவ இறக்கைகள் திரளாகப் பறக்கும் தேனீக்கள் போன்ற பூச்சிகளை விரட்டிப் பிடிக்க உதவுகின்றன.

#3
வேறு பெயர்கள்: 
சாவல்குருவி, புளுக்கொத்தி, கொண்டை வளர்த்தி, 
கொண்டை உலர்த்தி, விசிறிக்கொண்டைக் குருவி, 
எழுத்தாணிக் குருவி
திறந்தவெளி அல்லது ஓரளவுக்குத் தாவரங்களால் மூடப்பட்ட நிலப்பகுதி ஆகிய இரண்டு அடிப்படைத் தேவைகளைக் கொண்டு இவற்றின் வாழ்விடம் அமைகிறது. மரங்கள், வைக்கோற் புதர்கள், பிற உயிரினங்களால் புறக்கணிக்கப்பட்ட பொந்துகளில் மட்டுமின்றி கட்டிடச் சுவர்கள், செங்குத்தானப் பாறைகளின் இடுக்குகள், மனிதர்களால் அமைக்கப்படும் பறவைக் கூண்டுப் பெட்டிகள் ஆகியவற்றிலும் கூடு அமைத்து இனப்பெருக்கம் செய்யும்.

தீவிரமான பிராந்திய உணர்வு கொண்டது. ஆண் பறவை அது தனக்குச் சொந்தமான இடம் என்பதை அடிக்கடிக் கூவி அறிவித்தபடி இருக்கும். தமது எல்லைக்குள் நுழையும் ஆண் பறவைகளை (சில நேரங்களில் பெண் பறவைகளையும்) மூர்க்கத்தனமாக விரட்டுவதும் சண்டையிடுவதும் வாடிக்கையான ஒன்று. கூரிய அலகால் எதிரிகளை குத்திக் கிழிக்க முயன்றிடும். இந்தச் சண்டைகளில் சில பறவைகள் கண்களில் காயமுற்று பார்வையிழப்பதும் உண்டு.

ஒருதார வழக்கம் கொண்டது என்றாலும் அது அந்த ஒரு இனப்பெருக்கக் காலத்துக்கு மட்டுமே. நிலநடுக்கோட்டில் இருந்து வெகு தொலைவில் பூமியின் வடக்கு பாகத்தில் வசிக்கும் பறவைகள் அதிக அளவில் 12 முட்டைகள் வரை இடும். ஆனால் வெப்பமண்டல பகுதிகளில் வசிக்கும் பறவைகள் நான்கு முதல் ஏழு முட்டைகள் வரை இடும்.

முட்டைகளை அடைகாக்கும் பொறுப்பை பெண் பறவையே செய்யும். முட்டைகள் பொரிய 15 முதல் 18 நாட்களாகும். அந்த சமயத்தில் ஆண் பறவை பெண் பறவைக்கு உணவைத் தேடிக் கொண்டு வந்து கொடுக்கும்.

அடை காக்கும் காலத்தில் எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவித துர்நாற்றம் மிக்க திரவத்தை சுரக்கும். குஞ்சுகளிடமிருந்தும் இந்தத் திரவம் வெளியாகும். எதிரிகளை நெருங்க விடாமல் இருக்க இத்திரவத்தை இறக்கைகளின் மேல் தடவிக் கொள்ளும். இளம் பறவைகள் கூட்டை விட்டு வெளியேறும் சமயத்தில் இந்த சுரப்பி வேலை செய்வதை நிறுத்தி விடும்.

இரண்டு வார காலம் தாய் பறவை குஞ்சுகளை கூட்டிலே பராமரிக்கும். பின்னர் ஆண் பறவையுடன் குஞ்சுகளுக்காக வெளியில் சென்று உணவு தேடி வரும். ஒரு மாத காலமோ மேலும் ஒரு வாரமோ பெற்றோருடன் இருந்து விட்டு குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறும். 

கொண்டலாத்தி பறவையின் வாழ்நாட்காலம் ஏறத்தாழ 10 ஆண்டுகள்.

#4
ண்டைய காலத்து எகிப்தில் இவைப் புனிதப் பறவைகளாகக் கருதப்பட்டன. கல்லறைகள் மற்றும் கோயில்களின் சுவர்களில் இவற்றின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை காண முடியும்.

*

ங்கள் தோட்டத்தில் அபூர்வமாகவே கண்ணில் படுகிறது இப்பறவை. மனிதரின் நிழலைக் கண்டாலே விருட்டெனப் பறந்து விடுகிறது. மேலே பகிர்ந்திருக்கும் படங்கள் தோட்டத்துச் சுவரை ஒட்டிய யூகலிப்படஸ் மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்திருந்த போது ஜூம் செய்து எடுத்தவை. தெளிவான, எனக்குத் திருப்தியான படங்களாக இல்லைதான்:(. ஆனால் பறவை கட்டுரை வரிசைக்காக சேர்த்துக் கொண்டுள்ளேன். 

#5

தோட்டத்து புல்வெளியில் வேக நடை போட்ட போது மேலும் ஓரிரு படங்கள் சிக்கின. கொண்டை விரித்து அழகு காட்டும் காட்சியைக் காண வாய்க்கவில்லை. காத்திருக்கிறேன்:)!

#6

*

*விக்கிப்பீடியா ஆங்கிலத் தளம் உட்பட இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (155)
பறவை பார்ப்போம் - பாகம்: (93)

***

10 கருத்துகள்:

 1. முன்பு கங்கை கொண்ட சோழபுரம் போனபோது இந்த பறவையை படம் எடுத்தேன், இது ஒருவகை மரங்கொத்தி என்று நினைத்தேன், கீதமஞ்சரி, தெகா இருவரும் இது கொண்டலாத்தி பற்வை என்றார்கள்.

  மேகமலை போய் இருந்த போது கொண்டலாத்தி பற்வையை நிறைய படம் எடுத்து பதிவு போட்டேன். தலையை ஆட்டி அட்டை நடக்கும் அதன் கொண்டை ஆடும் அழகாய்.


  பறவையை பற்றிய விவரங்கள் அருமை. பறவையின் படங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவில் பார்த்த நினைவு உள்ளது. மரங்கொத்தி என மக்கள் புரிந்து கொள்வது உண்மைதான் போலும். ஆம், புல்வெளியில் அது நடக்கும் போது தலை அசைவது அழகாக இருந்தது :).

   நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 2. சுவாரஸ்யமான தகவல்கள்.  நான் இந்தப் பறவையைப் பார்த்ததில்லை!  (வீட்டுக்குள்ளேயே இருந்தால் உங்கள் வீட்டுக்குள் வந்து காட்சி கொடுக்குமா என்று நினைப்பது புரிகிறது!!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பறவைக்காகவும் தகவல்களைச் சேகரிக்கையில் அவை சுவாரசியமாகவும் ஆச்சரியம் அளிப்பவையாகவும் உள்ளன. நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. கூறிய அழகால் =  கூரிய அலகால் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருத்தி விட்டேன். தட்டச்சும் அளவுக்கு விரல்கள் குணமாகாத நிலையில் வாய்ஸ் டைப்பிங் முறையை பின்பற்றுவதால் வந்த பிழை. எவ்வளவுதான் நிறுத்தி, தெளிவாக உச்சரித்தாலும் தவறுகள் நிகழ்கின்றன. அவசிய நேரத்தில் இந்த அளவுக்குக் கை கொடுக்கிறது டெக்னாலஜி வளர்ச்சி. அதில் இருக்கிற சில குறைபாடுகளை நாம் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். ஒவ்வொரு பத்தியையும் உடனுக்குடன் திருத்துவது வழக்கம். ஆயினும் என் கவனக் குறைவால் விட்டுப் போயுள்ளது. மற்றொரு இடத்திலும் கூர்மையான 'அழகு' என இருந்ததைத் திருத்தி விட்டேன்.
   நன்றி ஸ்ரீராம் :).

   நீக்கு
 4. ஹை கொண்டலாத்தி உங்கள் தோட்டத்துக்கு வந்ததா? !! நான் ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறேன். இங்கல்ல. ஆனால் அப்போது என்னிடம் கேமரா கிடையாது. அழகான பறவை. அதன் கொண்டை அசைவதும் விரிப்பதும் அத்தனை அழகு.

  பறவைகளே பொதுவாக மனித நிழல் அல்லது சிறிய சத்தம் கேட்டாலும் உடனே அந்த இடத்தை விட்டு பறந்துவிடும்.

  தகவல்கள் தெரிந்து கொண்டேன்,

  உங்களுக்குத் திருப்தி இல்லைனு சொல்லிருக்கீங்க. என் கண்களுக்குப் படங்கள் அழகாகவே இருக்கின்றன, ராமலஷ்மி.

  நான் எடுக்கும் படங்கள் ரொம்பவே சுமார்!!! ஹாஹாஹாஹா. அத்தனை தெளிவாக இருக்காது!! அதுவும் சிறிய பறவைகள் எல்லாம் சரியாக வராது. அவை கிட்டே இருந்தால் மட்டுமே ஓரளவு எடுக்க முடியும். என்றாலும் ஆர்வம் மிகுதியால் எடுத்துவிடுகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. விரித்த கொண்டையுடன் இன்னும் நான் பார்க்கவில்லை. நீங்கள் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. கருத்துகளுக்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 6. கொண்டலாத்தி அழகிய பறவை. எங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறது. விரைந்துவந்து சென்றுவிடும்.

  பறவை பற்றிய விபரங்களும் நன்று.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin