புதன், 15 மார்ச், 2023

பட்டுப்புழு மற்றும் தானியத்தின் கதைப்பாடல் - டு ஃபு சீனக் கவிதைகள் (2,3) - சொல்வனம் இதழ்: 290

 பட்டுப்புழு மற்றும் தானியத்தின் கதைப்பாடல்

வானங்களே,
உங்கள் ஆட்சிப்பரப்பிலிருக்கும் அத்தனை நகரங்களில்
மேலும் கீழுமாகச் சுற்றுச் சுழ்ந்த நிலப்பரப்பில்
எந்த ஒரு நகரம்
ஆயுதமேந்திய கோட்டைக் காவற்படையற்று உள்ளது?
ஒருவர் இந்த ஆயுதங்களை உருக்க முடியுமானால்
கவசங்களை உழவர்களுக்கான கருவிகளாக மாற்றினால்
உழுவதற்காக
எருதிடம் அளிக்கப்பட்ட
தரிசு நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும்
வளம் பெறும்
எருதுகள் தம் கடமையை ஆற்றியதும்
கூடவே பட்டுப்புழுக்களும்
தாராளமாகத் தரும்

துயரத்தில் அழும் துணிச்சலான மனிதர்கள்
இனிமேல் நம்மிடம் இருக்க மாட்டார்கள்
துணிச்சலான மனிதர்கள் நம்மிடம் இருக்க மாட்டார்கள்

ஆயின் தானியங்களைக் கொண்ட மனிதர்களும்
பட்டுகளைக் கொண்ட மங்கையர்களும்
இணைந்து நடப்பார்கள், பாடியபடி.
*

ஹன் நதியின் பார்வையில்

ஹன் நதியின் விருந்தாளி வீடு திரும்பும் எண்ணத்தில் இருக்கிறார். பரிதாபத்துக்குரிய ஒரு முதிய பண்டிதர் சத்தமின்றி சிதைந்து கொண்டிருக்கிறார் நம் பிரபஞ்சத்தில்.

தொலைதூரத்தில் நேரத்துக்கு ஒன்றென விண்ணை முட்டும் மேகங்களைப் போன்று.

இரவு முழுவதும் தனித்திருக்கிறார் நிலவைப் போன்று.

சூரியன் அஸ்தமனமாகும் காட்சி அவரை உற்சாகப்படுத்துகிறது, மற்றும் இலையுதிர்க்காலக் காற்று அவரது நோய்மையைத் தணிக்கிறது.

ஒருவர் எப்போதும் ஒரு பழைய குதிரையை வைத்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது;

அது உங்களைத் தொலைதூரப் பயணம் இட்டுச் செல்லாது மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.
*

மூலம்:"Ballad of Silkworm & Grain";  "In View of the River Han" in Chinese by Du Fu
ஆங்கிலத்தில்.. : Wong May
ஆசிரியர் குறிப்பு மற்றும் கவிதைகள்.. தமிழில்.. : ராமலக்ஷ்மி
*

டு ஃபு (712-770)
வாழ்ந்த காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காது போன எழுத்தாளர்கள் வரிசையில் டு ஃபுவும் ஒருவர். டு ஃபு சீனாவின் லுவோயாங் நகரின் அருகில் பிறந்தவர். அந்நாளின் ஏனைய பலக் கவிஞர்களைப் போல வசதியான குடும்பத்தில் பிறந்தவராயினும் இவரது குடும்பத்தினர் சொத்துக்களை இழந்து வறுமையில் வாழ்ந்தனர். டு ஃபுவின்  இளம் வயதில் அவரது தாயாரும் அண்ணனும் அடுத்தடுத்து காலமாகி விடவும், அத்தை ஒருவரால் வளர்க்கப் பட்டார்.  இவரது தந்தை மறுமணம் செய்து கொண்டதன் மூலமாக மூன்று தம்பிகளும் ஒரு தங்கையும் உண்டு. அவர்களைப் பற்றி பல கவிதைகளில் குறிப்பிட்டிருக்கிறார். 

ஓரளவு அறியப்பட்ட அறிஞரும் அரசு அலுவலரும் ஆன தன் தந்தையைப் போலவே அரசாங்கப் பணியில் சேர விரும்பி, 23 வயதில் தேர்வு எழுதியவர் அதில் தேர்ச்சி பெறவில்லை. வீடு திரும்ப விரும்பாமல் சீனாவின் பல பாகங்களைச் சுற்றித் திரிந்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தந்தை காலமாகி விட இவரைத் தேடி வந்தது ஆசைப்பட்ட அரசுப் பணி வாய்ப்பு. அதைத் தன் தம்பிக்கு விட்டுக் கொடுத்தார். 40 வயதில் திருமணம் செய்து கொண்டார். 2 மகள்களும் 3 மகன்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்தனர். டு ஃபுக்கு ஆஸ்த்மா பிரச்சனையால் உடல் நலம் குன்றியது. வயது ஏறவும் கண் பார்வை மங்கி, காது கேட்கும் திறனும் குறைந்தது.

ஐம்பதாவது வயதில் தன் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார். குடும்பத்துடன் யாங் நதி வழியாகப் பயணம் மேற்கொண்டார். உடல்நிலை மோசமாகவும் வழியில் இருந்த கொய்ஜோவ் நகரில் இரண்டு வருட காலம் வாழ்ந்தார். அப்போதைய கவர்னரான போ மாவோலின் பொருளாதார ரீதியாக டு ஃபுவுக்கு உதவி இருக்கிறார். அது மட்டுமின்றி  தனிப்பட்ட முறையில் தனது காரியதரிசியாகவும் நியமித்தார்.  நலிவடைந்த கவிஞருக்கு அது பேருதவியாக அமைந்தது. பின்னர் டு ஃபு மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் 59_ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

டு ஃபுவின் ஆகச் சிறந்த படைப்புகள்  கொய்ஜோவ் நகரில் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை. 400 கவிதைகள் வரையிலும் எழுதியுள்ளார். பெரும்பாலான கவிதைகள் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அற்புதமான கவிதைகளை படைத்தவர். வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்படாமல் போனார். பரவலாகப் படைப்புகளை கொண்டு சேர்க்க இயலாமல் போனதும் ஒரு காரணமாகும். இவர் காலமான பிறகே இவரது கவிதைகள் பிரபலமாகி கொண்டாடப்பட்டன. இன்று வரையிலும் அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த கவிஞர் என்றும், இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது என்றும் உலகம் போற்றுகிறது.
**
நன்றி சொல்வனம்!

**
தொடர்புடைய முந்தைய பதிவு:
***

12 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான அறிமுகம். கவிதைகள் அவரது வித்தியாசமான சிந்தனையைக் காட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிஞர் என்று தெரிகிறது. கவிதைகள் அருமை வித்தியாசமாக இருக்கின்றன. கற்பனையும் வியக்க வைக்கிறது! அவரைப் பற்றிய தகவல் மனதிற்கு வருத்தமாக இருக்கின்றது. இத்தனை நல்ல கவிஞரின் கஷ்டங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. கவிஞரின் கவிதைகள், அவரின் வாழ்க்கை வரலாறு பகிர்வுக்கு நன்றி.
  அழுகையை கூட அடக்கி மந்துகுள் அழும் முறையை கற்ரு இருக்கிறோம், அழுகையை துணிச்சலாக அழமுடிவது சிறந்த ஒன்று.
  துயரங்களுக்கு நல்ல வடிகால்.

  பதிலளிநீக்கு
 4. போர்களற்ற, அமைதி மற்றும் சமத்துவம் நிறைந்த உலகத்தைக் காண விரும்புவது கவிஞர்களது இயல்பு.

  அதுவே தேசங்கள் ஆயுதங்களைத் தயாரிப்பதற்குப் பதில் அவைகள் உழவு கருவிகளாக உருவாக்க விரும்புவதும், தானியங்கள் விளைந்து செழிப்பாகப் பட்டுடுத்தி மங்கையர்கள் நடனமாடி உலா வரும் கனவுகளைத் தரிசனக் கவிதைகளாக வார்த்தெடுக்கிறது.

  ஆயிரம் மாயிரம் ஆண்டுகளாக இத்தகைய கனவுகள் தொடர்கிறது.

  கனவையும், அடுத்ததாக யதார்த்த வாழ்வின் அவலத்தையும் அடுத்தடுத்த கவிதைகளாகப் பதிவிட்டிருப்பது மிகச் சிறப்பு.

  இது ஒரு கவிஞனின் மன வானில் வாழும் கற்பனை உலகிற்கும், இவ்வுலகில் அவனது இருப்பிற்கான இடைவெளியையும் தெளிவாக விளக்குகிறது.

  வாழும் காலத்தில் இவர்களை, பொருள் சார்ந்த உலகம் அங்கீகரிக்காதது வியப்பானதில்லை. ஏனோ பாரதி நினைவுக்கு வருகிறார்.

  பதிலளிநீக்கு
 5. கவிஞரின் வரலாறு , கவிதைகள் அறிந்து கொண்டோம் .

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin