செவ்வாய், 21 செப்டம்பர், 2021

சொல்வனம் இதழ்: 253 - தவறுகளும் ரகசியங்களும்

 


தவறுகளும் ரகசியங்களும்

தவறுகளை
ரகசியங்களாகவே 
புதைப்பதற்காக
மறைக்கப்படுகிற உண்மைகள் 
பொய்களாகப் பூத்து நிற்க
சொல்லப்படுகிற பொய்களோ
உண்மை வேடம் பூணத் 
திணறி நிற்கின்றன.

தவறுகளை
ரகசியங்களாகவே
காப்பதற்காக
எத்தனைப் பழி அம்புகள் 
தைத்தாலும்
முதுகு வளைந்து கொடுக்க
சொட்டும் குருதியை 
நெஞ்சின் வீம்பு
சட்டை செய்ய மறுக்கிறது.

தவறுகள்
ரகசியங்களாகவே
நிலைத்திருக்க எடுக்கப்படும் 
பிரயத்தனங்களில்
எதிர் கொள்ள நேரும்
நியாயமான கேள்விகள்
பூதங்களாகவும்
தான் மறைக்கும் பதில்கள்
தேவதைகளாகவும் 
உலவுகின்றன.

தவறுகளை
ரகசியங்களாகவே
அழித்து விடத் துடிக்கும்
நீள் யுத்தத்தில்
எதிர் நிற்பவரின் வேதனை
தூசுக்குச் சமமாகக்
காற்று வெளியில் அலைகிறது.
எதிர் நிற்பவர் மெளனம்
வெற்றிக் களிப்பைத் தருகிறது.

தவறுகள்
ரகசியங்களாகவே
இருந்து விடலாம்.
எதிர் நிற்பவரை 
ஏமாளியாகவேப் பார்க்கலாம்.
அந்த ரகசியங்களுக்கு
நம்பிக்கைத் துரோகமெனும் 
அகராதியில் இல்லாத 
அர்த்தம் ஒன்றுண்டென்பதை
அறியாத முட்டாளைப் போல்
வாழ்நாளெலாம் நடிக்கலாம்.
*
படமும், கவிதையும்: ராமலக்ஷ்மி
*

10 கருத்துகள்:

 1. படமும் கவிதையும் நன்றாக இருக்கிறது.
  எதிர் நிற்பவர் வேதனை, எதிர் நிற்பவர் மெளனம்
  அவர்களை பாதிப்பது இல்லைதான்.
  இது தெரியாமல் செய்த தவறு என்றால் வருந்துவார்கள். தெரிந்தே செய்யும் தவறு என்றால் என்ன செய்வது!

  பதிலளிநீக்கு
 2. தவறுகளை ரகசியங்களாக எங்கே வைக்க முடிகிறது?!  இல்லாத தவர்களை எல்லாம் கூட கண்டுபிடிக்கிறார்கள் கூட இருப்பவர்கள்!!

  கவிதை நன்று.

  பதிலளிநீக்கு
 3. படமும் கவிதையும் நன்றாக இருக்கிறது. ரசித்தேன் சில பல பொருந்தியும் போகிறது!

  ஆனால் பாருங்கள் ஒரு காலத்தில் தவறு என்று சொல்லப்பட்டதெல்லாம் இப்போது தவறே இல்லை என்பதாகிவிட்டது. புதியதாகவும் இப்போது எல்ல்லாம் பேசப்படுவது ..தவறு சரி என்பதே இல்லை அது அவரவர் நிலைப்பாட்டில் என்றும் பேசப்படுகிறது.

  அதில் நாம் செய்யாத தவறுகள் கூடத்தவறு என்றும் சொல்லப்படுகிறது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. தவறுகள் ரகசியங்களாக இருந்து விட்டால் தவறே இல்லை என்று ஆகிவிடுகிறதே. 

  மேலும் தவறு என்பதும் தவறில்லை என்பதும் அவரவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. கொலை தவறு.  ஆனால் அதை நம் போர்வீரன் எதிரியைக் கொல்லும்போது வீரம் ஆகிறது. 

  ஏனோ எனக்கு உதித்த  கருத்துக்களை கூறினேன். தவறாக  எடுத்துக்கொள்ள வேண்டாம். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 5. கையறு நிலையில் ஏமாளியாக மவுனம் காத்து இருப்பவர்கள் வேதனைகள் காற்றில் கரைந்து விடக்கூடாது எனும் ஆதங்கம் வாசிக்கும் போது ஏற்படுகிறது.

  பூதங்கள், தேவதைகளின் முகமூடி நீக்கப்படக் கூடாதா என மனதை ஏங்க வைக்கிறது துரோகங்கள் தரும் வலிகள்.

  ஏமாற்றுபவர், ஏமாறுபவர் என இரு வேறுபட்ட மன நிலைகளின் நுட்பமான அந்தரங்க பெருமித, கழிவிரக்க உணர்வுகளைச் சுருக்கமான, எளிமையான வார்த்தைகளுக்குள் ஆனால் காத்திரமாக உங்களால் எழுதி விட முடிகிறது. நல்லதொரு படைப்பு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin