செவ்வாய், 7 செப்டம்பர், 2021

காலம் உறைந்த வீடு - 'சொல்வனம்' இதழ்: 253

 



காலம் உறைந்த வீடு


மழையில் நனைந்து
வெயிலில் உலர்ந்து
காற்றில் கலைந்து
பருவங்கள் கடந்து
தன்னைத்தானே
தாங்கி நிற்கிறது
ஆண்டாண்டுகளாக
கைவிடப்பட்ட வீடு.

கரையான்கள் சிலந்திகள்
கரப்பான்கள் எலிகள்மற்றும் பெருச்சாளிகளுடன்
ஒப்பந்தம் செய்து கொண்டு
உறவாட உயிர்கள் இருக்கிற
சிறு ஆறுதலில்
இனிப் பெரிதாக 
வருந்தவோ மகிழவோ
காரணங்கள் அற்று
விரக்தியில் நிற்கிறது
பாழடைந்த வீடு.

அதனை விடவும்
அதிக வயதான
முற்றத்து வேப்பமரத்தின்
உச்சாணிக் கிளையில் நின்று
முழுநிலவொளியில்
இரவுப் பறவை 
எழுப்பிய பாடலில்
பார்த்துப் பார்த்து
வீட்டைக் கட்டிய
எசமானியின் வேதனை
கலந்தொலிக்கக் கேட்டு
சிலிர்த்து அடங்குகிறது
சிதிலமைந்த வீடு.
*

படமும், கவிதையும்: ராமலக்ஷ்மி
*

14 கருத்துகள்:

  1. கவிதை வீட்டின் சோகத்தையும் எசமானி அம்மாவின் சோகத்தையும்ச்
    சொல்லி மனதை கலங்க வைக்கிறது.
    படம் அருமை. மாயவரத்தில் நிறைய வீடுகள் இப்படி சிதிலமடைந்து இருக்கும் அதை படம் எடுத்து போட்டு இருக்கிறேன் நானும். கவிதை கீதா மதிவாணன் எழுதினார்கள் அந்த வீட்டின் கதையை சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எடுத்த அந்தப் படங்களை நானும் பார்த்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. கவிதை வழி சொன்ன வீட்டின் நிலை மனதைத் தொட்டது. சிறப்பான கவிதை - பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. மனதை கனக்கச்செய்யும் கவிதை. திருக்கடையூரில் நான் ஒரு சிதிலமடைந்த வோட்டு வீடு படம் எடுத்து வைத்திருந்தேன். அது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிதிலமடைந்த எல்லா வீடுகளுக்குப் பின்னும் பெரும் சோகமும் நாம் அறியாத கதைகளும் இருக்கின்றன. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மனது நெகிழ்ந்துவிட்டது. கவிதை சிறப்பு.
    இவ்வாறாக வீடுகளைப் பார்த்து நான் அதிகம் வருத்தப்பட்டதுண்டு.

    பதிலளிநீக்கு
  5. நன்கு பராமரிக்கப்படும் வீடு அதில் வசிக்கும் ஆன்மாவின் அழகை வெளிப்படுத்துகிறது.சிதிலமடைந்த வீடு வெறும் உயிரற்ற கூடு.

    வீட்டை அதிகம் நேசிப்பதால் கவிதை வரிகள் வருத்தம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. மோன நிலையில் இருக்கும் இந்த சிதிலமடைந்த வீட்டின் தனிமையை கவிதை வேதனையுடன் சொல்கிறது!
    புகைப்படம் நீங்கள் எடுத்ததா? ஒரு மிகச்சிறந்த ஓவியம் போல இருக்கிறது. கவிதையும் புகைப்படமும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நான் எடுத்த படமே. கருத்துக்கு மிக்க நன்றி மனோம்மா.

      நீக்கு
  7. கவிதை ரொம்ப நல்லாருக்கு ஆனா வேதனையான வரிகள்.

    நல்ல உணர்வுகள். கடைசி வரி அருமை

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin