செவ்வாய், 14 ஜூலை, 2020

சூரியத் துளிகள் ( Yellow Alder ) - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (75)

#1

ங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் இந்தச் செடியின் சின்னஞ்சிறு மஞ்சள் மலர்களைப் பலமுறைகள் பலவித கோணங்களில் எனது புகைப்படத் தொகுப்புகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். 
#2

இந்தச் செடியைப் பற்றிய சில ஆச்சரிமானத் தகவல்களையும் பகிர்ந்திட வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். சமீபத்தில் அவ்வப்போது அதற்காகப் புகைப்படங்களும் எடுத்து வைத்தேன்.

யெல்லோ ஆல்டர் (yellow alder) எனப்படும் இந்த மலர்ச்செடியின் தாவரவியல் பெயர் Turnera ulmifolia. இது Passifloraceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. புதராக விரிந்து வளரும் இச்செடி ஆண்டு முழுவதும் வாடாமல் வாழும் ( perennial ) வகையைச் சேர்ந்தது. இதற்கு ‘ஸன் ட்ராப்ஸ் (Sun Drops)’ எனும் பெயரும் உண்டு. அது ஏன் மிகப் பொருத்தமானப் பெயர் என்பதையும் பார்ப்போம்.

#3

இச்செடியின் சிறப்பு, 
அதிகாலையில் சுருளாகக் காட்சி தரும் இதன் மொக்குகள் சூரிய ஒளி பரவத் தொடங்கியதும் மெல்ல மெல்ல விரியத் துவங்கும்.


#4

#5

ஏழு, எட்டு மணியளவில் செடியின் அத்தனை மலர்களும் குட்டிச் சூரியன்களாகப் பிரகாசிக்கும்.  

#6


மாலை ஆனதும் பிற மலர்களைப் போல மலர்ந்த வடிவிலேயே வாடாமல் மீண்டும் மொக்கு வடிவிலேயே சுருண்டு கொள்ளும். மாலை வெயில் நேரடியாகக் கிடைக்காத பட்சத்தில் மூன்றரை - நான்கு மணியளவிலேயே கூட சுருள ஆரம்பித்து விடும். 

#7


அதே மொக்குகள்தாம் அடுத்தநாளும் விரிவது போன்ற ஒரு மாயை நமக்கு இருக்கும். ஆனால் அப்படியல்ல என்கின்றன இணையத்தில் கிடைத்தத் தகவல்கள். அடுத்தடுத்துப் புதிது புதிதாக மொக்குகள் தோன்றியபடியே இருக்கும் எனத் தெரிய வர அதையும் ஆராய்ந்து பார்த்தாயிற்று:)!

#8
புதிய மொக்குகள்


#9
புதிய மொட்டுகளின் கீழே முந்தைய மாலையில் சுருண்டு மூடிக் கொண்ட மலர்கள் காய்ந்து தொங்குவதைக் காணலாம்:


ஒரு மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது இச்செடி.
#10

ஒவ்வொரு பூவின் அடியிலும் அழுத்தமான வரிகளைக் கொண்ட ஆழ்ப் பச்சை நிற இலைகள் அடுக்கடுக்காக அமைந்திருப்பது பார்க்க அழகாய் இருக்கும். 

#11

ஒவ்வொரு அடுக்கு வரிசையிலும் நான்கு முதல் ஐந்து இலைகள் 7 செ.மீ நீளத்தில் இருக்கின்றன. ஐந்து இதழ்களைக் கொண்ட இப்பூக்கள் சுமார் 3 செ.மீ விட்டம் கொண்டவை.

#12

தேன் ததும்பும் இம்மலர்கள் சிறிய பெரிய எறும்புகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும், தேன் சிட்டுக்களுக்கும், தேனீக்களுக்கும் மிகப் மிகப் பிரியமானவை :).

#13


தே அளவிலான, நான்கு அல்லது ஐந்து இதழ்களுடன், வடிவத்தில் சற்று மாறுபட்ட மஞ்சள் மலர்களும் உண்டு. அவையும் ‘ஸன் ட்ராப்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. சூரியனின் வெளிச்சத்தைச் சார்ந்தே எல்லா மலர்களும் உள்ளன ஆயினும், மலர்வதும் மூடுவதுமாக வெயிலைச் சார்ந்திருப்பதோடு சூரியனின் பிரகாசமான மஞ்சள் நிறத்தையும் கொண்டிருக்கும் இவற்றுக்கு ஸன் ட்ராப்ஸ் - சூரியத் துளிகள் என்ற பெயர் மிகவும் பொருத்தம்தான், இல்லையா?

*

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (75
**

13 கருத்துகள்:

  1. சூரியத்துளிகள் என்ற பெயர் மிக பொருத்தம் தான். ஆழ்ப்பச்சை வர்ணம் இலையும் அழகு.
    நிறைய விவரங்கல் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. சுருண்டு வரும் மொட்டு, மீண்டும் வாடும்போதும் சுருண்டே சுருங்குவது ஆச்சர்யம்.  என்னென்ன படைப்புகள்...   இதற்கு என்ன காரணமோ இறைவன் படைப்பில்..  காத்திருந்து அழகாய் படங்கள் எடுத்துக் பகிர்ந்தமைக்கு நன்றி.  புதிய, சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாடும் போதும் சுருளும் மொக்குகளே இதைப் பற்றி விரிவாக எழுதத் தூண்டியது. நான் பார்த்த வரையில், பிரம்மக் கமலம் மலரும் இதே போல மறுநாள் காலை மொக்கு வடிவில் மூடிக் கொள்ளும். முன்னர் அதையும் படத்துடன் பகிர்ந்த நினைவு.

      நன்றி ஸ்ரீராம்:)

      நீக்கு
  3. வியக்கத்தகு தகவல்கள். வழமை போல படங்கள் அழகாய்!

    பதிலளிநீக்கு
  4. தேன் ததும்பும் குட்டிச் சூரியர்கள் கவனத்தை ஈர்க்கின்றன. செய்தி துளிகளும் அழகு. ஆராய்ச்சி தொடரட்டும்:)

    பதிலளிநீக்கு
  5. நன்றி. ராமலக்ஷ்மி மேடம். எங்கள் வீட்டுப் பூக்கள் பற்றி நிறையத் தெரிந்து கொண்டோம். நிறைய விதைகளும் சேமித்திரிக்கிறோம் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய் போல உணர்கிறோம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin