திங்கள், 17 ஜூன், 2019

பசவனகுடி பெரிய நந்தி, பெரிய கணேசா - ( Bull Temple ) ஆலய தரிசனம்

#1
பெங்களூர் பசவனகுடியில் அருகருகே இருக்கும் பெரிய கணேசா (Dotta Ganesha), பெரிய நந்தி (Dotta Nandi) கோயில்கள் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்கள்.  பல வருடங்களுக்கு முன் இரு முறைகள் சென்றிருக்கிறேன்.  சென்ற மாதம் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது எடுத்த படங்களுடன் நந்தி கோயில் பிறந்த கதையும்...

பெரிய நந்தி
#2நெடுங்காலத்துக்கு முன் பயிர்களுக்குச் சேதம் விளைவித்து வந்த மூர்க்கமான நந்தியை சாந்தப் படுத்துவதற்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் இப்போது உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் தலமாக இருந்து வருகிறது.  ஒரு நகரின் முக்கியப் பெரும்பாகம் அங்கிருக்கும் கோயிலின் பெயராலேயே அழைக்கப்படுவது அபூர்வமானது. பசவங்குடி அப்படியான சிறப்பைப் பெற்றது. 

#3
பசவண்ணா


இறைவனை விடவும் அவரது வாகனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆலயமும் அதன் பெயரால் “பசவண்ணா” அல்லது “நந்தி” கோயில் என்றே அறியப்பட்டிருப்பதும் கூட அபூர்வமானதே. உலகின் மிகப் பெரிய நந்தி சிலையைக் கொண்ட பசவங்குடி பசவண்ணா கோயிலுக்கு பின்னால் இருக்கும் புராணக் கதை சுவாரஸ்யமான ஒன்று.

புராணக் கதை:

ல நூறு வருடங்களுக்கு முன் சுன்கெனஹள்ளி என அழைக்கப்பட்டு வந்த பசவங்குடி, நிலக்கடலையை பயிர் செய்யும் செழிப்பான விளைநிலங்களைக் கொண்டிருந்தது. பிரச்சனை மூர்க்கமான எருதின் வடிவில் வந்தது.  பயிர்களைக் கபளீகரம் செய்ததோடன்றி விளை நிலங்களுக்குள் புகுந்து ஓடி பெரும் சேதத்தையும் விளைவித்தது. இதனால் ஆத்திரமான விவசாயிகளில் ஒருவர் எருதினை விரட்டும் எண்ணத்தில் குறுந்தடியால் அதன் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.  அப்படியே உட்கார்ந்து விட்ட எருது அத்தனை விவசாயிகளும் வியந்து வாயடைத்துப் போகும் விதத்தில் கல்லாகச் சமைந்து விட்டதென்கிறது, புராணக்கதை.

கதை அத்தோடு முடிந்து விடவில்லை. கல்லான நந்தி வளர்ந்து கொண்டே போகலாயிற்று. பீதியுற்ற விவசாயிகள் ஈசனிடம் முறையிட்டனராம். அவர் ஆலோசனையின் படி நந்தி மேலும் வளர்வதைத் தடுக்க அது கல்லாகச் சமைந்த இடத்தில் அதன் காலடியில் நட்டு வைக்கப்பட்டிருந்த திரிசூலத்தைப் பிடுங்கி அதன் தலையில் வைத்தார்களாம். [நந்தி சிற்பத்தின் தலையில் இப்போதும் திரிசூலம் இருப்பதைக் காணலாம்.] அத்துடன் நின்றிடாமல், நந்தியைச் சாந்தப் படுத்துவதற்காக அந்த இடத்தில் சிறு கோயிலையும் கட்டியிருக்கிறார்கள். 

பின்னாளில்,  பெங்களூரைத் தோற்றுவித்த கெம்பகெளடா திராவிடப் பாணியில் இப்போதிருக்கும் பெரிய அளவிலான கோயிலைக் கட்டியிருக்கிறார்.  

#4
வெளிக் கோபுரமும் கொடிமரமும்

#4
பசவண்ணா சன்னதி


#5

#6

நாலரை மீட்டர் உயரமும், ஆறரை மீட்டர் அகலமும் கொண்ட, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அழகிய நந்தி சிலை கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 

#7

#8

#9


#10

சிறு லிங்கமும் ஒரு கோபுரத்தின் கீழ் உள்ளதாகத் தெரிகிறது. நான் பார்க்கவில்லை. நந்தி சன்னதியின் நேர் மேலே இருந்த கோபுரம்.  பிரகாரம் சுற்றி வரும் போது எடுத்த படம். இந்தக் கோபுரத்தின் கீழ் இருந்திருக்கலாம், தெரியவில்லை.

#11

பெரிய கணேசா கோவில் இருக்குமிடத்திலிருந்து சற்றே உயர்ந்த குன்றில் உள்ளது நந்தி கோயில். கோயிலுக்கு முன்னே இருக்கும் மைதானத்தில் வரிசையாக பூஜைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களைக் கொண்ட சிறுகடைகளைக் காணலாம். 

#12

நந்தி வடிவாக பூம்பூம் மாடு

மைதானத்துக்குள் நுழையும் போதே வரவேற்கிறது  இந்த பூம் பூம் மாடு. இந்தப் பெண்ணும் அவரின் மகளும் இந்த மாட்டினைப் பார்த்துக் கொள்கிறார்கள். 

#13
‘நல்ல காலம் பிறக்கும்..’

நந்தியாக நினைத்து இந்த மாட்டினைத் தடவி வணங்கி, பழங்கள் கொடுத்துச் செல்கிறார்கள் மக்கள். விலங்குகளுக்கும் பிறவிக் குறைப்பாடு இருப்பதை இங்குதான் முதலில் பார்க்க நேர்ந்தது. 
அபூர்வ மாடென்பதாலேயே நந்தியாக மக்கள் கருதி வழிபட்டுச் செல்கிறார்கள். 

#14
‘உனக்கு நான் துணை..
எனக்கு நீ துணை’


கடலேக்காய் பரிக்ஷே:

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் (நவம்பர்-டிசம்பர்) இதன் முன்னே கூடுகிற ‘கடலேக்காய் பரிக்ஷே’ (நிலக்கடலைச் சந்தை). கோயில், நிலக்கடலைப் பயிர்களை உண்ட நந்திக்காகவே கட்டப்பட்டதால் வருடந்தோறும் தங்கள் விளைச்சலுக்கு நன்றி சொல்லும் விதமாக விவசாயிகள் இங்கே கூடுகின்றனர். கர்நாடகாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கலந்து கொள்கின்றனர். அதைக் காண்பதற்கும் பல மைல்கள் மக்கள் பயணித்து வருகின்றனர்.

*
பெரிய கணேசா:

#15

வருடம் ஒரு முறை தல யாத்திரை போல மாணவர்களும், புதுப்படம் தொடங்கும் போது திரைப்பட உலகினரும் வெற்றி வேண்டி வணங்கிச் செல்வார்கள். பெங்களூரில் வாகனம் வாங்குபவர்களில் பலரும்  இங்கு கொண்டு வந்து பாதுகாப்புக்கு உத்திரவாதம் தர வேண்டி முதல் பூஜை போடுவார்கள். 90_களில் என் தங்கை வாங்கிய வண்டியை ஊரிலிருந்து வந்திருந்த பெரியப்பா, பெரியம்மாவையும் அழைத்துச் சென்று போய் பூஜை போட்டோம். அப்போது எடுத்த படம் தேடிப் பார்க்க வேண்டும். இருந்தால் இங்கே இணைக்கிறேன். அதே போல 2005_ல் என நினைக்கிறேன், ஒரு பிள்ளையார் சதுர்த்திக்கும் இங்கு வந்து தரிசனம் செய்திருக்கிறோம். அப்போது விநாயகரை வெண்ணெயால் அலங்காரம் செய்திருந்தார்கள். கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. எப்போதுமே வாரம் இருமுறை 110 கிலோ வெண்ணெயால் அலங்காரம் செய்கிறார்கள் விநாயகரை.  கடலேக்காய் பரிக்ஷேயின் போது நிலக்கடலைகளால் தினம் இவருக்கு அபிஷேகம் நடக்கும்.

#16

ஒரே கல்லில் சுயம்புவாக உருவான இந்த பெரிய கணேசர் 18 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்ட சிற்பமாகக் காட்சி அளிக்கிறார். பகிள் ராக் பார்க் (Bugle Rock Park) எனப்படும் பாறைகள் கொண்ட பூங்காவின் வளாகத்தின் உள்ளேயேதான் உள்ளது கோயில். அந்தப் பாறைகளின் தொடர்ச்சியாக கல்லில் சுயம்புவாகத் தோன்றியிருக்கலாமென்றும் கருதப்படுகிறது.

#17

கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் 1537_ஆம் ஆண்டு பெங்களூரின் தலைமை அதிகாரியால் இந்தக் கோவில் கட்டப்பட்டதாகச் சொன்னாலும் சரித்திர ஆய்வாளர்கள் கோவிலின் கட்டுமானம் 19_ஆம் நூற்றாண்டில், கெம்பகெளடா காலத்தில் கட்டப்பட்டதாகவே தெரிகிறது என்கிறார்கள். கடலேக்காய் சந்தைக்கு பெயர் போன இந்த கோயில் 500 வருடங்களுக்கு முந்தையது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நம் நாட்டில் நிலக்கடலையை அறிமுகப் படுத்தியதே பிரிட்டிஷ்காரர்கள்தாம். அதனால் 19-ஆம் நூற்றாண்டில் உருவான பெங்களூரின் கன்டோன்மெண்ட்டை விடவும் இக்கோயில் பழமையாக இருக்க வாய்ப்பில்லை” என்கிறார் சரித்திர ஆய்வாளர் அருண் பிரசாத்.

**

தகவல்கள்:

பசவண்ணா கோயில்
படம் ஐந்தில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளிலிருந்து தமிழாக்கம் செய்த தகவல்கள். 

கணேசா கோயில்: இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.


***

13 கருத்துகள்:

 1. அழகிய படங்கள். நந்தி கதை சுவாரஸ்யம். பெரிய விநாயகர் மிரட்டுகிறார்.

  பதிலளிநீக்கு
 2. இதுவரை அறிந்திராத இடத்திற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.கோயில் உலாவில் இக்கோயிலையும் சேர்த்துக்கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 3. கோவையில் படிக்கும் போது பள்ளி சுற்றுலாவில் பார்த்த பிள்ளையார், நந்தி.
  அப்போது பிள்ளையாருக்கு தேங்காய் மாலை சாற்றி இருந்தார்கள். முதன் முதலில் தேங்காய் மாலை சாற்றியதை அங்கு தான் பார்த்து இருக்கிறேன்.
  பெரிய ஏணி பிள்ளையாருக்கு பின் புறம் பார்த்த நினைவு இருக்கிறது.
  மாட்டின் குறைபாடு தெரிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேங்காய் மாலை நானும் இதுவரை பார்த்ததில்லை.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 4. அழகான படங்கள்..... நந்தி பிரம்மாண்டம்.... தகவல்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 5. பசவனகுடியும் நந்தியும்வெறும் நினைவுகளாகவே இப்போது

  பதிலளிநீக்கு
 6. நந்தியின் பிரமாண்டம் அசத்துகிறது. படங்களும் தகவல்களுமாய் பதிவு மிக சுவாரசியம். பூம்பூம் மாடு படத்தைப் பார்க்கும்போதே ஏதோ நெருடியது. பிறவிக்குறைபாடு என்று அறிந்து பரிதாபமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

   நானும் இப்படிக் குறைபாடுள்ள விலங்கை இப்போதுதான் பார்க்கிறேன்.

   நீக்கு
 7. ஒரு தீபாவளி அன்று நேரில் சென்று ரசித்த இடம்..மக்கள் நெருக்கடி இருந்தாலும் கோவிலில் மிக அமைதி ..

  அப்பொழுது படம் எடுக்கும் வாய்ப்பு இல்லை ..அதனால் மீண்டும் இங்கு செல்லும் ஆவலில் காத்திருக்கிறேன்...அதே போல் கடலைக்காய் சந்தையை யும் காண ஆசை..

  மிக அருமையான படங்கள்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin