சனி, 17 ஜனவரி, 2015

ஆதி வெங்கட் பார்வையில்.. - “அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்..”


தனது “கோவை2தில்லி” வலைப்பக்கத்தில் சென்ற மாதம் இதே நாள் திருமதி. ஆதி வெங்கட் பகிர்ந்து கொண்ட என் நூல்கள் குறித்த வாசிப்பு அனுபவத்தை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்:

மீபத்தில் தான் பதிவர் ராமலஷ்மி அவர்களின் இந்த இரு புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இரண்டுமே அருமையான புத்தகங்கள். ”அடைமழை” புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய திரு ரிஷபன் அவர்கள் எனக்கு வாசிக்கத் தந்தார். ராமலஷ்மி அவர்களின் புகைப்படங்களுக்கு நான் என்றுமே ரசிகை. தான் பார்க்கும் காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். அதே போல் தான் இவருடைய கதைகளும், கவிதைகளும். பன்முகம் கொண்டவர் ராமலஷ்மி அவர்கள். நான் நேரில் சந்திக்க விரும்பும் நபர்களில் இவரும் ஒருவர்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற இவரது இரண்டு நூல்களாவன அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்.
டை மழைஎன்பது பதிமூன்று கதைகளை உள்ளடக்கிய சிறுகதை தொகுப்பாகும். இந்த நூலில்இருப்பது அத்தனையும் சமூகம் சார்ந்த யதார்த்தமான கதைகள். நெல்லையின் வட்டார மொழியில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மோடு பல கதைகள் பேசுகின்றன.

ஒருசில கதைகளை அவரது வலைப்பூவில் வாசித்து இருக்கிறேன் என்றாலும் இருக்கையில் சாய்ந்தமர்ந்து புத்தகத்தின் கதைகளை உள்வாங்கி வாசிப்பது என்பதுமிகவும் சுவையானதல்லவா! பெரும்பாலான கதைகள் அவ்வப்போது பத்திரிக்கைகளில்வெளியாகியுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. வசந்தா, பொட்டலம், வயலோடு உறவாடி, ஈரம், அடையாளம், பயணம், ஜல்ஜல் என்னும் சலங்கையொலி, அடை மழை, சிரிப்பு,பாசம், உலகம் அழகானது, இதுவும் கடந்து போகும், அடைக்கோழி ஆகியன இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளாகும்.

”ஜல்ஜல் சலங்கையொலி”யில் சுப்பையா வளர்த்த சோலையும் சொக்கனும், சரசுவின் ”அடைக்கோழியும்”, மரங்களும், செடிகளும் நம் குழந்தைகள் போல் தான் என நிருபித்துகாட்டியிருக்கும் ”இதுவும் கடந்து போகும்” கதையும், அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் மனிதர்களின் உண்மை நிலையை விளக்கிச் சொன்ன ”உலகம் அழகானது” கதையும், மாரியின் ஆற்றாமையை விளக்கும் ”பாசமும்”, மகனை காயப்படுத்திய ஆசிரியை மேல் கோபப்பட முடியாமல் தவிக்கும் அம்மாவின் நிலையைச் சொல்லும் ”பொட்டலம்” சிறுகதையும் என ஒவ்வொன்றும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியது. எதைச் சொல்ல எதை விட?

லைகள் பழுக்காத உலகம்
61 கவிதைகளை உள்ளடக்கிய இந்த கவிதை தொகுப்பும் இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் வெளிவந்துள்ளது. குட்டிக் குட்டி கவிதை வரிகளில் தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். என் மகளும் இந்த கவிதை தொகுப்பில் உள்ள ஒருசில கவிதைகளை வாசித்து அர்த்தத்தை என்னிடம் கேட்டு உள்வாங்கிக் கொண்டாள் என்பதை பெருமையாக இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவளைக் கவர்ந்தவை ”பூக்குட்டி”யும், ”தேவதைக்குப் பிடித்த காலணிகளும்”. இந்த கவிதைத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளும் பத்திரிக்கைகளில் இடைப்பட்ட காலங்களில் வெளிவந்தவை தான்.

என்னை கவர்ந்த பல கவிதைகளில் மாதிரிக்கு இங்கே சில வரிகள்….

காற்றில் மிதந்து வந்து
மடியில் விழுந்தது
பழுத்த இலையொன்று

காலம் முடிந்து
தானே கனிந்து
விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று
கழன்று கொண்ட அதன் நடுவே
நீண்டு ஒன்றும்
குறுக்காகப் பலவும்
ஓடின அழுத்தமாக
அன்பின் வரிகள்

செவிகளால் பார்க்கவும்
கண்களால் கேட்கவும் முடிகிற
அற்புதத்தை நிகழ்த்தி.

சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் இத்தொகுப்பின் கூடுதல் சிறப்பு. ராமலஷ்மி அவர்களின் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.

அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள இவ்விரு புத்தகங்களையும் நீங்களும் வாங்கி வாசித்து நான் பெற்ற இன்பத்தை பெற்றிடுங்கள்.

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

மகிழ்ச்சியும் நன்றியும் ஆதி வெங்கட்!
http://kovai2delhi.blogspot.in/2014/12/blog-post_17.html

**
கிடைக்குமிடங்கள்:


 21 ஜனவரி 2015 வரையிலும் நடைபெறுகிற சென்னை புத்தகக் கண்காட்சியில், “அகநாழிகை” அரங்கு எண் 304_ல் கிடைக்கும்.




இணையத்தில்.. தபாலில் வாங்கிட.. :

மேலும் கிடைக்குமிடங்கள் குறித்த முழுவிவரம் இங்கே.

***

16 கருத்துகள்:

  1. வணக்கம்
    விமர்சனத்தை படித்த போது புத்தகம் கைவசம் இல்லை என்ற கவலைதான்.... வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  3. ஆதி வெங்கட் தளத்தில் வாசித்தேன். இங்கும் வாசித்து மகிழ்ந்தேன்.
    அருமையான விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு ராமலக்ஷ்மி,சரசுவும் கோழிகளும் கொண்ட பந்தம் என்னை மிகவும் பாதித்தது. அதே போல் புதுச்சேரி மழையும் ஒரு தாயின் வேதனையும் மிக மிக நெகிழ வைத்தன. ஒரு அற்புதப் படைப்பைப் படித்த திருப்தி பூரணமாக நிறைகிறது மனதில். மேலும் உங்கள் எழுத்தைப் படிக்க ஆவல் எழுகிறது.நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி. தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கு நன்றி வல்லிம்மா. நிச்சயமாக முயன்றிடுவேன்.

      நீக்கு
  5. சரியான நேரத்தில் எழுதப்பட்ட மிக நல்ல விமர்சனம். எழதியவருக்கு பாராட்டும், தங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி. தங்களின் எழுத்தில் மேலும் பல புத்தகங்கள் வெளிவர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin