வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சிரிப்பு (சிறுகதை) - அமீரகத் தமிழ் மன்றம் 13_ஆம் ஆண்டு விழா மலரில்..


22 மார்ச் 2013 அன்று துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடந்து முடிந்த அமீரகத் தமிழ் மன்றத்தின் பதிமூன்றாம் ஆண்டுவிழாவில், ‘விழா மலர்’ சிறப்பு விருந்தினரான இயக்குனர் பிரபு சாலமனால் வெளியிடப்பட்டது.  விழா குறித்த விரிவான விவரங்களை தினமலரில் இங்கே காணலாம்.


எனது சிறுகதையை வெளியிட்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்துக்கு நன்றி! RamalakshmiRamalakshmi1


சிரிப்பு


வாய்க்கால் பாலத்தின் குட்டைச் சுவர் மேல் உட்கார்ந்து போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிங்காரம். அரிசி மில்லு அண்ணாச்சி, பரமசிவம் வாத்தியார், சங்கரலிங்கம் சம்சாரம், குருக்களைய்யா மகன் எனத் தெரிந்தவர்கள் கடந்து போனாலும் வாளாவிருந்தான். அவர்களும் இவனோடு பேச முற்படவில்லை. இவனும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பள்ளி சிநேகிதன் பெருமாள் மட்டும் சைக்கிளின் வேகத்தைக் குறைக்காமல் ‘என்னலே சிங்காரம்?’ என உற்சாகமாய்க் கையசைத்துப் புன்னகைத்தபடிக் கடந்து போனான். வேறு வழியில்லாமல் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தவன், ‘உருப்படாத பயலுவதான் இந்தக் காலத்துல உதார் விட்டுக்கிட்டுத் திரியுறானுங்க’ என நினைத்தான்.

ஒரே வகுப்பில் பத்தாவது வரைப் படித்தவர்கள் பெருமாளும் அவனும். சில வகுப்புகளில் ஒரே பெஞ்சில் கூட இருந்திருக்கிறார்கள். இவன் எழுபது எண்பது என மதிப்பெண்கள் எடுக்கையில் அவன் நாற்பத்தைந்தை எந்தப் பாடத்திலும் தாண்டியதாக நினைவில்லை. நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. ‘ஈ ஓட்டுற கடையில என்னமோ தலைக்கி மேலே வேல கெடக்கிறாப்ல பாவ்லா பண்ணிக்கிட்டு நிக்காமல்லாப் பெடலப் போடுதான். ஒரு வகையில நல்லாதாப் போச்சு. என்ன கெடக்குப் பேச? எப்படிப் போவுது வியாவாரம்னுதான் ஆரம்பிக்க வேண்டிருக்கும். அது போதுமே. ஆரம்பிச்சுருவான் புராணத்தை. அப்பன் ஆரம்பிச்சக் கடை அவனாலதான் ஆஹா ஓஹோன்னு போகுதுன்னு அம்பானி ரேஞ்சுக்குப் பேசுவான். போட்டும் போட்டும். நிக்காமயேப் போட்டும்’ என நினைத்தான்.

தூரத்தில் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. மாலை வெயில் மஞ்சள் பூச ஆரம்பித்திருந்தது. இதமான காற்றில் அரச மரத்து இலைகள் சலசலத்துக் கொண்டிருந்தன. ஏதேதோ சிந்தனையில் அவன் மூழ்கிக் கிடந்தாலும் பார்க்கிற எவருக்கும் அவன் தென்றலை அனுபவித்தபடி வாய்க்காலுக்கு அந்தப்பக்கம் மேற்கே விழுந்து கொண்டிருந்த சூரியனின் அழகை இரசித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். அப்படியான அவர்களின் நினைப்பு மட்டும் சிங்காரத்துக்குத் தெரிய வந்தால் நொந்தே போய்விடுவான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் எதுவுமே ரசனைக்குரியது இல்லை. எதையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாக இதுவரை ஒப்புக் கொண்டதும் இல்லை. சில வருடங்களுக்கு முன் வரை இது போல உட்கார்ந்திருந்த தருணங்களில் கடந்து செல்லும் ஒவ்வொருவரைப் பார்த்தும் சிநேகமாகப் புன்னகைத்திருக்கிறான். மனதுக்குள் அவர்களைக் கிண்டலடித்தாலும், நலம் விசாரித்திருக்கிறான். ஏனோ இப்போது எவருடனும் சிநேகம் பாராட்டப் பிடிக்கவில்லை. ‘பொறாமப் புடிச்ச மனுசங்க சகவாசமே வேண்டாம்’ என நினைத்தான்.

என்ன செய்ய? அவனது திறமையைக் காட்ட வழியில்லாமல் அவன் அப்பா நாலு வீடுகளையும், அஞ்சு கடைகளையும் கட்டி வாடகை வரும்படி செய்து விட்டுப் போய் விட்டார். வஞ்சனையில்லாத வருமானம். ‘ஒரு பயலாவது வாடகை தராம ஏமாத்தவோ, நாள் கடத்தவோ செஞ்சிருந்தா வசூல் செய்றேன் பேர்வழின்னு வீதியில் இறங்கி முஷ்டியத் தட்டி, ஸீன் போட்டு பெரிய ஆளாக் காட்டியிருந்திருக்கலாம். அதுக்கும்லா வாய்ப்பில்லாம அத்தன பயலுவளும் யோக்கியவானப் போயிட்டாங்க. டாண் டாண்னு தேதி அஞ்சுக்குள்ள வாடகையத் தந்துடுறானுங்களே’ எனப் பலமுறைத் தனக்குள் அலுத்துக் கொண்டிருக்கிறான். தனக்கு அடித்த அதிர்ஷ்டத்தைக் காணப் பொறுக்காமல்தான் வெட்டியாய் உட்கார்ந்து திங்கிற மாதிரி எல்லோரும் சாடை பேசுகிறார்கள் என்பது அவனது எண்ணமாக இருந்தது. இதனாலேயே வரவர எவருடன் நட்பாக இருக்கப் பிடிக்காமல் போய்க் கொண்டிருந்தது.

நெருங்கி வந்த மாட்டு வண்டி அவனை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. வண்டிக்காரர் முற்றிலும் புதியவராய்த் தெரிந்தார். ‘உள்ளூரு மனுசனாத் தெரியலயே! எந்தூரா இருக்கும்? எதுக்காக வாறான்? கேப்பமா? தெரிஞ்சு என்னாகப் போகுது? அதனாலக் கண்டா மனசுக்கேதும் பெரிசா நிம்மதி கெடைக்கப் போகுதா என்ன? நாம நம்ம சோலியப் பாப்போம்.’ நினைத்தானே தவிர அப்படி இருக்க முடியவில்லை. பார்வை மாடுகளின் மேல் திருப்பியது. ஒரே உயரத்தில் ஒன்று செவலை. ஒன்று கருப்புக் காளை. கழுத்து மணிகள் சிணுங்க மெல்லச் சென்று கொண்டிருந்தன. காலார நடக்கின்றவா, களைப்பினால் தளர்ந்து போயிருக்கின்றனவா எனத் தீர்மானிக்க முடியவில்லை. வண்டி அவனைத் தாண்டிச் சென்றதும்தான் அதைக்
கோமாளி
கவனித்தான்.

ஒரு விசித்திரமானச் சித்திரம் மாட்டப்பட்டிருந்தது வண்டியின் பக்கவாட்டில். ஒரு கையால் வாயின் பாதி மூடிக் கொண்டு, இன்னொரு கையைப் பார்ப்போரை நோக்கிக் கேலி செய்கிற மாதிரி நீட்டிக் கோணலாய்ச் சிரிக்கும் கோமாளியின் படம். உற்றுப் பார்த்தவனுக்கு அந்தச் சிரிப்பு அவனை அவமதிப்பது போல் தோன்றியது. ‘எவன்டா நீ? அத்தனை சிரிப்பாவா சிரிச்சுக் கெடக்கு எம் பொழப்பு? வெளியூரு மாட்டுவண்டியிலே மெனக்கிட்டு தேடி வந்து கெக்கலிக்கறே?’ கோமாளியின் மேல் குபுகுபுவெனக் கோபம் பொங்கியது.

அந்நேரம் பார்த்து அந்த வழியாக ஓடி வந்த ஐந்தாறு சிறுவர்களில் ஒருவன் சித்திரத்தைக் கவனித்ததும் சடாரென நின்று விட்டான். ‘ஹெஹ்ஹெஹ்ஹே... பாருங்கடா இத’ மற்றவர்களுக்கும் காட்ட பற்றிக் கொண்டது அத்தனை பேருக்கும் உற்சாகம். அந்த இடமே சிரிப்பலைகளால் அதிர்ந்தது. உரக்கச் சிரித்த நெட்டையன் ஒருவன் வயிற்றைப் பிடித்தபடிச் சாலையில் உருளவே தொடங்கி விட்டான்.

‘கிறுக்குப் புடிச்சிருக்கா இவனுகளுக்கு. ஒரு படத்தைப் பாத்து இந்தச் சிரி சிரிக்கிறானுங்க! ஒருவேள எனக்குத்தான் அதுல என்ன இருக்குன்னு புடிபடலையா?’ கண்டுபிடிக்கத் தீர்மானித்தவனாய் எழுந்தான்.

“ஏய் நிறுத்தப்பா” ஓங்கிய குரலில் அதட்டவும், அதிர்ந்து போன வண்டிக்காரர் கயிற்றை ஒரு இழு இழுத்து மாடுகளை ஓரங்கட்டினார். ஆனால் பையன்களின் சிரிப்பு நிற்கவில்லை. அதிலும் முதலில் படத்தைப் பார்த்த பையன், நின்றிருந்த வண்டியின் அருகே போய் இன்னும் புதிதாய் எதையோக் கண்டு பிடித்து விட்ட மாதிரி ‘கெக்கெக்கே...’ எனச் சிரிப்பை இரட்டிப்பாக்கிச் சிங்காரத்தை வெறுப்பேற்றினான்.

விடுவிடுவென வண்டி முன்னால் போய் நின்றான் சிங்காரம். “ யாரப்பா நீ? எங்கிருந்து வர்றே? என்ன நெனச்சுக்கிட்டிருக்க ஒம் மனசுல? அது என்ன படம்? எங்கூருக்குள்ள வந்து எங்களைப் பாத்தேக் கிண்டலடிச்சாச் சும்மா விட்டிருவோம்னு நெனச்சியா?” மிரட்டுகிற தொனியில் கேட்கவும் சற்று நடுங்கித்தான் போனான் வண்டிக்காரன்.

குதித்து இறங்கி, தலையிலிருந்தத் துண்டைக் கழற்றிக் கக்கத்தில் இடுக்கிக் கொண்ட வண்டிக்காரன் “அய்யா வணக்கம். மன்னிச்சுக்குங்க. யாரையும் நான் கேலி செய்ய நெனக்கலீங்க. ஒரு சாமியாரு எங்கிட்ட என்னால முடிஞ்சச் சின்ன வழியில சந்தோசத்தப் பரப்பச் சொன்னாரு. அப்படிச் செஞ்சா எனக்கும் சந்தோசம் கெடைக்கும்னாரு. சரின்னுட்டு கூட்டாளிங்க கிட்ட ரோசனை கேட்டேன். ஒவ்வொருத்தனும் ஒண்ணொண்ணச் சொன்னானுங்க. எதுவும் சரிப்பட்டு வரல. அப்புறம் ஒருத்தன் இந்தப் படத்த வண்டியில் கட்டிக்கன்னு கொடுத்தான். இந்தப் பசங்க மாதிரி சிரிக்காட்டாலும், மொதத் தடவப் பாக்குறப்பத் தோளக் குலுக்கிச் செலரு சிரிப்பாங்க. அப்புறம் சத்தமில்லாம மெலிசா வாய விரிப்பாங்க. அதுக்கப்பறம் படத்த விட்டுட்டு என்னைய சிநேகமாப் பாப்பாங்க. போகப்போக என்னயும் கண்டுக்க மாட்டாங்க. படத்தையும் பாக்க மாட்டாங்க. அத்தோட அந்த வழிய விட்டுட்டு வேற ரூட்டுல போக ஆரம்பிச்சிருவேன். அடிக்கடி வழிய மாத்துனாதான நிறைய சனங்க, வேறவேற மனுசங்க இதப் பாக்க முடியும்? ராசிபுரத்துல மூட்டைகள இறக்க வந்தவன், இப்ப மொதமொதலா இந்த வழியாப் போயிட்டிருக்கேன். இதான்யா விசயம். கோவிச்சுக்க மாட்டீங்கன்னு நம்புறேன்” எனக் கும்பிட்டான்.

விநோதமாய் இருந்தது அவனது விளக்கம். ஏறுக்குமாறாக எதையோ சொல்லித் தன்னை ஆழம் பார்க்கிறானோ என்று கூடச் சந்தேகம் வந்தது சிங்காரத்துக்கு. மீண்டும் படத்தைப் பார்த்தான். ‘எப்படி இந்த அசட்டுக் கோமாளி யாரயும் சிரிக்க வைக்க முடியும்?’ புரியவே இல்லை அவனுக்கு. சற்று அமைதியாகி வண்டிக்காரன் சொல்வதைச் சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள் விட்ட சிரிப்பைத் தொடர்ந்தார்கள். கோபமான சிங்காரம் நெட்டையனிடம் “ஒங்களுக்கெல்லாம் அறிவே இல்லியா? வெளியூரு ஆசாமின்னு தெரியுதுல்லா. அவரை ஏன் சும்மாத் தொந்தரவு பண்றீங்க. என்ன இருக்கு அந்தப் படத்துலன்னுப் பல்லப் பல்லக் காட்டுறீங்க?’ என்றான்.

யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. அந்தக் கோமாளியைப் போலவே ஒருவரைப் பார்த்து ஒருவர் சைகை செய்து மேலும் சிரித்தார்கள். அவர்களது கூட்டுச் சிரிப்பின் சத்தத்தில் அரச மரத்துப் பறவைகள் சில பயந்து படபடத்து, மேலெழும்பி ஒரு வட்டமிட்டு, மீண்டும் கிளைகளில் வந்தமர்ந்தன. தன் விளக்கம் சிங்காரத்துக்குத் திருப்தி தரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட வண்டிக்காரன் தொண்டையைக் கனைத்துத் துணிவை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்தான்.

“அய்யா, அந்தச் சாமியாரு என்ன சொன்னாருன்னா... நம்ம எல்லாருக்குள்ளயுமே ‘சிரிக்கணும், சந்தோசமா இருக்கணும்’ங்கிற ஆசை மறைஞ்சு புதஞ்சு கெடக்குமாம். அத நிறைவேத்திக்கிற நேரத்துக்காகக் காத்துட்டே இருக்குமாம். வாய்ப்புக் கெடைக்கியில கப்புன்னு பிடிச்சுக்குமாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்தெட்டுப் பிரச்சனை. அதச் சரி பண்றதுலயும் வயித்துப்பாட்டைக் கவனிக்கறதுலயுமே நம்ம ஆசை நமக்கு மறந்து போகுதாம். இந்த மாதிரியான சின்ன வழிங்க அந்த ஆசைய நிறைவேத்தி நம்ம சந்தோசமாக்குதாம். அதனாலதான் பொடிப்பசங்களிலிருந்து பல்லுபோனப் பாட்டித் தாத்தா வரை எல்லோருக்கும் காமெடி சினிமா, காமெடி ஸீனு, காமெடி நடிகருங்கள ரொம்பப் பிடிக்குதுன்னு சொன்னாரு.”

அவனது மறுபிரசங்கத்தைக் கேட்டதும் சிங்காரத்துக்கேச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது. அதைக் காட்டிக் கொள்ள விரும்பாமல், அந்தச் சூழலில் இருந்து தப்பிக்க ஒரே வழி மேலும் பேச்சை வளர்க்காமல் வண்டிக்காரனை கிளம்பச் சொல்வதுதான் எனத் தீர்மானித்து “சரி சரி. நீ போகலாம்” என்றான். அதே நேரம் அவன் சொன்ன எதையும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று உணர்த்த, “ஒலகம் முழுக்க ஏமாத்துக்காரச் சாமியாருங்க! அவங்களுக்குன்னு எங்கிருந்துதான் வந்து மாட்டுறாங்களோ.. கோட்டிக்காரச் சீடனுங்க!” என்றான் சத்தமாக. ஒரு கணம் திகைத்த வண்டிக்காரன் ‘ட்ர்ரா.. ட்ர்ரா...’ எனச் சாட்டையைச் சொடுக்கி அவசரமாய்ப் பயணத்தைத் தொடர்ந்தான், விட்டால் போதுமென.

பிள்ளைகள் எதிர்த் திசையில் ஓடி விட்டிருக்க, பாலத்துச் சுவர் மேல் ஏறி அமர்ந்தான் சிங்காரம். நடந்ததை நினைத்தபோது எழுந்த சிரிப்பை இப்போது அடக்க முயன்றிடாமல் பெரிய மனதுடன் அகன்ற புன்னகையாய்த் தன் முகத்தில் படர விட்டான். சூரியன் முழுவதுமாய் மறைந்து செக்கச் செவலேன்றாகி விட்டிருந்த வானத்தின் வண்ணம் வாய்க்கால் நீரைத் தகதகக்க வைத்துக் கொண்டிருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தவன், அதன் வசீகரத்தில் தன்னை இழக்க ஆரம்பித்திருந்தான்.
***

2 ஏப்ரல் 2013 அதீதம், மின்னிதழிலும்..

31 கருத்துகள்:

 1. பலரும் உள்ளே இருக்கும் சந்தோசத்தை கூட வெளியே காண்பிக்க முடியாதபடி, ஒரு வளையத்தை போட்டுக் கொள்கிறார்கள்...

  வண்டியை வருடம் முழுவதும் எல்லா ஊர்களிலும் பயணிக்கலாம்...

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  அமீரகத் தமிழ் மன்றத்திற்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 2. உங்கள் படைப்புகளில் எதைப்புகழ்வது என்று தெரிய வில்லை. புகைப் படங்களையா, சிறு கதைகளையா, கவிதைகளையா, கட்டுரைகளையா,நேர் காணல் பதிவுகளையா? ஒன்றுக்கு மேல் ஒன்று ஜொலிக்கிறதே?

  பதிலளிநீக்கு
 3. /////////////நம்ம எல்லாருக்குள்ளயுமே ‘சிரிக்கணும், சந்தோசமா இருக்கணும்’ங்கிற ஆசை மறைஞ்சு புதஞ்சு கெடக்குமாம். அத நிறைவேத்திக்கிற நேரத்துக்காகக் காத்துட்டே இருக்குமாம். வாய்ப்புக் கெடைக்கியில கப்புன்னு பிடிச்சுக்குமாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்தெட்டுப் பிரச்சனை. அதச் சரி பண்றதுலயும் வயித்துப்பாட்டைக் கவனிக்கறதுலயுமே நம்ம ஆசை நமக்கு மறந்து போகுதாம். இந்த மாதிரியான சின்ன வழிங்க அந்த ஆசைய நிறைவேத்தி நம்ம சந்தோசமாக்குதாம். அதனாலதான் பொடிப்பசங்களிலிருந்து பல்லுபோனப் பாட்டித் தாத்தா வரை எல்லோருக்கும் காமெடி சினிமா, காமெடி ஸீனு, காமெடி நடிகருங்கள ரொம்பப் பிடிக்குதுன்னு சொன்னாரு.”////////////////////

  இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. நிஜ வாழ்விலும் ஆயிரத்தெட்டு பிரச்சனை. இதுல வீட்டுல இருக்குற பெண்களில் பெரும்பாலானோர் தொல்லைக்காட்சி பெட்டியிலயும் அழுகாச்சி காவியமா பார்க்க விரும்புறதாலதான் கதையே இல்லைன்னாலும் கடிக்காத காமெடி படங்கள் ஓஹோ என்று ஹெவி ஓட்டம் ஓடுகின்றன.

  பலர் சிரிக்க ஆசைப்பட்டாலும் அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்ற ஈகோவில்தான் சிரிப்பைத் தொலைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  சிம்பிளான கதை. அழுத்தமான கருத்து.

  பதிலளிநீக்கு
 4. அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள்.

  சிரித்திடு நோய்விட்டுபோகும் என சரியாகத்தான் சொன்னார்கள்.

  கதை நன்கு ரசிக்கும்படியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 6. உண்மை, எளிமையான நடையில். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இனிய நல்வாழ்த்துகள்.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. அருமை.

  வாழ்த்துகள்.

  ஒரு புன்னகை மாற்றுகிறது மொத்த மனபாரத்தையும்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  கதை அருமை.
  சிரிக்க தெரிந்தவர்கள் தங்களைச்சுற்றியும் மகிழ்ச்சி அலைகளை பரப்புகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 10. கதையின் கருவும் அதை நீங்கள் கையாண்ட விதமும் எனக்கு மிகப் பிடித்தது. நம்மைச் சுற்றிலும் வேலி அமைத்துக் கொண்டு நாம்தான் எதையும் ரசித்துச் சிரிக்க மறுக்கிறோம். அந்த சாமியார் சொன்ன மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அடைத்து வைத்த சிரிப்பு பொங்கி வரத்தான் செய்கிறது. மனம் லேசாகிறது. அருமையான சிறுகதை படித்த நிறைவு!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள் மேடம்.. அருமையான கதை.. ஒரு சிரிப்பு முழு மன மாற்றத்தைத் தர வல்லது தான்..

  பதிலளிநீக்கு
 12. சிரிக்கவைப்பது பெரும் கலை.
  அதுவும் இன்னோருவர் மனம் நோகாமல்

  எழுதுவது உங்களுக்கு இயற்கையாக வந்திருக்கிறது. உள்மனம் களிக்க வாய் விட்டுச் சிரிக்க வேண்டும். அந்த வகையில் இந்தக் கதை களிப்பூட்டுகிறது.
  மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 13. நன்கு ரசித்தேன்.. கதையின் காதாப்பத்திரங்களும் சூழ்நிலையும் கண் முன்னே நின்றது .. வாழ்த்துக்கள் தங்களுக்கு...

  பதிலளிநீக்கு
 14. @அமைதிச்சாரல்,

  நன்றி சாந்தி, கதையின் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்ததற்கும்.

  பதிலளிநீக்கு
 15. @வல்லிசிம்ஹன்,

  /இன்னொருவர் மனம் நோகாமல்/ சரியாய் சொன்னீர்கள் வல்லிம்மா. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. @அகல்,

  கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி, அகல்.

  பதிலளிநீக்கு
 17. நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி, பகிர்வுக்கு மகிழ்ச்சி.மிக அருமை.தொடர்ந்து அசத்துங்க.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin