திங்கள், 6 செப்டம்பர், 2010

தாயுமானவராய்.. - உயிரோசையில்..

டந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் பெங்களூரின் ஒரு பள்ளியில ஐடி கார்ட் அணிந்து வராத ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் பள்ளிக்கட்டிடங்களைச் சுற்றிப் பலமுறை ஓடுமாறு தண்டிக்கப் பட்டனர். அதில் ஒரு சிறுமி மயக்கமாகும் நிலைக்கு வர, அடுத்த நாள் பெற்றோர் பெருந்திரளாக வந்து தட்டிக் கேட்கவும் நிர்வாகம் பயந்து குழந்தைகளை திருத்தும் நல்லெண்ணத்தில்தான் அப்படி செய்ததாகவும் இனி ‘தவறு’ நேராதென்றும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளை இதுபோன்ற காரணங்களுக்காக ஓட விட்டது தவறுதான். ஐடி கார்ட் அணியாதது குறித்து பெற்றவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியிருக்கலாம். ரிப்போர்ட் கார்டில் குறிப்பது, அபராதம் விதிப்பது என எத்தனையோ பிற வழிமுறைகள் இருக்கின்றனவே.

இது ஒரு உதாரணத்துக்கே. உடல் மன ரீதியாக குழந்தைகளை வருத்தும் கார்ப்போரல் தண்டனைகள் பற்றி எத்தனையோ கேட்டாயிற்று. பார்த்தாயிற்று. எதிர்ப்புகளும் தெரிவித்தாயிற்று. வாக்குவாதங்கள் நிகழ்ந்தாயிற்று. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாச் செய்திகள் இந்தப் பக்கம்தான் குற்றம் எனக் கைநீட்டி உறுதியாகச் சொல்லமுடியாதபடி சில சமயங்களிலும், கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாதபடி பல சமயங்களிலும்.

இந்த நேரத்தில் நமது பள்ளி அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதென்பது காலத்துக்குப் பொருந்தாத ஒன்றாய் தோன்றலாம். ஆனால் நினைவின் இடுக்குகளுக்குள் இருந்து அவை பீறிட்டு வரவே செய்கின்றன. சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் எனது பள்ளிக்காலம். பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட வருபவர்கள் ஆண்டுவிழா போன்ற நிகழ்வுகள் தவிர வேறெதற்கும் அழைக்கப்படுவதில்லை. பிள்ளைகளின் படிப்போடு ஒழுக்கத்துக்கும் பள்ளிகளே உத்திரவாதம் என்பது போலாக என்ன கண்டித்தாலும் பெற்றோர் தலையிட்டதில்லை.

மணலில் முழங்காலிட வைப்பது, பெஞ்சு மேல் ஏற்றுவது, ஸ்கேலினால் உள்ளங்கையில் அடிப்பது, மைதானத்தைச் சுற்றி ஓடவிடுவது இதெல்லாம் சர்வ சாதாரணமாகத் தரப்பட்ட தண்டனைகள். ஓரிரு முறைகள் சற்றே வரம்பு மீறிச் சென்ற சம்பவங்களில் மட்டுமே பெற்றோர் தலையிடக் கண்டிருக்கிறேன். தலைமை ஆசிரியரும் குறிப்பிட்ட ஆசிரியர்களை எச்சரிக்கத் தவறவில்லை அந்த நாளிலும்.

ஆனால் இப்போது சின்ன விஷயங்களுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை உரிமையுடன் நெறிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அப்படியே மாணவர்மேல் தன்மையாகத் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போதும்கூட தங்கள் பிள்ளைகளிடம் தவறேதும் உள்ளதா என்பது பற்றி ஆராயாமல் பெற்றவர் கொந்தளிப்பதே பெரும்பாலும் நடக்கின்றது. பொறுமையற்ற ஆசிரியர்கள் சிலரால் நடந்த பல தவறுகளால் ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கண்டிப்பதே குற்றமெனும் மனோபாவத்துக்கு வந்தே விட்டோம்.

அன்றைக்கு ஆசிரியர்கள் நமக்கு வழங்கிய தண்டனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவர்கள் கண்டிப்புடன் இருந்ததாலேயே நல்ல ஒழுக்கத்துடன் வளர்ந்தோமென நம்புகிற நாம் இன்றைக்கு நமது பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிப்பதை விரும்பவில்லைதான். என் மகன் படித்து முடித்த பள்ளிகளில் கார்ப்போரல் தண்டனைகள் இல்லாதது இயல்பாக நடந்தது. இருந்திருந்தால் நான் அதை விரும்பியிருப்பேனா என்பது கேள்விக்குறியென்றால் இன்றைய சூழலுக்கு என்னதான் தீர்வு என்பதற்கும் என்னிடம் சரியான விடையில்லை.

ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒருசேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும், தங்கள் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. தாயுமாய் ஆசிரியர்கள் இருக்கையில் தண்டனைகள் வரம்பு மீற வாய்ப்பில்லை. இந்த பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டால் வரம்பின் எல்லையை வரையறுப்பதிலுள்ள சிக்கல்களும் தீரக் கூடுமென்றே நினைக்கின்றேன்.

***

ந்த ஆசிரியர் தினம் இதோ நான் பகிரப் போகும் நினைவுகளைத் தாங்கி நன்றியுடன் நகர்ந்தது நேற்று. கடந்த மாதம் நெல்லை சென்றிருந்த போது எங்கள் பள்ளியாகிய இக்னேஷியஸ் கான்வென்டுக்குச் சென்று வந்தது பற்றி சென்ற பிட் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நானும் தங்கையர் இருவரும் பிள்ளைகளுடன் சென்றிருந்தோம். படிப்பினை முடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபடியாலும், எங்களுக்கு எடுத்த ஆசிரியர்கள் பலரும் ஓய்வு பெற்று விட்டதைக் கேள்விப்பட்டதாலும், வகுப்பு நாள் எனில் மாணவருக்கு இடைஞ்சலாய் இருக்கக் கூடும் என்பதாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது ஒரு அழகான ‘ஞாயிறு’.



வாசலில் இருந்த காவலாளி ‘நாங்கள் பழைய மாணவியர்’ என சொன்னதும் மிகுந்த பரிவுடன் ‘போங்க, போய் நல்லா சுத்திப்பாருங்க. பசங்களுக்கு எல்லா இடமும் காட்டுங்க. கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்துட்டும் வாங்க’ என்றார். அவருக்கும் நன்றி.

ஒவ்வொரு வகுப்பு இருந்த கட்டிடங்களுக்குக்கும் மைதானங்களுக்கும் தேவாலயத்துக்கும் சென்று வந்தோம். எம்மைச் செதுக்கிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நினைவுக்கு வந்தனர். கூடப்படித்தவர்கள் எல்லாம் பச்சை வெள்ளை சீருடையில் சினிமாவில் வரும் ஃப்ளாஷ்பேக் போல அவ்விடத்தில் தோன்றி அங்குமிங்குமாய் நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்குமென்ற சிறுபிள்ளைத்தனமான ஏக்கம் எழுந்தது.

அத்தனை இடங்களையும் படம் எடுத்தேன், எனக்காக மட்டுமல்ல எனது பள்ளியின் பழைய மாணாக்கர் அனைவருக்காகவும்.  அப்படங்களின் தொகுப்பு இங்கே:
[எம் பள்ளி மாணவியரால் ஃபேஸ்புக்கில்  பல இலட்சம் பக்கப் பார்வைகளைப் பெற்ற ஆல்பமாக உள்ளது. அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்ந்திட உதவும் தொகுப்பாக அது அமைந்து போனதில் மகிழ்ச்சி.]
மற்றவருக்கு இப்படங்கள் வெறும் கல்லும் கட்டிடமும், மண்ணும் மைதானமுமே. அங்கு கற்றவருக்கோ தாய்வீடு போல. தவழ்ந்து வளர்ந்த வீட்டில் அமர்ந்து கதை பேசிய திண்ணை, ஓடி விளையாடிய முற்றம், நிலாச் சோறு உண்ட மொட்டைமாடி இவற்றின் மீதான் நேசம் போலவே அங்கிருந்த வகுப்பறைகளுடனும், மரத்தடிகளுடனும், மாடிப்படிகளுடனும், நடனம் நாடகம் என அசத்திய மேடையுடனும் அளவில்லாப் பாசம் பொங்கியது.

விடுதிக் கட்டிடம் அருகே சென்ற போது மாடி வராந்தாவில் நின்றிருந்த மாணவி நீங்கள் யாரென சைகை செய்ய அறிமுகம் செய்து கொள்ளவும் ‘எந்த வருடத்தில் முடித்தீர்கள்’ எனக் கேட்டாள். சொன்னபோது நெஞ்சில் கை வைத்து ‘ஏ ஆண்டவரே. நானெல்லாம் அப்போது பிறக்கவே இல்லையே!’ என்றபடி மற்றவர்களைக் கூவி அழைத்தாள். அவர்களுடன் அளவளாவும் ஆசையில் தங்கை கீழே அழைக்க, ‘அனுமதியில்லை’ என்றார்கள் வருத்தத்துடன். ‘ஆகா, விதிகளை மீறாத நல்ல பிள்ளைகள்’ என மெச்சியபடி கையசைத்து விட்டு நகர்ந்தோம்.

இன்னும் இருபது இருபத்தைந்து வருடங்கள் கழிந்து அவர்களில் எவரேனும் நெஞ்சம் நிறைய நன்றியுடன் இப்படி பள்ளியினை வலம் வரக் கூடும். அப்போதைய மாணவியர் திகைப்பும் மகிழ்வுமாய் அவர்களை நோக்கிக் கையசைக்கக் கூடும். காலச் சக்கரத்தின் சுழல்வில் எங்கெங்கோ இடம்பெயர்ந்தாலும், எத்தனையோ நிகழ்வுகள் அனுபவங்களில் நாம் உலகைக் கற்றாலும், பயின்ற பள்ளி ஆழ்மனதில் நீங்கா மதிப்புடன் இடம் பெறுகிறதென்றால் அதற்குக் காரணம் சொல்லித் தந்த ஆசிரியரும்தானே!!
***

, ஆ’ அறிவித்து, அறிவுக் கண் திறந்து, பதின்ம வயதில் பக்குவம் தந்து வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் கூட இருந்த பள்ளியுடனான பந்தம், பேபி க்ளாஸ் என அழைக்கப்பட்ட யுகேஜி-யுடன் சேர்த்து பதிமூன்று வருடங்கள் என்பதனால் ஒருவித ஓரவஞ்சனையுடன் கல்லூரிக்குச் செல்லாமல் வந்து விட்டதாக நினைக்க வேண்டாம். நேரம் அமையவில்லை. அடுத்த முறை நிச்சயம் செல்வோம். ஆனால் அம்மை அப்பனை அழகாய் வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டப் பிள்ளையாரைப் போல எங்கள் மூவருக்குமே கல்லூரியில் தமிழ் வகுப்பெடுத்த, தற்போது ஓய்வு பெற்று விட்ட பேராசிரியை திருமதி. விமலா சாமுவேல் அவர்களை அவரது இல்லம் சென்று சந்தித்தோம் ஒரு மதிய நேரத்தில்.

சற்றும் எங்களை எதிர்பார்த்திராத அவர் ஆரத் தழுவி வரவேற்றார். ‘இத்தனை வருடங்கள் என் ஆசிரியர்களைச் சந்தித்து, என்னைப் பற்றிக் கேட்டுவந்த உங்களைப் பற்றி, உங்கள் ஆசிரியர் என்ன சொல்கிறார் எனப் பார்க்கிறேன்’ என்றபடியே கூட வந்த மகனைப் பார்த்து ‘உங்கம்மா ரொம்ப தங்கமான ஸ்டூடண்ட்பா’ என்றுதான் தன் பேச்சினையே ஆரம்பித்தார்:)! . ‘அந்த காலத்தில் எப்படிக் கதை கவிதையெல்லாம் எழுதுவா தெரியுமா?’ என்றார். இப்போதும் தொடர்வதை என் தங்கைகள் சொல்லக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘கணினி அத்தனை பரிச்சயம் இல்லை. கணவர் ஏதேனும் காட்டினால் பார்ப்பேன்’ என்றவரிடம் ‘வலையில் என் படைப்புகளைப் பாருங்கள்’ என்று சிரமப் படுத்த விரும்பவில்லை. கல்லூரி காலத்தில் இவரே எனக்கு எழுத உற்சாகம் தந்தவர். கல்லூரியில் இருந்த ஐந்து வருடங்கள் மட்டுமின்றி அதன் பின்னரும் ஓரிரு வருடங்கள் என் படைப்புகளை வாங்கி ஆண்டுமலரில் வெளியிட்டவர். அருமையாகப் பாடமெடுத்துத் 'தமிழை அமுதென்று' உணர வைத்த ஆசிரியர். அவருக்கு இங்கு என் வணக்கங்கள்.

மாணவியர் நாங்கள் மூவரும் அவருடன் நின்று புகைப்படமெடுத்துக் கொண்டோம். கல்லூரியின் தற்போதைய மாற்றங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். விடைபெறும் போது எம் பிள்ளைகள் அனைவரையும் உச்சி முகர்ந்து ஆசிர்வாதித்தார் எமது அன்னையைப் போல. வீடு திரும்பியதும் தம்பியுடன் இதைப் பகிர்ந்த வேளையில் சொன்னான் ‘ஆண்டுகள் எத்தனை கடந்தாலும், ஆசிரியருக்கே மறந்தாலும் மாணவர் தேடிச் சென்று பார்ப்பதும், அதனால் அவருக்குக் கிட்டும் பரவசமும் உன்னமான இப்பணிக்குத் தன்னை ஒப்படைத்தவருக்கு மட்டுமே வரமாய் வாய்த்த ஒன்று!’ என. எத்தனை உண்மை.

அத்தனை ஆசிரியப் பெருந்தகையினருக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும்!!

*** *** ***

 13 செப்டம்பர் 2010, உயிர்மை.காமின் ‘உயிரோசை’ இணைய இதழில்..
நன்றி உயிரோசை!

75 கருத்துகள்:

  1. யாவர்க்கும் இடைஞ்சல் அளிக்கா இனிய ஞாயிற்று கிழமையினில் அழகாய்,அமைதியாய் மனம் அசை போட்டிருக்கும் அந்த காலத்து நினைவுகளை ! எனினும் பள்ளி முழுதும் மாணவமணிகளோடு களித்திருக்கும் பொழுதினிலும் ஒரு முறை சென்று புகைப்படங்கள் அள்ளி வரவும் :)
    எனக்கு எங்க ஸ்கூலுக்கு போய் ரவுண்ட் அடிச்சு இப்படி போட்டோஸ் எடுக்கணும்ன்னு நினைப்பு வந்திடுச்சு!:)

    பதிலளிநீக்கு
  2. ஆமா .. நல்லா படிக்கலைன்னா என்னவேணாலும் திட்டுங்க அடிங்கன்னுசொல்லும் பெற்றோர்கள் அன்னிக்கு..

    இன்னிக்கு மகளோட பள்ளியில் என்ன அட்ட்காசம் செய்தாலும் அந்த பசங்களோட அம்மாக்களை கூப்பிட்டு ஆசிரியை அவர்கள் அம்மா அப்பாவை திட்டிக்கொண்டிருக்கிறார்கள் . பிள்ளைகளை இல்லை. அம்மா அப்பாக்களும் கண்ணால் கண்னீர்விட்டு எங்களால் முடியலைங்க அப்படியே வளர்ந்துட்டான்னு புலம்பிட்டு போறாங்க . பசங்க அதே கொட்டம் தான் :(

    பதிலளிநீக்கு
  3. தண்டனை என்பது மனிதனை (அ) குழந்தைகளை திருத்தி நல்வழிப் படுத்துவதாக இருக்கவேண்டும்.ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சிறைத் தண்டனையும் வகுப்புகளில் கொடுக்கப்படும் தண்டனையும் ஒருவரை மேலும் உடையச் செய்து விடுகிறது. அல்லது கடினப்படுத்தி கல்நெஞ்சாக்கி விடுகிறது.

    சகிப்புத் தன்மை மட்டுமல்ல, வலிதாங்கும் பக்குவமும் குறைந்து விட்டன. அதிகரித்து வரும் தற்கொலைகள்,மன முறிவுகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

    இந்த பதிவைப் படித்ததும் என்னுடைய பள்ளி கல்லூரி நாட்களும் நினைவுக்கு வந்து நெஞ்சை நெகிழச்செய்தது உண்மை. சில காரணங்களால் உள்ளூரிலேயே இருப்பதால் தினமும் ஒரு முறையாவது பள்ளியைக் கடந்து செல்கிறேன். வாரம் ஒரு முறையாவது கல்லூரியையும் பார்க்கிறேன். இப்படி இருக்கும்போதே மனசு கேட்கவில்லை.

    வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்ட பிறகு பல ஆண்டுகள் கழித்து இதே இடத்தைப் பார்க்கும்போது....அப்பப்பா...அதை அனுபவித்துப்பார்த்தால்தான் தெரியும் போலிருக்கிறது. எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

    பலரது முன்னேற்றத்துக்கும் விதை போடப்பட்ட அவரவர் பள்ளி நாட்களை ஒவ்வொருவருக்கும் நினைவில் கொண்டுவந்த அற்புதமான பதிவு.

    பதிலளிநீக்கு
  4. //மணலில் முழங்காலிட வைப்பது, பெஞ்சு மேல் ஏற்றுவது,/


    :)) எங்கள் வகுப்பில் குழுவாக நால்வர் எப்பொழுதுமே ஒன்றாகவே பெஞ்சு மேல் ஏறுவது முழங்காலிட்டு இரு கைகளினையும் தூக்கி கொண்டு நிற்பது என நிறைய முறை - பின்னே ஒரே பெஞ்சில் அமர்ந்து பாட வேளையில் சிரித்து,சண்டைபோட்டுக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் ஏதேனும் செய்துகொண்டிருப்போமாக்கும் - தண்டனை பெற்ற வேளையில் கூட ஒரு ஜாலியாகத்தான் சென்றிருக்கிறது :) மிகுந்த மனவேதனையெல்லாம் கொண்டதில்லை ! அது போலவே சில மாணவர்களின் பெற்றோர்கள் டெரராய் ஆசிரியர்களை மிரட்டி என் பையனுக்கு நீங்க சரியாவே தண்டனை தரமாட்டிக்கிறீங்கன்னு சொன்ன கதைகளும் உண்டு! இன்னும் ஒரு அப்ஸ் பையனுக்கு தரையில் கல் உப்பு போட்டு முழங்காலிட சொல்லி, வாத்தியாரிடம்,பையன் எந்திரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்ற சம்பவமும் உண்டு :)

    பதிலளிநீக்கு
  5. //கூடப்படித்தவர்கள் எல்லாம் பச்சை வெள்ளை சீருடையில் அங்குமிங்குமாய் சினிமாவில் வரும் ஃப்ளாஷ்பேக் போல அவ்விடத்தில் தோன்றி நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்குமென்ற சிறுபிள்ளைத்தனமான ஏக்கம் எழுந்தது.//

    ஹ ஹ ஹா!

    எல்லாருக்குமே லைஃப்ல ரீவைண்ட் பட்டன் தேவைப்படுது கடவுள் கண் முன்பு தோன்றினால் மனிதனை ரீவைண்ட் பட்டனோட படைக்க சொல்லணும்

    அருமையான பகிர்வு கூடவே சில அறிவுரைகளும்

    மாணவர்களை அடித்து வளர்க்கணும் கண்டித்து வளர்க்கணும் அப்படின்ற மனித தன்மையற்ற செயலில் எனக்கு சிறிதும் உடன்பாடே கிடையாது அந்த காரியங்களால் பள்ளிப்படிப்பையே பாதியில் விட்டுச்சென்ற நண்பர்கள் பலர் இப்பொழுதும் அவர்களை சந்தித்தால் அந்த ரத்னமாலா டீச்சர் மட்டும் என்னை அடிக்காம இருந்திருந்தா நானும் உன்னை மாதிரியே படிச்சு கவுரவமா வாழ்ந்திருப்பேன்னு அவங்க சொல்றப்போ கஷ்டமாத்தான் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  6. ஆயில்ஸ் நம்ம பள்ளியில் எடுத்த போட்டோஸ் போட்டு ஒரு பதிவு போட்டிருக்கலாமே!

    நீங்க சொல்வதும் வாஸ்தவம் தான். அப்போ பள்ளியிலே சேர்க்கும் போதே கண்ணு ரெண்டும் வச்சுட்டு மீதிய உரிச்சு எடுத்துடுங்கன்னு சொல்லிதான் விட்டாங்க, என்னவோ வாத்தியார் எல்லாம் கசாப்புகடை வச்சிருப்பது போல. ஆனா இப்போ நாம சுத்தமா மாறிவிட்டோம். பசங்க மேல இருக்கும் பாசம் தான் காரணம்.

    உங்க ஸ்கூல் போட்டோ அருமையா இருக்கு!

    பதிலளிநீக்கு
  7. ///‘வலையில் என் படைப்புகளைப் பாருங்கள்’ என்று சிரமப் படுத்த விரும்பவில்லை. ////

    அப்படின்னா... நாங்க எல்லாம்... ;-))

    பதிலளிநீக்கு
  8. ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒருசேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும், தங்கள் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. தாயுமாய் ஆசிரியர்கள் இருக்கையில் தண்டனைகள் வரம்பு மீற வாய்ப்பில்லை. இந்த பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டால் வரம்பின் எல்லையை வரையறுப்பதிலுள்ள சிக்கல்களும் தீரக் கூடுமென்றே நினைக்கின்றேன்.


    வாழ்க்கையில் நாம் எங்கு ஆரம்பித்து எப்படி வளர்ந்தோம் என்று சிந்திக்கும்போது கண்டிப்பாக ஒரு ஆசிரியராவது நம் மனதில் இருப்பார்...

    நாம் படித்த பள்ளியையும் ஆசிரியரையும் வாழ்நாளில் மறக்க்மாட்டோம்...

    நேசம் மறக்காத உங்கள் மலரும் நினைவுகளுக்கு என் வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு
  9. fonil peysumpothu sollavey illaiyey...
    aasiriyar thinaththiRku arumaiyaana pathivu

    பதிலளிநீக்கு
  10. ஆசிரியர்களின் உணர்வுகளும் பல காரணிகளால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் தண்டனைகள் கொடூரமாக மாறிக்கொண்டும் வருகிறது

    -----

    மிக நெகிழ்ச்சியான நினைவுகூறல்

    பதிலளிநீக்கு
  11. Akka, It brought tears in my eyes - seeing the school photos. Great memories.............!!! Thank you very very very very very much. It means a lot to me and words cannot express the gratitude that I have in my heart. Thank you.

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் நான் படிச்ச பள்ளிகளை போய் பாக்கணும்கிற ஆசை வந்துடிச்சு அக்கா.

    கூட சேர்ந்து நானும் சுற்றி வந்த அனுபவம் தந்திச்சு உங்க எழுத்து.

    என் வணக்கங்களும் கூட.

    பதிலளிநீக்கு
  13. தாயுமானவராய் தலைப்பே அழகாச்சொல்லுதே!! அருமை ராமலக்‌ஷ்மி. ஸ்கூல் ரவுண்ட் அப் பகிர்வும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  14. இனிக்கும் நினைவுகளுடன் கூடிய நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  15. பழைய நினைவுகளை கொண்டு வந்து இருக்கீங்க அக்கா அருமை

    பதிலளிநீக்கு
  16. நெகிழ வைத்த ஒரு அருமையான பதிவு. இன்னொரு 'ஆட்டோகிராப்' - க்காக நன்றி ராமலக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவுங்க...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. PIT படங்களை பார்த்துவிட்டு இங்கு வந்தேன்.நன்றாக உள்ளது,ஆனால்// ரிப்போர்ட் கார்டில் குறிப்பது, அபராதம் விதிப்பது என எத்தனையோ பிற வழிமுறைகள் இருக்கின்றனவே.
    // இந்த கருத்து கல்வி வியாபாரிகளுக்குத்தான் சாதகமானது.குழந்தைகளுக்கு அபராதம் விதிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது

    பதிலளிநீக்கு
  19. டீச்சர் சொன்னா வேதவாக்கு அப்பல்லாம் மாணவர்களுக்கு மட்டுமில்ல, அவங்க பெற்றோருக்கும்!! அவ்ளோ மரியாதை வச்சிருந்தோம்.

    என்னவோ, நாகரீக உலகில் சீர்கெட்டுப் போன உறவுகளில் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவும் ஒன்று!!

    பதிலளிநீக்கு
  20. ஓப்பீடு நல்லாயிருக்கு..கல்வியில் தரம் முன்னேறவில்லை என்பதே உண்மை..

    பதிலளிநீக்கு
  21. //ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒரு சேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும்,தங்களின் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.//

    அருமையான வரிகள்.

    நல்ல பதிவு. ஆசிரியர் தினத்திற்கு.

    பதிலளிநீக்கு
  22. அக்கா, படிக்கப்படிக்க பழைய நினைவுகளும் கண்ணில் கண்ணீரும்கூடத் திரையிட்டது.

    விமலா சாமுவேல் மிஸ்...அவங்களை உடனே பார்க்கணும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தரா, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் உங்கள் பதிவைப் பார்க்க நேர்ந்தது. நான் தங்கள் ஆசிரியை விமலா சாமுவேலின் மகன். அம்மாவைப் போய் சந்தித்தீர்களா என்று தெரியவில்லை. முடிந்தால் சென்று சந்திக்கவும்.

      நீக்கு
  23. பள்ளியின் நினைவுகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது! என்னைப்போல தர்ம அடி வாங்கியவர்கள் கூட.

    இன்றும் நான் கோபி சென்றால் அங்குள்ள என் விடுதி வார்டனை (ஆசிரியராகவுமுள்ளார்) சந்தித்து விட்டு வருவேன். எப்போது பள்ளியை கடந்து சென்றாலும் நமது கண்கள் தாமாகவே திரும்பி ஒருமுறை பார்த்து விட்டுத்தான் செல்லும்.

    ஆசிரியரை தற்போது பார்த்து அவரிடம் பேசும் போது கிடைக்கும் (அடி வாங்கி இருந்தால் கூட) மகிழ்ச்சியே தனி தான்.

    தற்போது பல மாறி விட்டன என்றால் கால மாற்றத்தில் இவை எல்லாம் தவிர்க்க இயலாதவையே. தற்போது படித்துக்கொண்டு இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு தற்போது உள்ள நிலை பெரிய விசயமாக தோன்றும். இது இயல்பு.

    பதிலளிநீக்கு
  24. அருமையான பகிர்வும்,அறிவுரைகளும்

    பதிலளிநீக்கு
  25. Hi Ramalakshmi,

    I hope you do not mind me sharing the photos with other Ignatians.

    Thanks a lot for uploading school photos. I have mixed feelings.

    It would be such a cliche' if I say, "you brought back memories." However, looking at all the elegant buildings, the changes including the landing without the love birds, made me feel very nostalgic. How fast time slips by... Looking back, I have no regrets about anything. Life was so beautiful inspite of strict teachers and subjects like Chemistry and Biology :) I will never say that I want to go back to those days, because I have fully enjoyed those days and we all did. I am very happy that I was not a very studious/nerdy kind of a student. Had a great time and thanks for re-kindling the memories.

    Your photos made me realize that we need to enjoy every moment that is given to us. That way, when we look back we can be happy that we had cherished those moments to the fullest and continue to enjoy our present and look forward to the future.

    Your pictures are a testimony to our childhood/teenage happiness.

    Thanks again,
    Ammu

    பதிலளிநீக்கு
  26. மிக மிக நெகிழ்வான நினைவலைகள்.ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. //ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒருசேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும், தங்கள் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. தாயுமாய் ஆசிரியர்கள் இருக்கையில் தண்டனைகள் வரம்பு மீற வாய்ப்பில்லை. இந்த பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டால் வரம்பின் எல்லையை வரையறுப்பதிலுள்ள சிக்கல்களும் தீரக் கூடுமென்றே நினைக்கின்றேன்.//

    அதே.. அதே. ஆனா, இப்பல்லாம் அர்ப்பணிப்பு உணர்வு ரொம்பக்குறைஞ்சுக்கிட்டே வருது, இரு தரப்பிலும்...

    பதிலளிநீக்கு
  28. நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியின் தாளாளர் கம் ஹெட் மாஸ்டர் ஒரு பெரிய மரக்கட்டை ஒன்றை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பார். பத்து கிலோவாவது இருக்குமென்று நினைக்கிறேன். அதில் கை சங்கிலி ஒன்றும், கால் சங்கிலி ஒன்றும் இணைக்கப் பட்டிருக்கும். தப்பு செய்யும் (சாதாரண தப்புக்களுக்கு பிரம்படியோடு சரி) மாணவர்களை அந்தக்கட்டையைத்தூக்கச் சொல்லி ஸ்கூல் முழுக்க ரவுண்டு வர விடுவார். பின்னாடி இரண்டடி தள்ளி மூங்கில் குச்சியோடு நடந்து வருவார். ஒருமுறை விஜய் டி.வியில் கூட "நடந்தது என்ன?" நிகழ்ச்சியில் ஒரு இளைஞரைக் காட்டினார்களே அது மாதிரி. வாரத்துக்கு ஒருவனாவது மாட்டுவான். இது தவிர காது திருகும் தமிழ் வாத்தி, பட்டை ஸ்கேலால் அடிக்கும் சயின்ஸ் மிஸ், மணிக்கட்டில் ஸ்கேலை குறுக்கே வைத்து தட்டும் மேக்ஸ் சார் எல்லாரும் இருந்தார்கள். ஒன்றிரண்டு நாங்களும் வாங்கியிருக்கிறோம்.

    ஆனால் நானறிந்து அப்படி அடி வாங்கியவர்கள் யாரும் மனநிலை மருத்துவரிடம் கவுன்சிலிங் போனதாகவோ, வாத்தியார் மேல் கேஸ் போட்டதாகவோ பிற்காலத்தில் கெட்டுப்போய் விட்டதாகவோ சரித்திரமே கிடையாது. எங்கள் பெற்றோர் கூட "அடிங்க, உதைங்க, தோலை உரிங்க, மூஞ்சியில மட்டும் கை வைச்சிடாதீங்க, ஆனா நல்லா படிக்கணும், அவ்வளவுதான்" என்று சொல்லிதான் ஆசிரியரிடம் விட்டுப்போவார்கள். இன்றைக்கும் அந்த ஆசிரியர்களைப் போய் மரியாதை நிமித்தமாக பார்த்து நலம் விசாரிக்கும் ஆசை தான் இருக்கிறது எனக்கு. இப்போது தான் இந்த அளவு அட்டகாசங்கள் எல்லாம்..

    பதிலளிநீக்கு
  29. supeர் பதிவு அக்கா. என்றென்றும் அழியா நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  30. அழகான...விரிவான நினைவு கூறும் பதிவு.

    பதிலளிநீக்கு
  31. ஆயில்யன் said...
    //யாவர்க்கும் இடைஞ்சல் அளிக்கா இனிய ஞாயிற்று கிழமையினில் அழகாய்,அமைதியாய் மனம் அசை போட்டிருக்கும் அந்த காலத்து நினைவுகளை ! எனினும் பள்ளி முழுதும் மாணவமணிகளோடு களித்திருக்கும் பொழுதினிலும் ஒரு முறை சென்று புகைப்படங்கள் அள்ளி வரவும் :) //

    ஆசைதான். ஆனால் பள்ளி நேரத்தில் செல்லத் தயக்கமாக உள்ளது. பார்க்கலாம்

    //எனக்கு எங்க ஸ்கூலுக்கு போய் ரவுண்ட் அடிச்சு இப்படி போட்டோஸ் எடுக்கணும்ன்னு நினைப்பு வந்திடுச்சு!:)//

    உங்கள் ஆல்பத்துக்குக் காத்திருக்கிறோம்:)! நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  32. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //ஆமா .. நல்லா படிக்கலைன்னா என்னவேணாலும் திட்டுங்க அடிங்கன்னுசொல்லும் பெற்றோர்கள் அன்னிக்கு..//

    அதேதான்.

    இன்னிக்கு மகளோட பள்ளியில் என்ன அட்ட்காசம் செய்தாலும் அந்த பசங்களோட அம்மாக்களை கூப்பிட்டு ஆசிரியை அவர்கள் அம்மா அப்பாவை திட்டிக்கொண்டிருக்கிறார்கள் . பிள்ளைகளை இல்லை. அம்மா அப்பாக்களும் கண்ணால் கண்னீர்விட்டு எங்களால் முடியலைங்க அப்படியே வளர்ந்துட்டான்னு புலம்பிட்டு போறாங்க . பசங்க அதே கொட்டம் தான் :(//

    காலத்தின் மாற்றமென எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் இரு சாராரும். பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  33. திருவாரூரிலிருந்து சரவணன் said...
    //சகிப்புத் தன்மை மட்டுமல்ல, வலிதாங்கும் பக்குவமும் குறைந்து விட்டன. அதிகரித்து வரும் தற்கொலைகள்,மன முறிவுகள் இதைத்தான் உணர்த்துகின்றன.//

    ஒருவகையில் சரியே. பெற்றோரின் வளர்ப்பு, ஆசிரியரின் அர்ப்பணிப்பு உணர்வு எல்லாமே இந்தப் பிரச்சனையில் பின்னிப் பிணைந்துள்ளன.

    //வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்ட பிறகு பல ஆண்டுகள் கழித்து இதே இடத்தைப் பார்க்கும்போது....அப்பப்பா...அதை அனுபவித்துப்பார்த்தால்தான் தெரியும் போலிருக்கிறது. எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.//

    என் அனுபவத்தை உணர்த்தும் எடுத்திருக்கும் படங்கள்:)!

    //பலரது முன்னேற்றத்துக்கும் விதை போடப்பட்ட அவரவர் பள்ளி நாட்களை ஒவ்வொருவருக்கும் நினைவில் கொண்டுவந்த அற்புதமான பதிவு.//

    நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  34. ஆயில்யன் said...
    //மணலில் முழங்காலிட வைப்பது, பெஞ்சு மேல் ஏற்றுவது,/


    //:)) எங்கள் வகுப்பில் குழுவாக நால்வர் எப்பொழுதுமே ஒன்றாகவே பெஞ்சு மேல் ஏறுவது முழங்காலிட்டு இரு கைகளினையும் தூக்கி கொண்டு நிற்பது என நிறைய முறை - பின்னே ஒரே பெஞ்சில் அமர்ந்து பாட வேளையில் சிரித்து,சண்டைபோட்டுக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் ஏதேனும் செய்துகொண்டிருப்போமாக்கும் - தண்டனை பெற்ற வேளையில் கூட ஒரு ஜாலியாகத்தான் சென்றிருக்கிறது :) //

    ஹி.. ஆமாம் இது எங்கள் பள்ளியிலும் நடக்கும்:)!

    //மிகுந்த மனவேதனையெல்லாம் கொண்டதில்லை ! அது போலவே சில மாணவர்களின் பெற்றோர்கள் டெரராய் ஆசிரியர்களை மிரட்டி என் பையனுக்கு நீங்க சரியாவே தண்டனை தரமாட்டிக்கிறீங்கன்னு சொன்ன கதைகளும் உண்டு! இன்னும் ஒரு அப்ஸ் பையனுக்கு தரையில் கல் உப்பு போட்டு முழங்காலிட சொல்லி, வாத்தியாரிடம்,பையன் எந்திரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்ற சம்பவமும் உண்டு :)//

    அதெல்லாம் அந்தக் காலம்:)! நன்றி ஆயில்யன்!!

    பதிலளிநீக்கு
  35. ப்ரியமுடன் வசந்த் said...
    ***//எல்லாருக்குமே லைஃப்ல ரீவைண்ட் பட்டன் தேவைப்படுது கடவுள் கண் முன்பு தோன்றினால் மனிதனை ரீவைண்ட் பட்டனோட படைக்க சொல்லணும்//

    நல்ல வரமே:)!

    //அருமையான பகிர்வு கூடவே சில அறிவுரைகளும்

    மாணவர்களை அடித்து வளர்க்கணும் கண்டித்து வளர்க்கணும் அப்படின்ற மனித தன்மையற்ற செயலில் எனக்கு சிறிதும் உடன்பாடே கிடையாது//

    இந்த காலத்தில் அப்படி ஒருகாலத்தில் வளர்ந்த பெற்றோராகிய நாங்களும் அதை விரும்பவில்லைதான். ஆனாலும்...

    //அந்த காரியங்களால் பள்ளிப்படிப்பையே பாதியில் விட்டுச்சென்ற நண்பர்கள் பலர் இப்பொழுதும் அவர்களை சந்தித்தால் அந்த ரத்னமாலா டீச்சர் மட்டும் என்னை அடிக்காம இருந்திருந்தா நானும் உன்னை மாதிரியே படிச்சு கவுரவமா வாழ்ந்திருப்பேன்னு அவங்க சொல்றப்போ கஷ்டமாத்தான் இருக்கும்!//

    “அந்த சந்திரகலா டீச்சர் மட்டும் என் தோலை உரிச்சுத் தொங்கவிடாம இருந்திருந்தா உருப்படாமத்தான் போயிருப்பேன். அவங்களாலதான் நான் இத்தன நல்ல நிலமையில இருக்கேன்” என்கிற மாதிரியான கதைகளும் நிறைய உள்ளனவே:)! ஆனால் இந்தக்கால தலைமுறையினர் அதையெல்லாம் தாங்க மாட்டார்கள். அதிகரிக்கும் தற்கொலைகள் பயமுறுத்தவே செய்கின்றன. நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  36. அபி அப்பா said...
    //ஆயில்ஸ் நம்ம பள்ளியில் எடுத்த போட்டோஸ் போட்டு ஒரு பதிவு போட்டிருக்கலாமே!//

    அடுத்த முறை நிறைய எடுக்குமாறு ஒரு அஸைன்மெண்ட் கொடுத்தாயிற்று அவருக்கு:)!

    //நீங்க சொல்வதும் வாஸ்தவம் தான். அப்போ பள்ளியிலே சேர்க்கும் போதே கண்ணு ரெண்டும் வச்சுட்டு மீதிய உரிச்சு எடுத்துடுங்கன்னு சொல்லிதான் விட்டாங்க, என்னவோ வாத்தியார் எல்லாம் கசாப்புகடை வச்சிருப்பது போல. ஆனா இப்போ நாம சுத்தமா மாறிவிட்டோம். பசங்க மேல இருக்கும் பாசம் தான் காரணம்.//


    அதேதான்:)! ஆனா நம்மகாலத்தில பெற்றோருக்கு பாசமில்லைன்னு அர்த்தமாகாது. அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் மேல அவர்கள் வைத்த நம்பிக்கை, ஏதோ ஒன்று, சொல்லத் தெரியவில்லை:)!

    //உங்க ஸ்கூல் போட்டோ அருமையா இருக்கு!//

    நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  37. தமிழ் பிரியன் said...
    ***/ //‘வலையில் என் படைப்புகளைப் பாருங்கள்’ என்று சிரமப் படுத்த விரும்பவில்லை. //

    அப்படின்னா... நாங்க எல்லாம்... ;-))/***

    முக்கியமா நீங்கள் சிரமப் பட்டால் தப்பேயில்லை:)!

    பதிலளிநீக்கு
  38. கண்ணகி said...
    ***/வாழ்க்கையில் நாம் எங்கு ஆரம்பித்து எப்படி வளர்ந்தோம் என்று சிந்திக்கும்போது கண்டிப்பாக ஒரு ஆசிரியராவது நம் மனதில் இருப்பார்...

    நாம் படித்த பள்ளியையும் ஆசிரியரையும் வாழ்நாளில் மறக்க்மாட்டோம்...

    நேசம் மறக்காத உங்கள் மலரும் நினைவுகளுக்கு என் வணக்கங்கள்../***

    நிச்சயமாய் ஒரு ஆசிரியராவது இருந்தே இருப்பார். மிகச் சரி. நன்றி கண்ணகி.

    பதிலளிநீக்கு
  39. goma said...
    //fonil peysumpothu sollavey illaiyey...
    aasiriyar thinaththiRku arumaiyaana pathivu//

    நன்றிங்க கோமா:)!

    பதிலளிநீக்கு
  40. ஈரோடு கதிர் said...
    //ஆசிரியர்களின் உணர்வுகளும் பல காரணிகளால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் தண்டனைகள் கொடூரமாக மாறிக்கொண்டும் வருகிறது//

    மறுப்பதற்கில்லை:(!

    -----

    //மிக நெகிழ்ச்சியான நினைவுகூறல்//

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  41. Chitra said...
    //Akka, It brought tears in my eyes - seeing the school photos. Great memories.............!!! Thank you very very very very very much. It means a lot to me and words cannot express the gratitude that I have in my heart. Thank you.//

    நன்றி சித்ரா. நிச்சயமாய் நம் பள்ளி மாணவியர் அனைவருக்குமே நினைவுகளை அள்ளித் தரும் அப்படங்கள். உங்களுக்குத் தெரிந்த நம் பள்ளி மாணவியருடன் சுட்டியைப் பகிர்ந்திடுங்கள்.

    பதிலளிநீக்கு
  42. சுசி said...
    //எனக்கும் நான் படிச்ச பள்ளிகளை போய் பாக்கணும்கிற ஆசை வந்துடிச்சு அக்கா.

    கூட சேர்ந்து நானும் சுற்றி வந்த அனுபவம் தந்திச்சு உங்க எழுத்து.

    என் வணக்கங்களும் கூட.//

    வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்.

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  43. புதுகைத் தென்றல் said...
    //தாயுமானவராய் தலைப்பே அழகாச்சொல்லுதே!! அருமை ராமலக்‌ஷ்மி. ஸ்கூல் ரவுண்ட் அப் பகிர்வும் மிக அருமை.//

    மிக்க நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  44. வழிப்போக்கன் - யோகேஷ் said...
    //இனிக்கும் நினைவுகளுடன் கூடிய நல்லதொரு பகிர்வு.//

    மிக்க நன்றி யோகேஷ்.

    பதிலளிநீக்கு
  45. சசிகுமார் said...
    //பழைய நினைவுகளை கொண்டு வந்து இருக்கீங்க அக்கா அருமை.//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  46. James Vasanth said...
    //நெகிழ வைத்த ஒரு அருமையான பதிவு. இன்னொரு 'ஆட்டோகிராப்' - க்காக நன்றி ராமலக்ஷ்மி :)//

    ஆட்டோகிராப்! அதுவே சரி:)! நன்றி ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  47. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //அருமையான பதிவுங்க...வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. வானம் said...
    //PIT படங்களை பார்த்துவிட்டு இங்கு வந்தேன்.நன்றாக உள்ளது,//

    நன்றி:)!

    //ஆனால்// ரிப்போர்ட் கார்டில் குறிப்பது, அபராதம் விதிப்பது என எத்தனையோ பிற வழிமுறைகள் இருக்கின்றனவே.// இந்த கருத்து கல்வி வியாபாரிகளுக்குத்தான் சாதகமானது.குழந்தைகளுக்கு அபராதம் விதிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது//

    ஒன்றாம் வகுப்பிலிருக்கும் குழந்தைகள் தொடர்ந்து ஐடி கார்ட் இல்லாமல் வருவதில் பெற்றோரின் கவனிப்பும் அடங்கியுள்ளதே. அபராதம் அவர்களுக்கு எனக் கொள்ளலாம். சின்னக் குழந்தைகளை இப்படி ஓட விடுவதை விட அது பரவாயில்லையோ என நினைத்தேன். உங்கள் கருத்தும் ஏற்கத் தக்கதே. முதல் வருகைக்கு நன்றி வானம்.

    பதிலளிநீக்கு
  49. ஹுஸைனம்மா said...
    //டீச்சர் சொன்னா வேதவாக்கு அப்பல்லாம் மாணவர்களுக்கு மட்டுமில்ல, அவங்க பெற்றோருக்கும்!! அவ்ளோ மரியாதை வச்சிருந்தோம்.//

    உண்மை.

    //என்னவோ, நாகரீக உலகில் சீர்கெட்டுப் போன உறவுகளில் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவும் ஒன்று!!//

    அழகாய் சொல்லி விட்டீர்கள். நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  50. அஹமது இர்ஷாத் said...
    //ஓப்பீடு நல்லாயிருக்கு..கல்வியில் தரம் முன்னேறவில்லை என்பதே உண்மை../

    வருகைக்கும் கருத்துக்கு நன்றி அஹமது இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  51. கோமதி அரசு said...
    *** //ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒரு சேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும்,தங்களின் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.//

    அருமையான வரிகள்.

    நல்ல பதிவு. ஆசிரியர் தினத்திற்கு.***

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  52. சுந்தரா said...
    //அக்கா, படிக்கப்படிக்க பழைய நினைவுகளும் கண்ணில் கண்ணீரும்கூடத் திரையிட்டது.

    விமலா சாமுவேல் மிஸ்...அவங்களை உடனே பார்க்கணும் என்று தோன்றுகிறது.//

    தனிமடலில் அவர்களது புகைப்படம் அனுப்பி வைக்கிறேன் சுந்தரா. அடுத்த முறை ஊருக்குப் போகும் போது சந்திக்க முயன்றிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  53. கிரி said...
    //பள்ளியின் நினைவுகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது! என்னைப்போல தர்ம அடி வாங்கியவர்கள் கூட.

    இன்றும் நான் கோபி சென்றால் அங்குள்ள என் விடுதி வார்டனை (ஆசிரியராகவுமுள்ளார்) சந்தித்து விட்டு வருவேன். எப்போது பள்ளியை கடந்து சென்றாலும் நமது கண்கள் தாமாகவே திரும்பி ஒருமுறை பார்த்து விட்டுத்தான் செல்லும்.//

    தாமாகத் திரும்பி... ஆமாம்:)!

    //ஆசிரியரை தற்போது பார்த்து அவரிடம் பேசும் போது கிடைக்கும் (அடி வாங்கி இருந்தால் கூட) மகிழ்ச்சியே தனி தான்.

    தற்போது பல மாறி விட்டன என்றால் கால மாற்றத்தில் இவை எல்லாம் தவிர்க்க இயலாதவையே. தற்போது படித்துக்கொண்டு இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு தற்போது உள்ள நிலை பெரிய விசயமாக தோன்றும். இது இயல்பு.//

    உண்மைதான். நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  54. "உழவன்" "Uzhavan" said...
    //அருமையான பகிர்வும்,அறிவுரைகளும்.//

    அறிவுரைகள் என்பதை விட என் மனதுக்கு பட்ட கருத்துக்கள் என்பதே சரி:)! நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  55. @ Ammu,

    அழகாய் சொல்லியிருக்கிறாய் அம்மு. படங்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. Thanks a lot!!!

    பதிலளிநீக்கு
  56. ஹேமா said...
    //மிக மிக நெகிழ்வான நினைவலைகள்.ஆசிரியர் தின வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  57. அமைதிச்சாரல் said...
    ***//ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒருசேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும், தங்கள் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. தாயுமாய் ஆசிரியர்கள் இருக்கையில் தண்டனைகள் வரம்பு மீற வாய்ப்பில்லை. இந்த பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டால் வரம்பின் எல்லையை வரையறுப்பதிலுள்ள சிக்கல்களும் தீரக் கூடுமென்றே நினைக்கின்றேன்.//

    அதே.. அதே. ஆனா, இப்பல்லாம் அர்ப்பணிப்பு உணர்வு ரொம்பக்குறைஞ்சுக்கிட்டே வருது, இரு தரப்பிலும்...//***

    மறுப்பதற்கில்லை. நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  58. @ yeskha,

    பகிர்ந்து கொண்டுள்ள நினைவுகள் ரொம்ப டெரராகவே உள்ளன:)!

    //ஆனால் நானறிந்து அப்படி அடி வாங்கியவர்கள் யாரும் மனநிலை மருத்துவரிடம் கவுன்சிலிங் போனதாகவோ, வாத்தியார் மேல் கேஸ் போட்டதாகவோ பிற்காலத்தில் கெட்டுப்போய் விட்டதாகவோ சரித்திரமே கிடையாது.//

    இப்போது நினைத்துப் பார்க்கையில் இது மிக மிக ஆச்சரியமான உண்மையாக உள்ளது.

    // எங்கள் பெற்றோர் கூட "அடிங்க, உதைங்க, தோலை உரிங்க, மூஞ்சியில மட்டும் கை வைச்சிடாதீங்க, ஆனா நல்லா படிக்கணும், அவ்வளவுதான்" என்று சொல்லிதான் ஆசிரியரிடம் விட்டுப்போவார்கள். இன்றைக்கும் அந்த ஆசிரியர்களைப் போய் மரியாதை நிமித்தமாக பார்த்து நலம் விசாரிக்கும் ஆசை தான் இருக்கிறது எனக்கு. இப்போது தான் இந்த அளவு அட்டகாசங்கள் எல்லாம்..//

    பகிர்வுக்கு நன்றி எஸ்கா.

    பதிலளிநீக்கு
  59. சே.குமார் said...
    //மிக நெகிழ்ச்சியான நினைவுகூறல்.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  60. Vijiskitchen said...
    //supeர் பதிவு அக்கா. என்றென்றும் அழியா நினைவுகள்.//

    ‘என்றென்றும்’.. ஆம். நன்றி விஜி.

    பதிலளிநீக்கு
  61. Rajkumar said...
    //உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்//

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  62. கடையம் ஆனந்த் said...
    //அழகான...விரிவான நினைவு கூறும் பதிவு.//

    நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  63. தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 25 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  64. மாதேவி said...
    //என்றென்றும் இனிய நினைவு.//

    ஆம் மாதேவி. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  65. 'போங்க, போய் நல்லா சுத்திப்பாருங்க. பசங்களுக்கு எல்லா இடமும் காட்டுங்க. கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்துட்டும் வாங்க’- அந்த பள்ளி காவலாளியின் பரிவு, ரிடையர் ஆன தமிழ் டீச்சரை அவர் வீட்டில் சந்தித்த போது உங்களைத் தழுவி வரவேற்றது எல்லாம் படிக்கவே நெகிழ வைக்கிறது. ஆசிரியர் தினத்தை உங்களைப் போல் யாரும் எழுதி இருக்க முடியாது.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  66. ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்களின் உறவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவுப் படுத்தியிருக்கிறீர்கள் மேடம். நன்றி!

    பதிலளிநீக்கு
  67. மிகவும் சிறப்பான பகிர்வு. உங்கள் சுட்டி மூலம் இங்கே வந்தேன். இனிய நினைவுகள்.....

    இப்பதிவில் பின்னூட்டம் தந்த பலர் இப்பொழுது வலைப்பூக்களில் எழுதுவதே இல்லை எனும்போது மனதில் வருத்தம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.

      ஒரு சிலரை நாம் பிற சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. சிலரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin