வாசிப்பு அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பு அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜூலை, 2012

தூறல்: 6 - வேலை தேடும் பெங்களூர் சீனியர் சிட்டிசன்ஸ்

ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி?

பாமரர் படித்தவர் பாகுபாடின்றி முதுமையில் உழைக்க வேண்டிய கட்டாயம் பெருகி விட்டது தேசத்தில். பெங்களூரில் அறுபது வயதைக் கடந்தவர்களுக்காகவே நடைபெற்ற வேலைவாய்ப்புச் சந்தையில் 800 பெரியவர்கள் கலந்து கொள்ள நிர்வாகம், மேற்பார்வை, தொழில் நுட்பம், மக்கள் தொடர்பு, கற்பித்தல், கணக்கியல், காப்பீடு, சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் 300 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது சென்ற வாரம். எழுத்தாளர்கள்,புகைப்படக்காரர்கள் போன்றோருக்கும் வாய்ப்புகளை விரித்துக் காத்திருந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் எதிரே பார்க்கவில்லை இந்த தமது முயற்சிக்கு இப்படியொரு வரவேற்பு கிட்டுமென.
ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவர் மனநிலை பொறுத்து மாறுபடுகிறது. சிலருக்கு வயதொத்தவருடன் அரட்டை, நடை, வாசிப்பு, தொலைக்காட்சி என ஏதேனும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதில்; சிலருக்கு வீட்டு நிர்வாகத்தில் உதவியாக இருப்பதில்; சிலருக்கு பேரன் பேத்திகளோடு விளையாடிக் கதை சொல்லி நேரம் செலவழிப்பதில். சிலருக்கோ உடலும் மனதும் தெம்பாக இருக்கும்வரை உலகுக்குத் தம் அனுபவ அறிவு பயன்பட வேண்டுமென்கிற விருப்பம் தீராததாக இருக்கிறது. அதை செயல்படுத்தவும் முடிந்தவிட்டால் தம்மை விட அதிர்ஷ்சாலிகள் எவருமில்லை எனும் உற்சாகத்துடன் மனதளவில் இளைஞராகியும் விடுகின்றனர்.

84வது வயதில் தனது நேரத்தை எப்படி உபயோகமுள்ளதாகச் செலவழிக்க முடியுமென அறியவே அங்கு வந்ததாகப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஒரு பெரியவர், ஜம் எனப் புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஓவியராக பெங்களூர் ஐந்து நட்சத்திர விடுதிகளில் பல கண்காட்சிகள் நடத்திய 68 வயது பெண்மணி, தன் கற்பனாசக்திக்கு ஏற்ற வகையில் எந்த வேலையானாலும் சரி, தனது வாழ்வாதாரத்துக்கு அது மிக அத்தியாவசியமெனத் தெரிவித்திருந்தார். மற்ற பலரோ வீட்டுக்குத் தெரியாமல் வந்திருந்திருந்ததால் தங்கள் பெயரைக் கூட வெளிப்படுத்த விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்கள்.

“ஒரு வேலைக்கு இளைஞரா, முதியவரா யாரை வைப்பீர்கள் என்றால் பின்னவரையே சொல்வோம். ஏனெனில் பொறுப்புணர்வும் அனுபவமும் நிறைந்த அவர்களுக்கு பயிற்சியே தேவையில்லை” என்கிறார் முதியோருக்கான மருத்துவ சேவையை நல்கும் ஒரு நிறுவனத் தலைவர். அன்று பத்து முதியவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது இவரது நிறுவனம். ”இந்தியாவின் 87% முதியோருக்கு பென்ஷன் இல்லை. கூடுகிற வயதோடு அதிகரிக்கிற மருத்து செலவுகள் இவர்களை அச்சுறுத்துகின்றன. நிரந்தர வருவாய் இருந்தால் தேவலாமென எண்ணுகிறார்கள். மனரீதியான தெம்புக்கும் இந்த வேலை அவர்களுக்கு உதவுகின்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.

எப்படி நியாயப்படுத்தப்பட்டாலும் நிர்ப்பந்தங்களினால் வேலை தேடி வந்தோர் நிலை வலி தருகிறது.


பெற்றோருக்கு இணையான இடம்

நன்னெறிப்படுத்துகிறோம் என்ற பெயரில் மாணவரின் தன்னம்பிக்கையை சிதைத்து, தன்மானத்தை அவமதித்து பிஞ்சு மனங்களிலே மாறாத வடுக்களை ஏற்படுத்தும் அநியாயங்கள் பரவலாகத் தொடருகிறது. சிறுநீர் பருக நிர்ப்பந்தித்தது, கேசங்களை வெட்டியது என சமீபத்திலும் பல சம்பவங்கள். இருவருடங்களுக்கு முன் நான் எழுதிய பொட்டலம் சிறுகதை நினைவுக்கு வந்து போகிறது. தண்டனைகள் தீவிரமாகப் போவதில்லை. வெறும் சஸ்பென்ஷன்களால் இக்கொடுமைகள் நிற்கப் போவதுமில்லை. கண்டிப்பு அவசியமென்றாலும் கனிவையும் அடிப்படை நேயத்தையும் மறப்பது செய்யும் பணிக்கே களங்கம். தெய்வத்துக்கும் உயரிய ஸ்தானத்தில், பெற்றோருக்கு இணையான இடத்தில் தாம் இருப்பதை இத்தகு ஆசிரியர்கள் உணர்வார்களா? தங்கள் மன அழுத்தங்களுக்கு வடிகாலாக மாணவரை இம்சிப்பதை நிறுத்துவார்களா?


‘கேட்பினும் பெரிது கேள்’







க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு கவிதைகளுக்கென்றே வெளிவருகிற இருமாத சிற்றிதழ் “புன்னகை”, கேட்பினும் பெரிது கேள்!

இதன் 60வது சிறப்பிதழில் இடம் பெற்ற 60 கவிஞர்களின் கவிதைகளில் ஒன்றான எனது கவிதை “ஆயிரமாயிரம் கேள்விகள்” இங்கே. சமீபத்தில்தான் இதழுக்கு சந்தாதாரர் ஆனேன். பலரது சிறந்த கவிதைகள், விமர்சனங்களோடு குறிப்பிட்ட கவிஞரின் சிறப்பிதழாகவும் மலர்ந்து அவர்களைக் கெளரவித்து வருகிறது புன்னகை. இதழ்-70-ல் கவிஞர் கதிர்பாரதி கெளரவிக்கப்பட்டிருக்கிறார். புத்தகம் கிடைத்ததும் அடுத்த தூறலில் பகிருகிறேன்.

மார்ச்-ஏப்ரல் 2012 கவிதை இதழ் 68-ல்.. தோழன் அன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்களை’ முன்னிறுத்தி... லதா ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதை வாசிப்பில் கிடைப்பதென்ன?” விமர்சனக் கட்டுரையிலிருந்து:

“எந்த வகையான கவிதை சமூகத்திற்குத் தேவை என்ற கேள்வியோடு கூட, கவிதை என்ற இலக்கிய வகைமையே சமூகத்திற்குத் தேவைதானா என்ற கேள்வியும் காலங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டிற்குமே அடிப்படை ஒருவகையில், மனித மனங்களை உணர்வுகளை, ரசனைகளை, விருப்பங்களை, அடையாளமழித்து அடிமைப்படுத்தும் மனப்போக்குதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

24 மணிநேரமும் மனிதனை முட்டாளாக்குவதே குறியாய், அபத்த நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேவைதானா என கேள்வி எழுதுவதில்லை. ஆனால் கவிதை தேவைதானா என்ற கேள்வி மட்டும் வெகு சுலபமாக தொடர்ந்த ரீதியில் கேட்கப்பட்டு வருகிறது. (அரசு நூலகத்துறை தற்காலத்தைய தமிழ் கவிதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வதேயில்லையென்று கேள்வி). கவிதை எழுதுவதில், கவிதை வாசிப்பதில் என்ன கிடைக்கிறது என்பது போன்ற ஆழமான சுற்றாய்வுகளோ, கலந்துரையாடல்களோ மேற்கொள்ளப்பட வழிவகுப்படாமலேயே இந்த கேள்வி வலம்வந்து கொண்டேயிருக்கிறது..
”
**

மே-ஜூன் 2012 கவிதை இதழ் 69-ல்.. நான் இரசித்த கவிதைகளுள் ஒன்று:

ஆளில்லாத வீடு

ஆளில்லாத வீட்டுக்கு
தேடி வந்தது
இம்சையாயிருக்கிறது

உதாசீனமாய் பார்க்கிறது
அக்கம்பக்க
மின்விளக்குத் தூண்கள்

உறுத்தும்
சந்தேகப் பார்வையில்
உள்ளங்கால் முதல் தலைவரை
வாசற்கதவுகள் ஆராய்கின்றன

எதையும் விழுங்கி
ஜீரணிக்கும்
இருளும்
குற்றமாய்ப் பார்த்து உறுமியது

காற்றின் கிச்சு கிச்சு மூட்டலில்
ஜன்னல்,மரம்
இன்னும் எவைஎவையோ
நெளிந்து குலுங்கினாலும்
எனக்குள் நடுக்கமெடுக்கிறது

அவமானத்தைக் கூட
சகித்து ஆற்றிக் கொள்ளலாம்
எதிர்கொள்ள முடியவில்லை
இந்த வெறுமையை.

- வசந்த தீபன்
**

புன்னகை இருமாத இதழின் ஆண்டுச் சந்தா ரூ 75.

அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68 பொள்ளாச்சி சாலை,
ஆனை மலை- 642 104.

மின்னஞ்சல்: punnagaikavi@gmail.com


நட்பின் அன்பு

பதிவுலகம் வந்த முதலிரண்டு வருடங்களில் வாரம் ஒரேயொரு பதிவென்றிருந்து, மூன்றாமாண்டு வாரம் இரண்டாக முன்னேறி, எந்தத் திட்டமிடலும் இன்றி முடிகிற போது பதிவு என முடிவெடுத்த நடப்பு வருடத்தில் சராசரியாக வாரம் மூன்றெனப் பதிந்து கொண்டிருப்பது எனக்கு சற்று ஆச்சரியமே. ஏனெனில் முத்துச்சரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த காலத்தில் முடியாத ஒன்று, இன்று Flickr, PiT, அதீதம் ஆகிய தளங்களிலும் இயங்கியபடியே செய்ய இயலுகிறதென்றால் அதற்கான பலம் எங்கிருந்து வருகிறது? உங்களிடமிருந்தே..
நன்றி கவிநயா!

விருதோடு கவிநயா அளித்த ஊக்கம் இங்கே. அன்பினால் சற்று அதிகப்படியாகி விட்ட பாராட்டு என்றாலும், அவர் சொல்லியிருப்பதை யோசித்துப் பார்த்தால் ‘கவிதை, கட்டுரை, சிறுகதை’ இந்த மூன்றில் மட்டுமே இணையத்தில் இயங்க ஆரம்பித்த என்னை இன்று ஒளிப்படம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, இணைய இதழ் மற்றும் PiT பொறுப்பு எனப் பல பிரிவுகளுக்கு இட்டுச் சென்றது நல்ல நட்புகள் தந்து வருகிற ஊக்கமே.
ஒற்றை இலக்கத்தில் வந்து நிற்கிற தமிழ்மணம் ட்ராஃபிக் ரேங்க் முன்னோ பின்னோ போகலாம். இங்கே பதிகிற வேகம், எண்ணிக்கை குறையலாம். ஆனால் ஏதோ ஒரு தளத்தில் இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருப்பேன், நட்புகளிடமிருந்து பெறும் பெரும் பலத்தில்:)!


அதீதம் ஃபோட்டோ கார்னர்:

தளிர் நடை - மெர்வின் ஆன்டோ
கண்ணான பூமகன் - நித்தி ஆனந்த்
உள்ளம் கொள்ளை போகுதே - சத்தியா
அன்பின் ரேகைகள் - எழில் இராமலிங்கம்

படத்துளி:

அன்பின் நிழல்..
அடர்த்தியானது!
***

புதன், 14 செப்டம்பர், 2011

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம் - கோமதி நடராஜனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை (வல்லமையில்..)

சிந்திக்க ஒன்றும் சிரிக்க ஒன்றுமாக இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து, இணையத்தில் ‘கோமா’ என அறியப்பட்டும், அழைக்கப்பட்டும் வரும் திருமதி. கோமதி நடராஜனின் முதல் புத்தகம். கடந்த முப்பது ஆண்டு கால எழுத்துப் பயணத்தில், வாழ்க்கை அனுபவத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் அந்தந்த காலக்கட்டத்திலேயே பதிந்து வைத்தவற்றின் முழுத் தொகுப்பு. இதில் சில கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியானவை. சில அவரது வலைதளங்களில் பகிர்ந்தவை.

எனது பதினைந்தாவது வயதிலிருந்து இவரது எழுத்துக்களைத் தொடர்கிறேன் என்பது ஒரு விசேஷம். எழுபதுகளில் இவரது முதல் சிறுகதையே ஆயிரம் ரூபாய் பரிசினை வென்று பேசப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. எண்பதுகளில் என் எழுத்துப் பயணமும் ஆரம்பமாக இருவரும் ஒரே சமயத்தில் ‘நண்பர் வட்டம்’ சிற்றிதழிலும், பிறகு 2000-ன் ஆரம்பத்திலிருந்து திண்ணை இணைய இதழிலும் எழுதி வந்துள்ளோம். திரு நெல்லைக் கண்ணன் அவர்களது சிறப்பான அணிந்துரையுடன், திரு லேனா தமிழ்வாணனின் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக அமைந்த இவரது முதல் தொகுப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தான் பார்த்தவற்றினின்று மட்டுமின்றி தனைப் பாதித்த, வருத்திய விஷயங்களிலிருந்தும் படிப்பினையை எடுத்துக் கொண்டதோடன்றி அதைக் கற்பித்திவர்களையும் போற்றும் பண்பே சொல்கிறது நமக்கு இப்புத்தகத்துக்கும் அன்பே ஆதாரமாக அமைந்திருப்பதை: “சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். ஒரு சிலர் எப்படி இருக்கக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லித் தந்தார்கள். இருவருமே நான் போற்றும் ஆசிரியர்கள்தாம்.”

சுயமுன்னேற்றப் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கிறோம். நம் சுயத்தை அறிந்து கொள்ள, புடம் போட்டு வெளிவர உதவும் மந்திரக் கோலாக இப்புத்தகம் வாசிப்பவரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் அமைந்திருக்கிறது.

அன்றாட வாழ்வில் அனுசரிக்கப்பட வேண்டிய பலவற்றை, அவசர உலகில் நின்று சிந்திக்க அவசியமற்றதாய் நாம் ஒதுக்கிச் செல்லும் தவறுகளை, உணர்த்தும் விதமாக அமைந்த தனது கருத்துக்களை வலிந்து திணிக்கவும் முற்படவில்லை.

தான் முப்பது ஆண்டு காலமாக சேகரித்த பொக்கிஷம் என்கிறார் இப்புத்தகத்தை ஆசிரியர். நமக்கும் அப்படியே. கொட்டிக் கிடக்கும் பொற்காசுகள் ஒவ்வொன்றும் வாசிப்பவர் வாழ்வை வளமாக்கப் போவது நிச்சயம். இதமான அனுபவ மொழிகளாய்ச் செதுக்கி வைத்ததோடு தன் வேலை முடிந்ததெனக் கருதுகிறார் தான் சொன்ன கருத்துக்கே முன் மாதிரியாக நின்று: “அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதீர்கள். இந்த விஷயத்தில், நாம் எல்லோரும் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகம் போல் காத்திருப்போம்.”

இதோ இப்புத்தகமும் காத்திருக்கிறது. வாருங்கள் உள்ளே செல்வோம்.

மொத்தம் பதினான்கு அத்தியாயங்கள். ஒரு சிலவற்றினின்று ஒருசில துளிகளைப் பகிர்கிறேன்.

‘குடும்பத்தைக் கோவிலாக்குவோம்’ அத்தியாயத்தில், “மழையில் நனைகிறேன், வெயிலில் காய்கிறேன், எல்லாவற்றிற்கும் நான் தானா அகப்பட்டேன் என்று குடையும், குளிர் நிழல் தரும் ஆலமரமும் நினைத்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களின் சலிப்பும் முணுமுணுப்பும்.”

‘உரையாடும் கலை’யில், “சிலருக்கு, அடுத்தவரை ஏளனப்படுத்திப் பார்ப்பதில் அலாதியான சந்தோஷம் இருப்பதாக நினைத்து, வார்த்தைகளுக்கு நடுவே குத்தலும் கேலியும் விதைத்து உரையாடுவர்.... அப்படிப்பட்டவர்கள் உண்மையான சந்தோஷத்தின் அர்த்தத்தை உணராதவர்களாகத்தான் இருக்கமுடியும்..” என்கிறவர் ஜடப்பொருட்களுக்குத் தரும் கவனிப்பையும் கரிசனத்தையும் ஏன் கண்ணெதிரே நடமாடும் மனிதர்களுக்கு இவர்கள் தருவதில்லை என ஆற்றாமையுடன் வினவுகிறார். “கனிவாய் உரையாட, மனித நேயத்தின் பெருமையை உணர்ந்திருந்தாலே போதும்” என்கிறார்.

‘சிற்பிகளைச் செதுக்கும் சிப்பிகளே!’, “குழந்தைகளின் மனதில் ஒரு நல்ல குணம் பதிய வேண்டும் என்று உண்மையாகவே நீங்கள் விரும்பினால், அதைச் சொல்லிக் காட்டுவதை விடச் செயலில் காட்டுவதே சிறந்தவழி....பிஞ்சுக் கால்கள் என்றுமே தனக்கு முன்னே தெரியும் காலடிச் சுவடுகளைப் பின்பற்றித்தான் நடை போடும்....குழந்தைகள் உங்கள் அடிமைகள் என்ற தவறான எண்ணத்துடன் அவர்களை அடக்க முயலாதீர்கள்....குழந்தைகளிடையே அன்பு, கண்டிப்பு இவற்றில் பாரபட்சம் காட்டினால், அவர்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமையை முளையிலேயே கிள்ளி எறியும் மோசமான தோட்டக்காரர் நீங்கள்.”

‘உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்.’ பிரதிபலன் எதிர்பாரா சுனை நீராக மனம் இருக்க வேண்டுகிறார். “உதவி பெற்றவரே உங்களுக்கு உதவ வேண்டும் என்று இறைவனும் நினைத்திருந்தால், இந்தப் பரந்த உலகில், உறவு வட்டம் மிகவும் சுருங்கியிருக்கும்.” அடுத்தவருக்கு உதவும் சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லப் பழகிக் கொண்டால் ‘நான் உதவினேன்’ எனும் மமதை மறையும் என்கிறார்.

ஆளாக்கினோம் என்பதற்காகக் குழந்தைகளிடம் கூட பிரதிபலனை எதிர்பாராதீர்கள் என்கிறார். பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்கிற உதவிகளைச் சொல்லிக் காட்டுபவர்களுக்காக கடமைக்கும் உதவிக்கும் இடையேயான வித்தியாசத்தை அழகான உதாரணத்துடன் விளக்கியிருக்கிறார்.

‘நாம் நாமாக..’ எந்நேரமும் இருக்க முயன்றிடுவது சரிதானா எனும் கேள்வியை எழுப்புகிறார். “நம் சந்தோஷம், அடுத்தவர் வேதனையில் அமையக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதும்.” என்கிறார்.

பாசம் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப அமைப்பில் முன்னோர் விட்டுச் செல்லும் பணத்தினால் எப்படியெல்லாம் பூசல்கள் எழுகின்றன என்பதைச் சொல்லுகிறது ‘பத்திரம் பத்திரம்’: “நம் சொந்த முயற்சியில் ஈட்டிய ஒரு கோடி நமக்கு அடிமை என்றால், அடுத்தவர் உரிமையைத் தட்டிப் பறித்து எடுத்த ஒற்றை ரூபாய் ஆயுளுக்கும் நம்மை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி.”

‘மன அஜீரணத்துக்கு மருந்து’ வழங்குகிறார். ‘நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர..’ வழிகாட்டுகிறார்.

இந்த அத்தியாயங்களுக்கு எல்லாம் சிகரமாக அமைந்திருக்கிறது கடைசி அத்தியாயம்: ‘அறுபதுக்கு அன்புக் கட்டளைகள்’. தமக்கென்று வாழாமல் குடும்பத்துக்காகவே உழைத்து, பிள்ளைகள் வாழ்வை சீரான பாதையில் செல்ல வைத்த பின்னும் தம் மேல் அக்கறையின்றி இருப்பவர் ஆயிரம் ஆயிரம் பேர். ஓய்வு காலத்தில் இவர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவையாக பகிர்ந்திருக்கும் ஆலோசனைகள் பெரியவர்களைப் பரவசப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. வாசிக்கும் இளைஞர்களும் தம் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவர செய்கிறோமா என சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. பெற்ற பலனை மற்றவரும் அடைந்திட ஒன்றுக்குப் பத்தாக வாங்கி வைத்துக் கொண்டு சந்திக்கும் பெரியவர்களுக்குப் பரிசாக வழங்கினால் உங்களை மனதார வாழ்த்தி ஆசிர்வதிப்பார்கள்.

“அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்”அன்பு எனும் சொல்லுக்கு அகராதியாய், நமைச் சுற்றி இருப்பவரை மதிக்கவும், நம்மை நாமே நேசிக்கவும் சொல்லித் தந்து, அன்பால் மட்டுமே இப்பூவுலகம் சுழல, அன்புடன் வேண்டி நிற்கிறது. படைத்தவரும் உயர்ந்து நிற்கிறார்.

அடுத்து இரண்டு தொகுப்புகளாகத் தனது ஹாஸ்யக் கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளிக் கொணர ஆசிரியர் எடுத்துவரும் நல்முயற்சி விரைவில் வெற்றிபெற வாழ்த்துவோம்.
***

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்
பக்கங்கள்:76 ; விலை:ரூ.40
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம்
தொலைபேசி எண்கள் : 044-24342926, 044-24346062
மின் அஞ்சல் : manimekalai1@dataone.in
இணையத்தில் வாங்கிட விவரங்களுக்கு: http://www.tamilvanan.com/tech/book_rate_july_2011.pdf
*** ***

14 செப்டம்பர் 2011, வல்லமை இணைய இதழில்.., நன்றி வல்லமை!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin