செவ்வாய், 30 ஜூன், 2026

இந்த விஷயங்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (29) - பண்புடன் இணைய இதழில்..

 

இந்த விஷயங்கள்

நாம் மிகவும் பற்றிக் கொள்ளும்
இந்த விஷயங்கள்
உயர்வான எதனுடனும் 
தொடர்புடையவை அல்ல.
சலிப்பினாலோ பயத்தினாலோ
பணத்தினாலோ அல்லது
முறிந்த அறிவினாலோ
நாம் இவற்றைச் செய்கிறோம்.
நமது வட்டமும்
நமது மெழுகுவர்த்தியின் ஒளியும் 
சிறியது, 
மிகச் சிறியது. 
அதைத் தாங்க முடியாதவராக
கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்.
திரியற்ற மெழுகைப் போல
மையத்தை இழந்து விடுகிறோம்.
ஒருகாலத்தில் ஞானம் என்ற பொருள் தந்த
பெயர்களையெல்லாம்
இப்போது பேய் நகரங்களுக்கான
வழிகாட்டிப் பலகைகளாகக் காண்கிறோம்.
கல்லறைகள் மட்டுமே 
உண்மையானவை.
*

மூலம்: “These Things" by Charles Bukowski
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*

 சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994):


இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. 
*

27 ஜூன் 2026, பண்புடன் இணைய இதழில்.., 
நன்றி பண்புடன்! 
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin