செவ்வாய், 30 டிசம்பர், 2025

பால் வாசம் - பண்புடன் மின்னிதழில்..

  

பால் வாசம் - (பத்து குறுங்கவிதைகள்)


1.
சரசரக்கும் சருகுகள்
கிளை தாவும் அணில்
காற்றின் வேகத்தில்.

2. 
அமைதியான பின்வாசல்
அணிலின் வாலசைவு விளையாட்டு  
நடனமாடும் அசைவின்மை.

3.
மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்
கொட்டையைக் கொறிக்கும் அணில்
திட்டமிடும் குளிர்காலம்.

4.
புற்களில் காலைப் பனித்துளி  
நொடியில் மறையும் கால்தடங்கள்  
நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள். 

5.
மிதக்கும் மேகங்கள் 
மரத்துக்கு மரம் பாயும் அணில்
தைரியத்தை மெச்சும் வானம்.

6.
அகன்ற இலைகளைத் தட்டும் மழை 
அடியில் வாலைச் சுருட்டிய அணில் 
அன்புமயமாகும் அடைக்கலம்.

7.
மென்தாடையில் உலர்குச்சிகள்
கிளைகளுக்குள் காலை ஒளி
ஒரு கூட்டின் முதல் மூச்சு.

8. 
அணில் கூட்டில் பால் வாசம்  
மரயிடுக்கில் சேமித்தக் கொட்டைகள்
அக்கறையில் வாழும் உலகம்.

9. 
இலைகளை ஊடுருவும் சூரியன்
கண்களைத் திறக்கும் குஞ்சுகள்  
எதிர்காலத்தை தாங்கும் கிளைகள்.

10.
காற்றில் ஆடும் பாழ்மரம்   
பொந்தினுள் துடிக்கும் சிறு இதயங்கள் 
மெளனமாகக் கவனிக்கும் காடு.
*

நான் எடுத்த ஒளிப்படத்துடன் எனது குறுங்கவிதைகள், 20 டிசம்பர் 2025, பண்புடன் மின்னிதழில்..
நன்றி பண்புடன்!
**

10 கருத்துகள்:

  1. மூன்றாவது கவிதையில் மூன்றாவது வரி எழுத்தின் அளவு குறைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது வரியில் இரண்டு வார்த்தைகள்தாம். பதியும் போது 2_ஆம் 3_ஆம் வரிகள் சேர்ந்து விட்டிருந்தன. சரி செய்து விட்டேன். நன்றி:).

      நீக்கு
  2. ரசித்தேன்.  

    ஏழாவது ரொம்ப ரசித்தேன்.  அணிகள் கூடு கட்டுமா?  உணவு சேர்த்து வைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஒரு முறை ஏசி அவுட் டோர் யூனிட் உள்ளே போய் பெரிய கூடு கட்டி 7-8 குஞ்சுகள் (குட்டிகள்?) இட்டிருந்தன. பிரச்சனையாகி சுத்தம் செய்த பின் அணில் உள்ளே செல்ல முடியாதபடி வலை இட வேண்டியதாயிற்று.

      இந்தப் படம் எடுத்த அன்று, இது போன்ற பந்துகளைச் சேகரித்து வாயில் கவ்வியபடி தென்னை மரத்துக்கும் முருங்கை மரத்துக்குமாகத் தாவிக் கொண்டிருந்தது. ஆனா கூட்டை எங்கே கட்டுகிறது என்பதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் படம் எடுப்பதையும் கவனிப்பதையும் தெரிந்து கொண்ட அணில் இருளான இடத்தில் பதுங்கிக் கொண்டது. கூட்டினை நாம் தெரிந்து கொள்ளக் கூடாதாம்:). நான் பால்கனியிலிருந்து அகன்றதும் தாவிக் குதித்து வேலையைத் தொடர்ந்ததை உள்ளே இருந்து கவனித்தேன். இதை ஒரு தனிப்பதிவாகவே படங்களுடன் தரலாம்.

      நீக்கு
  3. - தாவும் கற்பனைகள்
    கவிதைகள் ஜனனம்
    அணில்


    - வாலுடன்
    நான்கு கால்கள்
    இரண்டு கால்கள்
    மட்டும்
    எப்போதும் உபயோகம்

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ஹைக்கூ இரண்டும் சூப்பர்!!

    பண்புடன் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஐயப்பன் கிருஷ்ணன் ஊக்கத்தில் (ஹைக்கூ) குறுங்கவிதைகளை புதிதாக முயன்று கொண்டிருக்கிறேன். இதுவரையிலும் 3 பதிவுகள். அணில் பற்றியே இன்னும் எழுத உள்ளது.

    நீங்களும் முயன்று பார்க்கலாமே. அருமையாக வந்துள்ளன.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  5. ஹைக்கூக்கள் ரொம்ப நல்லாருக்கு,

    எல்லாமே ரொம்ப ரசித்தேன், வாசித்ததும் எழுதும் ஆர்வம் நாமும் முயற்சி செய்யலாமா என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. முன்னங்கால்களில் பருப்பு
    மரக்கிளையில் காகம்
    தாவியது அணில்

    மரத்தில் மாம்பழம்
    துருவியது அணில்
    தொங்கிக் கொண்டே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதைகளை ரசித்தேன். அருமை. தொடருங்கள்.

      நன்றி கீதா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin