#1
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் மைசூர் உயிரியல் பூங்கா சென்று வந்த போது “சிங்கம்”, “புலி” மற்றும் “ஒட்டகச் சிவிங்கி” போன்ற விலங்குகளைப் பற்றித் தகவல்களுடன் படங்களைப் பகிர்ந்திருந்தேன்.
அண்மையில் சென்று போது எடுத்த படங்களின் பாகம் 1 “இங்கே”. தற்போது ஓரிரு விலங்குகள் குறித்தேனும் தகவல்களுடன் பகிர்ந்திட எண்ணம். இப்பதிவில் ஆங்கிலத்தில் Cheetah எனப்படும் வேங்கை அல்லது சிவிங்கிப் புலியைப் பற்றிப் பார்ப்போம்.
#2
வேங்கைகள் சுமார் 40 இலட்சம் வருடங்களாக உயிர் வாழும் இனம் என அறியப்படுகிறது. முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த உயிரினம் இந்தியா உட்பட பல நாடுகளில் அருகி விட்டது. மைசூர் உயிரியல் பூங்காவிலும் கூட மிகப் பரந்த புல்வெளியைக் கொண்ட மைதானத்தின் அடைப்புக்குள்
ஒரே ஒரு வேங்கையையே காண முடிந்தது. தனிமை காரணமாகவோ என்னவோ அங்குமிங்கும் அமைதியிழந்தது போல் நடைபயின்று கொண்டிருந்தது.#3
வலைத் தடுப்புக்கு அடுத்த அகழிக்கு இந்தப் புறமாக பல பேர்கள் நின்றிருந்தும் கேமராவினால் ஈர்க்கப்பட்டு வெகு தொலைவிலிருந்து என்னை உற்று நோக்கியபடியேச் சுற்றி சுற்றி வந்தது வேங்கை. நல்ல வேளை, மின்னல் வேகத்தில் பாய ஏதும் எத்தனிக்கவில்லை:)!
#4
நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிக வேகமாக ஓடக் கூடிய விலங்கு வேங்கை. மணிக்கு சுமார் 112 கிமீ முதல் 120 கிமீ வேகத்திற்கு, அதற்கு மேலும் கூட வேகமாய் ஓடக் கூடியது. பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி மற்றும் பாலூட்டி விலங்கு.
#5
இவை இளம் மஞ்சள் நிறத்தில் சிறிய தலை, நீண்ட உடல், நீளமான வால் மற்றும் உயரமான கால்களைக் கொண்டவை. உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகளைக் கொண்டவை. வயிற்றின் கீழ்ப் பகுதி புள்ளிகள் இன்றி வெண் நிறத்தில் இருக்கும். ஆணை விடப் பெண் வேங்கைகளின் தலை பெரிதாக இருக்கும்.
மரங்களில் ஏறும் திறன் கொண்டவை. வேட்டையாடிய உணவைத் தேவையான போது உண்ண மரத்தின் மேல் சேமித்து வைக்கும். பெரும்பாலும் மரங்களிலும், புதர் மறைவுகளிலும் வசிக்கின்றன.
#6
வேட்டையாடுதல் மூலமே தம் உணவைத் தேடிக்கொள்கின்றன. இரைகளை வேட்டையாட தனது வலிமையை விடவும் வேகத்தைச் சார்ந்திருக்கும். கூர்மையான பார்வைத் திறன் கொண்டவை. நாலரை கீ.மீ வரையிலும் உள்ள இரைகளைக் கண்டு கொள்ளும் திறன் வாய்ந்தவை. மான், குதிரை, முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடும். உயிரியல் பூங்காவில் இவற்றுக்கு ஆடுகளை உணவாக உள்ளே அனுப்புகிறார்கள். அதற்காகத் தயாராக இருந்த ஆடுகளைப் பார்க்க முடிந்தது.
வேங்கையைப் பழங்காலத்தில் வேட்டைக்காகவே மனிதர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்தியாவில் மன்னர்கள் பலர் வேங்கைகளைப் பழக்கியே மான், முயல்களை வேட்டையாடியிருக்கின்றனர்.
20 முதல் 22 மாதங்களில் பெண் வேங்கைகள் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. 12 மாதங்களில் ஆண் வேங்கைகள் இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண் வேங்கைகள் 98 நாட்களில் பிரசவிக்கின்றன. பிறக்கும் போது குட்டிகள் 150 முதல் 300 கிராம் எடை மட்டுமே உள்ளன. ஆகையால் எளிதாகக் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களுக்கு இரையாகின்றன.
#7
வளர்ந்த வேங்கைகள் 40 முதல் 65 கிலோ எடையும், மூன்றரை முதல் நாலரை அடி நீள உடலையும், சுமார் இரண்டரை அடி நீளமுள்ள வாலையும் கொண்டிருக்கும். கர்ஜனையால் அன்றி கீறீச்சொலியால் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும்.
அழிந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு ஆப்பிரிக்காவில் இவற்றை வேட்டையாடத் தடை உள்ளது.
*
தகவல்கள்: விக்கிப்பீடியா மற்றும் இணையத்தில் கிடைத்தத் தகவல்களைச் சுருக்கமாக அளித்துள்ளேன்.
படங்கள்: ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா, மைசூரு.
*
ஸ்ரீராம் அனுப்பிய தகவல்கள்
அந்த உயிரியல் பூங்காவிலேயே ஒரே ஒரு வேங்கைதான் இருக்கிறதா? எனில் இனச்சேர்க்கைக்கு கூட துணை இல்லாவிட்டால் இனம் எப்படி வளரும்?
பதிலளிநீக்குஅதே கேள்விதான் எனக்கும். புலி, சிறுத்தை, ஒட்டகச் சிவிங்கி இனங்கள் அதிக எண்ணிக்கைகளில் உள்ளன. சிங்கம் குட்டிகளோடு குடும்பமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. ஆனால் வேங்கையும், வெள்ளைப் புலியும் ஒன்றே ஒன்றுதான்.
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள். அதன் வால் இவ்வளவு நீளமாக இருப்பதற்கு கூட ஒரு சர்வைவல் காரணம் இருக்கும்!
பதிலளிநீக்குநிச்சயமாக ஒரு காரணம் இருக்கும்.
நீக்குபகிர்வதற்காகத் தேடுகையில் கிடைக்கும் தகவல்கள் எனக்கும் சுவாரஸ்யத்தை அளிக்கின்றன:).
நீங்கள் அனுப்பி வைத்த மேலதிகத் தகவல்களும் சுவாரஸ்யம். நன்றி ஸ்ரீராம்.
நீக்கு*சுமார் 40 இலட்சம் வருடங்களாக உயிர் வாழும் இனம் என அறியப்படுகிறது.
*கர்ஜனையால் அன்றி கீறீச்சொலியால் தன்னைத் தெரிவித்துக் கொள்ளும்.
*இரைகளை வேட்டையாட தனது வலிமையை விடவும் வேகத்தைச் சார்ந்திருக்கும்.
*கூர்மையான பார்வைத் திறன் கொண்டவை. நாலரை கீ.மீ வரையிலும் உள்ள இரைகளைக் கண்டு கொள்ளும் திறன் வாய்ந்தவை.
தமிழாக்கம் செய்து பதிவிலும் சேர்த்து விட்டுள்ளேன்.
நன்றி. __/\__
நீக்குஎன்னதான் சர்வைவல் என்றாலும் 'அந்த ஆடுகளை' பார்க்கும்போது பாவமாக இருந்திருக்கும்!
பதிலளிநீக்குஒவ்வொரு வேட்டை விலங்குகளின் அடைப்புகளுக்கு வெளியிலும் ஆடுகளைக் கட்டி வைத்துள்ளார்கள் மான், முயல்களுக்கு மாற்றாக.
நீக்குஅருமையான தகவல்கள். பாவம் பாருங்க இதன் குட்டிகளும் கூடப் பலியாகின்றன.
பதிலளிநீக்குதனியான வேங்கைக்குக் கண்டிப்பாகக் கஷ்டம்தான்...துணை ஒன்று எதிர்பாலினம் ஒன்று இருந்திருக்கலாம் இருந்தால் அடுத்த தலைமுறை அழியாமல் கிடைக்குமே.
கீதா
ஆம். நன்றி கீதா.
நீக்குநல்லகாலம் அது பாயவில்லை என்று சொல்லியிருக்கீங்க பாய்ந்திருந்தாலும் வேலிக்கு உள்ளேதானே இல்லையா? உங்களுக்கு நல்ல ஷாட் கிடைத்திருக்குமோ?! கூரையும் வேலிக் கம்பிகள் இருக்கும் என்று நினைக்கிறேன் இல்லைனா வேலைக் கம்பிகளில் எளிதாக ஏறிவிடாதோ? பூனை இனம் தானே பூனைகள் எப்படி அழகாகக் கிரில் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு இறங்குகின்றன. அந்தக் காட்சி ரொம்ப அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குவேங்கைப் படங்கள் எல்லாம் அருமை. செம ஷாட்ஸ். கண்கள் வாவ்!
கீதா
கூரை, வேலி எல்லாம் உண்டுதான்:). வேலிக்கு இந்தப் பக்கம் அகழியும் உண்டு, மனிதர்கள் வேலிக்கு வெகு அருகில் செல்வதைத் தடுக்க. ஏதேனும் ஒரு பக்கத்தில் வேலிச் சுவருக்குப் பதில் தடிமனான கண்ணாடிச் சுவர் அமைத்திருக்கிறார்கள், படம் எடுக்க எளிதாக. முன்னர் சென்ற போது இந்த வசதி இருக்கவில்லை.
நீக்குநன்றி கீதா.
வேங்கை (வேட்டையன்) படங்கள் , அவைகளை பற்றிய செய்திகளும் அருமை.கடைசி படத்தில் நடந்து வரும் கம்பீரம் அழகாய் தெரிகிறது.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு