சனி, 17 ஆகஸ்ட், 2024

கிண்ணலா பொம்மைக் கலையும்.. நூறு வயது சிலையும்..

 #1

மிகப் பழமையானதும் அதிகம் அறியப்படாததும் ஆன கிண்ணலா பொம்மைக் கலை  15-16_ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடகாவின் கோபல் மாவட்டத்திலுள்ள கிண்ணல் எனும் இடத்தில் தோன்றியிருக்கிறது. இந்தக் காலக் கட்டமானது விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த மன்னர்கள் இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சிற்பிகள், கலைஞர்கள், கைவினைப் பொருள் வல்லுநர்களை தம் தலைநகரமாகிய ஹம்பிக்கு வர வழைத்தபடி இருந்த நேரம்.

இக்கலை தோன்றிய ஆரம்பக் காலத்தில் ஹம்பி கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் வேலை பார்க்க வந்த சித்திரக் கலைஞர்களே இதில் ஈடுபட்டதால் இவர்கள் ‘சித்திரகார்’ என்று அறியப்பட்டனர். 

பம்பாபடேஸ்வரா கோயிலின் புகழ் மிக்க சுவர் சித்திரங்களையும், நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்ட ஹம்பியின் மரத்தாலான தேரையும் செய்தவர்கள் இன்றைய கிண்ணலா கலைஞர்களின் மூதாதையரே.

#2

கிண்ணலா மரப் பொம்மைகளுக்கென புவியியல் ஆய்வு அடையாள எண் (GI tag number 159) ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது. தரம் மற்றும் அதன் நன்மதிப்பைக் காத்திடும் வகையில் குறிப்பிட்டப் பூகோளப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதி இது. தற்போது 25 குடும்பங்கள் மட்டுமே கிண்ணல் கிராமத்தில் இந்தக் கலைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

#3

கிண்ணலா பொம்மைகள் அவற்றின் பளீரென்ற நிறங்களுக்காகவும் பளபளப்பான இறுதிப் பூச்சுக்காகவும் பெயர் பெற்றவை. ஒவ்வொன்றும் கைகளால் செய்யப்படுவதோடு மிகுந்த உழைப்பையும் நேரத்தையும் வேண்டுபவை. பெரும்பாலும் கடவுளர், புராணக் கதாபாத்திரங்கள் மற்றும் விலங்குகளின் உருவங்களை உருவாக்குகிறார்கள். இப்பொம்மைகளை அவர்களது கிராமத்தைச் சுற்றி வளருகிற ‘பொங்கி’ எனும் மரங்களைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இம்மரங்களின் கட்டைகள் மிருதுவானதாகவும், எடை குறைவானதாகவும் சிற்பங்களைச் செதுக்க இலகுவானதாகவும் இருக்கின்றன.

#4

கிண்ணலா கலைஞர்கள் முதலில் தோராயமாக மரக்கட்டையில் உருவத்தை வரைகிறார்கள். பின்னர் சிற்றுளியால் தோராயமாகச் செதுக்குகிறார்கள். அதன் மேல் புளித் தண்ணீர் மற்றும் படிகக் கல்லினால் ஆன பசை சேர்ந்த கலவையை அதன் மேல் தடவி சிலையைக் காய வைக்கிறார்கள். பின்னர் நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்து இறுதி வடிவைக் கொடுக்கிறார்கள்.

சிலை சற்று பெரிதாகி விட்டால் கைகள், தலை, கால்களைத் தனித்தனியாகச் செய்து, புளியங்கொட்டை, மரத்தூள் மற்றும் சணல் கயிறு ஆகியவற்றைக் கொதிக்க வைத்துத் தயார் செய்யப்படும் பசையினால் அவற்றை ஒன்று சேர்க்கிறார்கள். படிகத் தூள் மற்றும் ஈரப் பசை கொண்டு நகை மற்றும் புடைப்பு வடிவங்களை ஒட்டுகிறார்கள்.

புளிப் பசையில் ஊற வைத்தத் துண்டுத் துணிகளைக் கொண்டு சாயம் சேர்க்கிறார்கள். இந்த வேலைகள் முடிந்ததும் முதலில் சுண்ணாம்புத் தூள் கொண்டு வெள்ளை வர்ணம் பூசப் பட்டு, அதன் மேல் மற்ற சிகப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் போன்ற வர்ணங்களைப் பூசுகிறார்கள்.

#5

சில பொம்மைகளின் தயாரிப்பில் ஒரு அரிய வகை உத்தியைக் கையாளுகிறார்கள். துணிகளால் சாயம் பூசுவதைத் தவிர்த்து விட்டு நன்றாக அடிக்கப்பட்ட துத்தநாகத்தை சில வகை மூலிகைகளுடன் கலந்து பளபளப்பான தங்க நிறத்தைக் கொண்டு வருகிறார்கள். இது நீண்ட செய்முறையாகவும் அதிக செலவு வைப்பதாகவும் இருப்பதால் இம்முறையை மிகச் சிலக் குடும்பங்களே பின்பற்றுகிறார்கள்.

நிதி ஆதரவின்மை, போதுமான பயிற்சியின்மை, பொருளாதார நம்பகத்தன்மை அற்ற சூழல் ஆகியவற்றால் கிண்ணலா கலைஞர்களின் அடுத்த தலைமுறையினர் ஒரு நூற்றாண்டைக் கடந்த, பாரம்பரியம் மிக்க இக்கலையைத் தொடர்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். பரவலான அங்கீகாரம், புரவலர் மற்றும் உபயதாரர்கள் ஆதரவு கிட்டினால் மட்டுமே வியக்கத்தகு இக்கலை வடிவம் நீடிக்க இயலும்.
*

[படத்தில் இருக்கும் பொம்மைக்கு வயது நூறு+. எனது தங்கையின் அரிய கலைப் பொருட்கள் சேகரிப்பில் ஒன்று.]
*

artisera.com தளத்தில் கிடைத்தத் தகவல்களைத் தமிழாக்கம் செய்து அளித்துள்ளேன். இந்த இணைப்பில் விற்பனைக்கு இருக்கும் தற்போதைய பொம்மைகளையும், பொம்மைத் தயாரிப்பு குறித்த சிறு காணொலியும் காணக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் பார்த்திடலாம்.
*

10 கருத்துகள்:

  1. கிண்ணலா பொம்மைக்கலை பற்றி அறிந்தேன்.  சித்திரகார்  என்றதும் முன்னர் நேஷனல் டெலிகாஸ்ட்டில் தொலைக்காட்சியில் பார்க்கும் ஹிந்திப் பாடல் தொகுப்பு (சித்திரஹார்)நினைவுக்கு வந்தது.  

    படங்கள் நன்று.  தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. இது வரை அறியாத, ஆனால் மிகச் சிறப்பான, சுவார்ஸ்யமான தகவல்கள்!!

    பதிலளிநீக்கு
  3. ஸ்வாரஸ்யமான தகவல்கள்... படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  4. கிண்ணலா பொம்மைக்கலை, ஒரு புதிய அறிமுகம். Artisera தளம் குறித்த அறிமுகத்திற்கும் மிக நன்றி. மேலும் பல கலைகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற கைவினை கலைகளுக்கு பின்னால் உள்ள உழைப்பு, தேவைப்படும் கால அளவு அறிந்தவர்கள் மட்டுமே அதன் மதிப்பை உணர முடியும். கால ஓட்டத்தில், பல அரிய உயிரினங்கள் மாத்திரம் அல்ல, இது போன்ற அற்புதமான கைவினை கலைஞர்களும் அருகி வருகின்றனர் :(.

    Privacy and cookie settings
    Managed by Google. Complies with IAB TCF. CMP ID: 300
    Ⓒ 2024 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அரிய கலைகள் பலவும் அருகி வருவது கசப்பான உண்மை. கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. கிண்ணலா பொம்மைகள் செய்முறை விளக்கம் மிக அருமை. இந்த பொம்மையின் கலைநுணுக்க வேலைப்பாடு மிக அருமை.
    தலை அலங்காரம் அருமை.

    முன்பு பள்ளிச்சுற்றுலா வந்த போது ஆண், பெண் தலையாட்டும் மர பொம்மைகள் எங்கள் வீட்டு கொலுவுக்கு வாங்கி வந்தேன்.
    மர பொம்மைகள் மிகவும் அழகாய் இருக்கும்.
    அதுவும் இந்த கிண்ணலா பொம்மை பள பள என்று கண்ணை கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தலை அலங்காரம் நகைகள் யாவும் நுணுக்கமாகச் செதுக்கியிருக்கிறார்கள். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin