வியாழன், 3 பிப்ரவரி, 2022

கமலா பஸீன் கவிதைகள்

 கமலா பஸீன் / Kamla Bhasin  (ஏப்ரல் 1946 – செப்டம்பர் 2021) 

நான்கு மாதங்களுக்கு முன்னர் 25 செப்டம்பர் 2021 அன்று தனது 75_வது வயதில் காலமானார் கவிஞரும் எழுத்தாளருமான கமலா பஸீன். கடந்த அரை நூற்றாண்டில் பெண் கல்வி, பெண் உரிமை குறித்த விழிப்புணர்வு பரவ, மாற்றங்கள் நிகழ இவரது எழுத்துகளும் செயல்பாடுகளும் ஆற்றிய பங்கு, இவர் காலமான பொழுது மீண்டும் பெருமளவில் பேசவும் போற்றவும் பட்டது.

பெண்ணிய ஆர்வலராக 1970_ல்  தொடங்கிய பாஸினின் சமூகப் பணி பாலினம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்தது.  

பஸீன் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர். பின்னர் மேற்கு ஜெர்மனியில் உள்ள மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்தவர். அதன் பிறகு பேட் ஹொன்னெப்பில் வளரும் நாடுகளுக்கான ஜெர்மன் அறக்கட்டளையின் சார்புநிலை மையத்தில் ஒரு ஆண்டு கற்பித்தார்.  இந்தியாவுக்குத் திரும்பி, அங்கு கற்றுக்கொண்டவற்றைச் செயல்படுத்த விரும்பினார். எனவே, இராஜஸ்தானில் செயல்படும் சேவா மந்திர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இந்திய சமுதாயத்தில் சாதி எவ்வாறு ஒரு சமூக நோயாக உள்ளது என்பதையும், ஆட்சியில் கூட பாகுபாடு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் அங்கிருந்த நாட்களில் புரிந்து கொண்டார்.  

இவர் ஆணாதிக்கத்தையும் பாலின பாகுபாட்டைப் புரிந்துகொள்வது பற்றி புத்தகங்கள் மற்றும் சிறு பிரசுரங்களை எழுதியுள்ளார். இவை சுமார் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மக்கள் பாலின சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவ இப்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. இவரது முக்கியமான ஆக்கங்களில் சில:
*எல்லைகள் மற்றும் வரம்புகள் (Borders & Boundaries)
*இந்தியப் பிரிவினையில் பெண்கள் ( Women in India's Partition) 
*பாலினப் பாகுபாட்டைப் புரிந்துகொள்தல் (Understanding Gender)
மற்றும் 
பிந்தியா தாப்பருடன் இணைந்து எழுதிய, மறுபதிப்பு கண்டு பின்னர் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்ட
*சிரிக்கும் விஷயங்கள் (Laughing Matters)

சங்கத் அமைப்பில் பணியாற்றுவதற்காக 2002 ஆம் ஆண்டு ஐ.நா.வில் தனது வேலையை ராஜினாமா செய்தவர். சங்கத்தில் நிறுவன உறுப்பினராகவும் ஆலோசகராகவும் செயல் பட்டவர். பெண்ணியக் கோட்பாட்டையும் சமூக செயல்பாட்டையும் இணைத்து ஆதரித்து வாதாடுவதில் நம்பிக்கை கொண்டவர். பழங்குடி மற்றும் உழைக்கும் சமூகங்களைச் சேர்ந்த பெண்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். குறைந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட சமூகங்களுடன் நெருங்கிச் செல்ல பெரும்பாலும் சுவரொட்டிகள், நாடகங்கள்,நடனங்கள் எனப் பிற எழுத்தறிவு அற்ற முறைகளைப் பயன்படுத்தியவர். 

பெண்ணியம் என்பதே மேற்கத்தியக் கோட்பாடு எனும் கருத்தை நிராகரித்தவர். இந்தியப் பெண்ணியத்தின் வேர்கள் அதன் சொந்த போராட்டங்கள் மற்றும் இன்னல்களில் இருந்து கிளை விட்ட ஒன்று என்பதை அழுத்தமாக வலியுறுத்தியவர்.

இவரைப் பற்றி மேலும் விரிவாக விக்கிப்பீடியாவின் தமிழ் பக்கத்தில் “இங்கே” அறிந்து கொள்ளலாம்: 

**

பெண் குழந்தைகளின் எழுச்சி

பெண் குழந்தைகள் காற்றைப் போல் ஆகிறார்கள்,
குதூகலமாகத் திரிவதில் அவர்கள் மகிழ்கிறார்கள்.
காரணமே இல்லாமல் தடுக்கப்படுவதை,
அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண் குழந்தைகள் பூக்களைப் போல் ஆகிறார்கள்,
தங்கள் நறுமணத்தைப் பரப்புவதில் அவர்கள் மகிழ்கிறார்கள்.
இரக்கமேயில்லாமல் நசுக்கப் படுவதை,
அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண் குழந்தைகள் பறவைகளைப் போல் ஆகிறார்கள்,
உயரப் பறப்பதில் அவர்கள் மகிழ்கிறார்கள்,
இரக்கமின்றித் தங்களது இறக்கைகள் கத்திரிக்கப்படுவதை,
அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண் குழந்தைகள் சூரியனைப் போல் ஆகிறார்கள்,
வெளிச்சத்தைப் பரப்புவதில் அவர்கள் மகிழ்கிறார்கள்
முகத்திரையிட்டு அடக்கப் படுவதை,
அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

மற்றும்...
பெண் குழந்தைகள் மலைகளைப் போல் ஆகிறார்கள்
தங்கள் தலைகள் நிமிர்ந்திருப்பதில் மகிழ்கிறார்கள்
தலை குனிந்து வாழ்வதை,
அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

*
மூலம்: 'Rising Girls' by Kamla Bhasin

**


பெண் குழந்தையாக இருப்பதால், 
நான் படிக்க வேண்டும்


ரு தந்தை கேட்கிறார் மகளிடம்:
படிப்பு? ஏன் நீ படிக்க வேண்டும்?
எனக்கு நிறைய மகன்கள் இருக்கிறார்கள், படிக்க முடிந்தவர்கள்.
பெண்ணே, நீ ஏன் படிக்க வேண்டும்?

மகள் தந்தையிடம் சொல்கிறாள்:
நீங்கள் கேட்பதால் இதோ சொல்கிறேன், நான் ஏன் படிக்க வேண்டும் என.
பெண் குழந்தையாக இருப்பதால், நான் படிக்க வேண்டும்.

வெகு காலமாக மறுக்கப்பட்ட உரிமை, ஆகையால் நான் படிக்க வேண்டும்
எனது கனவுகள் நிறைவேற, நான் படிக்க வேண்டும்
அறிவு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வரும், ஆகையால் நான் படிக்க வேண்டும்
நான் போராட வேண்டியிருக்கும் யுத்தங்களுக்காக, நான் படிக்க வேண்டும்
பெண் குழந்தையாக இருப்பதால், நான் படிக்க வேண்டும்.

வறுமையைத் தவிர்க்க, நான் படிக்க வேண்டும்
சுதந்திரத்தை வென்றெடுக்க, நான் படிக்க வேண்டும்
ஏமாற்றங்களை எதிர்த்து நிற்க, நான் படிக்க வேண்டும்
உத்வேகத்தைக் கண்டடைய, நான் படிக்க வேண்டும்
பெண் குழந்தையாக இருப்பதால், நான் படிக்க வேண்டும்.

ஆண்களின் வன்முறையை எதிர்த்துப் போரிட, நான் படிக்க வேண்டும்
என் மெளனத்தை முடிவுக்குக் கொண்டு வர, நான் படிக்க வேண்டும்
குடியாட்சிக்கு சவால் விட, நான் படிக்க வேண்டும்
எல்லா மரபுகளையும் இடித்தொழிக்க, நான் படிக்க வேண்டும்
பெண் குழந்தையாக இருப்பதால், நான் படிக்க வேண்டும்.

எனது நம்பிக்கையை வார்த்தெடுக்க, நான் படிக்க வேண்டும்
நியாயமான சட்டங்களை இயற்ற, நான் படிக்க வேண்டும்
நூற்றாண்டுகளின் தூசியைத் துப்புரவாக்க, நான் படிக்க வேண்டும்
நான் என்னவாக வேண்டுமென சவால் விட, நான் படிக்க வேண்டும்
பெண் குழந்தையாக இருப்பதால், நான் படிக்க வேண்டும்.

தவறெது சரியெதுவென அறிந்திட, நான் படிக்க வேண்டும்.
வலிமையான குரலைக் கண்டெடுக்க, நான் படிக்க வேண்டும்
பெண்ணியப் பாடல்களை இயற்ற நான் படிக்க வேண்டும்
பெண்களுக்கு உரிமையான உலகை உருவாக்க, நான் படிக்க வேண்டும்.
பெண் குழந்தையாக இருப்பதால், நான் படிக்க வேண்டும்.

*
மூலம்: 'Because I am a girl, I must study' by Kamla Bhasin

**

12 கருத்துகள்:

  1. இவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்தது (நண்பர் துளசியினால். அவர் ஆங்கில ஆசிரியர் என்பதால் ஆங்கில இலக்கியத்தில் கடைசிக் கவிதை இருக்கிறது அவர் நோட்ஸ் அனுப்பி அதை நான் டைப் செய்ததால்) அதன் பின் விக்கியிலும் வாசித்துத் தெரிந்து கொண்டேன்.

    Because I am a girl, I must study; by Kamla Bhasin...அழகான கவிதையை நான் ரசித்து வாசித்ததுண்டு. உங்கள் மொழியாக்கம் சிறப்பு. பதிவையும் ரசித்து வாசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான ஒரு எழுத்தாளர் குறித்த தங்கள் பதிவு கண்டேன். அவரது எழுத்தினை மொழியாக்கம் செய்து இங்கே வெளியிட்டது சிறப்பு.

    பாசின் அல்ல பசீன். பஞ்சாபி surname. நான் தில்லியில் பணியில் சேர்ந்த பொழுது, எனக்கு மூத்த அதிகாரியாக இருந்தவர் ஒரு பசீன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதுமே திருத்தி விட்டேன்:). நன்றி வெங்கட்.

      நீக்கு
  3. பஸீன் பற்றி அறிந்து கொண்டேன்.  கவிதையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. பசீன் கவிதைகள் மிக அருமை. அவரை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.
    பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டிய அவசியம் உணர்ந்தவர்

    பதிலளிநீக்கு
  5. அவரது வாழ்க்கை குறிப்புகளே ஒரு சிறந்த கவிதையை வாசித்த உணர்வைத் தருகிறது.

    வாழ்க்கை அனுபவங்கள் வார்த்தைகளாக வெளிப்படும் போது அதன் உண்மைத் தன்மை மனதை அதிரச் செய்கிறது.

    பெண் குழந்தைகளை இயற்கையின் அபாரமான படைப்புகளுடன் ஒப்பிட்டு அதன் தன்மைகளோடு பொருத்தி, அவற்றை அடக்கி ஆள முற்படுவது இயல்பற்றது எனச் சுட்டுவது அருமை.

    வாழ்க்கை போராட்டத்தை எதிர் கொள்ளக் கல்வி சிறந்த ஆயுதம் என்பது அவரது வாழ்க்கை செய்தி.

    நல்லதொரு மொழிபெயர்ப்பு.

    உயர்ந்த உள்ளம். சிறந்த வாழ்க்கை. நன்முறையாக நினைவஞ்சலி. வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஆம், நினைவஞ்சலியாகவே இந்தப் பதிவு.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin