அந்நியர்கள்
நீங்கள் நம்ப மாட்டீர்கள்
ஆனால் இருக்கிறார்கள் சில பேர்கள்
நன்றாக உடுத்திக் கொள்வார்கள்,
நன்றாகச் சாப்பிடுவார்கள்,
தங்கள் குடும்ப வாழ்வில்
மன நிறைவு கொண்டவர்கள்.
துயரமான தருணங்கள்
அவர்களுக்கும் உண்டு
ஆனால் மொத்தத்தில்
அவர்கள் பாதிக்கப்படுவதில்லை
பெரும்பாலும்
மகிழ்ச்சியாகவே உணருகிறார்கள்.
நீங்கள் நம்ப மாட்டீர்கள்
ஆனால் அத்தகைய மக்கள்
இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால் நான்
அவர்களில் ஒருவன் அல்ல.
ஓ அல்ல, நான்
அவர்களில் ஒருவன் அல்ல.
அவர்களில் ஒருவனாக
சற்றும் வாய்ப்பில்லாதவன்.
ஆனால் அவர்கள் இருக்கிறார்கள்
அங்கே.
நான் இருக்கிறேன்
இங்கே.
*
மூலம்: “The Aliens” by Charles Bukowski
**
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.
இவரது கவிதைகள் மழுங்கலானவை என்றொரு கூற்று உண்டு. அன்றைய காலக் கட்டத்தில் கவிஞர்கள் ஒலிநயத்துடனான கவிதைகளை இயற்றுவதையே வழமையாகக் கொண்டிருந்தனர். உருவகங்களுடனும், மறை பொருட்களுடனும் எழுதுவதில் முனைப்பு காட்டி வந்தனர். சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளோ உரைநடை வடிவைக் கொண்டிருந்தன. ஆரவாரமான அவரது படைப்புகள் கவித்துவமற்றவை என்று ஒரு சிலர் வாதிட, மற்ற சிலர் அதே படைப்புகளை உணர்ச்சி வேகமுடையவை எனக் கொண்டாடுகின்றனர்.
சார்லஸ் புக்கோவ்ஸ்கி இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றைத் தன் வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவர் படைப்புகளில் பரவலாக வெளிப்படும் அவநம்பிக்கை, கசப்புணர்வு ஆகியவற்றுக்கு இந்தக் காலக்கட்டங்களே காரண கர்த்தாவாகக் கைகாட்டப் படுகின்றது.
*
[ஆசிரியர் குறிப்பு மற்றும் கவிதைகளின் தமிழாக்கம், படங்கள்: ராமலக்ஷ்மி]
நன்றி சொல்வனம்!
**
கவிதை நன்றாக இருக்கிறது. படமும் பொருத்தமாக இருக்கிறது.
பதிலளிநீக்குசிலர் தங்கள் கசப்புணர்வை , அவநம்பிக்கைகளை களைந்து கொள்ளவே விரும்பாமல் இருப்பார்கள் . இவர் அப்படித்தான் என்று தெரிகிறது. அப்பாவின் பழக்கத்தை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்!
தன் தாயை நல்லபடியாக பார்த்து கொண்டு இருந்து இருக்க வேண்டும்.
கருத்துக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஆசிரியர் குறிப்பு அருமை. அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். கவிதை நன்றாயிருக்கிறது என்றாலும், பொருள் கொஞ்சம் நெருடுகிறது. ஏன் ஒட்ட மாட்டேன் என்கிறார் என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉணவு, உடை, உறக்கம் போன்ற அடிப்படை ஆசைகள் கூட அடைய இயலாத அந்நியர்களாக வாழும் பெரும் கூட்டத்தின் வலிகளை இதை விட எளிமையான வரிகளில் எழுதுவது கடினம். கசப்பான உண்மை.
பதிலளிநீக்குதுயிலில் அமைதியாக உயிர் பிரிவதை அதிசயமாக வியந்து பார்க்கும் அவரது வரிகள் அனைவருக்கும் பொதுவான ஏக்கம் என்பதால் எழுதப்படவில்லையா?:)
சிறந்த கவிதைகளைத் தெரிவு செய்து தமிழில் வாசிக்கக் கொடுப்பதற்காக மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குசிறப்பான பிறமொழி கவிதைகளை தமிழாக்கம் செய்து வெளியிடும் உங்கள் பணி தொடரட்டும். தகவல்கள் நன்று.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு